13 July 2016

அந்தமானில் அருணகிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த அருணகிரி – உலகம் சுற்றிய வாலிபன். தன்னுடைய உலக நாட்டு பயண அனுபவங்களைக் கொண்டு பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ஜப்பானை பற்றி இதுவரை யாரும் எழுதியிராத தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். மேலும் விகடன் பிரசுரமாக வெளியான ‘கட்சிகள் உருவான கதை’ உட்பட ஐந்து அரசியல் நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய படைப்புகளில் ஒன்று – அந்தமானில் அருணகிரி ! புத்தகத்தின் பெயரைக் கேட்டதும் அதனை வாங்கியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பிலிருந்தே நீங்கள் ஒரு விஷயத்தை யூகித்திருக்கலாம். முன்னுரையை படிக்கும்போது ஊர்ஜிதமாயிற்று. அது என்னவென்றால் பெரிய எழுத்தாள தொனியோடு, படாடோப அலங்காரங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு சாமானியன் பார்வையில் இருக்கிறது புத்தகத்தின் உள்ளடக்கம். கையில் ஒரு வாழைக்காய் பஜ்ஜியை வைத்துக்கொண்டு, அது எந்த எண்ணையில் தயாரிக்கப்பட்டது, எண்ணெய்களின் மூலம் எந்த நாடு, எண்ணெய் இந்தியாவிற்குள் நுழைந்த அரசியல் பின்னணி என்ன, மேலும் பஜ்ஜியை சுற்றியிருக்கும் தினத்தந்தி எந்த தேதியில் அச்சிடப்பட்டது, அதன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு என்றெல்லாம் வளவளவென்று மொக்கை போடாமல் நேரடியாக பஜ்ஜியின் சுவை தரும் பரவசத்தை விளக்கத் துவங்கிவிடுகிறார். பஜ்ஜியின் சுவை தொண்டைக்குழிக்குள் இறங்கியபிறகு சாவகாசமாக இடையிடையே அரசியல், வரலாறு பேசுகிறார்.

சிறு வயதிலிருந்தே அந்தமான் மீதும், கப்பல் பயணம் மீதும் தனக்குள்ள பேராவலை விவரித்து புத்தகத்தை துவங்குகிறார். கப்பல் பயணம் குறித்த இவருடைய முப்பது வருட கனவு அந்தமானுக்கு ஸ்வராஜ்தீப்பில் பயணம் செய்யும்போது பூர்த்தியடைகிறது. அருணகிரியின் இந்த இச்சைகளையும், அவரது முதல் கப்பல் அனுபவத்தையும், அவருடைய விவரணைகளையும் படிக்கும்போது அப்படியே என்னை நானே படித்துக்கொள்வது போல இருக்கிறது. பல இடங்களில் அச்சு அசலாக எனது வலைப்பூவையே வாசிப்பது போல இருந்து என்னை புத்தகத்துடன் நெருக்கமாக உணரச் செய்தது.

இருப்பினும் வலைப்பூவில் / ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் புத்தகம் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்கள் வலைப்பூவை படிப்பவர்கள் பெரும்பாலும் உங்களுடன் நட்பு பாராட்டுபவர்களாகவும், குறைந்தபட்சம் உங்களுடைய குணாதிசயங்களை புரிந்து வைத்திருப்பவராகவும் இருப்பர். வலைப்பூவில் எழுதும்போது நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை (பயணத்தில் சைட்டடித்த ஃபிகர் பற்றியோ, குறட்டைவிட்டு தூக்கத்தை கெடுத்த சகபயணி குறித்தோ) எழுதலாம். நண்பன் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கப்பலில் போக பயந்தது பற்றியும் அவனை எப்படி சமாதானப்படுத்தினீர்கள் என்றும் எழுதலாம். பெங்களூரில் போயிறங்கியதும் காஜல் அகர்வால் போஸ்டரை பார்த்தேன் என்று ஜொள் விடலாம். ஆனால் புத்தகத்தில் இதுபோன்ற அசட்டுத்தனங்கள் கூடாது. புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் நம் மீது துளி கூட அக்கறை இல்லாதவராகவும், புத்தகத்தின் உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டும் வாங்கியிருக்கலாம். அவருடைய நம்பிக்கையை கெடுக்காத வண்ணம் பொறுப்புணர்ச்சியுடன் எழுத வேண்டும். அது இந்த புத்தகத்தில் நிறைய இடங்களில் தவறுகிறது.

தேசிய இளைஞர் திட்டம் என்கிற அமைப்பின் மூலம் அருணகிரி அவர்கள் அந்தமான் சென்றிருக்கிறார். அதனால் அந்த அமைப்பு, செயல்பாடுகள், முந்தைய முகாம்கள் போன்ற விவரணைகள் வருகின்றன. இடையிடையே அந்தமானில் படப்பிடிப்பு நடத்திய திரைப்படங்கள், அந்தமானில் வாழ்ந்த தமிழறிஞர்கள், தமிழர் சங்கம், அந்தமான் பொதுக்கூட்டத்தில் மறைந்த (அப்போதைய) வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி (தி.மு.க.), அந்தமான் ஹிந்துக் கோவில் திருவிழாக்கள், பயணத்தில் சந்தித்த வெளி மாநிலத்தவர் / வெளிநாட்டவர், ஈழத்தமிழ் பாடகி மாதங்கி அருள்பிரகாசம் என்று கலந்துகட்டி பல தகவல்களை அளிக்கிறார். கூடவே, கடலில் காகங்கள் பறக்குமா ? கப்பலில் காகத்தை கொண்டுவந்து நடுக்கடலில் பறக்க விட்டால் அது என்ன செய்யும் ? போன்ற கேள்விகளால் அவரது குழந்தைத்தனம் கொண்ட மறுபக்கத்தையும் காட்டுகிறார். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து குறைந்தது ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டுமென தீவிரமாக பரிந்துரைக்கிறார்.

கப்பல் போர்ட் ப்ளேர் துறைமுகத்திற்கு சென்றடைந்ததும் கொஞ்சம் தரைதட்டத் துவங்குகிறது. அது மட்டுமில்லாமல் அருணகிரி அவர்கள் தன்னுடைய பத்துநாள் பயணத்தில் போர்ட் ப்ளேர் மற்றும் அதற்கு அருகே அமைந்துள்ள ஒன்றிரண்டு தீவுகளுக்கு மட்டும் போய் வந்திருப்பதாக தெரிகிறது. அவற்றில் கூட படிக்கும்போது இதனோடு பல தகவல்கள் சேர்த்து எழுதியிருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாத்தம் தீவில் அமைந்துள்ள மர அறுவை தொழிற்சாலைக்கு பின்னால் சுவாரஸ்யமான ஜப்பானிய போர் வரலாறு ஒன்று இருக்கிறது. ராஸ் தீவு ஒருகாலத்தில் ராணுவத் தலைமையிடமாக விளங்கியது. வைப்பர் தீவின் கதையைக் கேட்டால் மிரட்சியாக இருக்கும். மிக முக்கியமாக, வெளிநாட்டு கடற்கரைகளுக்கு இணையான ஹேவ்லாக் கடற்கரை இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் சிறிய சிறிய பத்திகள் எழுதிவிட்டு அந்தமான் காதலி படத்தில் சிவாஜி சுஜாதாவுடன் ரொமான்ஸ் செய்வதைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்தமான் ஆதிவாசி இனங்களில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள் சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகள். அவர்களைப் பற்றி ஒரு பத்தி கூட எழுதாதது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

இது ஒருபக்கம் என்றால் நூற்றி நாற்பது பக்க புத்தகத்தில் எண்பத்திஐந்து பக்கங்களுடன் அந்தமான் அனுபவங்கள் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு நெல்லூர் ஞாயிறுச்சந்தை, மூணாறு, கழுகுமலை, யானைமலை போன்றவற்றை குறித்து எழுதியிருப்பதில் சில தகவல்கள் கிடைத்தாலும் கூட அவை அவுட் ஆப் சிலபஸ் என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. உச்சபட்ச வன்முறை எது தெரியுமா ? கடைசி பதினைந்து பக்கங்களை நூலாசிரியர் பற்றி நடிகர் ராஜேஷ், லேனா தமிழ்வாணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் நிறைத்திருக்கின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட எனது பயண அனுபவங்களை மீண்டும் நினைவூட்டும் விதமாகவும், மீண்டுமொரு முறை பயணிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளதாலும் அந்தமானில் அருணகிரியை ரசித்து வாசித்தேன். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாங்கிப் படிக்கலாம்.

அந்தமானில் அருணகிரி
மங்கையர்க்கரசி பதிப்பகம்
140 பக்கங்கள்
விலை ரூ.100/-

எழுத்தாளரின் அலைபேசி எண்: 94443 93903


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வணக்கம். நான் உங்கள் தளத்தைத் தொடர்ந்து வாசிக்க விழைகிறேன். “பின்பற்றுவோர்” பெட்டி இல்லையே? எப்படித் தொடர்வது? புத்தக அறிமுகம் அழகாக இருந்தது.
- நா.முத்துநிலவன், வலைப்பதிவர்,எழுத்தாளர்,
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்.

Yaathoramani.blogspot.com said...

குறை நிறைகளை
நடு நிலையோடு அலசிய விமர்சனம்
மிக மிக அருமை
வாங்கிப் படித்து விடுவேன்
வாழ்த்துக்களுடன்...