Showing posts with label anushka. Show all posts
Showing posts with label anushka. Show all posts

6 February 2015

என்னை அறிந்தால்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

பரமசிவன் காலத்திலிருந்து அஜித்தின் எல்லா படங்களையும் FDFS பார்த்துவிடும் பரம விசிறி. இந்தமுறை கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டதால் டிக்கெட் கிடைக்கவில்லை. அங்கே, இங்கேயென்று அலைந்து கடைசியில் படம் பார்க்க முடியாது என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில் ஒரு ஆபத்பாந்தவர் எக்ஸ்ட்ரா டிக்கெட்டோடு வந்தார். அவருக்கு நன்றி கூறி துவங்குகிறேன்.

கதையை பொறுத்தவரையில் ஐ படத்திற்கு எழுதியதையே டிட்டோ போட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இணையத்தில் வெளியான அதே கதை தான். பழைய கதையும் கூட. அதனாலேயே சஸ்பென்ஸ், ட்விஸ்ட் போன்ற பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை.

சமீப படங்களில் கூலர்ஸ், நடை, பஞ்ச் வசனம் என்றே பார்த்துப் பழகிய அஜித் சற்றே (சற்று தான்) வேறுபட்டிருக்கிறார். இன்னொரு பெரிய ஆறுதல் துணை நடிகர்கள் அஜித்துக்கு முகஸ்துதி போடும் காட்சிகள் வைக்காதது. அஜித் – அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் பது மலர்ச்சியாக இருக்கிறது.

அருண் விஜய்யின் பாத்திர படைப்பில் இன்னொரு டேனியல் பாலாஜியை பார்க்க முடிகிறது. பழைய படங்களில் எல்லாம் வில்லன் நடிகர்கள் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் நான்கைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து வசைமொழி பேசுவார்கள். வில்லன் நடிகர்களை பொறுத்தவரையில் வசை தான் பாராட்டு என்று கொள்ளலாம். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களிடம் கேவலமாக திட்டு வாங்கியிருக்கிறார் அருண் விஜய். அஜித்தை மிஞ்சியிருக்கிறார் என்கிற காழ்ப்புணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். வே டூ கோ அருண் விஜய் !

பேரிளம்பெண் என்ற பதத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய இரு கதாநாயகிகள். கெளதம் மேனனின் கேமரா வழியாக பார்க்கும்போது மட்டும் ஒரு சுற்று கூடுதல் அழகியாக தெரிகிறார் த்ரிஷா. அனுஷ்கா அந்தோ பரிதாபம். சிகையலங்காரம் வேறு சகிக்கவில்லை. 

பேபி அனிகா செம க்யூட். பாந்தமாக முகத்தை வைத்திருப்பது ஒருவித அழகு என்றால், சிரிக்கும்போது தெரியும் தெத்துப்பல் அதைவிட அழகு. அனிகாவிடம் அனுஷ்காவை பார்த்துக்கொள்ளுமாறு ஒப்படைக்கும்போது “Of course, அப்பா” என்று ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். அது க்யூட்நெஸ்ஸின் உச்சம்.

ஏறத்தாழ ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போன்ற வேடத்தில் நடித்திருக்கும் விவேக்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும் நாசரின் வேடம் நேர்த்தியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வரமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டு இறக்கிறார். பார்வதி நாயர் வேடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்; நடிகைகளுக்கா பஞ்சம்.

திரைக்கதை சூத்திரங்களில் முக்கியமானதாக ‘SHOW, DON’T TELL’ என்ற விதியை சொல்வார்கள். ஆனால் இயக்குநர் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின்பு அதையே தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லும் மேஜர் சுந்தர்ராஜன் போல இரண்டையும் செய்கிறார். செய்கிறார் என்றால் செய்துகொண்டே இருக்கிறார். இது சில இடங்களில் ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தாலும்கூட ஒரு கட்டத்திற்கு மேல் சலித்துவிடுகிறது.

அதாரு உதாரு, மாயா பஸார் பாடல்கள் ரிப்பீட் மோட் வகையறா. வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடும் மின்னல்கள். வடிவேலு, விவேக் பேசிய நகைச்சுவை வசனங்களை சீரியஸான காட்சிகளில் அஜித் பேசுகிறார். அப்படியும் நமக்கு வேடிக்கையாக தோன்றா வகையில் காட்சியாக்கியிருக்கின்றனர்.

