28 June 2016

மாண்ட்யா ராணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2002. சிம்பு ஹீரோவாக அறிமுகமாகியிருந்த சமயம். அப்போது அவர் நடிப்பில் வெளிவந்த ‘தம்’ படத்தில் ‘சாணக்யா’ பாடல் சூப்பர்ஹிட் ஆகியிருந்தது. சொல்லப்போனால் சிம்புவுக்கு அந்த காலகட்டத்தில் நிறைய ரசிகைகளை தேடிக்கொடுத்த பாடல் அது. ரொமாண்டிக்கான கடற்கரை, சிம்புவும் கதாநாயகி ரக்ஷிதாவும் செய்யும் சில்மிஷங்கள், சாதனா சர்கமின் கிறங்கடிக்கும் குரல் எல்லாமுமாக ஒன்று சேர்ந்து தமிழகத்தை கலங்கடித்தது அந்தப்பாடல். தம் படத்தை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'குத்து' படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஏ.வெங்கடேஷ் சாணக்யாவை போலவே ஒரு சூப்பர்ஹிட் பாடல் தர நினைத்திருக்கக்கூடும். அதே சிம்பு, அதே போன்றதொரு கடற்கரை, அதே சாதனா சர்கம், கதாநாயகி மட்டும் ரக்ஷிதாவுக்கு பதில் ரம்யா. நிபுணா நிபுணா என்று தொடங்கும் அந்தப்பாடல் சாணக்யாவை பிரதி எடுத்தது போலவே இருந்தது. ஆனால் இந்தமுறை ரசிகைகளை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. காரணம் ரம்யாவும் அவருடைய செக்ஸியான எக்ஸ்பிரஷன்களும் தான். அதிலிருந்து தமிழில் அந்த கதாநாயகியின் பெயரே ‘குத்து’ ரம்யா என்றாகிவிட்டது. அந்தப் பெயரில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு, ‘என்னை குத்து ரம்யா என்று அழைக்காதீர்கள்’ என்று பேட்டிகளில் பலமுறை சொல்லியும் அந்தப் பெயரை மீடியாவோ ரசிகர்களோ மாற்றிக்கொள்ளவே இல்லை. ஆம், ரம்யா என்பது ஒரு பெயர். ‘குத்து’ ரம்யா என்பது ஒரு உணர்வு !

ரம்யா பிறக்கும்போதே ரம்யா இல்லை. அவருடைய இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா. 1982 நவம்பர் 29ம் தேதி கன்னட தேசத்தில் அவதரித்தார். பெங்களூரில் பிறந்திருந்தாலும் ரம்யாவின் பூர்விகம் பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையே உள்ள மாண்ட்யாதான். ஜெயலலிதா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பிரபல அரசியல்வாதிகளை ஈன்றெடுத்த மாவட்டம். ரம்யாவுக்கும் அரசியல்ரீதியான பின்புலம் உண்டு. ரம்யாவின் தாத்தா போரேகவுடா மாண்ட்யாவின் நகராட்சி தலைவராக இருந்திருக்கிறார். ரம்யாவின் அம்மா ரஞ்சிதா கர்நாடக காங்கிரஸில் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். வளர்ப்புத்தந்தை நாராயணன் நேரடியாக அரசியலில் இல்லாவிட்டாலும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா வரையில் செல்வாக்குள்ளவர். கர்நாடக டென்னிஸ் சங்கத்தில் பெரும் பங்காற்றியவர்.

ரம்யா தன்னுடைய பள்ளிப்பருவம் முழுவதையும் தமிழகத்தில்தான் கழித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை ஊட்டி புனித ஹில்டா பள்ளியில் படித்த ரம்யா படிப்பு தவிர்த்து கலை, விளையாட்டுத்துறையில் படுசுட்டி. மேடை நாடகங்களிலும், டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் விரும்பிப் பங்கேற்கும் ரம்யா பள்ளி ஆண்டுவிழாவில் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறந்த துணை நடிகைக்கான பரிசைப் பெற்றிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தடகளத்தில் பல பரிசுகளை பெற்றிருக்கும் ரம்யா, ஆறாம் வகுப்பு படிக்கும்போது இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முப்பதே நொடியில் ஓடி சாதனை படைத்ததை பெருமையுடன் இன்றும் நினைவுகூர்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரம்யா ஒரு கவிதாயினியாக இருந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை பற்றிய அவருடைய கவிதையொன்று அவருடைய ஸ்கூல் மேகஸினில் பிரசுரமாயிருக்கிறது. ரம்யா தன்னுடைய மேல்நிலை கல்வியை பயின்றது வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை சர்ச் பார்க் பள்ளியில்.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ரம்யாவுக்கு முதன்முதலில் கிடைக்க இருந்த ‘நினக்காகி’ கன்னட படவாய்ப்பு எதிர்பாராவிதமாக ‘குட்டி’ ராதிகா வசம் போய்விட்டது. அடுத்து கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிய அப்பு படத்தில் வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் முடிந்தபிறகு அந்த வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப் பறித்தார். அப்படி பறித்தது வேறு யாருமில்லை, நிபுணா நிபுணாவுக்கு முன்னோடியாக சாணக்யாவில் ஆட்டம் போட்ட ரக்ஷிதாதான். ரம்யா துவண்டுவிடவில்லை. புனித் ராஜ்குமாரின் இரண்டாவது படமான ‘அபி’யில் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சுமாரான காதல் கதைதான். ஆனால் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து ரம்யா நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைய, ஒரு கட்டத்தில் ‘கன்னட சினிமாவின் தங்கமகள்’ என்று அழைக்கப்பட்டார் ரம்யா.

இதற்கிடையே தான் தமிழில் சிம்புவுடன் குத்துவில் அறிமுகம். தமிழில் பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும் தனுஷுடன் ரம்யா நடித்த பொல்லாதவன் படம் சக்கை போடு போட்டது. படத்தைப் பார்த்த தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினர். தன்னுடைய ‘குத்து’ ரம்யா என்ற தமிழ் சினிமா பெயரை அடியோடு வெறுத்த ரம்யா கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் திவ்யா ஸ்பந்தனாவாக மறு-அறிமுகமானார். பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றளவும் தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம் என்கிறார் ரம்யா. அதில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி என்ற பாடலை ரசிகர்களாலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவிற்கும் ரம்யா ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் காட்டிய தாராள கவர்ச்சியை அவர் கன்னட சினிமாக்களில் நாசூக்காக தவிர்த்திருக்கிறார். இது குறித்து பேட்டிகளில் கேட்டபோது கூட, கன்னடத்தில் அப்படியான வாய்ப்புகள் வருவதில்லை என்று மட்டும் நைச்சியமாக சொல்லி தப்பித்திருக்கிறார். கன்னட, தமிழ் சினிமாக்களில் ரம்யாவின் சொந்தக்குரலை பயன்படுத்துவதில்லை. ஆனால் நான்கு தென்னிந்திய மொழிகளோடு, ஹிந்தி, ஆங்கிலம் ஆறு மொழிகளை எழுத, படிக்க, பேசவும் தெரியுமாம் ரம்யாவுக்கு. இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கிறார். சஞ்சு வெட்ஸ் கீதா படத்திற்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார்.

சினிமாவில் ஒரு சுற்று வந்த ரம்யா அடுத்த அதிரடியாக அரசியலில் குதிக்க ஆயத்தமானார். அதன் துவக்கமாக ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்த ரம்யா 2011ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸில் இணைந்தார். இந்த தகவல் கர்நாடக காங்கிரஸில் இருந்த இளைஞர்களுக்கெல்லாம் ஒரு புது எழுச்சியை உண்டாக்கியது என்று சொன்னால் மிகையாகாது. 2013 மாண்ட்யா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ரம்யாவுக்கு சீட் கிடைத்தது. ரம்யா வேட்புமனு தாக்கல் செய்த சில மணிநேரங்களில் அவருடைய வளர்ப்புத்தந்தை மாரடைப்பில் காலமானார். ரம்யா தளர்ந்துவிடவில்லை. எதிர்க்கட்சிகள் ரம்யாவின் உண்மையான தந்தை குறித்து கேள்வி எழுப்பின. ரம்யாவை டெஸ்ட் ட்யூப் பேபி என்று விமர்சித்தனர். அதற்கெல்லாம் அசரவில்லை ரம்யா. கடைசியில், வாக்காளர்கள் குத்து குத்து என குத்திய குத்தில் நாற்பத்தி ஏழாயிர சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினரானார் ரம்யா.

வெறும் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினராக இராமல் சபையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது, கேன்சர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சார்பாக நாற்பத்தைந்து கோடி நிதியுதவி பெற்றுத்தந்தது உள்ளிட்ட பலப்பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தாலும் 2014 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மாண்ட்யாவில் போட்டியிட்ட ரம்யா ஐயாயிரத்து சொச்ச வாக்குகளில் தோல்வியுற்றார். தோல்வி நிரந்தரமில்லை என்றாலும் இடைவெளியை பூர்த்தி செய்ய மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியிருக்கிறார் ரம்யா. ரம்யா சமீபத்தில் நடித்த நாகரஹாவு அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. 2019 ரம்யாவுக்காக காத்திருக்கிறது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 comments:

Ponmahes said...

// 2019 ரம்யாவுக்காக காத்திருக்கிறது !


நாங்களும் காத்திருக்கோம்......


பதிவு அருமை... வாழ்த்துக்கள்....

ம.தி.சுதா said...

பொல்லாதவனில் வரும் எங்கேயும் எப்போதும் இல் அவர்காட்டும் முக பாவங்கள் தான் நான் அவரில் ரசித்த உச்ச நடிப்பு....

ADMIN said...

நீண்ட நெடு விளக்கத்துடன், தெளிவான பதிவு... வாழ்த்துகள் பிரபாகரன்!

Anonymous said...

கடைசியில், வாக்காளர்கள் குத்து குத்து என குத்திய குத்தில்- Prabha is BACK....

BHUVANESH WARAN said...

❤❤❤

Andre Hedetoft said...

Grateful ffor sharing this