6 September 2011

பிரபா ஒயின்ஷாப் – 06092011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பதிவர் சந்திப்பு:
சென்னையில் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. எதிர்பார்த்த சிலர் வராமல் ஏமாற்றினார்கள். எதிர்பார்க்காத சிலர் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். முந்தய பதிவர் சந்திப்புகளை போல அல்லாமல் இந்த பதிவர் சந்திப்பின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அது பற்றிய இடுகைகள் கூடிய விரைவில்...

மிஸ் இந்தியா மிஸ்ஸிங்:
சென்ற வாரம் பட்டுக்கோட்டை பிரபாகரின் “மிஸ் இந்தியா மிஸ்ஸிங்” குறுநாவல் படித்தேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இப்போது படிக்கும்போது கொஞ்சம் அவுட்டேட்டடாக இருந்தது. ஆனால், வார்த்தை பிரயோகங்கள், உருவகங்கள் ரசிக்க வைத்தன. அதே புத்தகத்தில் “மறக்கமாட்டேன் மாலினி” என்ற குறுநாவலும் இருந்தது. மறக்கமாட்டேன் மாலினி குறுநாவலும் சுஜாதாவின் மனைவி கிடைத்தாள் குறுநாவலும் ஒரே கதையை அடிப்படையாக கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இந்தமுறை காஜல் அகர்வாலோ அல்லது வேறு எந்த நடிகையோ நினைவுக்கு வரவில்லை.

பெங்களூர்:
திடீரென்று ஊர் சுற்றுவதில் ஒரு ஆசை பிறந்திருக்கிறது. உள்ளூரில் அல்ல வெளியூரில். (வெளிநாட்டிற்கு நினைத்தாலும் செல்ல முடியாது. ஏனென்றால் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. சாஸ்திரி பவனில் வரிசையில் நிற்கும் கூட்டத்தை பார்த்தால் வெளிநாட்டு ஆசையே ஃப்ளைட் பிடித்து பறந்துவிடும்). அதனால் மூன்று, நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை கிடைத்தால் பெங்களூர் அல்லது கோவா சென்று வர வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். மேலும், அந்தமான் செல்ல வேண்டுமென்றும் ஒரு தீராத ஆசை உண்டு. ட்ராவல் ஏஜென்சி நடத்தும் யாருக்காவது இதுபற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.

சாந்திலால்:
என்னையும் மதித்து என் வலைப்பூவை தொடர்ந்து படித்து என்னை ஊக்கப்படுத்தும் சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். அவர்களில் ஒருவர் மருத்துவர் சாந்திலால். அவர் ஒரு எழுத்தாளரும் கூட என்று பிற்பாடு சாட்டில் தெரிந்துக்கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்களில் இரண்டினை ராஜபாளையத்தில் இருந்து கூரியர் மூலம் அனுப்பி வைத்திருந்தார். (அவரை மிரட்டி அனுப்ப வைத்தேன்). ஒன்று, க. க.. க... என்ற கதை, கவிதை, கட்டுரை தொகுப்பு. மற்றொன்று, பேசும் ஊமைகள் என்ற 15 சீரிய(ஸ்) கதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் முதல்பக்கத்தில் இணையதள எழுத்தாளர் என்று என்னை குறிப்பிட்டிருந்ததை பார்த்ததும் குபுக்கென்று சிரிப்பு வந்தது. சாரே... நான் அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் கிடையாது. உங்களுக்கு வேறு சில பெரிய தலைகளின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன். அதன்பின் என் பக்கம் வரவே மாட்டீர்கள். எனிவே, புத்தகங்கள் அனுப்பியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். கூடிய விரைவில் புத்தகங்களை படித்துவிட்டு மடல் / பதிவு போடுகிறேன்.

ஜொள்ளு:
விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்...
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்...

ட்வீட் எடு கொண்டாடு:
kolaaru kolaaru
காதலில் பேசும் மொழியை காதலில்லாமல் கவனித்தால் அதைவிட ஹாய்ஸ்யம் வேறு இல்லை !

SeSenthilkumar Se.Senthilkumar
மங்காத்தாவை இன்னும் பாக்கலைடானு சொன்ன என்னை ஒரு மாதிரியா பாக்குறான் 2 மாசமா அவங்காத்தாவை பாக்காதவன்!

