அன்புள்ள வலைப்பூவிற்கு,
வர்கலாவைப் பற்றி எழுதிக்கொண்டே வரும்போது இடையில் எங்களுடைய காந்தளூர் பயணம் பற்றி எழுதாமல் வர்கலாவின் சில பகுதிகளை எழுத முடியாது என்று தோன்றியதால் இந்த இடைச்செருகல் !
உடுமலைப்பேட்டையில் இருந்து அறுபது கி.மீ. தொலைவில், தமிழக – கேரள எல்லையில், கேரளாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது காந்தளூர். ஏதாவது ஆஃப்-பீட் தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காந்தளூரைத் தேர்வு செய்திருந்தோம். சில்லென்ற தட்பநிலை. டூரிஸ்ட் கூட்டமில்லாத பகுதி.
2019 இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடந்துக்கொண்டிருந்தபோது நாங்கள் காந்தளூர் சென்றுவந்தோம். மிகச்சரியாக சொல்வதென்றால் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டுவிட்டு ஈர மையுடன் கிளம்பிச் சென்றோம். அப்போது கேரளாவில் தேர்தல் நாளுக்கு சில நாட்கள் எஞ்சியிருந்தன.
தேர்தல் பரப்புரை ஊர்வலம் |
காந்தளூர் என்பது இடுக்கி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கே கடைசிகட்ட தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் வேட்பாளரின் முகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள். ஆனால் மேற்பார்வைக்கு அத்தனையும் ஒரே முகம் போலவே இருந்ததால், போஸ்டர்களை கூர்ந்து கவனித்தேன். நான் நினைத்தது போல இல்லை. மூன்று வெவ்வேறு வேட்பாளர்களே. இயல்பில் கேரள பெண்களைப் போலவே கேரள ஆண்களும் ஒரே சாயல் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மூவரும் ஒரே மாதிரியான மீசை வைத்திருந்தார்கள்.
கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் பிரதான கட்சிகள். கிட்டத்தட்ட 2016க்கு முந்தைய தி.மு.க. – அ.தி.மு.க.வைப் போல. குறிப்பாக கம்யூனிஸ்டை தி.மு.க.வோடு ஒப்பிடலாம். பாரம்பரியமிக்க கட்சி, அதே சமயம் முன்பைப் போல இல்லை என்கிற சலசலப்புகள் கொண்ட கட்சி. மூன்றாவதாக பி.ஜே.பி – ஒப்புக்கு.
கேரள அரசியலை கவனிக்கும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க,விற்கும் இடையே சில தொழில் உறவுகள் உண்டு. ஆனால் களத்தில் இருவரும் எதிரிகள். ஒருவரை ஒருவர் தேர்தலில் வீழ்த்த, கொள்கை சமரசங்களுடன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். கேரளாவில் அப்படியில்லாமல் கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு புரிந்துகொள்ளுணர்வு இருக்கிறது என்று யூகிக்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை வைத்துக்கொண்டு மதவாத சக்திகள் கேரளாவில் காலூன்ற முடியாமல் செய்வதாகத் தோன்றுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கேரளத் தலைவர்கள் ஒரே விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்ற செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதும் கூட கம்யூனிஸ – காங்கிரஸ் தலைவர்கள் தான் ஒன்றாக வந்தார்களே ஒழிய பி.ஜே.பி. கோமாளிகள் அல்ல.
2019 இடுக்கி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக அவர்களுடைய ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் (சிட்டிங் எம்.பி.) போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தமிழக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் அதே ஆர்வத்துடன் இடுக்கி தொகுதி நிலவரத்தை தேடினேன். ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்.