அஜித், த்ரிஷா, அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. பெண்கள் விரும்பக்கூடும். மற்றவர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் அஜித்துக்கும் அருண் விஜய்க்கும் இடையே நடைபெறும் அந்த சேஸ், நிஜமாகவே நகம் கடிக்க வைக்கும் சிலிர்ப்பான நிமிடங்கள். திரைக்கதைக்காக மட்டும் சொல்லவில்லை. வேறு யாருடைய படமாக இருந்தாலும் எப்படியும் சுபம் தான் போடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஈவு இரக்கமில்லாமல் மாயாவையே சாகடித்த இயக்குநர் என்பதாலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

வழக்கமாக சினிமா ரசிகர்கள் ஏதோ ஒன்று தெறிக்குது, தெறிக்குது என்பார்களே அது இந்த படத்தில் குறைவாகவே தெறித்திருக்கிறது. சரி, critically acclaimed படமாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. படத்தில் வரும் ஒரு வசனத்தின் பாணியிலேயே சொல்வதென்றால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் மாஸ், அந்தப்பக்கம் க்ளாஸ். இரண்டிற்கும் இடையே என்னை அறிந்தால்.

அஜித் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்திற்குள் இருந்து கொஞ்சூண்டு எட்டிப் பார்த்திருக்கிறார். அவர் அதனை விட்டு முழுமையாக வெளிவர வேண்டும். ஆனால் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை நினைக்கும்போது அவர் மறுபடியும் அதே வட்டத்திற்குள்ளேயே சென்று அடைந்துகொள்வார் என்றே உறுதியாகக் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 December 2014

கவர்ச்சி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்கிற திரைப்பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஆடிக்கொண்டிருந்த நடிகையின் முகத்தை பார்த்தால் ஒரு வாரத்திற்கு சோறு இறங்காது. ஏனய்யா ஐட்டம் சாங்கில் ஆட வைக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா ? முதிர்ச்சி பெற்ற அந்த அம்மணியின் பெயர் அஷ்மிதா. This is my first film என்று ஒரு பேட்டியில் திருவாய் மலர்ந்திருக்கிறார். அஷ்மிதாவின் திருமுகத்தை ஏதோ ஒரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வரவில்லை. ஒன்றிரண்டு பார்த்திருந்தால் தானே ? கூகுள் செய்தேன். அஷ்மிதா இதுவரை (கூகுளுக்கு தெரிந்து) நடித்திருக்கும் பி-கிரேடு படங்களின் பட்டியல் –
  • கலப்படம்
  • இயக்குநர் (சமீபத்தில் மறைந்த சுருளி மனோகர் இயக்கியது)
  • உனது விழியில்
  • காணும் கனவுகள்
  • என்னைப் பிரியாதே
  • தேள் 
  • காதல் வலி (தெலுங்கில்: இந்த்லோ ராமுடு வீதிலோ மன்மதுடு)
  • கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு

மஸ்காரா பாடலை தொடர்ந்து பார்த்தபோது தொலைக்காட்சி திரையில் குறுக்க மறுக்க ஒரு உருவம் அசந்தர்ப்பமாக நடனமாடிக்கொண்டிருந்தது. பற்றாத குறைக்கு அடிக்கடி பாடலின் வரிகள் திரையில் எழுத்துகளாக தோன்றியது. கராவோக்கேவாம். கருமம் டா. லைட்டிங் வேறு ஏடாகூடமாக இருந்தது. பாடலில் ஏதோ ஒரு குறை இருப்பதை உணர்ந்து யூடியூபில் தேடினால் அதில் இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லாமல் காட்சிகள் பளிச்சிடுகின்றன. விஷயம் என்னவென்றால் தொலைக்காட்சிக்காக பாடலை சென்ஸார் செய்திருக்கிறார்களாம்.

