1 October 2013

ராஜா ராணி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இப்பொழுதெல்லாம் சினிமாக்காரர்கள் குட்டிக்கர்ணம் அடித்து காட்டியாவது மக்களை திரையரங்கிற்கு வரவழைத்து விடுகிறார்கள். வார இறுதியில் தொலைக்காட்சியை உயிர்பித்தால் வரிசையாக நான்கைந்து நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். வாய் காதுவரை நீளும் அளவிற்கு கதை அளக்கிறார்கள். ஒரு ஷோவில் ஹீரோயின் இடுப்புல கை வச்சா டக்குன்னு சிரிச்சிடுவாங்கன்னு ஹீரோ சொல்கிறார். சொல்வது மட்டுமில்லாமல் இடுப்பில் கை வைத்தும் காட்டுகிறார். ஒரு செய்தித்தாளில் ஏதோ ஒலிம்பிக் நடைபெறவிருப்பது போல நாளுக்கு நாள் கவுண்டவுன் போடுகிறார்கள். கடுபேத்துறாங்க மை லார்ட் ! எனினும் கடைசியில் நானும் ஒரு பொது ஜனம் தானே ? ராஜா ராணி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இரண்டில் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் மிஸ்கின் மீதுகொண்ட அவ-நம்பிக்கையின் காரணமாக ராஜா ராணியை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

ட்ரைலரை மட்டும் போட்டுக் காட்டினால் போதும் பக்கத்து வீட்டு மாலினி பாப்பா கூட கதையை சொல்லிவிடும். ஒரு கல்யாணம், அதற்குள் மடித்து வைக்கப்பட்ட இரண்டு காதல் கதைகள் என ஒரு காம்போ பேக்கேஜாக கொடுத்திருக்கிறார் அட்லீ !

படம் தொடங்கி சில நிமிடங்கள் வரை, சமகாலத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கும் மொக்கை காமெடி படவரிசையில் இன்னொன்று என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. தொலைக்காட்சியில் ஒலியை பெருக்கி வைத்து குத்துப்பாடல்கள் கேட்பது, குடித்துவிட்டு சலம்புவது என்று பார்க்கும் நமக்கே கடுப்பானால் நயன்ஸுக்கு கடுப்பாகாதா ? ஜெய் – நயன் காதல் எபிசோடு துவங்கியதும் கொஞ்சம் ஆசுவாசமானேன். குறிப்பாக ஜெய்யின் வாடிக்கையாளர் சேவை மைய காட்சிகள் என்னுடைய டோகோமோ நாட்களை நினைவு கூர்ந்தன. இரண்டாம் பாதியில் ஆர்யா – நஸ்ஸு பகுதி. கொஞ்சம் தொய்வாகவே நகர்ந்து சோகமாக முடிகிறது. திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும் என்கிற சிக்கலான சூழ்நிலையில் கொஞ்சம் ஜவ்வென இழுத்து தமிழ் சினிமா செண்டிமெண்ட் இலக்கணப்படி ஏர்போர்ட்டில் வைத்து ஆர்யாவும் நயன்தாராவும் ஒன்று சேர்கிறார்கள்.

பொண்ணுக்காக தான் அடிச்சிக்கக்கூடாது. ஃப்ரெண்டுக்காக அடிக்கலாம். என்றபடி நான்கே அடியில் அந்த ஜிம் பாடியை அடித்து வீழ்த்தும் ஆர்யா சற்றே மெர்சலாக்குகிறார். நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் ஈயென்று இளித்து தொலைக்கிறார். சகிக்கல. ஒரு படத்தில் ஒரு வேடத்தில் நடித்தால் தொடர்ச்சியாக அதே போன்ற வேடமளிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு ! கிட்டத்தட்ட எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அதே வேடம் ஜெய்க்கு. ஆனாலும், நான் ஒன்னும் அழுவலையே, கண்ணுல வேர்க்குது’ன்னு சொல்லும்போது நமக்கு கண்ணுல தண்ணி வருது சிரிச்சு.

த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் தாங்கள் டொக்கு ஆகிக்கொண்டிருப்பதை உணர்ந்தால் உடனே கேரள மசாஜ் மகிமையில் புத்தம் புதிய பூவைப் போல மீண்டு வருகின்றனர். இது நயன்தாராவின் முறை. ஆனால் க்ளோசப் ஷாட்டில் அழுவதை எல்லாம் காட்டியிருக்க வேண்டாம். நஸ்ஸுக்குட்டி ! ஒட்டுமொத்த படத்திலும் அதிகமாய் ஸ்கோர் செய்வது நஸ்ஸு தான். எந்த ஹீரோயினுக்கும் இப்படியொரு அறிமுகக்காட்சி வைத்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். மலையாளம் கலந்த சொந்தத்தமிழ் வேறு கிறங்கடிக்கிறது. எம்.ஜி.யார் படங்களில் அவர் இறப்பது போன்று காட்சிகள் அமைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அந்த ஆங்கிளில் இருந்து பார்த்தால் ராஜா ராணியையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சந்தானம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர் ஜெய் – நயன் போர்ஷனில் இடம்பெற முடியாத நிலை. ஏதோவொரு பேட்டியில் சந்தானம் ராஜா ராணியில் ஏதோ ஜெயசித்ராவோ குணச்சித்திராவோ அப்படி நடித்திருப்பதாக சொல்லியிருந்தார்கள். அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. நயனிடம் உருக்கமாக பேசும் ஓரிரு வரிகளில் கூட சந்தானம் காமெடி செய்வதைக் காட்டிலும் அதிக சிரிப்பு வருகிறது. சந்தானம் முழுமுதல் காமெடியில் செட்டாகி விட்டார். அவரை குணசித்திர வேடத்தில் எல்லாம் பார்க்க முடியவில்லை. போலவே, சத்யன் காமெடிக்கெல்லாம் சிரிப்பு வரவில்லை.

