15 February 2015

அனேகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

அனேகனை பொறுத்தவரையில் முதல் ஈர்ப்பு தங்கமாரி பாடல். தனுஷுக்கு மட்டும் எப்படி சென்சேஷனல் ஹிட்ஸ் அமைகின்றன ? அதற்காக படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, சில நாட்கள் முன்பு வரை. ட்ரைலரை பார்த்தால் ஏதோ ஃபேண்டஸி இத்யாதிகள் இருக்கும் போல தோன்றியது. அங்கே தான் சரண்டர் ஆகிவிட்டேன்.

வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும் (ஒரே ஜோடியின்) காதல் கதைகள். காதல் என்றதும் எல்லா படங்களிலும் செய்வது தானே என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இது வேற லெவல். என்னைக் கேட்டால் இங்கேயே நிறுத்திக்கொண்டு திரையரங்கிற்கு செல்வது உத்தமம் என்பேன். மற்றவர்கள் தொடர்க.

தனுஷுக்கு தன்னுடைய பன்திறனை வெளிப்படுத்தக்கூடிய அட்டகாசமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜஸ்ட் லைக் தட் அஸால்ட் பண்ணியிருக்கிறார். குறிப்பாக காளி கதாபாத்திரம்.

அமைராவை முதலில் பார்க்கும்போது சவசவ என்று ஒரு மாதிரியாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஒரு அழகான குழந்தை போல நம் மடியில் வந்து சமத்தாக அமர்ந்துகொள்கிறார்.

அமைராவை விடுங்கள். ஐஸ்வர்யா என்று ஒருவர் நடித்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் ‘தேவன் மகிமை’ என்பார்களே, அது என்னவென்று உணர்ந்துகொண்டேன். முன்னவர் சாத்வீகம் என்றால் இவர் ப்ரச்சோதகம். சங்க இலக்கிய வர்ணனைகளுக்கு ஒப்பான புருவங்கள், கூரான மூக்கு, வரைந்து வைத்த ஓவியம் போன்ற வசீகரமான முகம். தென்னக சினிமாவுக்கு ஒரு பிபாஷா கிடைத்துவிட்டார்.

கார்த்திக் ஒரு MNCயின் பாஸ் என்கிற வகையில் தோரணையாக நடித்திருக்கிறார், ஆனால் வில்லனாக கொஞ்சம் கடுப்படிக்கவே செய்கிறார். ஜகன் போன்ற ஆட்களை ஏனோ தமிழ் சினிமா தொடர்ந்து வீணடிக்கிறது. சும்மா உல்லுல்லாயிக்கு இரண்டு பழைய வில்லன் நடிகர்கள்.

அனேகனுடைய பெரும்பான்மையான பாராட்டுகள் சுபாவிற்கு. குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் கதையை வில்லென வளைத்திருக்கிறார்கள். எவ்வளவு டீடெயிலிங் ? அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். வருடத்தின் துவக்கத்திலேயே சுபாவிடமிருந்து இரண்டு அட்டகாசமான கதைகள் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய வர வேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது.

தங்கமாரி பாடல் பார்வையாளர்களை ஒரு தெய்வீகநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அனேக மக்கள் இந்த ஒரு பாடலுக்காகவே திரையரங்கிற்கு வருகிறார்கள். கொண்டாடுகிறார்கள். உண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படி தரைக்குத்து பாடலை இசைத்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. எனக்கென்னவோ இது மரணகானா விஜிக்கு போகவேண்டிய க்ரெடிட்ஸ் என்று தோன்றுகிறது. கூடவே பாடலை பாடிய மற்றவர்களுக்கும், எழுதியவர்களுக்கும். எல்லா பாடல்களும் தரமாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஆத்தாடி ஆத்தாடி பாடலில் பவதாரணியின் குரல் இதமளிக்கிறது. ஒரு தெளிவான நீரோடையை போல நிதானமாக இருக்கிறது தெய்வங்கள் இங்கே பாடல். அது மட்டுமில்லாமல் விஷுவலில் விர்ச்சுவலாக பர்மாவை பார்த்த பரவசம் கிடைக்கிறது. YOLO பாடல் வேறு வகையான விஷுவல் பரவசம். ஒன்றிரண்டு ஷாட்டுகளில் வந்தால் கூட ஐஸ்வர்யாவின் விளைவுகள் செம ஹாட்.

