25 March 2014

வேலைக்கார நாயி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

விகடன் மேடையில் கடந்த நான்கு வாரங்களாக கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நாகேஷ், நடிகர் திலகம் பற்றி, படையப்பாவில் டான்ஸ் ஆடியது பற்றி, ரகுவரனின் ‘ஐ நோ’ ரகசியம் என உண்மையோ பொய்யோ படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. சிலர் ரஜினி – கமலை வைத்து படம் இயக்குவீர்களா...? அப்படி இயக்கினால் படத்தின் ஒன்லைன் என்ன...? என்பது போன்ற ஹைப்போதெட்டிக்கல் கேள்விகளை கேட்டு வைக்கிறார்கள். முத்து படத்தில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் வசனம் வைத்தது பற்றி ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு மட்டும் வசதியாக தப்பித்துக் கொண்டார். இதையெல்லாம் படித்ததும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. முத்தாய்ப்பாக முந்தாநாள் தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பியதால் பதிவாகவே எழுதிவிட்டேன்.

பொதுவாக கே.எஸ்.ரவிகுமாரை இந்தமாதிரி படங்கள் மட்டும்தான் இயக்குவார் என்று வகைப்படுத்திவிட முடியாது. ஒட்டுமொத்தமாக அவர் ஒரு நல்ல எண்டர்டெயினர். ஆனால் நாட்டாமை, ஊர் பெரியவர் வகையறா சமாச்சாரங்கள் என்றால் அவருக்கு அல்வா மாதிரி. அது குறித்து ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்விக்கு அவருடைய பதிலை முதலில் பார்த்துவிடலாம்.

'பண்ணையார்’, 'நாட்டாமை’, 'ஜமீன்எல்லாம் எப்போதோ ஒழிந்துவிட்டன. ஆனால், சினிமாவில் மட்டும் ஏன் இன்னமும் விடாமல் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?

'இது எனக்கான கேள்விதான்! நகரத்தைவிட கிராமங்கள் இன்னைக்கு ரொம்ப வேகமா மாறிட்டு வருது. அண்ணனுக்கு மரியாதை கொடுக்கும் தம்பி, பெத்தவங்களைப் பத்திரமாப் பார்த்துக்கும் பிள்ளைகள், விவசாயம், கிராமக் கட்டுப்பாடு... இதெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழியும் நிலைமையில் இருக்கு.

சென்னைலயே வளர்ந்த எனக்கு முதல்முறையா கிராமத்துல தங்கியிருந்தப்போ, அதெல்லாம் ஆச்சரியமா இருந்தன. அதனாலேயே கிராமங்கள் இப்பவும் எனக்கு இஷ்டம். ஆனா, அந்த விஷயங்கள் இவ்வளவு சீக்கிரம் காலாவதி ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதான், 'இப்படி எல்லாம் இருந்திருக்காங்கனு இப்போதைய தலைமுறைக்கு ரீ-க்ரியேட் பண்ணிக் காட்டணும்னு நினைச்சேன். அதனாலதான் அந்த மாதிரி படங்கள் எடுக்கிறேன். தவிர சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடினு மசாலா தூவுறதுக்கும் கிராமத்து சப்ஜெக்ட்லதான் பெரிய ஸ்கோப் இருக்கு!''

சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்கள் அவருடைய அந்த வகை படங்களில் சிறப்பானவை. அஜித்தை வைத்து வரலாறு என்றொரு படம் இயக்கினார். நகர வாழ்க்கையை மையமாக கொண்ட படம்தான். ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரியும், வரலாறும் அவருடைய வழக்கமான ஊர் பெரியவர் டெம்ப்ளேட் கதைதான். பணக்கார அஜித், அவருக்கு கீழே நிறைய வேலைக்காரர்கள், இளவயது அஜித்தை சின்ன அய்யா என்று அழைப்பார்கள், இடிச்சபுளி செல்வராஜ் போன்ற ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் பட்டாளம், கிளைமாக்ஸில் ஒரு உயிர் தியாகம். கெட்ட கேட்டுக்கு அஜித் ரசிகர்கள் வரலாறை க்ளாஸ் + மாஸ் என்று கூவிக்கொண்டு இருந்தார்கள். அதைப்பற்றி இன்னொரு நாள் விரிவாக பார்க்கலாம்.

