17 October 2013

கபிலரின் கலாய்த்தல் திணை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலில், பொதுவாக மப்பில் இருப்பவர்கள் மத்தியில் நிகழும் சில உரையாடல்களைப் பற்றி பார்ப்போம். நண்பர்கள் புடைசூழ போதையை போட்டுக் கொண்டிருக்கும்போது குழுவில் யாரேனும் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு “மச்சான்... நான் போதையில சொழ்றன்னு நினைக்காத....” என்று ஆரம்பிப்பார். உடனே அவருக்கு ஏறிவிட்டது என்கிற உண்மையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு சிலர் நண்பராவது மண்ணாவது உனக்கு சீக்கு வந்தா எனக்கென்ன என்கிற ரீதியில் பழகுவார்கள். ஆனால் போதையேறி விட்டால் நண்பர் மீது பாசமழை பொழிவதும் கொடைவள்ளலாக பணத்தை வாரியிறைப்பதும் நடக்கும். அந்த மாதிரி ஒரு போதை நண்பர் வாழும் வள்ளலாக மாறிக்கொண்டிருக்கும்போது அவரிடம், “மச்சான்... சில பேர் போதையில தான் கன்னாபின்னான்னு செலவு பண்ணுவாங்க... ஆனா நீ எவ்வளவு சரக்கடிச்சாலும் தெளிவா இருக்க மச்சான்...” என்று உசுப்பேற்றி விட்டால் எப்படி இருக்கும் ?

ஓகே, இப்போது கடையேழு வள்ளல்கள் சீரிஸின் முந்தைய பதிவான மலையமான் திருமுடிக்காரியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை பார்ப்போம். ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். அப்போது காரி, தன்னை எளியரும் காணும்படி வெளியிடத்தில் அமர்ந்திருந்தான். தன்னைப் புகழ்ந்து பாடும் புலவரை எதிரில் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள், தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவந்தீர்கள்; மீண்டும் அவ்வாறு நடவற்க: இத்தேர்மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்க.” என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறி மற்றும் வேண்டிய பொருள்கள் பல அளித்து அனுப்பினான். அதனை நேரில் கண்டுகொண்டிருந்த கபிலர் ஒரு பாடலை பாடினார். அது புறநானூற்றில் 123வது பாடலாக பதியப்பட்டுள்ளது.

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே !
புறம் 123

விளக்கம்: உலகிலுள்ள மக்கள் சிலர் மது அருந்துகிறார்கள். அதனால் மதிமயங்கிப் போகிறார்கள். அவ்வமயம் அவர்கள் இன்னது செய்யவேண்டும். இன்னது நீக்கவேண்டும் என்று ஓராமல் என்னென்னவோ செய்துவிடுகிறார்கள். அச்செயல்களுள் கொடைச்செயலும் ஒன்று. வெறிகொண்டபோது அளவுகடந்த கொடை செய்வது குடியர் எல்லோருக்கும் இயல்பு. தேர் முதலிய பொருள்களை அளிப்பார்கள். அங்ஙனம் மயக்கச் சேர்க்கையால் செய்யும் கொடை இயற்கையாகாது. அது செயற்கை கொடையாகும். காரி அவ்வாறு செய்பவன் அல்லன். இன்று காலை புதிதாய் கொணர்ந்த மதுவை உண்டான். ஆனால், அதன் மயக்கத்திற்கு ஆட்படவில்லை. அதுவும் அவன் மதியை ஆட்கொள்ளவில்லை. அவன் நல்லுணர்வுடனே தேரைப் புலவருக்கு அளித்தான். அவ்விதம், அவன் தேரை அளிக்கையில் வெறியர் போல மகிழவும் நகைக்கவும் இல்லை. ஆகையால், அக்கொடை இயற்கையையேச் சாரும்.

கபிலரின் வரிகளை கொஞ்சம் காம்பாக்ட்டாக புரிந்துக்கொள்வதென்றால் “மச்சான்... சில அயோக்கியப்பயலுக அப்படியெல்லாம் செய்வாங்க மச்சான்... ஆனா நீ யோக்கியன்டா...” என்று மறைமுகமாக கலாய்த்திருப்பது தெரிகிறது. கூடவே மன்னர்களின் கொடைபண்பு குறித்த உண்மைகளும், கபிலரின் ஹியூமர் சென்ஸும் புலப்படுகின்றன. நாம் முந்தய சில பதிவுகளில் வாசித்த புலவர்களைப் போல அல்லாமல் கபிலர் கொஞ்சம் ப்ராக்டிக்கலாகவும், தைரியமாகவும் மன்னர்களிடம் நடந்திருக்கிறார். அடுத்த பதிவில் அப்ரைசல் பற்றி கபிலர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

Ponmahes said...

அருமையான மேற்கோள்.......

வாழ்த்துக்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் பாணியில் காம்பாக்ட்டாக சொல்லி விட்டீர்கள்...

வாழ்த்துக்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சினிமாவோடு இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருப்பது மகிழ்ச்சி.சுஜாதா எழுத்தாள வாழ்க்கையின் பிற்பகுதியில் அவ்வப்போது சங்க இலக்கியங்களை சிலாகித்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதுபோன்ற கடா முடா பாடல்களுக்கு சுவாரசியமாக விளக்கம் அளிக்கும் திறன்
பிரபாகரனுக்கும் கைகூடி வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

இப்படியொரு உரையை எதிர்பார்க்கவில்லை. :)

சதீஷ் செல்லதுரை said...

பப்ப்ப்பப்ப்ப்பா என்னா ஒரு தைரியம் கபிலருக்கு.....

Manimaran said...

கபிலர் ஒரு தீர்க்கதரிசி போல... நம்ம பதிவுலகம் பத்தி ஏதாவது சொல்லியிருக்கிறாரா...?

வெற்றிவேல் said...

கபிலருக்கு துணிவு அதிகம் தான்... அழகான மேற்கோள்...

நல்ல பதிவு...

”தளிர் சுரேஷ்” said...

கபிலரின் வஞ்சப்புகழ்ச்சியை சிறப்பாக பகிர்ந்தமை சிறப்பு! தொடருங்கள்!

'பரிவை' சே.குமார் said...

அருமை... வாழ்த்துக்கள்.