முதலில் படத்தின் குறைகள். பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் தர்க்க ரீதியாக நிறைய கேள்விகள் எழுப்பலாம் தான். ஃபேண்டஸி படம் என்பதால் அவற்றைப் பற்றி பெரிதாக கவலைப்பட தேவை இல்லை. ஆனால், படம் முடிந்தபிறகு எதற்காக அய்யா ஒரு அரை மணிநேர க்ளைமாக்ஸ். அப்புறம், அந்த கத்தி சொருகும் காட்சி உச்சக்கட்ட பேத்தல்.

சமீப படங்களில் டுஸ்டுகள் எளிதில் யூகிக்கக்கூடிய வண்ணம் இருந்தது இல்லையா ? அந்த விஷயத்தில் அனேகன் ஆறுதலாக இருக்கிறது. குருஜி கொடுத்த டேப்லட், ஒரு கையை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருக்கும் மாமா கேரக்டர் என்று நம்மை சாமர்த்தியமாக திசை திருப்பிவிட்டு டுஸ்டு கொடுத்திருக்கிறார்கள்.

புனைவு என்ற வார்த்தைக்கு ஒரு அட்டகாசமான உதாரணமாக வெளிவந்திருக்கிறது அனேகன். பர்மாவிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையும் கற்பனையும் கலந்த கச்சிதமான காக்டெயில் அது. அனேகனில் உள்ள ஒரு வசதி. கதையை நமக்கு பிடித்தமான பர்ஸப்ஷனில் புரிந்துக்கொள்ளலாம். மறு ஜென்மம் குறித்த கதையாகவும் நம்பலாம். அல்லது ELOPOMINE என்கிற மாத்திரையால் ஏற்பட்ட மனக்குறைபாடு என்றும் புரிந்துக்கொள்ளலாம். உண்மையில் காளி – கல்யாணி கதை தவிர்த்து மற்றவை (முருகப்பா, இளமாறன்) வெறுமனே கதாநாயகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம். பார்வையாளர்களாக மட்டும் அல்லாமல் கதையில் பங்கெடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு பல கதவுகளை திறந்து வைத்து காத்திருக்கிறது அனேகன்.

மற்றொரு வசதி, ஒரு தேர்ந்த நாவலில் வருவது போல ஆங்காங்கே குறிப்புகள் கொடுத்துக்கொண்டே போயிருக்கிறார்கள் கதாசிரியர்கள். பர்மா அரசியல், எஸ்.எஸ்.ரஜூலா, மிங்குன் பகோடா (6174 நினைவிருக்கிறதா ?), அமைராவின் டேபிளில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், தலைவாசல் விஜய் வரைந்துக் கொண்டிருக்கும் ஓவியம் இப்படி நிறைய. விருப்பமுள்ளவர்கள் இவற்றை தேடித் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் வெறும் பொழுதுபோக்காகவும் எடுத்துக்கொள்ளலாம். தரை லோக்கல் காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது காளி எபிசோட்.. ஹை-டெக் ஆட்களுக்கு கேமிங் அலுவலக காட்சிகள். பாடல்கள், ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள், க்ளாஸ், மாஸ். சுருங்கச் சொல்வதென்றால் ஃபுல் மீல்ஸ்.

தமிழில் எல்லாம் இதுமாதிரி படங்கள் வராதா என்று ஏங்குபவர்களுக்கு செமத்தியாக வந்திருக்கிறது அனேகன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

செங்கோவி said...

//ஆனால், படம் முடிந்தபிறகு எதற்காக அய்யா ஒரு அரை மணிநேர க்ளைமாக்ஸ். அப்புறம், அந்த கத்தி சொருகும் காட்சி உச்சக்கட்ட பேத்தல்.//

உண்மை பிரபா..சாதாரண மசாலாப்படம் போல் ஒரு கிளைமாக்ஸ். அது தான் முழு திருப்தி தராமல் போய்விட்டது.

நல்ல ஒரு முயற்சி..1987 எபிசோடும் கிளைமாக்ஸும் கொஞ்சமும் திருப்தி தரவில்லை.

sornamithran said...

உடனே பார்க்க தோன்றுகிறது