16 May 2019

கோவா – கடற்கரைகளைக் கடந்து

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – டிட்டோஸ் லேன்

கோவா தொடரில் சற்றே நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மறுபார்வையிட விரும்புபவர்களுக்கு இத்தொடரின் முதல் பகுதியின் சுட்டி – தொடக்கம். இங்கிருந்து துவங்கி ஒவ்வொரு பகுதியின் இறுதியில் உள்ள சுட்டியின் மூலம் அடுத்தடுத்த பகுதிகளை படிக்கலாம்.

கோவா பயணத்தை முதன்முதலாக திட்டமிடத் துவங்கியபோது அங்கே ஏராளமான கடற்கரைகளை உள்ளதை கவனித்தோம். ஏராளம் என்றால் ஐம்பதுக்கும் மேல். அது மட்டுமில்லாமல் கடற்கரைகளைத் தாண்டி கோவாவில் ஒன்றுமே கிடையாது என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை. அதன்பிறகு மிகுந்த சிரத்தை எடுத்து கோவாவில் கடற்கரை இல்லாமல் பார்ப்பதற்கு தகுந்த இடங்கள் என்னென்ன இருக்கின்றன என்று தனியாக ஒரு பட்டியலிட்டோம். கடற்கரைகளைக் கடந்து அங்கே தேவாலயங்ககளும் கோட்டைகளும் அருங்காட்சியகங்களும் இருப்பதை கவனித்தோம்.

© Thrillophilia
முதலில், துத்சாகர் அருவி. துத்சாகரைப் பற்றி ஏற்கனவே ரயில் பயணப் பகுதியில் கொஞ்சமாக பார்த்திருந்தோம். கிட்டத்தட்ட கோவாவின் எல்லையில் அமைந்திருக்கிறது. துத்சாகர் மட்டுமல்லாமல் கர்நாடக – கோவா எல்லையில் மேலும் சில அருவிகளும், விலங்கு சரணாலயங்களும் உள்ளன. ஆனால் அவற்றை சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் கோவாவின் மற்ற பகுதிகளை மறந்துவிட வேண்டும். ஒருவேளை முழு கோவாவையும் சலிக்கச் சலிக்க பார்த்தாயிற்று. இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டால் துத்சாகர் உள்ளிட்ட அருவிகளுக்கு பயணம் போகலாம்.

அடுத்ததாக கோட்டைகள். இங்குள்ள கோட்டைகள் போர்த்துகீசிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருப்பதால் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கின்றன. சபோரா கோட்டை - சபோரா என்கிற நதியின் மீது பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை. இதன் சிறப்பம்சம், இங்கிருந்து நாலாபுறமும் கண்காணிக்க முடியும். வகேட்டர் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. 

மாலை நேர சபோரா
மாலை நேரத்தில் கோட்டையின் உச்சியிலிருந்து வகேட்டர் கடற்கரையுடன் அரபிக்கடலில் சூரியன் மறைவதைப் பார்ப்பது கொள்ளை அழகு. கோட்டை, அருகிலேயே கடற்கரை, அங்கே சகலவிதமான வாட்டர் ஸ்போர்ட்ஸ், ஷாப்பிங் செய்ய கடைகள், கடல் உணவகங்கள் என்று எல்லாமே கிடைத்துவிடுவதால் தவறவிடக்கூடாத ஸ்பாட். கூட்டம் அதிகம் என்பது மட்டும்தான் குறை. 

© Trilochana Choudhury
அகுவாடா கோட்டை. மராத்தியர்களிடமிருந்தும் டச்சுக்காரர்களிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ள போர்த்துகீசியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கட்டிய கோட்டை. அகுவாடா என்றால் தண்ணீர் என்று பொருள். பிரம்மாண்டமான கலங்கரை விளக்கம் ஒன்று இங்கே அமைந்துள்ளது. அக்காலத்தில் கப்பல்களுக்கு குடிநீர் சப்ளை இங்கிருந்துதான் நடந்திருக்கிறது. இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதி இங்கே இருந்திருக்கிறது. போர்க்காலங்களில் ஆயுதங்களை சேமித்து வைக்கவும் பயன்பட்டிருக்கிறது. இதனருகே ஒரு சிறைச்சாலையும் (பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை) கூட்டம் அதிகமில்லாத ஒரு கடற்கரையும் உண்டு.

© Yash Shah
ரெய்ஸ் மகோஸ் கோட்டை. மற்ற இரு கோட்டைகளை விட ஒப்பீட்டளவில் சிறியது. போர்த்துகீசிய வைஸ்ராய்களும், அதிகாரிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களுக்கு எதிராக மராத்தியர்கள் போர் தொடுத்தபோது இக்கோட்டை முக்கியமாக விளங்கியது. மண்டோவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

© GoIBIBO
கோவாவின் தலைநகர் பனாஜி. அசல் கோவாக்காரர்கள் இந்த பகுதியின் பெயரை பஞ்சிம் என்று உச்சரிக்கிறார்கள். இதுதான் பாரம்பரியமான பழைய கோவா. இந்த பகுதியில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்களும் பழைய போர்த்துகீசிய கட்டிடங்களும் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது பாம் ஜீஸஸ் பெஸிலிக்கா தேவாலயம் - குழப்பிக்கொள்ள வேண்டாம். பாம் ஜீஸஸ் என்றால் புனித இயேசு. பெஸிலிக்கா என்றால் அரைவட்ட வடிவமுள்ள கிறஸ்தவ கட்டிடமுறை. 

© Kumar Shantanu Anand
இதன் சிறப்பம்சம் இங்குள்ள புனித. ஃபிரான்சிஸ் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல். அதாவது நானூறு வருடங்களுக்கு மேலாக பரமாரிக்கப்பட்டு வரும் உடல். மற்றும் புனித. ஃபிரான்சிஸ் சேவியரின் வாழ்க்கைக் கட்டங்கள் இங்கே ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. தேவாலயம் என்பதைத் தாண்டி கலைநயம் மிகுந்த இடம். ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன.

© Archaeological Survey of India
தேவாலயத்தின் எதிரிலேயே தொல்லியல் துறை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கோவாவின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. பழங்கால சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்துள்ளன. நேரம் காலை பத்து முதல் மாலை ஐந்து வரை. வெள்ளி விடுமுறை.

தொல்லியல் துறை தவிர்த்து கோவாவில் வேறு சில அருங்காட்சியகங்களும் உள்ளன. குறிப்பாக Houses of Goa (கோவாவில் உள்ள பல்வேறு கலாசாரங்களின் கட்டிடக்கலை பற்றியது), Museum of Goa (கைவினை / கலை பொருட்கள் பற்றியது), Museum of Christian Art (கிறிஸ்தவ சிற்பங்கள், ஓவியங்கள்), கோவா சித்ரா அருங்காட்சியகம் (அவர்களின் பண்டைய வாழ்வியல் முறை பற்றியது), Mario Gallery போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருப்பதால் இவற்றை சுற்றிவர நேரம் எடுக்கும். ஆர்வமிருப்பவர்கள் பயண வழியில் பார்க்கலாம் அல்லது பார்ப்பதற்கு தகுந்தபடி பயவழியை அமைத்துக்கொள்ளலாம்.

© Naval Aviation Museum
கோவாவில் உள்ள அருங்காட்சியகங்களிலேயே மிக முக்கியமானது கடற்படை விமான அருங்காட்சியகம். இது விமான நிலையத்திலிருந்து சில கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளதால் சென்றடைவதில் சிரமம் இருக்காது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு கடற்படை சார்பாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு ரக குட்டி விமானங்கள் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உள்ளரங்கத்தில் விமானத்தின் மாடல்களும், பழைய புகைப்படங்களும் உள்ளன, கடற்படை பற்றிய செய்திப்படம் பார்க்க குட்டி தியேட்டர் ஒன்றும் உள்ளது. திங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் அருங்காட்சியகம் திறக்கப்படுவதில்லை. நேரம் காலை பத்து முதல் மாலை ஐந்து வரை.

© Remote Traveler
மாலை நேரம் மண்டோவி நதியில் ஒரு மணிநேர படகு சவாரிகள் கிடைக்கின்றன. படகில் கொங்கனி மற்றும் போர்த்துகீசிய நடனங்கள் இடம்பெறுகின்றன. இதன் விலை முன்னூறு, ஐநூறு என்று படகு நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடுகிறது.

அருவி, கோட்டைகள், அருங்காட்சியகங்கள் தவிர்த்து கோவாவில் கடற்கரையில்லா கொண்டாட்டம் உண்டென்றால் அது கஸினோ. குறிப்பாக நதியில் மிதக்கும் கஸினோக்கள். அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

அடுத்து வருவது: கோவா - மிதக்கும் கஸினோ

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

மாதேவி said...

கோவா கண்டுகொண்டோம்.

yacht hire Dubai said...

Nice post about goa and surroundings