அன்புள்ள வலைப்பூவிற்கு,
பீச். புத்தாண்டில் வாசித்த முதல் நாவல். ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது. தலைப்பையும் அட்டைப்படத்தையும் பார்த்ததும் வேறெந்த யோசனையுமின்றி தீர்மானித்து வாங்கிய நாவல்.
நான்கு இளைஞர்கள். இரண்டு ஆண்கள். இரண்டு பெண்கள். ஒருவன் மட்டும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறான். மற்ற மூவரும் ஊடகத்தில். நால்வரும் ஒரே வீட்டில் குடியிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு சிறுபகுதிதான் பீச் !
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அரை மணிநேரம் என அமர்ந்து, ஆறு சிட்டிங்கில் (சுமார் மூன்று மணிநேரம்) படித்து முடித்துவிட்டேன். சிக்கலில்லாத எளிமையான எழுத்து.
நிறைய இடங்களில் ரசித்துப் படித்தேன். அதே சமயம், நாவல் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் இல்லை. அதற்குக் காரணம், நான் இந்த நாவலின் வெளியீட்டு விழாவிற்கு சென்றதுதான். விழாவில் பேசியவர்கள் பாயாசத்தில் உள்ள முந்திரியை மட்டும் பொறுக்கித் தருவது போல இந்நாவலில் உள்ள நுண்ணுணர்வுகளை தொகுத்து தங்கள் பேச்சில் பட்டியலிட்டுவிட்டார்கள். அது மட்டுமில்லாமல் சில யூடியூப் சேனல்களில் சினிமாக்களில் வரும் குறியீட்டுக் காட்சிகளை டீகோட் செய்து விளக்குவார்கள் இல்லையா. அதுபோல ஏற்கனவே நிறைய விஷயங்களை விளக்கிவிட்டார்கள்.
அதையும் தாண்டி நான் ரசித்த சில விஷயங்களை, எனக்கு தனிப்பட்ட முறையில் கனெக்ட் ஆன சிலவற்றை பகிர்கிறேன். என் பங்குக்கு கொஞ்சம் முந்திரி :)
// இருவரும் தமிழர்கள்தான். ஆனால் அங்கு ஆங்கிலம் ஒரு மூன்றாவது நபரைப் போலப் பயன்பட்டது. எந்த உணர்ச்சியையும் அது சுமந்துகொள்வதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் நின்றபடி சொல்வதற்கு வேற்றுமொழிதான் சிறந்தது //
இதை பணிச்சூழலில் உணரவும் முயலவும் செய்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பேசும்போது அங்கே இயல்பாகவே ஒரு ஆதிக்கம் கிடைத்துவிடுகிறது. தமிழில் பேசும்போது நம்மை ஏய்க்க முயல்பவர்களால் ஆங்கிலத்தில் பேசும்போது அது எளிதில் முடியவில்லை. இதற்குக் காரணம் நம்மவர்களின் சிந்தனை மொழி ஆங்கிலமில்லை என்பதுதான். ஆங்கிலத்தில் சட்டென கோபமாகப் பேச முடிவதில்லை. கூடுதலாகத் தமிழில் சொல்லும்போது நாராசமாக ஒலிக்கக்கூடிய சில விஷயங்களை ஆங்கிலத்தில் நாசூக்காகக் கடத்த முடிகிறது.
கதையில் வரும் ரோஹிணிக்கு ஒரு எண்ணம். அவள் நள்ளிரவு தூக்கத்திலிருந்து விழிக்கும்போதெல்லாம் அது முழுமையான நேரமாகவே இருக்கிறது. அதாவது 3:30, 4:00 இப்படி. 3:35, 4:10 இப்படி இல்லாமல். நீங்களும் இதுபோல உணர்ந்திருக்கிறீர்களா?
// தூக்கமின்மை எப்போதும், நாம் காயம் பட்ட பழைய நினைவுகளையே கிளர்த்துகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கையில் அவமானப்பட்டது முதல் சென்ற வாரம் எதற்காவது அதிருப்தியடைந்தது வரை கொண்டு வந்து வெளியில் கொட்டுகிறது //
இதைக் கடக்காதவர் யாரும் இருக்க முடியாது.