NVaanathi வானதி நடனம்
உங்கள் டேமேஜெர் (நாட் க்ளையன்ட் மேனேஜெர்) இம்சையாக இருந்தால் மறந்தும் கூட அவரிடம் உங்கள் படிக்கும் பழக்கம் பற்றி சொல்லாதீர்கள் ;)

naiyandi நையாண்டி
சென்னை மேயர் பதவிக்கு விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றால் ராமர் பாலம் மீண்டும் கட்டப்படும்!

thoatta ஆல்தோட்டபூபதி
மூன்றாம் உலகப்போர் மூண்டால், நமக்கு வேறாயுதம் தேவையில்லை வேலாயுத சி.டி போதும்.!

அறிமுகப்பதிவர்: சதீஷ் மாஸ்
ஞாயிறன்று பதிவர் சந்திப்பிற்கு வந்தவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. பதிவுலகம் புகுந்து ஐந்தாறு மாதங்கள் ஆகிவிட்டன. சீரியஸாக களம் கண்டிருப்பது சில வாரங்களாக. இவருடைய பதிவுலக தலைவர்கள் யாரென்று தெரிந்துக்கொள்ளுங்கள். பிரபல பதிவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் வாசியுங்கள். தெருக்கூத்து பற்றிய அவரது சிந்தனைகளை படியுங்கள். முரசொலி மாறன் பற்றி என்னவோ சொல்லுகிறார் என்னவென்று கேளுங்களேன். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் இவரது முதல் பதிவர் சந்திப்பு அனுபவங்கள்.

இந்த வாரப் பாடல்:
தமிழ் சினிமாப்பாடல்களில் தேவாவின் ஆளுமை ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. மேற்கத்திய இசையை அதிகம் இரவல் வாங்கியவர் என்றொரு குற்றச்சாட்டு இருந்தாலும் கானா பாடல்களைப் பொறுத்தமட்டிலும் தேவா தான் THE ONE AND ONLY. சென்ற வாரம் கே டிவியில் எட்டுப்பட்டி ராசா படம் போட்டார்கள். அதிலிருந்து தேவா இசையில் ஒரு பாடல் – இது சிலருக்கு பக்திப்பாடலாக இருக்கலாம் ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் கானா.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். அதை இந்தப்பாட்டின் மூலம்தான் உணர்ந்தேன். எப்பேர்ப்பட்ட மனிதையும் ஒரு ஆட்டு ஆட்டுது இந்த பாட்டு.

இந்த வார காணொளி:
மேற்கத்திய கலாச்சாரம் பல்லிளிக்கிறது என்று பொங்கியெழும் சமூக / கலாச்சார காவலர்கள் இதோ இந்தக் கூத்தையும் கொஞ்சம் பாருங்கள்...

இந்த வார புகைப்படம்:
இனி நானும் டாகுடருங்கோ...!

இந்த வார தத்துவம்:
“உலகிலேயே பலமான ஆயுதம் – பெண்களின் கண்ணீர்” – சொன்னவர் arattaigirl sowmya

இந்த வார எஸ்.எம்.எஸ்:
தீவிரவாதிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன...?
தீவிரவாதியோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 September 2011

மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தலைப்பை படித்ததும் பயபுள்ள கோ படத்தை பார்த்துட்டு எடுத்த வாந்தி மாதிரி ஏதோ பண்ணியிருக்குன்னு நினைச்சிடாதீங்க. நிலைமை அந்த அளவிற்கு மோசமாகவில்லை. ஆனால் கொஞ்சம் மோசம்தான்.

இந்தமுறை தல படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் கிடைக்காதோ என்று கொஞ்சம் கலங்கித்தான் போனேன். கடைசியாக பெரம்பூர் ஸ்ரீ பிருந்தாவில் காலை எட்டு மணிக்காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. (படம் முடிந்து நேரே ஆபீஸ் சென்றுவிட்டதால் பதிவு போட இயலவில்லை). வழக்கம்போல ஒருமணிநேரம் முன்னதாகவே திரையரங்கம் சென்றுவிட்டேன் ரசிகர்களின் அளப்பறைகளை ரசிக்க. பால் பாக்கெட்டுகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. பட்டாசு வெடிக்கப்பட்டன, படத்தின் தலைப்பு மங்காத்தா என்பதால் சிலர் சீட்டுக்கட்டு அட்டைகளை விசிறியடித்தபடி இருந்தனர். மூன்றில் ஒரு ரசிகனின் வாயில் மாவா நிறைந்திருந்தது, மற்றவர்கள் வாய்நிறைய கெட்டவார்த்தைகள். எரிச்சலாக இருந்தது. சரி தியேட்டருக்கு உள்ளே போகலாம்ன்னா அங்கே அஜீத் அதுக்குமேல கெட்டவார்த்தை பேசுகிறார். தல... நீங்க வெறும் தலயா...? தறுதலயா...?