ஷங்கர் தன்னுடைய சிவாஜி படத்தில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்துவிட்டாராம். அந்த சத்யராஜ் என்ற மானஸ்தரை இப்பொழுது தேடினாலும் கிடைக்கவில்லை. சென்னை எக்ஸ்பிரஸ், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தமைக்கு சத்யராஜ் வருத்தப்பட்டே ஆகவேண்டும். தலைவா படத்தில் ஒரு வசனம் சொல்லுவார், ஒருமுறை கத்தி நம்ம கைக்கு வந்துடுச்சுன்னா ஒன்னு காக்கும். இல்லை அழிக்கும். அதே மாடுலேஷனில் ராஜா ராணியிலும் ஒரு வசனம் கொல்லுகிறார்... சாரி சொல்லுகிறார். முந்தய படங்களை ஒப்பிடும்போது சத்யராஜூக்கு கெளரவமான வேடம்தான். பெண்களுக்கு பிடிக்கக்கூடும். ஈன்னா வான்னா அப்பான்னா யாருக்குத்தான் பிடிக்காது.

பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. ஆனால் பாடல் காட்சிகளை பார்க்கும்போது இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர் என்று நினைவுக்கு வருகிறது. ஆர்யாவின் கையிலிருந்து காராசேவு தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் ஷங்கர் டச். 

படத்தின் பலம் என்று எது கருதப்படுகிறதோ அதுவே படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது வேதனை. இரண்டே முக்கால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை முழுமையாக சொல்ல வேண்டும் என்கிற அவசரத்தில் மூன்றையுமே அழுத்தமில்லாமல் சொல்லியிருக்கிறார். ஹீரோயின் புட்டத்தை ஆட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தால் உடனே காதலா ? எனக்கு எங்க அப்பாவை பார்த்தா தான் பயம். மத்தபடி ஐ லவ் யூங்க என்று அசால்ட்டாக சொல்கிறார் இன்னொரு நாயகன். ஆர்யா – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் எத்தனை உணர்வுப்பூர்வமாக வந்திருக்க வேண்டும் ? ஆனால் நமக்கென்னவோ சேரத்தானே போறீங்க ? சேர்ந்து தொலையுங்க என்ற சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஏ.ஆர்.முருகதாஸுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய், அனன்யா. ராஜா ராணியில் நஸ்ரியா.

மொத்தத்தில் ராஜா ராணியை நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். ஆனால் அது எப்படி விளம்பரப்படுத்தப் படுகிறதோ அப்படியில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. திருமணமான எல்லோரும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும், ஆண் – பெண் புரிதல் சார்ந்த படம் போன்ற பூ சுற்றல்களை எல்லாம் காதில் வாங்கிப் போட்டுக்கொள்ளாமல் பார்த்தால் ஒருமுறை ரசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 comments:

Philosophy Prabhakaran said...

Off the records:

நான் கொஞ்சம் சாப்டான ஆளு. சினிமாவில் ப்ளாக் ஹியுமர் போன்ற சமாச்சாரங்களை பார்த்தால் கூட கண் கலங்கிவிடுவேன்.

ஒரு உதாரணம், சென்னை 28 படத்தில் ஹீரோக்கள் ஸ்கூல் பசங்களுடன் பெட் மேட்ச் விளையாடி தோற்று வசந்தின் பேட்டை பரிகொடுப்பார்கள். அப்போது சின்ன வயதில் வசந்தின் அப்பா பேட் வாங்கி கொடுப்பது, அதனை அவர் தூங்கும்போதும் கட்டிப்பிடித்தபடி தூங்குவது போன்ற காட்சிகளுடன் பிண்ணனியில் நாயகன் இசை ஒலிக்கும். அடிப்படையில் அது நகைச்சுவை காட்சியாயினும் அதை திரையில் பார்த்ததும் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கிவிட்டன.

அது போல ராஜா ராணியில் ஏதோவொரு உணர்ச்சிமயமான தருணத்தில் கண்கள் கலங்கிவிட்டன. இதனை உடன் வந்திருந்த அம்மையார் கவனித்துவிட்டார். அப்புறம் வேறென்ன, நான் ஒன்னும் அழுவலையே. கண்ணுல வேர்க்குது என்று சொல்லி சமாளிக்க வேண்டியதாக போய்விட்டது.