இப்படி கே.எஸ்.ஆரின் பெரும்பாலான படங்களில் தவறாமல் அங்கம் வகிப்பவர்கள் வேலைக்காரர்கள். அதுவும் அதிபயங்கரமான விசுவாசம் கொண்ட வேலைக்காரர்கள். ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டின் உறுப்பினர்களை விட வேலைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். முதலாளிகள் அவ்வப்போது டென்ஷன் ஆகும்போதெல்லாம் வேலைக்காரர்களின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டு தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வார்கள். கன்னத்தில் அறை விடுகிற பழக்கம் நடைமுறை வாழ்க்கையில் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. சினிமாவில் தான் எதற்கெடுத்தாலும் கன்னத்தில் அறைகிறார்கள். அதுவும் காதலை ப்ரொபோஸ் செய்ததற்கெல்லாம் அறைகிறார்கள். அத்தனை சிறிய பிரதேசத்தில் தூரத்தில் இருந்து எப்படி குறி பார்த்து அறைகிறார்கள் என்பதே ஆச்சரியக்குறியாக இருக்கிறது.

பாட்டாளி படத்தில் ஒரு காட்சி. ரம்யா கிருஷ்ணன் ஒரு வேலைக்காரரிடம் மீன்தொட்டியை இடம் மாற்றும் பணியை ஒப்படைப்பார். ஒப்படைக்கும் முன்பே ஒரு அறை விடுவார். தவறு செய்வதற்கு முன்பே அறைந்துவிட்டால் தவறு செய்யமாட்டார் என்று வேறு வியாக்கியானம் பேசுவார். கொஞ்ச நேரத்தில் பணியாளர் மீன் தொட்டியை கீழே போட்டு உடைத்துவிட்டு அதான் ஏற்கனவே அறைஞ்சிட்டீங்களே என்று சொல்வார். அதே ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் காபி டம்ளரை தவறவிட்டதற்காக செளந்தர்யாவை அறைய வருவார். நல்லவேளையாக சூப்பர்ஸ்டார் தடுத்து விடுவார். அவருடைய நிறைய படங்களில் வேலைக்காரர்களை அறையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தவிர, வேலைக்கார நாயி என்ற பதம் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும். இதுபோன்ற அறைகள், வசனங்கள் பெரும்பாலும் திமிர் பிடித்த கதாபாத்திரம் ஒன்று செய்வதாக காட்டினாலும் எனக்கென்னவோ கொஞ்சம் டூ மச் என்றுதான் தோன்றுகிறது.

நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் எல்லோரும் வேலைக்காரர்களை நன்றாகவே நடத்துகிறார்கள். நிறைய பேர் தங்கள் குடும்ப உறுப்பினரை போல கவனித்துக் கொள்கிறார்கள். அதுவும் கே.எஸ்.ஆர் பார்த்து ரசித்த கிராமங்களில் என்றால் கேட்கவே வேண்டாம், நிச்சயமாக வேலைக்காரர்களை நன்றாக கவனித்து அவர்கள் வீட்டு நல்ல காரியங்களை கூட முன்னின்று நடத்தித் தருகிறார்கள். ஒருவேளை முன்பொரு காலத்தில் வேலைக்காரர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டிருக்கலாம். அவருடைய படங்களில் வரும் பண்ணையார், நாட்டாமை, ஜமீன் போல வேலைக்காரர்களை அறைவதும், நாய் என்று விளிப்பதும் கூட வழக்கொழிந்துவிட்ட செய்கைகள் என்றே கருதுகிறேன்.

ஒருவேளை இன்னமும் யாராவது அப்படி இருந்தால் கூட அதையெல்லாம் சினிமாவில் சரி என்பது போல காட்டுவது முறையல்ல. இனியாவது கே.எஸ்.ஆர் அதுபோன்ற காட்சிகளை தவிர்க்கலாம்.

செய்வீர்களா கே.எஸ்.ரவிகுமார்...? நீங்கள் இதைச் செய்வீர்களா...?

அடுத்து வருவது: மரப்பல்லி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

சீனு said...

மிக சீரியசாய் எழுதிவிட்டு இவ்வளவு 'சிரி'யசாய் முடித்து விட்டீர்களே :-)))))

Anonymous said...

உஸ்ஸ் முடியல பாஸ்..வரட்டு மொக்கை

ஜீவன் சுப்பு said...

பிரபாகர் ..!

இந்த அனானி உங்களோட நெடு நாள் வாசகர்னு நினைக்குறேன் செம்மத்தியான கமெண்ட் .....

Anonymous said...

ஏதாவது எழுதியே ஆவணும்னு வேண்டுதல் செய்திருக்கிறீர்கள். கரெக்ட்

sornamithran said...

நேர்மையான பார்வை

”தளிர் சுரேஷ்” said...

நியாயமான வேண்டுகோள்தான்! நல்ல அலசல்!

'பரிவை' சே.குமார் said...

நியாயமான வேண்டுகோள்தான்...

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

வலைச்சர தள இணைப்பு : கற்றுக்கொடுக்கும் பதிவர்கள்