அன்புள்ள வலைப்பூவிற்கு,
இந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான்
தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்...
பாப் மார்லியைப் பற்றி தமிழில் இருக்கும்
ஒரே புத்தகம் ரவிக்குமார் (வி.சி.க.) எழுதியிருக்கும், உயிர்மை வெளியீடான பாப்
மார்லி – இசைப்போராளி மட்டும்தான் என நினைக்கிறேன். வரலாற்று புத்தகங்களுக்கென
பெயர் பெற்ற கிழக்கில் கூட மார்லி பற்றி புத்தகம் கிடையாது.
![]() |
© Stephen Fishwick |
உலகெங்கும் இளைஞர்களைக் கவர்ந்த ஹீரோ யார்
என்றால் தயங்காமல் சொல்வோம் – சே குவேரா. அவருக்கு இணையாக உச்சரிக்கப்படும் இன்னொரு
பெயர் பாப் மார்லி. சே குவேரா கைகளில் ஏந்தியிருந்தது துப்பாக்கி. பாப் மார்லி
கைகளில் ஏந்தியிருந்தது கிடார் ! –
இப்படித்தான் துவங்குகிறது புத்தகத்தின் முன்னுரை. நம் சமூகத்தில் டீ-ஷர்டுகளில்
அதிகம் இடம் பிடித்திருப்பவர் சே குவேரா. அதற்கடுத்து பாப் மார்லி தானே. ஆனால் சே
குவேராவைப் போலவே பாப் மார்லியைப் பற்றியும் அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது
என்றே நினைக்கிறேன். அவர் ஒரு பாடகர், அவர் ஒரு கஞ்சா புகைப்பாளர் என்கிற இரு
பிரதான தகவல்கள் வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.
போகிற போக்கில் தமிழ்நாட்டில் உள்ள பாமர
மக்களும் மார்லியின் டியூனை கேட்டிருக்கிறார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கி
போடுகிறார் ரவிக்குமார். என்னவென்றால் நம் கோலிவுட் இசையமைப்பாளர்கள் செய்த வேலை.
மார்லியின் புகழ்பெற்ற பாடலான பஃபல்லோ சோல்ஜர் தமிழ் சினிமாவின் நான்காம் தர
இசையமைப்பாளர் ஒருவரால் திருடப்பட்டு கேவலமான முறையில் திரிக்கப்பட்டது என்கிறார்.
அந்த நான்காம் தர இசையமைப்பாளரின் பெயர் தேவா. அப்பாடல் அகிலா அகிலா (நேருக்கு
நேர்).
இசையில் ரெகே (Reggae) என்கிற புதிய கலவையை
பாப் மார்லி தோற்றுவித்தார். ஜமைக்காவின் தேசிய, நாட்டுப்புற இசைகளான ஸ்கா (Ska),
ராக்ஸ்டெடி (Rocksteady), டப் (Dub), டான்ஸ்ஹால் (Dancehall), ரக்கா (Ragga)
ஆகியவற்றின் நுட்பமான கூறுகள் கலந்த ஜமாய்க்க இசையே ரெகே !
முன்னுரையில் இசை விமர்சகர் ஷாஜி, இந்தப்
புத்தகம் மார்லியின் அபூர்வமான வாழ்க்கையை மிகுந்த புனைவுத்தன்மையுடன் நம் முன்
நிறுத்துகிறது என்கிறார். அது உண்மைதான். எந்த அளவிற்கு என்றால் ஒருவேளை தமிழ்
சினிமாவில் யாரேனும் பாப் மார்லியின் வாழ்க்கையை படமாக்க விரும்பினால் திரைக்கதையே
எழுத வேண்டியதில்லை. இப்புத்தகத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டால் போதும். ஒரு
இடத்தில் ஒரு பெண் பாப் மார்லியின் தாயாரிடம் ஒரு அதிர்ச்சியான செய்தியைச்
சொல்கிறார். அங்கே ரவிக்குமாரின் வரிகள் – ஸெடில்லாவின் கையில் இருந்த பை நழுவிக்
கீழே விழுந்து அதிலிருந்த மாம்பழங்கள் சிதறி ஓடுகின்றன. மேகியின் தோளைப்
பற்றிக்கொண்டு கதறுவது போலக் கெஞ்சுகிறாள்...
மார்லியின் வாழ்க்கையில் முதல் கனல் அவர்
பதிமூன்று வயதாக இருக்கும்போது தோன்றுகிறது. கிறிஸ்தவ மதப்பாடல் ஒன்றை தன்
அம்மாவிடம் பாடிக் காட்டுகிறார் மார்லி. மார்லியின் குரலில் ஒரு வசீகரம் இருந்ததை
அவரால் உணர முடிந்தது. வீட்டில் பாடி தாயாரை பிரமிக்க வைத்த மார்லிக்கு விரைவிலேயே
பள்ளியின் தனித்திறன் போட்டியின் மூலம் மேடை வாய்ப்பு கிடைத்து அதில்
பிரகாசித்தார்.
மார்லியின் வாழ்க்கை வரலாறை படிக்கையில்
என்னை மிகவும் உறுத்திய விஷயம் அவரது நிலையற்ற வாழ்க்கை. எல்லோரையும் போல ஒரு
அப்பா, ஒரு அம்மா, சகோதர – சகோதரிகள், பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம்,
இரண்டு குழந்தைகள், அப்புறம் மூப்பு, மரணம் என்று சாதாரண வாழ்க்கை
வாழ்ந்துவிடவில்லை பாப் மார்லி. மார்லியின் அப்பா ஒரு வெள்ளைக்காரர். மார்லியின்
அம்மா ஸெடில்லா ஜமைக்காவைச் சேர்ந்தவர். அப்போது ஜமைக்கா வெள்ளையர்களின்
கட்டுப்பாடில் இருந்தது. ஜமைக்காவுக்கு தொழில் நிமித்தம் வந்திருந்த நோர்வல்
மார்லி என்கிற வெள்ளைக்காரருடன் ஸெடில்லாவுக்கு பழக்கமாகி, கருவுருகிறார். மார்லி
பிறக்கும்போது ஸெடில்லாவுக்கு பத்தொன்பது வயது. நோர்வலுக்கு அறுபது. அவர்கள் சில
காலம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு மார்லியின் தந்தை வேறு திருமணம்
செய்துகொண்டார். அதன்பிறகு மார்லியின்
வாழ்க்கையே ஒரு நாடோடியைப் போலாகிவிடுகிறது. சில காலம் வேலைக்காரனாக ஒரு வீட்டில்
பணிபுரிகிறார். சில காலம் அம்மாவுடன் தங்குகிறார். பாப் மார்லிக்கு பன்னி
லிவிங்க்ஸ்டன் என்றொரு நண்பர். பின்னாளில் அவருடன் சேர்ந்து தான் தங்கள் வெய்லர்ஸ்
எனும் இசைக்குழுவை துவங்கினார். தன் இளவயதில் மார்லி, அவனது அம்மா மற்றும் பன்னி
லிவிங்க்ஸ்டன், அவனது அப்பா ஆகியோர் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அச்சமயம்
மார்லியின் அம்மாவுக்கும், பன்னியின் அப்பாவுக்கும் பழக்கமாகி அவர்களுக்கு ஒரு
பெண்குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு மார்லியின் தனிப்பட்ட வாழ்க்கை என்று எல்லாமே
முறையற்றதாகவே இருக்கிறது.
மார்லியின் வாழ்க்கையில் முதல் பாதி
முழுக்க தோல்விகளாலும் வலிகளாலும் நிறைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அப்படி
என்னதான் சாதித்தார் மார்லி என்று நினைக்கும் அளவிற்கு தோல்வி, தோல்வி என்றே
வருகிறது. மார்லியின் வாழ்க்கையில் முதல் திருப்புமுனை – ஜமைக்காவின் சுதந்திரம்
(1962). அப்போது மார்லிக்கு வயது பதினேழு. சுதந்திரத்தை பாராட்டி ஏராளமான
பாடல்களும், இசைத்தட்டுகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதுதான் பாப் மார்லி,
பன்னி லிவிங்க்ஸ்டன், பீட்டர் மக்கின்டோஷ் மூவரும் சேர்ந்து வெய்லர்ஸ் என்ற
இசைக்குழுவை தொடங்கினார்கள். அவர்களது பாடல்கள் ஓரளவுக்கு பிரபலமடைந்தன. ஆனால்
காக்ஸன் என்கிற ரெக்கார்டிங் ஸ்டுடியோ முதலாளியுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்
படி பலன்கள் அனைத்தும் காக்ஸனையே சென்றடைந்தது.
அதன்பிறகு மார்லிக்கு திருமணமும் நடந்தது.
அவரது வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனை 1965ல், மார்லியின் இருபதாவது வயதில்
வந்தது. லண்டனைச் சேர்ந்த கிரிஸ் பிளாக்வெல் என்கிற ரெக்கார்டிங் கம்பெனியின்
நட்பு மார்லிக்கு கிடைக்கிறது. அவரது நிறுவனம் மூலம் கேட்ச் எ ஃபயர் என்கிற
ஆல்பத்தை கொண்டு வருகிறார் மார்லி. ஒரு பக்கம் மார்லியின் கடின உழைப்பாலும்,
மறுபக்கம் கிரிஸ் பிளாக்வெல்லின் திறமையான மார்க்கெடிங்காலும் கேட்ச் எ ஃபயர்
வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைகிறது. அதன்பிறகு மார்லி தொட்டதெல்லாம் வெற்றிதான்
!
இடைப்பட்ட காலத்தில் ரஸ்தஃபாரி என்கிற
புதிய மத இயக்கத்தில் மார்லி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அம்மதத்தை
தோற்றுவித்ததாக கூறப்படும் எத்தியோப்பிய ஆட்சியாளர் செலாஸியை ஏறத்தாழ கடவுளாக
பாவித்தார். அவரைப் பற்றி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் செலாஸி
கொல்லப்பட்ட பிறகு கடவுளைக் கொல்ல முடியாது என்று பாடினார் மார்லி. ரஸ்தஃபாரி
இயக்கம் பல கட்டுப்பாடுகள் கொண்டவை. மாமிசம், மது கூடாது. தலைமுடியை சடை, சடையாக
வளர்க்க வேண்டும். கருப்பர்களே உலகில் உயர்ந்த இனம் என்பதும், கருப்பர்கள்
அனைவரும் பூர்விக நிலமான ஆப்பிரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்பதும்
ரஸ்தஃபாரியின் தத்துவங்களில் முக்கியமானவை. கஞ்சா என்பது ரஸ்தஃபாரி இயக்கக்
கொள்கையின்படி ஒரு புனிதமான மூலிகை. உலகில் உள்ள எல்லோரும் கஞ்சா எடுத்துக்கொள்ள
வேண்டுமென ரஸ்தஃபாரி வலியுறுத்துகிறது.
ஜமைக்காவின் அப்போதைய அரசியலில் ஒரு தேசிய
கட்சியும், ஒரு தொழிலாளர் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. மார்லி
நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக
உருவெடுத்ததால் கட்சிகள் அதனை அறுவடை செய்ய முயன்றன. குறிப்பாக தேசிய கட்சி
மார்லியை அணுகி ஜமைக்காவில் அமைதியை நிலைநாட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென
கேட்டு, பின்னர் தந்திரமாக அதனை தங்களுக்கு சாதகமான வாக்குகளாக மாற்றுகின்றனர். அரசியல்
பகையில் ஒரு முறை மார்லியின் மீது துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கிறது. அதனைச்
செய்தது எந்த கட்சிக்காரர்கள் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.
மார்லியின் பாடல்கள் அவரது
வாழ்க்கையிலிருந்து எழுதப்பட்டவையே. அதனாலேயே அதிலே குறிப்பாக கறுப்பின மக்களின்
வாழ்க்கை நிலையைப் பற்றி நிறைய பாடினார். இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது
என்றார். அவர் காதலித்த சமயத்தில் காதல் பாடல்கள் எழுதினார். ரஸ்தஃபாரியை
முன்னிறுத்தி எழுதினார். கஞ்சாவை முன்னிறுத்தி எழுதினார். கடைசியில் தான் மரணத்தை
நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட அப்ரைசிங் என்கிற உணர்வுப்பூர்வமான
ஆல்பத்தை வெளியிட்டார்.
காதல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும்
மார்லி செய்தது புரட்சிதான். அவரது இருபத்தியொரு வயதில் ரீட்டா மார்லியை காதலித்து
மணந்தார். ரீட்டாவும் ஒரு பாடகி. அதிகாரப்பூர்வமாக ரீட்டாவை மட்டும்தான் அவர்
திருமணம் செய்துகொண்டார். ஆனால் செக்ஸில் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்தார். பல
பெண்களுடன் கூடி குழந்தைகளும் பெற்றுக்கொண்டார். மார்லிக்கு மொத்தம் அதிகாரப்பூர்வ
லிஸ்டில் மட்டும் பதினோரு குழந்தைகள் (ஏழு பெண்கள் மூலம்). ஒரு கட்டத்தில் சிண்டி
ப்ரேக்ஸ்பியர் என்கிற பிரபல மாடலை (1976 உலக அழகி) காதலித்தார். அவர் மூலமாகவும்
மார்லிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் டாமியன். மார்லி இறக்கும்போது
டாமியனுக்கு இரண்டு வயது. தற்போது டாமியன்தான் மார்லியின் இசை வாரிசு என்று
கருதப்படுகிறது.
1977ல் பொழுதுபோக்குக்காக கால்பந்து
விளையாடிக் கொண்டிருக்கையில் மார்லியின் கணுக்காலில் ஒரு காயம் ஏற்படுகிறது. தாங்க
முடியாத வலி என்பதால் மருத்துவரை சந்திக்கிறார் மார்லி. மார்லியின் உடலில்
புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் அரிய வகை கரும்புற்றுநோய்
மார்லியை தாக்கியிருந்தது. அதனை குணப்படுத்த முதலில் காலை வெட்டி எடுக்க வேண்டும்
என்றார்கள். உடலின் பாகங்களை நீக்குவது ரஸ்தஃபாரி கொள்கைக்கு எதிரானது என்பதால்
மார்லி அதனை கண்டிப்பாக மறுத்துவிட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலை கொஞ்சம்
கொஞ்சமாக மோசமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர் பாடுவதை நிறுத்தவில்லை. கடைசியாக
1980 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு
அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. எட்டு மாதங்கள் வரை ஜெர்மனியில் மாற்று
சிகிச்சையொன்றை மேற்கொண்டார். அது பலனளிக்கவில்லை. மார்லி இறக்கப் போகிறார் என்று
தெரிந்ததும். அவரை தாய்நாடான ஜமைக்காவிற்கே அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
துரதிர்டவசமாக விமானப்பயணத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மியாமியில் உள்ள
ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே தனது 36 வயதில் உயிரிழந்தார்.
ஒருவேளை மார்லி எண்பது, தொண்ணூறு வயது வரை
வாழ்ந்து, மார்க்கெட் இழந்து, பின் இறந்திருந்தால் அவர் இதே புகழோடு
இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். புகழின் உச்சியில் இருக்கும்போது
மரணமடைவதால் அவர்களது புகழ் மரணமற்றதாக ஆகிவிடுகிறது. மர்லின் மன்றோ, ஷோபா, சில்க்
ஸ்மிதா என்று எத்தனை உதாரணங்கள்.
ரவிக்குமாரின் வார்த்தைகளில் மார்லியின்
வரலாற்றை படிக்கையில், கூடவே மார்லியின் பாடல்களையும் கேட்டேன். புத்தகத்தில்
என்னென்ன பாடல்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதோ அதையெல்லாம் வரிசையாக கேட்டு
வந்தேன். (நன்றி: அமேஸான் மியூசிக்). ஆனால் ஒரு பாடல் கூட மனதிற்கு நெருக்கமாக
உணரவில்லை. ஒருவேளை சினிமா பாடல்கள் கேட்டு, கேட்டு நம்முடைய ரசனை வேறு மாதிரி
இருக்கிறதோ என்னவோ. நேர்மையாகச் சொல்வதென்றால் எனக்கு பஃபல்லோ சோல்ஜரை விட அகிலா
அகிலா தான் பிடித்திருக்கிறது.
மார்லியின் வாழ்க்கையில் என்னை மிகவும்
ஈர்த்தது அவரது ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை. முன்பே குறிப்பிட்டது போல படிப்பு, வேலை,
சம்பாத்தியம், மனைவி, குழந்தைகள் என்று சாதாரண வாழ்க்கை வாழாமல் வாழ்க்கையை அதன்
போக்கிலேயே எதிர்கொண்டிருக்கிறார் மார்லி. கூடவே மிகவும் வியந்த மற்றுமொரு விஷயம்
மரணத்தை மார்லி எதிர்கொண்ட விதம். மரணம் வரும் சமயம் சாக்ரட்டீஸ் போலவோ, மார்லி
போலவோ அதனை கம்பீரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
No comments:
Post a Comment