Anonymous said...

athu apporva sogotharargal............BGM

Anonymous said...

Thala,
Nalla vimarsanam panni irukeenga..Ellorum nalla irukkunu review poduraanga.. but i feel this movie is not that much worth....
Hope we have same frequency...

Philosophy Prabhakaran said...

ஆங்... அபூர்வ சகோதரர்கள் மியூசிக்... நினைவூட்டியமைக்கு நன்றி அனானி...

Unknown said...

விமர்சனம் நல்லா கீதுபா...நீ வரப்போகும் விமர்சனங்களுக்காக...அடுத்து வரும் விசயத்தை மறந்துவிடவும்...

“ரெண்டு மலையாளிகளை கோடிகள் கொட்டி கொடுத்து நடிக்க வைத்து அதை பல நூறுகள் கொடுத்து பார்த்து படம் சூப்பர் என்று சொன்னால் நீயும் தமிழனே - கொளுத்தி போடுவொம்ல!~”

கார்த்திக் சரவணன் said...

கதையை அதிகமா சொல்லாம மத்த விஷயங்களை அலசியிருக்கீங்க... நல்லாருக்கு...

aavee said...

ஆமா நண்பா, கண்கள் வேர்த்த தருணங்கள் சில இருக்கத்தான் செய்தன..

Anonymous said...

boss nayanthara acting nala thana iruthuthu ...

மணிஜி said...

க்ளாஸ்டா கண்ணா...

Ponmahes said...

மொத்தத்துல மூணு காதலையும் அழுத்தமாக பதிவு செய்ய மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்...

நஸ்ஸீ குட்டி அழகாக தெரியவில்லை....மேக் up man கையில கெடச்சான் ன்னா செத்தான் மவனே....அதே மாதிரி நஸ்ஸீ அறிமுக காட்சிய பாத்தா கடை கோடி ரசிகனாக(என்னை சொன்னேன்....) கூட சகிக்க முடியவில்லை....

ரூபக் ராம் said...

ஆர்யா – நயன்தாரா காதலில் தேவையான அளவு அழுத்தம் இல்லாததை நானும் உணர்ந்தேன். பொழுது போக்கு என்ற வட்டத்தை தாண்டி பெரிதாய் ஒன்றும் இல்லை. A Feel Good movie.

//அது போல ராஜா ராணியில் ஏதோவொரு உணர்ச்சிமயமான தருணத்தில் கண்கள் கலங்கிவிட்டன. இதனை உடன் வந்திருந்த அம்மையார் கவனித்துவிட்டார். அப்புறம் வேறென்ன, நான் ஒன்னும் அழுவலையே. கண்ணுல வேர்க்குது என்று சொல்லி சமாளிக்க வேண்டியதாக போய்விட்டது.// நமக்கும் இரண்டு காட்சியில் கண் வேர்கதான் செய்தது.

ரூபக் ராம் said...

அம்மையார் உங்கள் வலைப் பக்கம் வருவதில்லையோ :)

Gujaal said...

சில நாட்களாக உங்கள் இடுகைகளில் content frame (உள்ளடக்கச் சட்டம்? :)) தண்ணியடிச்சாப்புல மேலும் கீழும் ஆடுது. படிப்பதற்கு சிரமமாக இருக்கு.

என் கணிணி/உலாவியை நோண்டுவதற்கு முன்னால் இது மற்றவர்க்கும் உள்ள பிரச்சினையா என அறிய ஆவல்.

Philosophy Prabhakaran said...

குஜால்,

பிரச்சனை என்னுடைய தளத்தில் மட்டுமா என்று சரி பார்க்கவும்... இதுவரை எனக்கு அதுபோன்ற பிரச்சனைகள் வந்ததில்லை... வேறு யாரும் வந்ததாகவும் சொன்னதில்லை...

திண்டுக்கல் தனபாலன் said...

நடிகர்கள் : ‘பிலாசபி’ பிரபாகரன் +++

visit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html

'பரிவை' சே.குமார் said...

அழகான ஆழமான விமர்சனம்...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

//மொத்தத்தில் ராஜா ராணியை நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். ஆனால் அது எப்படி விளம்பரப்படுத்தப் படுகிறதோ அப்படியில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. திருமணமான எல்லோரும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும், ஆண் – பெண் புரிதல் சார்ந்த படம் போன்ற பூ சுற்றல்களை எல்லாம் காதில் வாங்கிப் போட்டுக்கொள்ளாமல் பார்த்தால் ஒருமுறை ரசிக்கலாம்.//

நம்ம நண்பர்கள் சிலபேர் படத்துக்கு கடுமையான விமர்சனம் முன்வைத்திருந்தார்கள். ஏன் இந்தப்படத்துக்கு அப்படி சொல்றாங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன், இப்பதான் புரியுது. படங்கள கெடுக்கறதே இவங்க பண்ணுற இந்த விளம்பரம் தானே.