முன்னொரு காலத்தில், ஜில்லா படத்தில் ஜிங்குனமணி ஜிங்குனமணி என்று ஒரு பாடல். அதனை சென்ஸார் அதிகாரிகள் கதறக் கதற கற்பழித்திருந்தார்கள். அதைப் பார்த்த ரசிகர்கள் பலர் போங்கய்யா உங்க பூசாரித்தனமும் வேண்டாம் உங்க பொங்கச்சோறும் வேண்டாம் என்று விரக்தியுற்றார்கள். ரசிகர்களை விடுங்கள். எங்கேயோ ஆங்கில மண்ணில் பிறந்து நமக்காக கலைச்சேவையாற்ற வந்த அந்த இரண்டு அம்மாள்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் ? 

அதேபோல சிங்கம் படத்தில் அனுஷ்கா திறந்த மனதுடன் நடித்த ஒரு பாடல். அதை ஒருமுறை தொலைக்காட்சியில் பார்த்தபோது திரையில் யாரோ வனஸ்பதியையோ டால்டாவையோ ஈஷியிருக்கிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக ஒரு துணியை கொண்டுவந்து துடைக்கலானேன். அப்புறம் தான் தெரிந்தது அதுவும் சென்ஸார் ஆசாமிகளின் வேலை என்று. அந்தப் பாடலை அப்படியே விட்டிருந்தால் கூட அதிலிருந்த விஷயத்தை அனேகர் கவனித்திருக்க மாட்டார்கள். அதன் மீது வானவில்லில் உள்ள அத்தனை வண்ணங்களையும் பூசி அனைவரது பார்வையையும் பதிய வைத்துவிட்டீர்களே அய்யா. ஆமாம் உங்களுக்கு ஏனிந்த அக்கறை ? அனுஷ்காவுக்கு இல்லாத அக்கறை ? சென்ஸே இல்லாதவர்களுக்கு சார் போடுவது தான் சென்ஸார் என்று அன்றே சொன்னார் எஸ்.ஜே.சூர்யா.

சென்ஸார் கூத்துகள் ஒரு பக்கம் என்றால் அதற்கு நேர் மாறாக ஒரு சிக்கல். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் இடையே ஒரு மெல்லிசான கோடு என்று நடிகைகள் பேட்டியில் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த கோட்டினை பற்றியது தான். ப்ரியா ஆனந்தை எனக்கு பிடிக்கும். எதிர்நீச்சலில் அந்தமான் கடற்கரையில் காட்சியாக்கப்பட்ட ஒரு பாடலில் இருந்து பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த மெல்லிசான கோடு சமாச்சாரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் அந்த பாடல். ஆனால் சமீப படத்தில் ப்ரியா ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள். கவர்ச்சி என்றால் அரைகுறையாக உடுத்திக்கொண்டு தங்கு புங்கென்று குதிப்பது என்று ப்ரியாவுக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உடன் ஆடுவது யாரென்று பார்த்தால் தமிழ் சினிமாவின் தற்போதைய தலைசிறந்த நடிகர் விமல். அன்னாருடைய கைகளை எடுத்து தம்முடைய இடுப்பில் வைத்துக்கொள்கிறார், யாருக்காகவோ புட்டத்தை வெடுக் வெடுக்கென ஆட்டுகிறார் (பார்க்க 3:18). இது தற்காலிகமாக கொஞ்சம் கிளுகிளுப்பூட்டுகிறது என்றாலும் கூட ப்ரியாவின் கேரியருக்கு நல்லதல்ல. இப்படியே ஆடிக்கொண்டிருந்தால் (அதுவும் விமல் போன்ற மகாநடிகர்களுடன்) கூடிய விரைவில் அஞ்சலி லிஸ்டில் நீங்களும் சேர வேண்டியது வரும் ப்ரியா ஆனந்த் !

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

10 January 2014

அஜித்தும் காஜலும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.

எதுக்கு மாமா வளவள'ன்னு ?  புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.

1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.

2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.

3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.

4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.

5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.

என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா !
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2013

இரண்டாம் உலகம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

செல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும் காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே ஆகவேண்டிய நிலை.

படத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள் நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம் உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள் மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்...? அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்...? காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது. இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது.

உலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு ஆர்யாவும். சிலகால ஊடலுக்குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.

செல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல் சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில் பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில் ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.


மற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார். இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.

இரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும் அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து, அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர் காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள் இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.

ஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார். அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.

சில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின் நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.

மொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல் விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல் உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.

செல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால் தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment