13 February 2013

அந்தமான் பயணத்தொடர் - ஆரம்பம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நண்பர்கள் குழுவாக சேர்ந்து ஊட்டி, கொடைக்கானல், கேரளா, கோவா என்று செல்லும்போதெல்லாம் எனக்குள் சுற்றுலா குறித்த வேட்கை ஒருபொழுதும் உண்டானதில்லை. பள்ளிப்பருவ எக்ஸ்கர்ஷன்களைக் கூட நான் அந்த வயதுக்கே உரிய ஆர்வத்துடன் எதிர்கொண்டதில்லை. கல்லூரி சுற்றுலாக்களிலும் கலந்துக்கொண்டதில்லை. டீம் ஸ்பிரிட் இல்லையென்று சொல்லிவிடும் அச்சுறுத்தல் இருப்பதால் அலுவலக அவுட்டிங்குகளில் மட்டும் விரும்பி கலந்துக்கொள்வதாக நடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சிறுவயதிலிருந்தே அந்தமான் செல்லவேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வளர்ந்துக்கொண்டே இருந்தது.சிறுவயதில் பலருக்கும் பலவகையான அவநம்பிக்கைகள் இருக்கும். அந்தமான் பற்றிய என்னுடைய கற்பனைகள் மிகவும் வேடிக்கையாக இருக்கும். அந்தமான் என்பது நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு மணல்திட்டு என்பது போலவும், அங்கே மிகச்சிறிய அளவிலான நிலப்பரப்பு மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். அந்தமானில் காட்டுவாசிகள் மட்டுமே வாழ்கிறார்கள். அங்கிருப்பவர்கள்  அனைவருமே சின்னவர் பட செந்தில் மாதிரி பேசிக்கொள்வார்கள் என்று நினைப்பேன். குஜராத் நிலநடுக்கம் வந்த சமயத்தில் அந்தமானில் எல்லாம் அடிக்கடி நிலநடுக்கம் வரும், அதாவது ஒரு நாளைக்கு சுமார் நான்கைந்து முறை சாவகாசமா வந்து போகும் போல என்று எண்ணிக்கொள்வேன். போலவே, சுனாமி வந்தபோது அந்தமான் மனிதர்கள் வாழமுடியாத அபாயகரமான பகுதியாக என் மனதில் தோன்றியது. அங்கிருப்பவர்கள் யாரும் தரை தளத்தில் வசிக்க மாட்டார்கள், சுனாமி ஆபத்தின் காரணமாக மேல்தளத்திலேயே தங்கிக்கொள்வார்கள் என்றொரு எண்ணம்.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் என்பது ஐநூறுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது என்பதே எனக்கு சில வருடங்களுக்கு முன்புதான் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக எனக்குள் இருந்த அந்தமானைப் பற்றிய மர்மமுடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்திருக்கின்றன. பயணத்தோடு சேர்த்து மொத்தமாக பதினைந்து நாட்கள் இயல்பு வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் ஏதுமில்லாமல் சுற்றி வந்திருக்கிறேன். அந்த நாட்களைப் பற்றிய என்னுடைய எண்ண வெளிப்பாடுகளை இனிவரும் கட்டுரைகளில் காணலாம்.

*****

அந்தமான் பயணம் என்றதுமே ஒரு வழிப்பயணம் கப்பல், ஒரு வழிப்பயணம் விமானம் என்பதை உறுதியாக முடிவு செய்துக்கொண்டேன். கப்பல் பயணம் பற்றி விவரமறிந்தவர்கள் பலரிடம் கருத்து கேட்டபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்கு அவர்கள் சொன்ன சில காரணங்கள் :-

1. பாஸு... நீங்க போறது டைட்டானிக் இல்லை. கெவர்மெண்டு கப்பல் ரொம்ப மோசமா இருக்கும். ஏறி கொஞ்ச நேரத்துலயே ஏண்டா ஏறினோமுன்னு தோண ஆரம்பிச்சிடும்.
2. கப்பல் பயணம் முழுமையாக மூன்று நாட்களாகும். முதல் ஒருநாள் வேண்டுமானால் பொழுது போகலாம். அதற்குப்பின் பயங்கர போர் அடிக்கும்.
3. கடல்வழிப்பயணம் எல்லோருடைய உடலும் ஏற்றுக்கொள்ளாது. சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். கப்பலை விட்டு இறங்கவும் முடியாத கொடுமையான சூழ்நிலை ஏற்படும்.


முதலிரண்டு எச்சரிக்கைகளை எப்போதும் போல மிகவும் சாதாரணமாக புறக்கணித்தேன். மூன்றாவது மட்டும் சற்று கிலியை ஏற்படுத்தியது. பொதுவாக நான் பொழுதுபோக்கு பூங்காக்களில் காணப்படும் ராட்டினங்களில் கூட ஏறுவது கிடையாது. அவற்றை கீழிருந்து அண்ணாந்து பார்த்தாலே கூட அயர்ச்சியாக இருக்கும். மொட்டை மாடி விளிம்புகளில் உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி நிற்பதற்கு கூட நடுங்குவேன். இவ்வளவு ஏன் ? அமிதாப் பச்சன் நடித்த படங்களை பார்த்தாலே பயப்படுவேன். இருப்பினும் வாழ்வோ, சாவோ இவன் கப்பலில் ஒருமுறை கூட பயணம் செய்ததில்லை என்ற செய்தி வரலாற்றில் நிச்சயம் பதியப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அந்தமான் பயணத்திற்காக ஐந்து கப்பல்களை இந்திய கடற்படை ஒதுக்கியுள்ளது. ஸ்வராஜ்த்வீப், நன்கவுரி, நிகோபர், ஹர்ஷவர்தனா, அக்பர். இவை போர்ட் ப்ளேருக்கும் சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டின பிரதேசங்களுக்கும் மாறி மாறி பயணம் மேற்கொண்டபடி இருக்கும். சென்னையில் இருந்து மாதமொன்றிற்கு மூன்று முறையாவது போர்ட் ப்ளேருக்கு பயணம் இருக்கும். தொழில்நுட்பங்கள் வளர்ந்தபிறகு கூட அந்தமானுக்கு கப்பல் டிக்கெட் எடுப்பது சற்றே கடினமான செய்முறை. SCI இணையதளத்தில் ஒவ்வொரு மாதத்தின் இறுதிவாரத்திலும் அடுத்த மாதத்திற்கான பயணத்திட்டம் வெளியிடப்படும். அதன்பின் பீச் ஸ்டேஷன் அருகிலுள்ள SCI அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பி, நம்முடைய புகைப்பட சான்றை காட்டி டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

முந்தய பத்தியில் குறிப்பிட்ட இந்திய கப்பல்களில் டிக்கெட் விலைக்கேற்ப வெவ்வேறு க்ளாஸ் இருக்கின்றன. விவரங்கள். பங்க் என்பது மருத்துவமனை ஜெனரல் வார்டு போல. சுமார் 900 பேர் வரை பங்க்கில் பயணிக்கலாம். இரண்டாம் வகுப்பில் அறைக்கு ஆறு பேர். முதல் வகுப்பு அறைகளில் நான்கு பேர், இணைக்கப்பட்ட கழிவறை வசதி உண்டு. டீலக்ஸ் அறைகளில் இரண்டு பேர், டேபிள், சேர், இணைக்கப்பட்ட கழிவறை, குளியலறை என்று சகலவசதிகளும் உண்டு.

நான் பயணம் செய்த கப்பலுடைய பெயர் நன்கவுரி. நன்கவுரியை உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தொடக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென்னெல்லாம் பயணம் செய்வார்களே... அதே கப்பல் தான். பங்க்கில் பயணம் செய்தால் பல மனிதர்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்று அனுபவஸ்தர்கள் சொன்னார்கள். வாழ்நாளில் ஒரேயொரு முறை பயணம் செய்யப்போகிறோம் என்பதால் இரண்டாம் வகுப்பு அறையில் டிக்கெட் எடுத்துக்கொண்டேன்.

என்னுடைய பயண நாள் வந்தது. விமானப்பயணம் போல நாமே நேரடியாக ஹார்பருக்குள் நுழைந்துவிட முடியாது. SCI அலுவலக வாசலில் காத்திருக்க வேண்டும். அங்கிருந்து இதற்கென சிறப்பு மாநகர பேருந்துகள் நம்மை துறைமுகத்திற்குள் அழைத்துச்செல்லும். சம்பிரதாயத்துக்காக மருத்துவ பரிசோதனைகள் நடக்கும். அதாவது நம்முடைய டிக்கெட்டை கொடுத்தால், அதில் Examined and Passed என்று முத்திரை குத்தி கொடுப்பார்கள். அதற்காக நம்முடைய முகத்தை கூட ஏறெடுத்து பார்க்க மாட்டார்கள். அதன்பின்பு மூட்டை முடிச்சுகளுக்கான செக்கப். இதில் நீராகாரத்தை எவ்வளவு ஸ்ட்ரிக்டாக அனுமதி மறுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வாட்டர் பாட்டிலில் ஒளியூடுருவும் பானங்களை கொண்டு செல்லும்போது கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை.

மேற்படி தடைகளை கடந்தபின்னர் நன்கவுரி என் கண்முன்னே விரிந்தது :)


தொடரும்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 comments:

Philosophy Prabhakaran said...

சற்றே உணர்ச்சிவசப்பட்டு விட்டதால் ஆரம்ப பத்திகளில் என்னுடைய குருநாதர் சாக்கி பாணி தெரிகிறது போல :)

கோவை நேரம் said...

அட...தெரியாத தகவல்..ஆன்ரியா போன கப்பலில் தாங்களுமா...

கோவை நேரம் said...

அந்தமான்...போக வேண்டிய ஆர்வத்தினை ஏற்படுத்துகிறது...

Philosophy Prabhakaran said...

ஜீவா, நானும் கொஞ்ச நாளைக்கு முன்பு மறுபடியும் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தபோது தான் கவனித்தேன்... நீங்கள் இதுவரை அந்தமான் சென்றதில்லையா ? நீங்க உ.சு.வா ஆயிற்றே...

Anonymous said...

கப்பல்ல சரக்கு கிடைக்குமா?

Unknown said...

1994ல் கப்பலுக்கு கட்டணம் 5000ம்ரூபாய்தான் கடைசி நேரத்தில் போகமுடியாமல் போயிற்று...! கண்டிப்பாக ஒரு நாள் போக வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு பலநாட்களாக இருக்கின்றது....பார்ப்போம்!

Anonymous said...

How much ticket cost for one way in 2nd class and other classes?

அஞ்சா சிங்கம் said...

ஆண்ட்ரியா கார்திக்கு அப்புறம் நீங்கதான் போயிருக்கீங்க போல் இருக்கு ..

அஞ்சா சிங்கம் said...

வீடு மாம்சு 1500 ஒவாய்க்கு எல்லாம் ஏ.சி. கிளாஸ் கிடைக்குது .
நாம் ரெண்டு பேரும் போலாமா .........?

Unknown said...

அண்ணே நீங்க போயும் கப்பல் கவுரலையே அதான்னே எனக்கு ஆச்சிரயமா இருக்கு

Ponmahes said...

அந்தமான் பற்றிய உன்னுடைய சின்ன வயசு எண்ணங்கள் ரசிக்கும்படி இருந்தது ...

//இவ்வளவு ஏன் ? அமிதாப் பச்சன் நடித்த படங்களை பார்த்தாலே பயப்படுவேன்.


//பங்க் என்பது மருத்துவமனை ஜெனரல் வார்டு போல

அருமை ...

பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் பிலாசபி ....

Philosophy Prabhakaran said...

9:37க்கு பின்னூட்டம் போட்ட அனானி... கப்பலில் சரக்கு கிடைக்கும் ஆனால் இருமடங்கு விலையில், திருட்டுத்தனமாக...

Philosophy Prabhakaran said...

மாம்ஸ், இப்பவும் கப்பல் டிக்கெட் 2000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது...

Philosophy Prabhakaran said...

10:37க்கு பின்னூட்டம் போட்ட அனானி...

டிக்கெட் விலை:
Bunk 2000
Second Class 5200
First Class 6600
Deluxe 8000
Approximately

For more details,
http://www.shipindia.com/services/passenger-services/andaman/andaman-fare-chart.aspx

அமுதா கிருஷ்ணா said...

சான்சே இல்லை.நேற்று தான் அந்தமான் டூர் போலாமா என்று வீட்டில் பேசி கொண்டு இருந்தோம்.இன்னைக்கு உங்க பதிவு.தொடர்ந்து படிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.அனைத்து விபரங்களையும் கூறுங்கள்.நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு! சுவையான பகிர்வு! தொடர்கிறேன்! நன்றி

Unknown said...

பிரபா & செல்வின்

என்னய்யா சொல்றீங்க...இங்க டிராவல்ஸ் ஏஜன்ஸி வெறும் பத்தயிரம்தான் அந்தமான் சுற்றுலா அப்படின்னு வீதிவீதியா நோட்டிஸ் கொடுத்துட்டு இருக்காங்க...!

1995ல் நானும் என் நண்பர் ஒருவரும் அந்தமான் செல்ல டிராவல்ஸ்சில் விசாரித்த போது அவர்கள் சொன்ன தொகை இது!

Philosophy Prabhakaran said...

நன்றி அமுதா மேடம், இயல்பிலேயே எனக்கு சோம்பல் அதிகம் என்பதால் முழுத்தொடரும் முடிய இரு மாதங்கள் கூட ஆகலாம்...

Philosophy Prabhakaran said...

மாம்ஸ், பத்தாயிரத்துக்கு கூட அந்தமானை சுற்றிப் பார்க்கலாம்... ஆனால் இருவழிப்பயணமும் கப்பலாக இருக்கும்... ஆக, பயணத்திலேயே 7 நாட்கள் வீணாகிவிடும்... பாடாவதியான ரூமாக இருக்கும்... அங்கே மூன்று அல்லது நான்கு நாட்களில் சிலவற்றை மட்டும் சுற்றிக்காட்டிவிட்டு திருப்பி அனுப்பிவிடலாம்... Conditions Applyகளை கேட்டுப்பாருங்கள்...

ஜீவன் சுப்பு said...

அழகு ...! ரசனையான ரகளையான ஒரு பயணக் கட்டுரை .காத்திருக்கிறேன் நன்கவுரி யின் தரிசனத்திற்கு ....!

மதுரை அழகு said...

//சின்னவர் பட செந்தில் மாதிரி பேசிக்கொள்வார்கள் என்று நினைப்பேன்//

What a memory!?

aavee said...

பிரபாகரன், எந்த மானைத் தேடி அந்த மானுக்குப் பயணம்?? நல்ல ஆரம்பம்..

Unknown said...

ரயில் டிக்கெட் முன்பதிவு மாதிரி கப்பல் பயணம் பண்ண நாமே கைபேசி ல ரிசர்வ் பண்ண முடியாதா