*************************
நாங்கள் காந்தளூர் சென்றிருந்த சமயத்தில் இடைப்பட்ட ஒருநாள் மட்டும்தான் மதுக்கடை இயங்கியது. முன்பும் பின்பும் தேர்தல் விதிகள் காரணமாக இயங்கவில்லை. கள்ளுக்கடைகளும் அவ்விதமே. இடைப்பட்ட அந்த ஒருநாளில் கள்ளுக்கடைக்கு படையெடுத்தோம். நான் அதற்கு முன்புவரை கள்ளு குடித்ததில்லை. ஒரேயொரு முறை கல்லூரியில் படிக்கும்போது அதற்கான வாய்ப்பு வந்தபோது, உடன் பயின்றவர்கள் புதிதாக குடிப்பவர்களுக்கு கள்ளு தூக்கி விட்டுவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன். இப்போது சூழல் கூடி வந்ததால் கள்ளு குடித்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.
காந்தளூர் கள்ளுக்கடை |
கள்ளு - கப்பை - கடலைக்கறி |
கள்ளுடன் சாப்பிட கப்பையும், பீஃப் கறியும் இருப்பதாகச் சொன்னார்கள். கப்பை என்றால் என்னவென்றே அப்போது தெரியாததால் அதனை ஒரு பிளேட் வாங்கி, அது மரவள்ளிக்கிழங்கு என்று தெரிந்து, அதனை கைவிட்டோம். அதன்பிறகு பீஃப் கறி வாங்கி அது சில பல ப்ளேட் ரீப்பீட்டில் சென்றது. கள்ளின் ஒருவகையான புளிப்புச்சுவை, அதிலிருந்த ஃபிஸ் போன்றவை மிகவும் பிடித்துப்போய்விட்டது.
தேர்தல் சமயம் என்பதால் கடையை நிர்வகித்து வந்த அம்மாள் அரசியல் குறித்து பேசத் துவங்கினார். அவருடைய பேச்சில் இருந்து அவருக்கு மற்றும் பொதுவாக அத்தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் மீது ஒரு ஸாஃப்ட் கார்னர் இருப்பது தெரிய வந்தது. அவரது முதலமைச்சர் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போகிறது என்பது மாதிரியான ஸாஃப்ட் கார்னர். மேலும் முன்பொரு முறை அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து நீண்ட முதல் மற்றும் ஒரே உதவிக்கரம் ஸ்டாலினுடையது என்றார்.
இதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மகன் இடைமறித்து, நான் ஒரு தகவல் சொல்கிறேன் அதைப் போய் உன் மாநில மக்களிடம் சொல் என்பது மாதிரி ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நேரடியாக அலைபேசியில் தகவல் தெரிவிப்பார்களாம். ச.ம.உ.வும் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பாராம். ஒருவேளை அப்படி வராவிட்டால் அடுத்தநாள் ஊரே ச.ம.உ. வீட்டுவாசலில் நிற்குமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தமிழத்தில் இந்நிகழ்வில் ஒரு பத்து சதவிகிதத்தைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.
கேரளாவில் மட்டும் இது எப்படி சாத்தியம் ? கேரளாவில் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதில்லை. மாறாக பணம் பெறுகிறார்கள். அதாவது மக்கள் அவரவர் சார்ந்த இயக்கங்களுக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தை தேர்தல் செலவுகளுக்காக தருகிறார்கள். உதாரணமாக அந்த கள்ளுக்கடை உரிமையாளர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அதனால் அவரது ஒருநாள் வருமானத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக வழங்கியிருக்கிறார். அதனால் அவர்களால் உரிமைக்குரல் எழுப்ப முடிகிறது.
கேரளாவும் தமிழகமும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் நாம் இன்னும் கேரளாவை விட பல படிகள் பின்தங்கியே இருக்கிறோம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
N.R.PRABHAKARAN
|
2 comments:
"நான் அதற்கு முன்புவரை கள்ளு குடித்ததில்லை. ஒரேயொரு முறை கல்லூரியில் படிக்கும்போது அதற்கான வாய்ப்பு வந்தபோது, உடன் பயின்றவர்கள் புதிதாக குடிப்பவர்களுக்கு கள்ளு தூக்கி விட்டுவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன். இப்போது சூழல் கூடி வந்ததால் கள்ளு குடித்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன்." Who was that culprit?
ECE guys than...
Post a Comment