12 April 2013

அந்தமான் பயணம் - தகவல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


அந்தமான் தொடர் ஒருவழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை. கீழ்காணும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடரை முழுமையாக வாசித்து வந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் பயன் பெறலாம்.

சீசன்:
அந்தமானில் டிசம்பர் துவங்கி மே மாதம் வரை சீசன். மற்ற மாதங்களில் சென்றால் என்ன என்று கேட்கலாம் - மழை பெய்து உங்கள் சுற்றுலா திட்டத்தை கலைக்கலாம், முன்னறிவிப்பின்றி உள்ளூர் கப்பல்கள் ரத்து செய்யப்படலாம். அதற்கு மேல், சில தீவுகள் சீசன் தவிர்த்து மற்ற காலகட்டத்தில் பராமரிப்பிற்காக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். க்ளைமேட்டை பொறுத்தவரையில் அதிக வெயிலுமில்லாமல் குளிருமில்லாமல் மிதமாகவே இருக்கும்.

பயணம்:
கப்பலில் சென்றால் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும். பயண நேரத்தில் முழுமையாக மூன்று நாட்கள் கழிந்துவிடும். விமானச்செலவு நான்காயிரத்தில் தொடங்கி சமயங்களில் பதினெட்டாயிரம் வரை கூட செலவாகலாம். விமான கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்கிறோமோ அதற்கு தகுந்தபடி விலை வேறுபடும். சனி, ஞாயிறுகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. பயண நேரம் இரண்டு மணி நேரம் பத்து நிமிடம்.

தங்குமிடம்:
ஏசி இல்லாத அறைகள் எனில் நாள்வாடகை அறுநூறிலிருந்து துவங்கும். ஏசி அறை வாடகைகள் ஆயிரத்திலிருந்து துவங்குகிறது. முடிந்தவரையில் போர்ட் ப்ளேரின் மையப்பகுதியில், அதாவது அபெர்டீன் பஜார், செல்லுலர் ஜெயில் அருகில் அறை எடுத்துக்கொள்வது சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். நான் வசித்த பகுதியின் பெயர், தெலானிப்பூர். அங்கே ஹாலிடே-இன் என்கிற தரமான ஏசி ஹோட்டல், எதிரிலேயே தர்பார் ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட், மதுக்கூடம் என சகலவசதிகளும் உள்ளன.

எத்தனை நாள் தேவை ?
முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, அந்தமான் முழுவதையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகக்கூடும். லகரங்களில் செலவு செய்ய வேண்டி வரும். முக்கியமான சில இடங்களை மட்டும் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். இங்கிருந்து பயணம் செய்யும் நாளை ஓய்வாக கழிக்கலாம், அங்கே சுற்றிப்பார்க்க ஆறு நாட்கள், திரும்பவும் அங்கிருந்து பயணிக்க வேண்டிய நாள் - மொத்தமாக எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவாக சுற்றிவரலாம். ஆறு அல்லது ஏழு நாட்கள் கைவசம் இருக்கும்போது சில இடங்களை தவிர்த்துவிடலாம். அதை விடவும் குறைவான நாட்கள் வைத்திருப்பவர்கள் அந்தமான் செல்வதையே தவிர்த்துவிடலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
நாள் 1: சென்னை - போர்ட் ப்ளேர் விமானப்பயணம் - ஓய்வு - மாலையில் கார்பன்'ஸ் கோவ் கடற்கரை
நாள் 2: போர்ட் ப்ளேர் சிட்டி டூர் (சாத்தம் ஸா மில், ஃபாரஸ்ட் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம், ZSI மியூசியம், அந்த்ரோபாலஜிக்கல் மியூசியம், மீன் காட்சியகம், அறிவியலகம், காந்தி பூங்கா, செல்லுலர் ஜெயில்)
நாள் 3: ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்
நாள் 4: பாராடங் சுண்ணக்குகைகள், மட் வால்கேனோ
நாள் 5: ஹேவ்லாக் - ராதாநகர், எலிபேண்ட் கடற்கரைகள்
நாள் 6: ஜாலிபாய், வண்டூர் கடற்கரை
நாள் 7: மவுண்ட் ஹேரியட் & சிடியா டாப்பு கடற்கரை
நாள் 8: பயண நிறைவு - சென்னை திரும்புதல்

பட்ஜெட் (இரண்டு நபர்களுக்கு)
பயணச்செலவு (Up and Down) : Rs.18000 - 32000
தங்குமிடம் (7 நாட்களுக்கு): Rs. 7000 - 10000
சுற்றுலா செலவு: Rs.12000 - 20000
இதர செலவுகள்: Rs.5000

மொத்தத்தில் இரண்டு நபர்களுக்கு செலவு நாற்பதாயிரத்தில் துவங்கி எழுபதாயிரம் வரை ஆகலாம்.

சில டிப்ஸ்
- அந்தமானில் திங்களன்று அருங்காட்சியகங்கள் விடுமுறை. எனவே போர்ட் ப்ளேர் சிட்டி டூர் திங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளவும். போலவே ராஸ் ஐலேண்ட் புதன் விடுமுறை. எனவே நாட்களை சரியாக திட்டமிடவும்.
- எங்கு சென்றாலும் ஒரு பையில் மாற்றுத்துணி, டவல் மற்றும் குடிநீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும். நம்மின மக்கள் உற்சாக பானமும் !
- ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இத்தனை மணிக்கு மறுபடியும் படகிற்கு வரவேண்டும் என சொல்லி அனுப்புவார்கள். அதனை சரியாக பின்பற்றவும்.
- Avomine போன்ற கடல் நோய்மை தவிர்க்கும் மாத்திரைகளை உடன் வைத்திருக்கவும். உடல் ஒத்துழையாது என்று தெரியும் பட்சத்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பே மாத்திரையை உட்கொள்ளலாம்.
- பயணத்தில் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்துவிட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்னேற்பாடு அவசியம்.
- ஷாப்பிங்கிற்கு தனியாக ஒருநாளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்திருக்காமல் பிடித்த பொருட்களை கண்டால் உடனடியாக வாங்கிவிடவும்.

சில DON'Ts
- கடற்கரைகளிளிருந்து சிப்பிகள், பவளப்பாறைகளை சேகரிக்க வேண்டாம். எப்படியும் விமான நிலைய சோதனையில் அகப்படுவீர்கள்.
- ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும். உதவியாளரின் கட்டளையை மீறி செயல்பட வேண்டாம்.
- கார்பின்’ஸ் கோவ் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகளை முதலை இழுத்துச்சென்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எச்சரிக்கை !
- நார்த் பே மற்றும் ஜாலிபாய் கடற்கரைகளில் உள்ள பவளப்பாறைகள் மீது கால்வைக்க வேண்டாம். அது அவற்றிற்கும் சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
- ஆதிவாசிகளை கண்டால் அவர்களை புகைப்படம் எடுக்கவோ, அவர்களுக்கு பொருட்கள் வழங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மீறினால் ஜாமீன் கிடைக்காதபடி சிறையில் தள்ளப்படுவீர்கள். உங்களை அழைத்துச்சென்ற சுற்றுலா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- குப்பைகளை, குறிப்பாக ப்ளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றாலும் கூட சுற்றுச்சூழலின் நன்மை கருதி குப்பை போடாமலிருப்பது நல்லது.
- போட்டோ, வீடியோ தடை செய்யப்பட்ட இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

பதிவில் விட்டுப்போன சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் கேட்கவும். அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் எனில் பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள், தொடர்பு எண்கள், பிற தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். செல்போன் எண்ணிற்கு அழைக்க வேண்டாம். அது பெரும்பாலும் உயிரற்ற நிலையில் தான் இருக்கும்.

அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 comments:

ப.கந்தசாமி said...

நல்ல தகவல்கள்.

ப.கந்தசாமி said...

