18 June 2016

பெங்களூரு தினங்கள் - 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மே 23ம் தேதி புதிய அலுவலகத்தில் முதல்நாள். கத்தையாக விண்ணப்பப் படிவங்களிலும் சாசனங்களிலும் சலிக்காமல் கையொப்பமிட வேண்டியிருந்தது. ‘ஆறாவது’ முறையாக தமிழக முதல்வராக செல்வி. ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட அதே சமயத்தில் இன்னொரு பதவியேற்பு விழாவும் ஆர்பாட்டமில்லாமல் நடந்து முடிந்தது.

தொடர்கிற பத்தியை படித்துவிட்டு இவனெல்லாம் உருப்படவே மாட்டான் என்று நீங்கள் நினைக்கலாம். நினைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் அலுவல் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ யாரேனும் ஆங்கிலத்தில் பேசினால் எதிர்த்தரப்புக்கு தமிழ் தெரியும் பட்சத்தில் நான் தமிழிலேயே பதிலளிப்பேன். இதில் உள்ள ‘கம்ஃபர்ட்’ ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை. வேறு வழியே இல்லாத சூழல்களில் மட்டும்தான் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை கையில் எடுப்பேன். நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தமிழகத்திலேயே இருந்தாலும் ஏர்போர்ட்டுக்கோ, போஷான உணவகத்திற்கோ, ரெஸார்ட்டுக்கோ சென்றால் அங்கே ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் பேசினால்தான் மரியாதை என்று கற்பனை செய்துகொண்டு நாவை சுழட்டிக்காட்டுவார்கள். நான் இப்படிப்பட்ட வணிகம் சார்ந்த இடங்களில் துளி கூட யோசிக்காமல் தமிழிலேயே பேசுவேன். நம்மூருக்கு வந்து வியாபாரம் செய்பவர்கள் நமது மொழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பிழைக்கப் போன இடத்தில் இப்படிப்பட்ட குறிக்கொழுப்பு பேச்செல்லாம் பேச முடியுமா ?

பெங்களூர் அலுவலகத்தில் சம்பாஷனைகள் எல்லாம் இப்போதைக்கு ஆங்கிலம்தான், எதிர்தரப்புக்கு தமிழ் தெரிந்திருந்தாலும் கூட. என்ன ஒன்று, இங்கே யாரும் நம்மை மிரட்டுவதற்காகவே ஆக்ஸ்போர்டிலேயே இல்லாத வொக்கபிலேரியை பயன்படுத்துவதில்லை. அக்சென்ட் என்ற பெயரில் உள்ளூர்க்காரர்களிடமே சுழட்டிக் காட்டுவதில்லை. தெளிவான இந்திய / ஹிந்திய ஆங்கிலம்தான். இருப்பினும் நாள்முழுக்க ஆங்கிலத்தில் பேசுவது என்பது தண்டனைதான். இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ‘சாப்ட்டீங்களா தம்பி’ என்று தமிழில் கேட்டபடி ஒருவர் ஆதரவாக தோளில் கை வைத்தால் எப்படி இருக்கும் ! அதுவும் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு நபர். ‘இல்லை’ என்றதும் அருகிலுள்ள நல்ல உணவகங்களுக்கு வழி சொன்னார். 

சில விஷயங்களைப் பொறுத்தவரையில் நாமே எக்ஸ்ஃப்ளோர் செய்வதுதான் சுவாரஸ்யம். முதல்நாள் மதியம் கொஞ்ச தூரம் நடந்தபிறகு ஒரு சைவ உணவகத்தில் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் இன்னொரு கடையில் ஆம்பூர் பிரியாணி 60ரூ என்றிருந்ததை கவனித்தேன். அடுத்தடுத்த நாட்களில் அதே பகுதியில் பல ஆம்பூர் பிரியாணி கடைகள் உள்ளதை கண்டுகொண்டேன். இந்தக் கடைக்காரர்களுக்கு எல்லாம் தமிழக வரைபடத்தில் ஆம்பூர் எந்த திசையில் உள்ளது என்று கேட்டால் கூட சொல்லத் தெரியாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு கடையிலும் பிரியாணியின் சுவை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது, ஆனால் எங்கேயும் பிரியாணி மாதிரி இல்லை. வாயிலேயே வைக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. இதே பிரியாணியை சென்னையில் விற்றால் கண்டிப்பாக 80 அல்லது 90 ரூபாய் வாங்குவார்கள். இங்குள்ள போட்டியின் காரணமாகவோ என்னவோ 50 அல்லது 60 ரூ மட்டும் வாங்குகிறார்கள்.

அலுவலகம், தங்குமிடம் தவிர்த்து பொது இடங்களில் வியாபாரிகளும், வழிப்போக்கர்களும் பரவலாக தமிழில் பேசுவதைக் காண முடிகிறது என்பதால் ப்ரியா ஆனந்த் போல ‘ஹேய்... நீங்க தமிழா ?’ என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதே சமயத்தில் தமிழில் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பலர் தாராளமாக மூன்று அல்லது நான்கு மொழிகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே தாய்மொழி தவிர்த்து வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாத அதிக அப்பாவிகள் உள்ள ஊர் தமிழகமாகத்தான் இருக்கும்.

பெங்களூர் பற்றி மற்றவர்கள் அதிகம் பயம் காட்டிய விஷயம் – சினிமா டிக்கட் விலை. நம்மூர் மாதிரி 120 வரையறை இங்கு இல்லை. அதுவும் வார இறுதிகளில் டிமாண்டை பொறுத்து விலையை ஏற்றி இறக்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு பொருந்தும். ஆனால் எனக்கு கிடைத்த நற்பேறு என்னவென்று பாருங்கள். நான் வசிக்கும் பகுதியில் இருந்து இரண்டு கி.மீ சுற்றளவிலேயே நான்கு ஒற்றைத்திரை அரங்குகள் உள்ளன. இவற்றில் இரண்டிலாவது தமிழ் படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய / மீடியம் பட்ஜெட் படங்கள் மட்டும்தான். இங்கே பார்ப்பது போல ஜீரோ, களம் எல்லாம் அங்கே முடியாது.

புது ஊருக்கு போனால் அங்குள்ள கலாசாரத்தை அறிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும். அவற்றில் முதலாவது திரையரங்கம். பெங்களூரில் முதல் படமாக என்ன சினிமா பார்க்கலாம் ? வரவேற்று உற்சாகமளித்த காஜல் அகர்வால் படமா அல்லது மண்ணின் மொழியான கன்னட படமா ? கன்னட படமே பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். லூஸியா இயக்குநரின் படம் என்பது பிரதான காரணம். இங்குள்ள திரையரங்குகளில் சாதாரணமாகவே தினசரி ஐந்து காட்சிகள் ஓட்டுகிறார்கள். ஒற்றைத்திரைகளில் டிக்கட் கட்டணம் நூறு அல்லது நூற்றைம்பது இருக்கிறது. முதல் படம் பார்த்த தியேட்டர் – பாலாஜி. முன் சீட்டு ஆசாமியின் தலை திரையை மறைக்க வாய்ப்பே இல்லாத வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாரநாள் என்றாலும் அரங்கு நிறைந்திருந்தது. பெரும்பான்மை கார்ப்பரேட்களில் பணிபுரியும் ஆண்-பெண் குழுமங்கள். வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கன்னடம் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். முதல் சீனில் சப்-டைட்டிலை பார்த்ததும் பலர் உற்சாகமாக கத்தியதை வைத்து சொல்கிறேன். கேண்டீனில் கொள்ளையடிப்பதை பொறுத்தவரையில் தமிழகத்தைவிட மோசம். அஞ்சு, பத்து சில்லறை எல்லாம் தருவதில்லை. கடலைபருப்பையும், பட்டாணியையும் சில்லறைக்கு பதிலாக தள்ளிவிட்டு ஏமாற்றுகிறார்கள். ஆனால் திரையரங்கில் பார்த்த முதல் கன்னட சினிமா ஏமாற்றவில்லை.

புது ஊர் கலாசாரத்தை தெரிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன் இல்லையா. முதலாவது, திரையரங்கம். இரண்டாவது என்ன என்று யூகித்திருப்பீர்கள். அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அனுபவங்களை சுவாரசியமாக சொல்கிறீர்கள் வாழ்த்துகள்