கிரிக்கெட் சூதாட்டங்கள் தலைவிரித்தாடும் மும்பை மாநகரம். அங்கே ஆறுமுக செட்டியார் என்றொரு லோக்கல் தாதா. ஒரு பெரிய சூதாட்ட தொகை அவரது கைக்கு வந்து மற்றவர்களுக்கு பிரிய இருக்கிறது. அந்த தொகையை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள் நான்கு அடிபொடிகள். திட்டத்தை தெரிந்துக்கொண்டு ஐந்தாவது நபராக கொள்ளைக்கூட்டத்தில் நுழைகிறார் அஜீத். அஜீத்தின் புதிய திட்டத்தின்படி அந்த பெரிய தொகை கொள்ளையடிக்கப்படுகிறது. இப்போது மற்ற நான்கு அடிபொடிகளையும் ஏமாற்றிவிட்டு பணத்தை ஒரே ஆளாக அடிக்க திட்டமிடுகிறார் அஜீத். அவரது திட்டம் நிறைவேறியதா...? இல்லையா..? என்பதே மீதிக்கதை. இவர்களுக்கு நடுவில் போலீஸும், ஆறுமுக செட்டியார் ஆட்கள் என்று இன்னும் சில கேரக்டர்களும் பணத்திற்காக மங்காத்தா ஆடுகின்றனர். ஊறுகாய் நாயகிகளும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

அஜீத்... நீங்க வந்தாமட்டும் போதும்... நீங்க வந்தாமட்டும் போதும்... என்று நினைப்பவன் நான். மங்காத்தாவிலோ பேருக்கு மல்ட்டி ஸ்டாரர் என்று கதை விட்டுவிட்டு படம் முழுக்க தல சாம்ராஜ்ஜியம்தான். அப்படி இருக்கும்போது எனக்கென்ன ஏமாற்றம் இருக்க முடியும். அஜீத் நடிப்பில் புத்தம் புது பொலிவோ, மாற்றமோ எதுவுமில்லை ஆனால் எப்போதும் போல கிளாஸ். என்னதான் அஜீத்தின் கேரக்டர் நெகடிவாக இருந்தாலும் ஜெயப்பிரகாஷை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிடும்போது அடப்பாவி என்று பதறுகிறது நெஞ்சம்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதல் பாதியில் ஒரு அரைமணிநேரமும், இரண்டாவது பாதியின் இறுதியில் ஒரு அரைமணிநேரமும் வந்து போகிறார். கடைசி இரண்டரை நிமிடங்கள் இல்லாவிட்டால் அவரது பாத்திரம் டம்மியாக்கப் பட்டிருக்கும்.

ஒரு காட்சியில் அஜித்தும், அர்ஜுனும் அருகருகே நடந்து வரும்போது அப்பப்பா... படத்தில் அஜீத் கேரக்டர் பெயரை விநாயக் என்று வைத்ததன் சூட்சுமம் புரிந்துக்கொண்டேன். விநாயகர் சதுர்த்திக்கு முந்தின நாள் வெளியானது கூட இதனால் தானோ...??? (ITS A COINCIDENCE DAMID)

த்ரிஷாவிற்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை அவரும் தவறவிடவில்லை. ஒரு காட்சியில் அஜீத்தை பெருமையாக பார்க்கிறாரே... அடடா அவரது கண்கள் என்னமாய் நடிக்கின்றன.

லக்ஷ்மிராய்க்கு த்ரிஷாவை விட அதிக காட்சிகள். கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் கீழே விழுந்த பொருட்களை பொறுக்கும்போது (குழைவான) இடுப்பு காட்டி நம் இதயத்தையும் சேர்த்து பொறுக்குகிறார்.

அஞ்சலிக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டார்கள். (அதுசரி, இரண்டே முக்கால் மணிநேர படத்தில் எத்தனை கேரக்டர்களை காட்டுவது). அஞ்சலி மட்டும் ஒரு பாடல் காட்சியில் கொஞ்சம் ஆறுதல் தருகிறார். அவர் மேக்கப்போடு இருப்பதைவிட மேக்கப்பில்லாமல்தான் அழகாக இருக்கிறார்.

என்னாது...? கைனத் அரோராவா...? அவர் ஏதோ ஒரு பாட்டில் ரெண்டு ஸ்டெப் ஆடியதாக ஞாபகம். அந்தப்பாடலில் தோன்றிய மற்றும் சில மாடல்களில் பாணா காத்தாடி புகழ் டெபி தத்தாவும் ஒருவர்.

ப்ரேம்ஜி எப்போதும்போல மொக்கை காமெடியில் பிண்ணி எடுக்கிறார். அதுவும் இந்த படத்தில் ரஜினி படக்காட்சிகள், வசனங்களை ஆங்காங்கே ஸ்பூஃப் செய்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. துப்பாக்கியில் சுடப்பட்ட பின்பு பாக்கெட்டில் இருந்து “786” தகடு எடுக்கும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்.

வைபவ், ஜெயப்பிரகாஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். புதுமுகங்கள் மகத்தும், அஷ்வினும் (பிற்சேர்க்கை: இவர் நடுநிசி நாய்கள் ஹீரோவாம்) அங்ஙனமே. அரவிந்த் கேரக்டர் படத்திற்கு தேவையே இல்லையோ....?

பாடல்களும், பின்னணி இசையும் யுவன் கைவண்ணத்தில் எப்போதும் போல பிரமாதம். ஆனால், படத்தில் பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன.

விளையாடு மங்காத்தா அதகளப்படுத்தும் ஒப்பனிங் பாடல். லக்ஷ்மி ராயும், அவரது க்ளோசப் ஷாட்களும் இந்தப்பாடலுக்கு மெருக்கூட்டுகின்றன. கண்ணாடி நீ... கண்ஜாடை நீ... கொஞ்ச நாளைக்கு நிலைத்து நிற்கக்கூடிய பாடல். திரையிலும் படு ரொமாண்டிக். வைபவ் – அஞ்சலி, அஜீத் – த்ரிஷா, அர்ஜுன் – ஆண்ட்ரியா என்று மூன்று இணைகளும் வருவது சிறப்பு. எஸ்பிபி குரல் செவிக்கினிமை. (உபரித்தகவல்: பாடல் வரிகளை இயற்றியது பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி). வாடா பின்லேடா பாடலில் ஒளிப்பதிவிலும், நடன அசைவுகளிலும் ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார்கள். மச்சி ஒப்பன் த பாட்டில் – சரோஜா சாமான் நிக்காலோ ரெண்டும் ஒரே மாதிரி தெரியுதுல்ல. இந்தப்பாடலின் இடையே தல “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்” பாடலை பாடுவதும் அதற்கு கொடுக்கும் விளக்கமும் பலே. நண்பனே காதல் துரோகத்தில் பாடும் சோகப்பாடல். என்னதான் த்ரிஷா சோகமாக பாடினாலும் ரசிகர்களெல்லாம் FINDING NEMO...!!! பல்லேலக்கா பாடலில் மறுபடியும் லக்ஷ்மி ராய் கவர்ச்சி அருவி. இந்தப்பாடல் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் சிக்கிமுக்கி நெருப்பே பாடல் வகையறா.

ஒளிப்பதிவில் ஆங்காங்கே புதுமை காட்டுவதெல்லாம் ஓகே. ஆனால் இதெல்லாம் சாமான்ய ரசிகனுக்கு புரியுமா பிடிக்குமா என்று தெரியவில்லை. (என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர், “என்னது அஞ்சாறு அஜீத்தை காட்டுறாங்க” என்று கேட்டார்). பைக் சேசிங், காரை ரிவர்ஸ் கீரில் ஓட்டுவது இதையெல்லாம் அஜீத்தின் முந்தய படங்களிலேயே காட்டியாச்சே.

வசனங்களும் அவ்விதமே. அஜீத் “I’m not impressed. Gimme more” என்று சொல்வது சத்தியமாக சி சென்டர் ரசிகனுக்கு புரியப்போவதில்லை. அதையே விஜய் அவருடைய படங்களில் “வாடா.....” என்று ஹை-பிட்ச்சில் கத்தி எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார் பாருங்கள்.

அப்புறம், சமீபகாலமாக அஜீத் படங்களில் “தல” என்ற வார்த்தையை வைத்தே சுமார் பத்து பதினைந்து மொக்கை ஜோக் அடிப்பார்கள். இந்தப்படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிரார்கள். எரிச்சல்ல்ல்ல்.

ஆங்காங்கே சில காட்சிகள் மொக்கையாக இருப்பது எடிட்டரின் சோம்பேறித்தனம் தெரிகிறது. உதாரணம்: இண்டர்வலுக்கு முன்பு அஜீத் கற்பனை செய்யும் காட்சி.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் பொத்தல்கள். பின்னே, கமர்ஷியல் படம் என்றாலே இருக்கத்தானே செய்யும். அந்த வேன் கண்டெயினரை கிரேன் உதவியோடு மாற்றுவதெல்லாம் அபத்தம். க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்தே தீர வேண்டுமென்பதற்காக ஒரு லாஜிக் பள்ளத்தாக்கையே தோண்டி இருக்கிறார்கள். ஆனால், அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நிச்சயம் பல ரிப்பீட் ரசிகர்களை வரவழைக்கும் என்பது ஒரு பிளஸ் பாயின்ட்.

வெங்கட் பிரபுவின் “தல” தப்பிவிட்டது. சென்னை 28 அளவிற்கு அட்டகாசமாக இல்லையென்றாலும் கோவா அளவிற்கு சொதப்பவில்லை. வெங்கட் பிரபுவுக்கு ஸ்பூஃப் காமெடி நன்றாக வருகிறது. அதையே இன்னும் நிறைய இடங்களில் பயன்படுத்தியிருக்கலாமே. தோட்டா சத்தத்தை குறைத்திருக்கலாம். ஆங்... வெங்கட்ஜி நீங்க Behind the Scenes-யே ப்ளான் பண்ணி, ஸ்க்ரிப்ட் எழுதி, ஷூட் பண்ற விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சு.

X-Factor:
வழமையான மாஸ் ஹீரோ படங்களைப் போலவே இளைய சமுதாயத்தினரை சீரழிக்கும் காட்சியமைப்புகள். இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட “பீப்” ஒலிகள். அஜீத் அநியாயத்திற்கு தரம் தாழ்ந்த வார்த்தைகளையெல்லாம் பேசுகிறார். சிகரெட்டும், மதுவும் சர்வசாதாரணம். ஏன் ஆரண்ய காண்டம் வெளிவந்தபோது மூடிக்கொண்டு இருந்தாயே என்று நீங்கள் கேட்கலாம். ஆரண்ய காண்டம் படத்தை எந்த அடித்தட்டு ரசிகனும் பார்க்கவில்லை, அதில் வரும் பாத்திரங்களை யாரும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இங்கே அஜீத்தை மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் கேரக்டர்களையும் ரோல் மாடலாக நினைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜீத்தைப் போலவே கிருதா வைப்பவன், அஜீத்தைப் போலவே “சால்ட் அண்ட் பெப்பர்” லுக்கோடு சுற்றுபவன், அடுத்தது அஜீத்தைப் போல ஸ்டைலாக புகை பிடிக்கவும், மது அருந்தவும் நினைக்கத்தானே செய்வான்.

Verdict:
ஒரு அஜீத் ரசிகனாக மங்காத்தாவை ரொம்பவும் ரசித்து பார்த்தேன். ஆனால் இதுதான் நல்ல சினிமாவா என்றால் வருத்தத்துடன் இடம்வலமாகவே “தல”யை அசைப்பேன். படம் ஹிட் ஆகுமா என்றால் ஆம் அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. வெங்கட் பிரபு தமிழ் சினிமா வெற்றிப்பட டெம்ப்ளேட்டில் மங்காத்தாவை பொருத்தியிருக்கிறார். அனால், சன் பிக்சர்ஸ் – தயாநிதி அழகிரி படம் என்பதால் அரசியல் எதுவும் நடக்காமல் இருந்தால் சரி. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மங்காத்தாவிற்கு ஐந்திற்கு இரண்டு நட்சத்திரங்கள் கொடுக்கலாம்.

இந்த பதிவு எத்தனை பேரை திருப்திப்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை, இதெல்லாம் ஒரு விமர்சனமா என்று நீங்கள் காறி உமிழவும் செய்யலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஏனென்றால்... ச்சீ போங்க எனக்கு வெக்கமா இருக்கு... நீங்களே தலைப்பை இன்னொருமுறை படிச்சிக்கோங்க...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment