22 March 2010

பிள்ளையாரின் நான்கு வகை பிறப்புகள்

(வரலாறு குறித்த பதிவுகளையும் போடச்சொல்லி கருத்து தெரிவித்த சுரேஷுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்)
இந்துக்கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனை கணபதி என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.

ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

1. ஒரு நாள் சிவனின் பெண் சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - "நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!..." என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, "பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக்கூடாது..." என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, "காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்...?" என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், "காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்" என்று சொன்னதாகவும், இதுகேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியே வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது, சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3.  பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்ப்க்கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவா பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு, உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மக்கள் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா...? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய்- தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்...? (இவைகளைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாகவே ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்...? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைப் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது.)

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் "கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு, இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்" என்று சொல்லுவதும், மற்றும் "அது ஒரு சக்தி" என்றும், "ஒரு தன்மை அல்லது குணம்" என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள் தான் உணர வேண்டும்.

(சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 "குடிஅரசு" இதழில் எழுதியது)

Post Comment

No comments: