3 December 2012

நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வித்தியாசமான தலைப்பு. படத்தைப் பற்றிய செய்தி வெளியானபோதே பார்க்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.  குறுகியகால நினைவிழப்பு பற்றிய கதை என்று  தெரிந்திருந்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் திரையரங்கிற்குள் நுழைந்தேன்.


சென்சார் சான்றிதழில் படத்தின் நீளம் 176 நிமிடங்கள் என்று பார்த்ததும் சற்றே பதற்றமானேன். இத்தனைக்கும் சுவாரஸ்யம் கருதி இருபத்தி ஐந்து நிமிடங்கள் கத்தரிக்கப்பட்டதாம்.

“இவருதாங்க நம்ம ஹீரோ" என்று வாய்ஸ் ஓவரில் கேட்டு வெறுத்துப்போன நமக்கு, டைட்டில் பாடலிலேயே ஹீரோ யார் ? எப்படிப்பட்டவர் ? அவருடைய நண்பர்கள் எப்படி ? என்று புரியவைப்பது புதுமை. டெம்ப்ளேட்டா சொல்லனும்னா “அடிச்சான் பார்யா மொத பால்லயே சிக்ஸர். தவிர குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை மூன்றே முக்கால் நிமிடங்களிலேயே சொல்லி விடுகிறது டைட்டில் பாடல்.

நாயகன் விஜய் சேதுபதி. தற்போதைய லோ பட்ஜெட் படைப்பாளிகளின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார். பீட்சாவில் பார்த்த மாதிரியே சிரத்தை எடுக்க தேவையில்லாத கேரக்டர். ஒரு செட் வசனங்களையும், முகபாவனைகளையும் சலிக்காமல் படம் முழுக்க தொடர்ந்திருக்கிறார். எனினும் தானும் சலிப்படையாமல் பார்ப்பவர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாமல் நடித்திருக்கிறார்.


நாயகி காயத்ரியை பார்த்ததும் “ப்பா... யார்றா இந்தப்பொண்ணு...? பேய் மாதிரி இருக்குறா...” என்று சொல்லத்தோன்றுகிறது. காயத்ரியை போட்டோஷூட்டில் தான் அதிகமாய் பயன்படுத்தியிருப்பார்கள் போலத் தெரிகிறது. முக்கால்வாசி படம் முடிந்தபிறகு தான் வருகிறார். நடிப்பையும் எதையும் காட்ட வாய்ப்பில்லாத கேரக்டர். பாவம்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் பக்ஸ், பஜ்ஜி, சரஸ். இவர்களுடைய முழுப்பெயரை இவ்வாறு சுருக்கி அழைப்பதே ஒரு சுவாரஸ்யம். மூவரும் நம்மைச் சுற்றியிருக்கும் நிஜ நண்பர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். பஜ்ஜியுடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு நம்மை அநியாயத்திற்கு சிரிக்க வைக்கிறது. ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலும் பஜ்ஜி மாதிரி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உறவுக்காரர்களாக வருபவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாகவே இருப்பதுகூட நமக்கு ஒருவித எதார்த்த உணர்வை தந்து படத்தின் பலத்தை கூட்டுகிறது.

மதுபான கடைக்கு இசையமைத்த வேத் சங்கர் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அது தேவைப்படவும் இல்லை. பின்னணியிசையில் குறைவில்லை. வசனம் எழுதியவருக்கு அதிக வேலைகள் இல்லை. நான்கைந்து வசனங்களை வைத்து படம் முழுவதையும் ஓட்டி விடுகிறார் :) கேலிகள் ஒருபுறம். போங்காட்டம் ஆடுறான், அல்லு கெளம்புது என்று கிடைத்த இடைவெளிகளில் நேட்டிவிட்டி நிறைந்த வசனங்கள்.

தேவையில்லாத காட்சிகள் படத்தில் இல்லையெனினும், கலைப்படங்கள் போல படியிறங்குவதையெல்லாம் காட்டுவது, ஆழமான விளக்கமளிக்கும் வசனங்கள் போன்றவற்றை தவிர்த்து இன்னுமொரு இருபத்தைந்து நிமிடங்களையாவது குறைத்திருக்கலாம். லோ பட்ஜெட் படம் என்பதால் திருமண மண்டபத்தில் சுமார் முப்பது, நாற்பது நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருப்பதெல்லாம் லொள்ளு சபா விளைவு தருகிறது.


இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்று சொல்வதை மட்டும் முழுமையாக நம்ப முடியவில்லை. based on a true story என்று போட்டுக்கொள்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் உண்மை சம்பவம் என்று சொல்லி சினிமா எடுத்தார். படம் எடுத்து, ஓடி முடித்து வெகு நாட்கள் கழித்து அது உண்மை சம்பவமெல்லாம் இல்லை, சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவே அப்படிச் சொன்னேன் என்றார். (அநேகமாக காதல் படமெடுத்த பாலாஜி சக்திவேல் என்றே நினைக்கிறேன்). இந்த பாலாஜியும் அப்படி நினைத்திருக்கலாம். ஏனென்றால் மணமகனுக்கே தெரியாமல் ஒரு திருமணம் நடந்தது என்று சொன்னால் நம்பவா முடிகிறது.

கதைப்படி நாயகன் தன் பெரியப்பா மகனோடு சண்டைப்போட்டுக்கொள்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நாயகனுக்கு மறந்துவிட்டது. தயங்கி தயங்கி மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார் பெரியப்பா மகன். நாயகன் அவரைக் கண்டதும் முகமலர்ந்து, கட்டியணைத்து, நலம் விசாரிக்கிறார். பெரியப்பா மகனும் ச்சே பழைய விஷயத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் பாசமாக நடந்துக்கொள்கிறானே என்று நெகிழ்கிறார். படத்தில் இது நகைச்சுவையாகவே சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தத்துவார்த்தமாக புரிந்துக்கொள்ளுதல் நலம். ஞாபகம் என்பதே ஒரு நோய். சில மனக்கசப்புகளை, கவலைகளை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி மறந்துவிட்டால் வாழ்க்கையை எளிதாக அணுகலாம் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

தர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

Sivakumar said...

Good Review.

Anonymous said...

உங்க ரசனையே இவ்வளவு தானா? சீரியல் டைப் காமெடி மட்டும் தான் படத்தில் இருக்கு.

உங்களை என்னவோ நினைத்தேன்.

M (Real Santhanam Fanz) said...

பட காமெடிய விட படம் நீங்க பார்த்துட்டு பண்ண காமெடி சூப்பர்.. :-)

ananthu said...

#தர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.# உண்மையான வார்த்தைகள் . எனக்கு ஒரு பக்கம் படம் மிகவும் பிடித்திருந்தது இன்னொரு பக்கம் கொஞ்சம் காமெடி நாடகம் போன்ற உணர்வையும் கொடுத்தது . இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை பாராட்டுவது நல்ல சினிமா ரசிகனின் கடமை ...

சாய்ரோஸ் said...

பிரபா... பெரும்பாலும் நான் சினிமா விமர்சனங்கள் படிப்பதில்லை... ஆனால் கொஞ்ச நாட்களாக உங்களுடைய விமர்சனங்களை மட்டும் ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கியிருக்கிறேன். ஒருசில படங்களையும் உங்கள் விமர்சனத்தின் விளைவாக பார்த்திருக்கிறேன்... நல்ல அனலைசிங் திறன் உங்களுக்கு... வாழ்த்துக்கள் பிரபா.