பின்னூட்டத்தில் திட்டினால் போறாதா? நேரிலும் வந்து திட்டவேண்டுமா?

HajasreeN said...

பொறுமையா எல்லா போஸ்ட் ம் படிச்சு முடிச்சாச்சு...... நானே நேர்ல போன மாதிரி ஒரு பீலிங்கு............ ஹஹஹா............இப்படியே இன்னும் நிறைய ஊர் சுத்தி அதையெல்லாம் அப்படியே எங்களுக்கும் சொல்லுங்க.............

guna said...

very intersting

Ponmahes said...

ஒரு வழியா பயணத்த நல்ல படியா முடிச்சிட்ட .....

நீ எழுதியிருக்றத பாத்தா நீ சுத்தி பாக்க போன மாதிரி தெரியல ...இந்த தொடர எழுதுவதற்காகவே போன மாதிரி தெரியுது .....
நல்லா வருவ தம்பி நீயெல்லாம் ...........

Anonymous said...

//போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.//

அண்ணனுக்கு ஒரு சோடா ஒடச்சு கொடுங்கடா!

HajasreeN said...

பொறுமையா எல்லா போஸ்ட் ம் படிச்சு முடிச்சாச்சு...... நானே நேர்ல போன மாதிரி ஒரு பீலிங்கு............ ஹஹஹா............இப்படியே இன்னும் நிறைய ஊர் சுத்தி அதையெல்லாம் அப்படியே எங்களுக்கும் சொல்லுங்க.............

நான் said...

படித்தவுடன் போக ஆசை வந்துருச்சு .....கிளம்பிடலாம்...

Muraleedharan U said...

Nice article ,good photos, but some beach photo clips missing!!!

Unknown said...

ஆசைய தூண்டி விட்டுட்டீங்க... பாக்கலாம்... சிரமம் எடுத்து பதிவு செய்தமைக்கும், மேலும் தகவல் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தமைக்கும் நன்றி நன்றி நன்றி...!!!

சக்தி கல்வி மையம் said...

நிறைவு....
நன்றி...

Unknown said...

////அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்./////


ஏன் இந்த விளம்பரம் ,அந்த சினிமாக்காரவுங்கதான் இப்படி பண்றாங்கன்னா நீ ஏன் இப்படி ?

சீனு said...

// இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை// ஒரே இனமான பின் இதெற்கெல்லாம் வருத்தப்பட்டால் எப்புடி பாஸு, நீங்கள் சூப்பர் சீனியர் வேறு !


மிக மிக மிக உபயோகமான பதிவு....

விமல் ராஜ் said...

அருமையான பதிவுகள்... அனைத்து பதிவுகளையும் நான் ரசித்து படித்தேன்.அந்தமான் போகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நீங்கள் சொன்ன இடங்களை பார்ப்பேன்..

நாடோடிப் பையன் said...

ரொம்ப நல்ல பயணக்கட்டுரை. பகிர்ந்ததிற்கு நன்றி.

Anonymous said...

அஞ்சு பைசா செலவில்லாம அந்தமான சுத்திப் பாத்தாச்சு,..எல்லாம் உங்க புண்ணியம் பாஸ்..

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்...
இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

Anonymous said...

காசிக்கு போகபோறேன் அதற்குமுன்னாடி உங்ககிட்ட யோசனை (டூர் கைடு) இருந்தால் ஷேர் பண்ணுங்களேன்

Unknown said...

நா மே மாத செல்ல உள்ளேன் உமக்கு தெரிந்த நபர் அறிமுகம் தேவை

Unknown said...

நா மே மாத செல்ல உள்ளேன் உமக்கு தெரிந்த நபர் அறிமுகம் தேவை

Unknown said...

சார் இந்த வருடம் செல்ல வேண்டும் என்றால் எப்பொழுது செல்லலாம் ஓரு குடும்பம் நான்கு நபர்கள் மொத்த செலவு எவ்வளவு இருக்கும் சராசரி குடும்பம் நிறைய செலவு முடியாது இருந்தாலும் ஆசை