20 June 2019

கோவா – மிதக்கும் கஸினோ

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோக்கள் உள்ளன. தோராயமாக பதினைந்து என்று அறிகிறேன். அவற்றில் சில மட்டும் மண்டோவி நதியில் மிதந்தபடி உள்ளன. மற்றவை நிலப்பகுதியில். சூதாட்டத்தில் பெரிய ஆர்வமில்லாத சாதாரண சுற்றுலா பயணிகளை பொறுத்தவரையில் கஸினோக்களின் கிக்கே அவை தண்ணீரில் மிதக்கின்றன என்பதும் நாம் அங்கே தண்ணீரில் மிதக்கலாம் என்பதும்தான். அதனால் எங்கள் வரைவுத் திட்டத்தில் மிதக்கும் கஸினோக்களை மட்டும் கணக்கில் கொண்டோம்.

அது ஏன் கஸினோக்கள் மிதக்கின்றன என்பதற்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு. இந்தியாவின் PUBLIC GAMBLING ACTன் படி சூதாட்டத்திற்கு இந்தியாவில் அனுமதி இல்லை. ஆனால் எல்லா சட்டத்திலும் ஒரு லூப்ஹோல் இருக்குமில்லையா ? அதன்படி இந்திய ‘மண்ணில்’ சூதாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. சமயோஜிதமாக இதனை பயன்படுத்தி 1999ம் ஆண்டு, மண்டோவி நதியில் கப்பலில் மிதக்கும் கஸினோ துவங்கப்பட்டது. அதே சமயம் விரைவிலேயே கோவாவின் மண்ணிலும் கஸினோக்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுவிட்டது. 

மிதக்கும் கஸினோக்களை பொறுத்தவரையில் இரு பெரும் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை பரப்பி வைத்திருக்கின்றன. முதலாவது கஸினோ ப்ரைட் குரூப். இவர்கள் சார்பாக கஸினோ ப்ரைட் மற்றும் கஸினோ ப்ரைட் 2 ஆகிய இரண்டு கப்பல்கள் இயங்குகின்றன. இரண்டாவது, டெல்டின் குரூப். இவர்கள் சார்பாக டெல்டின் ராயல், டெல்டின் ஜாக் மற்றும் டெல்டின் கேரவெல்லா ஆகிய கப்பல்கள் இயங்குகின்றன. 

நாங்கள் யாரும் இதுவரை கோவாவுக்கும் சென்றதில்லை, கஸினோவுக்கும் சென்றதில்லை என்பதால் எங்களுக்கு அது குறித்து நிறைய சந்தேகங்களும், தயக்கங்களும் இருந்தன. நேரக் கட்டுப்பாடு உள்ளதா, உணவும் மதுவும் டிக்கட் விலையில் அடக்கமா, சூதாடாமல் உணவுக்காகவும் மதுவுக்காகவும் செல்லலாமா, சூதாடாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் இலவச மது கிடைக்குமா, சூதில் ஜெயித்தால் பணம் கொடுப்பார்களா இப்படி நிறைய சில்லறை சந்தேகங்கள். பார்த்துப் பார்த்து அலசினோம். சில கேள்விகளுக்கு இணையத்தில் கூட தெளிவான பதில்கள் இல்லை. விலையைப் பொறுத்தவரையில் கஸினோ ப்ரைட் குரூப்பின் இரு கப்பல்களிலும் வார நாட்களில் ரூ.1500, வார இறுதியில் ரூ.2000, டெல்டின் குரூப் கப்பல்களில் ரூ.2500 முதல் ரூ.3500 வரை இருந்தன. கஸினோ ப்ரைட் கப்பல்கள் பற்றி பயணிகளின் விமர்சனக் குறிப்புகள் மோசமாகவே இருந்தன. கூட்டமாக இருக்கும், பயணிகளை மரியாதையாக நடத்துவதில்லை என்று நிறைய பேர் எழுதியிருந்தார்கள். நாங்களும் இருப்பதிலேயே குறைவான கட்டணம் கொண்ட கஸினோவைத் தேடிச் செல்ல விரும்பவில்லை. ஒற்றைமுறை அனுபவம் தானே ! அதனால் டெல்டின் குரூப்பில் உள்ள டெல்டின் ராயல் கஸினோவிற்கு செல்வதென்று தீர்மானித்திருந்தோம். இருப்பினும் நேரடியாக டெஸ்கிற்கு சென்று கூடுதல் சந்தேகங்களைக் கேட்க வேண்டும் என்றும் நினைத்திருந்தோம்.

இந்த மிதக்கும் கஸினோக்கள் அனைத்தும் வடக்கு கோவாவிலிருந்து தெற்கு செல்லும் பாதையில் தான் அமைந்துள்ளன. அதனால் அவற்றைக் கடந்து செல்லும் போதே விசாரித்துவிடலாம் என்று சென்றோம். விசாரணையின்போது எங்கள் பட்டியலிலேயே இல்லாத ஆடைக்கட்டுப்பாடு என்கிற புதிய விதியை தெரிந்துக்கொண்டோம். பொதுவாக க்ளப்களில் உள்ள விதிகள்தான். 

டெல்டின் குரூப் என்பதை ஒரு மனதாக தீர்மானித்துவிட்டோம். ஆனால் டெல்டின் ராயலா அல்லது கேரவெல்லாவா என்று குழப்பமாக இருந்தது. இரண்டிலும் டிக்கட் விலை அதே ரூ.3000. கொஞ்ச நேரம் வெளியே நின்று கண்காணித்தோம். வருகிற கூட்டம் பெரும்பாலும் டெல்டின் ராயலையே தேர்வு செய்தனர். கேரவெல்லா பக்கம் யாரும் ஒதுங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் எனது உள்ளுணர்வோ கேரவேல்லா பக்கம் ஒதுங்கியது. இந்த மொத்தக் கூட்டமும் ராயலுக்குப் போய் கும்மியடிக்கும், நசநசவென்று அவர்களுக்கு மத்தியில் இருப்பதை விட, தனியாக கேரவெல்லாவிற்கு போய்விடலாமே என்பது என் எண்ணம். எதற்கு குழம்புவானேன் என்று நேரடியாக டெல்டின் குரூப் வரவேற்பு மேஜைக்கு சென்று, சுற்றி வளைக்காமல் ஒரு முக்கியமான கேள்வியை நேரடியாக முன்வைத்தோம். அந்த கேள்வி – நாங்கள் முதல்முறை கஸினோவுக்கு வருகிறோம். எங்களுக்கு கஸினோ பற்றி அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் வெளியிலிருந்து கவனித்தபோது பெரும்பாலானோர் டெல்டின் ராயலையே தேர்வு செய்கிறார்கள். இரண்டும் உங்களுடைய கஸினோக்கள், இரண்டுக்கும் ஒரே கட்டணம் என்று அறிகிறோம். இரண்டுக்கும் அப்படி என்னதான் வித்தியாசம் ?. அதற்கு வரவேற்பு மேஜையிலிருந்த சிப்பந்தி கூறிய பதிலின் சாராம்சம் என்னவென்றால் டெல்டின் ராயலில் ஆட்டம், பாட்டம், சினிமா பாட்டு என்று கொண்டாட்டமாக இருக்கும். கொள்ளளவு அதிகம். அதே சமயம் டெல்டின் கேரவேல்லாவில் டான்ஸ், சினிமா பாட்டு எல்லாம் இல்லாமல் லைவ் மியூஸிக் மட்டும் இருக்கும். கொள்ளளவு குறைவு. பொதுவாக குழுவாக வருபவர்கள் டெல்டின் ராயலைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றார். அவர் சொன்னதில் இருந்து சுருக்கமாக டெல்டின் ராயல் – மாஸ், டெல்டின் கேரவெல்லா – கிளாஸ் என்று புரிந்துகொண்டோம். இவ்வளவையும் சொல்லி முடித்துவிட்டு, நீங்கள் டெல்டின் ராயலைத் தானே தேர்வு செய்யப் போகிறீர்கள் என்றார் சிப்பந்தி. நாங்கள் இல்லை என்றோம். கிட்டத்தட்ட படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கூலர்ஸைக் கழட்ட, ரஜினி கூலர்ஸை மாட்டும் காட்சிக்கு இணையான கெத்தான தருணம் அது !

அன்றிரவு கிட்டத்தட்ட ஒன்பது மணியளவில் கஸினோவுக்கு சென்றோம். முடிந்தால் விடியும்வரை அங்கேயே நேரம் செலவிட வேண்டும் என்று திட்டம். கட்டணம் ரூ.3000. OTPC எனும் ஒருமுறை மட்டும் விளையாடக்கூடிய டோக்கன் ரூ.5000 மதிப்புக்கு டிக்கட்டுடன் தருகிறார்கள். இதனை பணமாக்க முடியாது. சிப்பந்தி ஒருவர் கப்பலுக்கு தகவல் கொடுக்க, நம்மை அழைத்துச் செல்வதற்காக ஒரு சிறிய படகு வருகிறது. சில நிமிடப் பயணம். மீன்வடிவ கப்பலில் கஸினோ இயங்குகிறது. கப்பலின் நுழைவாயிலிலும் நம்மை வரவேற்பதற்காக சிப்பந்திகள் காத்திருக்கிறார்கள். ராயலான வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும். கீழ் தளம் சூதாட்டக்கூடம். மேல்தளம் உணவகம். இடையில் உள்ள இரு தளங்கள் சூட் அறைகள். வெளியூரிலிருந்து வரும் வி.ஐ.பி. சூதாடிகள் இங்கேயே அறை எடுத்துத் தங்கி சூதாடுவார்கள் என்று கேள்வி. உணவகம் நள்ளிரவு இரண்டு மணிக்கு மூடப்பட்டு விடும் என்று விசாரித்து வைத்திருந்ததால் நேராக மேலடுக்கில் உள்ள உணவகத்திற்கு சென்றோம். கண்ணாடியில் மூடப்பட்ட ஒரு அறை, திறந்தவெளி என்று இரண்டு பகுதியாக அமைந்திருந்தது. கூட்டம் அதிகமில்லை. கண்ணாடி அறையில் ஒரு வெள்ளைக்காரர் ஹிந்தியில் சிதார் என்று சொல்லப்படக்கூடிய ஒரு இசைக்கருவியை மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க ஒரு பத்து, பதினைந்து வாடிக்கையாளர்கள் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தார்கள். திறந்தவெளியில் யாருமில்லை. நாங்கள் திறந்தவெளியை ஆக்கிரமித்துக்கொண்டோம். அளவில்லா உணவும், மதுவும். சிக்கன், மட்டன், கடல் உணவு, சைவம், பிரதான உணவு, உப உணவு என்று கலவையாக ஒரு இருபது ஐட்டம் கொண்ட மெனு தருகிறார்கள். அவற்றில் நமக்கு எது வேண்டுமோ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான், எவ்வளவு வேண்டுமென்றாலும். உணவே இப்படி என்றால் மது வேற லெவல். உள்நாடு வெளிநாடு பாரபட்சமில்லாமல் அத்தனையும் நுழைவு கட்டணத்திற்குள் உட்பட்டது. இதுபோக மாக்டெயில், காக்டெயில், ப்ரீஸர் என்று அத்தனையும். 

மேல்தளம்
பகட்டான ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு சில்லறைத்தனமாக சரக்கடித்து மட்டையாகும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் நிதானமாகவே நடந்துகொண்டோம். இட்லிய சாம்பார்ல பெனஞ்சு அடிடா லெவலுக்கெல்லாம் இறங்காமல் மெதுவாக சாப்பிட்டோம். அதே சமயம் நிறைவாகவும். கிட்டத்தட்ட இரவு ஒன்பதரை மணிக்கு தொடங்கிய ஆட்டம், இரண்டு மணிக்கு உணவகம் மூடும் சமயம்தான் முடிவுக்கு வந்தது. அதுவரை பொறுமையாக உண்டும், குடித்தும் தீர்த்தோம்.

உண்மையில் அதுவரையில் எங்களுக்கு சூதாடும் எண்ணம் இல்லை. ஏனென்றால் எங்களுக்கு சூதுவாது தெரியாது. இருந்தாலும் விடியும் வரை நேரம் செலவிட வேண்டும் (ஹைவேயில் இருட்டில், போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க) என்பதாலும், OTPCயை காலி செய்ய வேண்டும் என்பதாலும் சூதாட்டத் தளத்திற்கு சென்றோம். சுற்றி பத்து, பதினைந்து மேஜைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விளையாட்டு, மற்றும் அதனை சொல்லித்தரவும், கண்டக்ட் செய்யவும் வடகிழக்கு யுவதிகள். அங்கேயும் சிப்பந்திகள் மது மற்றும் மது அல்லாத பானங்களை செர்வ் செய்துக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் மூவர் என்பதால் மொத்தம் 15000 ரூபாய்க்கு டோக்கன் கைவசம் இருந்தது. அங்கே இருப்பதிலேயே ஒரு எளிய விளையாட்டைக் கண்டுபிடித்தோம். எங்களிடம் உள்ள டோக்கன் வைத்து சில ஆட்டம் விளையாடுவோம், அதில் ஒன்றிரண்டு வெல்வோம், அப்புறம் வந்து ஓரமாக உட்கார்ந்து ப்ரீஸர் குடிப்போம். இப்படியே அதிகாலை ஐந்து மணிவரை விளையாடிக்கொண்டிருந்தோம். இறுதியில் ரூ.10500 வென்றிருந்தோம். இங்கே ஒரு விஷயம், பொதுவாக சூதில் பணம் வெல்பவர்கள் அதனை சூதிலேயே முழுக்க தொலைத்துவிட்டு தான் வீடு போய் சேர்வார்கள். (விதிவிலக்குகள் உண்டு). நாங்கள் அப்படி வென்ற பணத்தை, அங்கேயே தொலைக்காமல் உடனடியாக கவுண்ட்டருக்கு சென்று அதனை பணமாக மாற்றிக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம். ஆக, டிக்கட் கட்டணம் மூவருக்கும் சேர்த்து ரூ.9000, வென்ற தொகை – ரூ.10500. ஆயிரத்து ஐநூறு ரூபாய் லாபம் மற்றும் ஒரு இரவு முழுக்க உணவு, மது, கேளிக்கை அத்தனையும் இலவசம் ! ஒருவேளை நாங்கள் அந்த பணத்தை வென்றிருக்காவிட்டால் கூட உணவுக்கும், மதுவுக்கும், அங்கே கிடைக்கும் ரம்மியமான அனுபவத்திற்கும் மூன்றாயிரம் ரூபாய் வொர்த்து !

பொதுவாக கஸினோ பற்றி சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் :-

- 21 வயதிற்குட்பட்டவர்கள் அனுமதி இல்லை.
- டிக்கட் வாங்கும்போது புகைப்படத்துடன் கூடிய அரசாங்க அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.
- டிக்கட் விலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் கஸினோவைப் பொறுத்து ரூபாய் ஆயிரத்து ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை ஆகிறது. வார இறுதியில் வார நாட்களை விட ஐநூறு கட்டணம் அதிகம்.
- கண்டிப்பான டிரஸ் கோட் உண்டு. ஷார்ட்ஸ், பெர்முடாஸ், ஸ்லீவ்லெஸ், ரவுண்ட் நெக் டீ-ஷர்ட்ஸ் அனுமதி இல்லை. ஷூ கட்டாயம்.
- லக்கேஜ், முதுகுப்பை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவற்றை வெளியே வரவேற்பறையில் வைத்திருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் ஒரு பைக்கு ரூ.500 கட்டணம்.
- நேரக்கட்டுப்பாடு எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து, எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால் ஒருமுறை வெளியேறிவிட்டால் டிக்கட் காலாவதியாகிவிடும்.
- அளவில்லா உணவும், மதுவும் டிக்கட் கட்டணத்திற்கு உட்பட்டது.
- உள்ளே போட்டோ, வீடியோ எடுக்க அனுமதி இல்லை என்றாலும் உணவகப் பகுதியில் இதனை அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.

எங்களுடைய கோவா பயணத்தில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்த இடமென்றால் அது கஸினோதான். குறிப்பாக, கேரவெல்லா அல்லாமல் வேறு கஸினோவைத் தேர்ந்தெடுத்திருந்தால் இவ்வளவு நல்ல அனுபவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். கோவா செல்லும் அனைவரும் ஒருமுறையாவது கஸினோ செல்ல வேண்டும் என்பது என் பரிந்துரை. அடுத்த கட்டுரையில் கோவாவின் இன்னொரு முகமான தெற்கு கோவாவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

அடுத்து வருவது: கோவா - தெற்கின் அழகு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

Ponmahes said...

அருமையான பதிவு ....இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் .. வாழ்த்துக்கள் தம்பி .!!!

Murali Ramakrishnan said...

valuable info

Nanjil Siva said...

good !!!

mohan said...

என்ன புது பதிவு ஒன்னும் காணோம்?