// நீங்க மட்டும்தான் பொண்ணுங்கள்ல டீ கேக்குறது. மீதி எல்லாரும் காஃபிதான் //
ஒரு பெண் கதைமாந்தரைப் பார்த்து சொல்லப்படுகிற வசனம் இது. யோசித்துப்பார்த்தால் பெண்களில் பெரும்பான்மை காபி பிரியர்களாகவே இருக்கிறார்கள். உடனே எனக்கெல்லாம் டீதான் பிடிக்கும் என்று முண்டியடித்துக் கொண்டு வரக்கூடாது. ஃபேஸ்புக்கில் புழங்கும் பெண்கள் விதிவிலக்குகள்.
மேனேஜர்களை பற்றி சில நுட்பமான விஷயங்கள் இந்நாவலில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் வியக்க வைத்த இரண்டு -
// சில தொழில்நுட்பத் தகவல்களைக் கூட, அதன் அறிமுகத்தை மட்டும் வைத்துக்கொண்டு - அதுவும் செந்தில் சொல்லித்தருவதுதான் - அந்த விவகாரம் தமக்கு முழுக்கவும் தெரியும் என்பதைப் போல அந்தச் சூழலைத் தனது கட்டுக்குள் கொண்டு வரும் அவரது ஆளுமைத்திறனைக் காண செந்திலுக்கு வியப்பாக இருக்கும். எல்லாத் தொழில்நுட்ப விவகாரங்களிலும் தலைமையில் இருப்பவர் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு நுட்பமான விஷயத்தின் முனையை மட்டும் பற்றிக்கொண்டு முழு விவரத்தையும் கிரகித்து அதை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும் திறன் இருக்க வேண்டும். //
இதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர் கூட அவருக்குத் தெரியாத இன்னொரு தொழில்நுட்பத்தைப் பற்றி பேசும்போது அடக்கி வாசிக்கிறார் அல்லது அவருக்குத் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் உயர் பதவியில் இருக்கும் அ-தொழில்நுட்ப ஆட்களுக்கு தெரியாது என்பதே தெரியாது. மேலோட்டமாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டு அதுகுறித்து நிபுணர்கள் போல பேசுவது மேனேஜர்களுக்கே உரித்தான ஒரு ஸ்கில்செட்.
// திவாரிக்கே அலைபேசியில் அழைத்தான். அவன் ஒருமுறை கூட அதைத் தொந்தரவாக எடுத்துக்கொண்டதில்லை. கேட்கும் விஷயங்களுக்கு ஃபோனிலேயே பதில் சொன்னான். ஸ்மோக்கிங் ஷெல்டரில் இருந்து பேசுபவன் போன்ற அதே நிதானம். அலைபேசியில் அவரது குரலை வைத்து, அவர் எங்கேயிருக்கிறார், என்ன மனநிலையில் இருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்பதையெல்லாம் அனுமானிக்கவே முடியாது. மேலாண்மை என்பதும் மேலாளர் என்பதும் இத்தனை நுட்பமான குணாதிசயங்களை உள்ளடக்கியது //
உள்ளே எத்தனை பிரஷர் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடந்துகொள்வது மேலாளர்களுக்கு அவசியமான பண்பு. மேலே இருந்து எப்படிப்பட்ட வசைகள் வந்தாலும் கீழே அதனை அப்படியே கடத்தாமல், அதே சமயம் சமநிலை தவறாமல் காத்துக்கொள்பவன் நல்ல மேனேஜர்.
இதுபோல நாவல் முழுக்க இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கின்றன. இந்நாவலின் தொனி விநாயக முருகனுக்கும் அராத்துவுக்கும் இடைப்பட்ட ஒரு தொனி.
ஆனால் அராத்துவின் எழுத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் இருக்கும். நான் எழுதுவதுதான் எழுத்து. படித்தால் படி, இல்லையென்றால் ஓடு என்கிற தொனி. பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதிவிடுவார். அதை ஒப்புக்கொள்ளாத வாசகர்களுக்கு நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் திறனில்லை என்று அவராகவே தீர்ப்பு எழுதிவிடுவார். கார்லிடம் அது இல்லை. வாசகர்களை மனதில் வைத்து பொறுப்போடு எழுதியிருக்கிறார்.
280 பக்கங்கள்
399 ரூபாய்
எதிர் வெளியீடு
என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்
|
|

1 comment:
அருமையான பதிவு.
வாழ்த்துகள். படிக்கத் தூண்டுகிறது.
வாங்கி அனுப்பவும்..😊👍
Post a Comment