31 October 2016

கொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த இடுகை: ஆகாயகங்கை 

கொல்லிமலை என்றாலே நம் நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை சித்தர்கள் ! கொல்லியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் மட்டும் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் பிரதானமானது கோரக்கர் குகை. எப்படியாவது கோரக்கர் குகையை பார்த்துவிட வேண்டுமென்று கொல்லியில் இறங்கியதிலிருந்தே விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை சொல்கிறார்கள். ஒரு சிலர் அப்படியொரு குகை இல்லவே இல்லை என்கிறார்கள். தீர விசாரித்தபிறகு, ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியிலிருந்து பிரிந்து காட்டுக்குள் நீண்டதூரம் சென்றால் கோரக்கர் குகையை காணலாம் என்று தெரிந்துக்கொண்டோம். ஆனால் அங்கே வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் செல்ல முடியும் என்றும் குகைக்கு செல்வதென்றால் காலையிலேயே கிளம்பிவிட வேண்டுமென்றும் மீண்டும் திரும்பி வர மாலையாகிவிடும் என்றும் சொன்னார்கள். எனவே கோரக்கர் குகைக்கு செல்லும் எண்ணத்தை ஒருமனதாக கைவிட்டோம்.

சித்தர்கள் குகையை தவிர்த்து கொல்லியில் இருக்கும் சில முக்கிய கோவில்களைப் பற்றி பார்க்கலாம்.

1. அறப்பளீஸ்வரர் கோவில்
ஆகாயகங்கை அருவியின் முகப்புக்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது அறப்பளீஸ்வரர் கோவில். கோவிலுக்கு சென்றுவிட்டு அருவிக்கு இறங்குவதோ அல்லது அருவியில் குளித்தபிறகு கோவிலுக்கு செல்வதோ உங்கள் செளகர்யம். ஆனால் கோவில் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டுவிடுகிறது. அத்துடன் மீண்டும் பிற்பகல் நேரத்தில் தான் திறக்கப்படுகிறது. எனவே அதற்கேற்றபடி திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.

புகைப்படம்: HolidayIQ
அக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கோவிலின் அருகே அமைந்துள்ள பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. அப்போது ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. இச்சம்பவத்தால் இங்கிருக்கும் சிவனுக்கு அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

2. கொல்லிப்பாவை (அ) எட்டுக்கையம்மன் கோவில்
அறப்பளீஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மாசிலா அருவி போகும் வழியில் அமைந்திருக்கிறது எட்டுக்கையம்மன் கோவில். முன்பே வழி தெரியாததால் வாய்வழி கேட்டு கோவிலை அடைந்தபோது அங்கே கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை கண்டு அதிர்ந்தோம். ஏற்கனவே ஆகாயகங்கைக்காக ஆயிரம் படிகள் இறங்கி ஏறிய களைப்பு. இங்கே குறைந்த எண்ணிக்கை படிக்கட்டுகள் மட்டுமே என்பதை தீர விசாரித்தபின் இறங்கினோம். 

அக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.

இங்கே நுழைந்ததும் பல்வேறு அளவுகளில் மணிகளும், தாயத்துகளும், விசிட்டிங் கார்டுகளும் தொங்குவதை காண முடிந்தது. பூசாரி இருக்கிறார். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்கிறார். சில கோவில்களில் ஏன் புகைப்பட அனுமதி மறுக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா ? பூசாரி கவனிக்காத சமயத்தில் தந்திரமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். வெளியிலேயே மரத்தடியில் கேட்பாரற்று வீற்றிருக்கிறார் இன்னொரு எட்டுக்கையம்மன். சிறப்பு தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் கிளம்பினோம்.

3. மாசி பெரியசாமி கோவில்
இதற்குள் கால தாமதமாகிவிட்டதால் மாசி பெரியசாமி கோவிலை தவிர்த்துவிட முடிவு செய்தோம். எனினும் சுருக்கமாக சில தகவல்கள். எட்டுக்கையம்மன் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மாசி பெரியசாமி கோவில். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. 

பொதுவாகவே கொல்லிமலையில் நிறைய சைவ, சமண கோவில்கள் இருக்கின்றன. தோராயமாக கூகுள் மேப்பில் உலவினால் கூட ஆங்காங்கே பழங்கால சமண கோவில் / சிலை காணப்படுகிறது. அவற்றில் குறிப்பாக நெகனூர்பட்டி என்கிற ஒதுக்குப்புற கிராமத்தில் ஒரு பழங்கால சமணர் கோவில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கே சென்றால் இன்னொரு ஆச்சர்யம் கிடைத்தது. இவை தவிர்த்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இவற்றை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம். 

அதற்கு முன்பாக கொல்லிமலையில் ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில சிறிய அருவிகள் உண்டு. அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடுத்த இடுகை: மற்ற அருவிகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Anonymous said...

பள்ளி means.....?????!!!!!! ...//சமண ........//