அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஐம்பத்தி ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்க வாசம்.
கடைசியாக ஆறு அத்தியாயம் பார்த்தபோதே எஸ்கேப்பில் தேசிய கீதம் ஒலிபரப்பவில்லை. எல்லோரும்
ஏதோ எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்ததைப் பற்றி பேசிக்
கொண்டிருக்கிறார்கள். என் கடந்த பிராயத்தின் புண்ணியங்கள் காரணமாக எஸ்கேப்பில்
அதையும் ஒளிபரப்பவில்லை. (ஒருவேளை நான் அச்சமயம் பார்த்து சாக்கோ டோநட் வாங்க
போயிருக்கலாம்). ஸ்ட்ரைக் முடிந்தாலும் பெரிய படங்கள் என்று சொல்லப்படுபவை எதுவும்
வெளியாகாததால் தியேட்டரில் மழைக்கால வேலைநாள் அளவுக்குத்தான் கூட்டம் இருக்கிறது.
மெர்க்குரி ! கமலின் பேசும் படத்திற்கு பிறகு வரும் மெளனப் படம்
என்கிறார்கள். இப்படத்திற்கு எந்த பில்டப்பும் இல்லையெனில் கூட கார்த்திக்
சுப்பராஜூக்காகவே பார்த்திருப்பேன். முதலில் இது மெளனப் படமே கிடையாது என்பது என்
புரிதல். மெளனப் படம் என்பது சொல்ல வரும் விஷயங்களை வசனங்களின்றி புரிய வைக்க
வேண்டும் இங்கே வசனம் என்று சொல்வது சப்-டைட்டில்களையும் சேர்த்து. ஒரு
உதாரணத்திற்கு, கமலின் பேசும் படத்திற்கு சப்-டைட்டில் போட்டால் எப்படி இருக்கும்
அல்லது சப்-டைட்டில் போட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். படத்தின்
கதாபாத்திரங்கள் அனைவரும் பேசும் திறனை இழந்தவர்கள் என்பதாலேயே அது மெளனப் படம்
ஆகிவிடாது. ஒருவேளை இப்படத்தை கா.சு. நார்மல் தமிழ் சினிமாக எடுத்திருந்தால் கூட
மொத்த படத்திலும் பதினைந்து வசனங்களுக்கு மேலே வைத்திருக்க முடியாது.
பாதரச ஆலையின் விபத்தின் விளைவுகள் தான் இப்படத்தின் கரு. ஸ்டெர்லைட்
தொடர்பான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போது மெர்க்குரி போன்ற படங்கள் வருவது
பெரிய மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்திவிடாது என்றாலும், சிறு துரும்பையாவது
கிள்ளிப்போடும். காப்பர் வேண்டும் ஆனால் ஸ்டெர்லைட் வேண்டாமாம்; மின்சாரம்
வேண்டும் ஆனால் கூடங்குளம் வேண்டாமாம் என்று எகத்தாளம் பேசுபவர்களுக்கு கொஞ்சம்
அறிவை இதுபோன்ற படங்கள் வழங்கக்கூடும். சுமார் இருபது நிமிடத்தில் சொல்லக்கூடிய
ஒரு குறும்பட கன்டென்டை நூற்றி எட்டு நிமிடங்களுக்கு வளர்த்திருக்கிறார்கள்.
இருப்பினும் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக நகர்கிறது. கொஞ்சம் பொறுமையுடன் படம் பார்த்தால் ஏற்றுக்கொள்ள
முடிகிறது.
மெர்க்குரியின் அடிநாதமான ஒரு காட்சியில் மிகப்பெரிய பிழை ஒன்றை
செய்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அடுத்து வரும் சிகப்பு நிற பத்தி
ஸ்பாய்லர் என்பதால் படம் பார்க்காதவர்கள் ஸ்கிப் செய்துவிடலாம்.
படத்தின் திருப்புமுனை காட்சியில், பேசும் & கேட்கும் திறனை இழந்த
படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் நள்ளிரவில் காரில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இந்துஜா காரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். சனந்த் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில்
இருந்து காரின் ஹெட்லைட்டை அணைத்து அணைத்து விளையாடுகிறார். மூன்றாவது முறை இப்படி
அணைக்கும்போது விபத்து நேர்கிறது. படத்தின் இறுதியில் இப்படியொரு விபத்து நிகழ்ந்ததற்கு
காரணம் அவர்களுக்கு கேட்கும் திறனில்லாதது தான் காரணம் என்பதுபோல காட்டுகிறார்கள்.
ஆனால் உண்மையில் விபத்துக்கு காரணம் அவர்களுடைய குறிக்கொழுப்பு தான். இப்படி
விளக்கை அணைத்து விளையாடும் காட்சியை வைத்ததற்கு பதிலாக நாயை இடித்துவிடாமல்
இருக்க காரை திருப்பியதாகவோ அல்லது வேறு மாதிரியாகவோ காட்சிப் படுத்தியிருக்கலாம்.
**********
கிறிஸ்தவ புராணங்களில் வரும் ஆதாம் – ஏவாள் கதையை எல்லோரும்
அறிந்திருப்போம். தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் கூட ஆதாம் – ஏவாள் பற்றி நிறைய
எழுதித் தீர்த்துவிட்டு, ஏவாளின் தங்கச்சி வரைக்கும் போய்விட்டார்கள். அதென்ன
ஏவாளின் தங்கை ? இதனை இரண்டு விதமாக புரிந்துகொள்ளலாம். புராணத்தின் படி ஆதாம் –
ஏவாள் முதல் மனிதர்கள். அதன்பிறகு தோன்றிய மனிதர்கள் அனைவரும் அவர்களது வழி
வந்தவர்கள். அப்படியிருக்க ஏவாளுக்கு தங்கை என்று ஒருவர் இருக்க வாய்ப்பில்லை.
எனவே படைக்கப்படாத ஒரு அழகி, அதாவது படைப்பாற்றலை தாண்டிய அழகி என்று பொருள்
கொள்ளலாம். இரண்டாவது, பெரும்பாலான ஆண்களுக்கு (கவனிக்க: எல்லோருக்கும் அல்ல)
என்னதான் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் போல அழகாக இருந்தாலும் மனைவியின் தங்கை மீது ஒரு
கண் இருக்கும். அதனால் கூட பா.விஜய் அப்படி எழுதியிருக்கலாம்.
ஆனால் பைபிள் அல்லாத இன்னொரு புராணத்தில் ஏவாளுக்கு ஒரு சகோதரி (அக்கா
அல்லது தங்கை) இருக்கிறார். அவளது பெயர் லிலித் !
முதன்முதலில் பண்டைய பாபிலோனிய
புராணமொன்றில் லிலித் தோன்றினாள். லிலித் என்பவள் சிறகுகள் கொண்ட பெண் சாத்தான்.
கர்ப்பிணி பெண்களை தாக்குவது லிலித்தின் குணம். பைபிளில் லிலித்தை பற்றிய குறிப்புகள் இல்லையென்றாலும், சில செவிவழி கதைகளில் லிலித்தை பற்றி இப்படி சொல்கிறார்கள் – கடவுள் என்பவர் முதன்முதலாக தூசியில் இருந்து
ஆணை படைக்கிறார். பிறகு அதே போல தூசியில் இருந்து ஒரு பெண்ணை படைக்கிறார். இப்படி தனித்தனியாக
படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்து வாழாமல் அவரவர் விருப்பபடி
வாழ்ந்தனர். இருவருக்கும் சச்சரவுகள் தொடர்ந்தன. லிலித் கடவுளிடம் சென்று
முறையிட்டாள். அநேகமாக கடவுள் கதாபாத்திரம் ஒரு ஆண் என்பதால் லிலித்தின்
குற்றச்சாட்டுக்கு கடவுள் செவி சாய்க்காமல் அவளை திரும்பப் பெறுகிறார். ஒரு வகையில் உலகின் முதல் பெண்ணியவாதி மற்றும் புரட்சியாளர் லிலித் தான். பின்னர்
ஆதாமின் விலாவிலிருந்து ஏவாளை படைக்கிறார் கடவுள். அவர்களின் மகிழ்வான வாழ்வின் விளைவாக
ஏவாள் கருவுருகிறாள். இதனைக் கண்டு பொறாமையடைகிற லிலித் ஏவாளையும் கருவிலிருக்கும்
குழந்தையையும் கொல்ல நினைக்கிறாள். இதன் தொடர்ச்சியாக காலம் காலமாக லிலித்
கர்ப்பிணி பெண்களுக்கு தொந்தரவு தருவதாக கதை போகிறது.
சித்தரிக்கப்பட்ட லிலித் |
சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஜீரோ என்கிற தமிழ் படம் இக்கதையை
மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. துவக்கத்தில் நல்ல காதல் கதையைப் போல
துவங்கும் ஜீரோ, மெல்ல அமானுஷ்யமாக உருவெடுத்து, பின்னர் ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ
மதம் பரப்பும் அஜெண்டாவாக மாறுகிறது. இறுதியில் வானத்தில் இருந்து ஒரு ஒளி வந்து
கதாநாயகியின் வயிற்றுக்குள் உட்கார்ந்து கொள்கிறது. இப்படி முழு மத பிரச்சார படமாக
அமைந்த ஜீரோவை இயக்கியவரின் பெயர் ஷிவ் மோஹா !
**********
இன்று புத்தக தினம். கடந்த சில வருடங்களாகவே புத்தக தினத்தை
முன்னிட்டு பெரியார் திடலில் ஒரு மினி புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
சனி மாலை அக்கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஜனவரியில் நடைபெறும் சென்னை புத்தகக்
காட்சியில் எல்லா விற்பனையாளர்களும் ஒரே பாணியில் ஸ்டால் அமைத்திருக்க, நம்ம
விகடனார் மட்டும் ஒரு தினுசாக இன் / அவுட் போட்டு இப்படி உள்ளே சென்று, அப்படி
வெளியே வர வேண்டும் என்று படம் காட்டுவார்கள். மேலும் வெளியே வரும் வாயிலின் அருகே
ஒரு ஆசாமி நின்றுக்கொண்டு நம்மை குறுகுறுவென்று பார்ப்பார். நாம் புத்தகங்கள்
எதையாவது திருடிவிட்டோமா என்று கண்காணிக்கிறாராம் (அப்படியே திருடிட்டாலும்).
விகடன் ஸ்டாலுடைய ஒரே பயன் அதன் பின்புறம் உட்கார்ந்து இளைப்பாறலாம் என்பதுதான் ! அதுபோல
திடலில் நடைபெறும் கண்காட்சியில் ஒரு சிஸ்டம் வைத்திருக்கிறார்கள். வாயிலின்
ஒருபுறம் நுழைந்து, அப்படியே கீழ் தளம் நுழைந்து, கீழ் தளத்தின் மறுபுறம்
வெளிவந்து, வாயிலின் மறுபுறம் வெளியேற வேண்டும். ஒருவேளை நீங்கள் முதல் சில
கடைகளில் ஒரு புத்தகத்தை பார்த்து வைத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் மறுபடியும்
அக்கடைக்கு செல்ல வேண்டுமென்றால் கண்காட்சியை விட்டு வெளியே வந்துவிட்டு
மறுபடியும் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே நுழையும் வாசகர்கள் எல்லா கடைகளையும்
பார்க்க வேண்டுமென்று இப்படியொரு வினோத ஏற்பாடு !
மேலும் திடல் புத்தகக் காட்சியில் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை
வருடாவருடம் குறைந்துகொண்டு வருவதாக தோன்றுகிறது. குழந்தைகளுக்கான போர்ட் புக்ஸ்,
பிளாட்பாரங்களில் விற்கப்படும் ஆங்கில நாவல்கள், (ஒரு கடையில்) ராஜேஷ் குமாரின்
பாக்கெட் நாவல்கள் போன்றவை கிடைக்கின்றன. கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலே இல்லை.
(அச்சடித்து விற்பனையாகாத புத்தகங்களை எல்லாம் என்னதான் அய்யா செய்வீர்கள் ?).
ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் உயிர்மை ஸ்டால். இங்கே செல்லமுத்து குப்புசாமி மற்றும்
வாமு கோமுவின் சில புத்தகங்கள் கிடைக்கின்றன. மனுஷ்யபுத்திரனின் ஒரு குண்டு சைஸ்
800 ரூபாய் புத்தகம் பாதி விலையில் கிடைக்கிறது. சுஜாதாவின் நாடகங்கள்
முழுத்தொகுதி சேதாரமான நிலையில் ஒரே ஒரு காப்பி இருக்கிறது. உயிர்மையில்
ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி மற்றும் லக்ஷ்மி மணிவண்ணனின் வெள்ளைப் பல்லி
விவகாரம் (சிறுகதைத்தொகுப்பு) வாங்கினேன். டிரான்ஸ் இசையைப் பற்றி தெரிந்து
கொண்டதில் இருந்து பாப் மார்லியைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்திருக்கிறது.
குறிப்பாக அவர் ஏன் எப்போதும் போதை வஸ்துகளுடன் தொடர்புபடுத்தப் படுகிறார் என்று
தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது.
திடலில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நாளை மறுநாள் (25/04) வரை
தினசரி காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை நடைபெறுகிறது. இது தவிர
புத்தக தினத்தை முன்னிட்டு இணையத்திலும் தள்ளுபடி விற்பனைகள் நடைபெறுகின்றன. அமேஸான்
கிண்டிலில் தமிழ்ப் பிரபாவின் பேட்டை, எஸ்.ரா.வின் எனது இந்தியா உட்பட சில
புத்தகங்கள் சகாய விலையில் கிடைக்கின்றன. காமன் ஃபோல்க்ஸ் என்கிற தளத்தில்
குறிப்பிட்ட புத்தகங்கள் முப்பது சதவிகித தள்ளுபடியில் விற்பனை செய்யபடுகின்றன.
புத்தக தினத்தில் நம் அன்புக்குரியவர்களுக்கு புத்தகங்கள் பரிசளித்து
அவர்களை மகிழ்விக்கலாம். இதையெல்லாம் மாங்கு மாங்கென்று எழுதிக்கொண்டிருக்கும்
உங்கள் அன்புக்குரியவனுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
3 comments:
பிறகு அதே போல தூசியில் இருந்து படைக்கிறார்.
"பெண்" ங்கிற வார்த்தை விடுபட்டதாக தெரிகிறது ....
வாழ்த்துகள்......
மாற்றிவிட்டேன்... நன்றி...
வாழ்த்துகள்...
Post a Comment