2 November 2016

தயிர் சாதம் சாப்பிடுவது எப்படி ?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நானொரு மாமிச பட்சினி. சிறு வயதிலிருந்தே எனக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாது. குறிப்பாக தயிர் என்று யாராவது சொல்லிவிட்டால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கமாட்டேன். ஆனால் நாம் எதை மனதின் அடியாழத்திலிருந்து வெறுக்கிறோமோ அதுவே நம் கண் முன்னே அடிக்கடி வந்து போவது தானே வாழ்க்கையின் வடிவமைப்பு !

எனக்குத் தெரிந்த ஒருவர் (எதற்கு வம்பு ?) இருக்கிறார். சிவகாசிக்காரர் என்பதால் பால் சோறு விரும்பி. தயிர் சோறும் சாப்பிடுவார். அவர் தயிர் சோறு சாப்பிடுவதை பார்த்துவிட்டால் நமக்கு சோறு இறங்காது. சோற்றின் மீது தயிரை தலைகுப்புற தள்ளிவிடுவார். அதன்பிறகு அவருடைய உள்ளங்கையைக் கொண்டு தயிர் சோற்றை ஜென்ம விரோதியின் கழுத்தை நெரிக்கும் பாவனையில் அழுத்துவார். அதுவரை தனித்தனியாக இருந்த தயிரும் சோறும் தயிர் சோறாக அவருடைய ஆக்டோபஸ் விரலிடுக்குகள் வழியாக வெளியேறும் ! அதற்கு மேல் அந்தக்காட்சியை பார்க்க முடியாமல் நான் திரும்பிக்கொள்வேன்.

இது பரவாயில்லை. தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சிக்கல் என்பதால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். பொது இடத்தில் நடக்கும் கூத்துகள் நம்மை விடாமல் துரத்தி வந்து வன்புணர்வு செய்யும் ரகம். சென்ற மாதத்தில் ஒருநாள் மேனேஜர் ஒருவருக்கு மூட் வந்ததால் உருப்படிகளை புஹாரிக்கு அழைத்துச் சென்றிருந்தார். எல்லோரும் மெனுவை மேய்ந்து இதுவரை வாழ்நாளில் முகர்ந்து கூட பார்த்திராத வித்தியாச உணவுவகைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். எனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ஆந்திர நண்பர் சர்வரின் காதில் கிசுகிசுப்பாக ‘கர்ட் ரைஸ்’ இருக்கா ? என்று கேட்டார். எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அநேகமாக தமிழ்நாட்டில் புஹாரிக்கு சென்று யாருமே இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். புஹாரியின் நிறுவனருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் மின் சரடை கடித்து தற்கொலை செய்துகொள்வார். ஆந்திர நண்பரிடம் 'ஏங்க இப்படி ராவடித்தனம் பண்றீங்க' என்றால் வவுறு சரியில்லை என்கிறார். நல்லவேளையாக சர்வர் புஹாரியில் தயிர் சோறு நன்றாக இருக்காதென்று அவராகவே வேறு உணவை பரிந்துரைத்து என்னைத் தப்புவிக்கச் செய்தார்.

அலுவலகத்திற்கு வெளியே நடப்பது இப்படியென்றால் உள்ளே நடப்பது எல்லாம் நம்மை ரூம் போட்டு செய்யும் ரகம். கார்ப்பரேட் அலுவலகங்களைப் பொறுத்தவரையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஏதாவது மின்னஞ்சல் வரும். அதாவது வாட்டர் டிஸ்பென்ஸரில் கை கழுவாதீர்கள், வாஷ் பேஸினில் பப்பிள் கம் துப்பாதீர்கள் போன்ற மின்னஞ்சல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருமுறை, ஆண் ஊழியர்கள் யூரிணல் தாண்டி தெறிக்காமல் கவனமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மின்னஞ்சல் வந்தது. கூடவே, இந்த மின்னஞ்சல் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பியிருப்பதால் யாரும் சங்கடப்பட வேண்டாம் என்ற பின்குறிப்புடன் வந்தது. பின்குறிப்பை பார்த்ததும் தான் இன்னும் சங்கடமாக இருந்தது. தமிழ் சினிமாவில் வெளிவரும் மாஸ் படங்களை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட ஆசாமிகள் யாரோ தான் இப்படி தெறிக்க விட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். 

ஒழுங்கு நடவடிக்கை மின்னஞ்சல்கள் வரிசையில், 'பணிபுரியும் மேசையில் யாரும் உணவருந்த வேண்டாம்' என்று அவ்வப்போது வரும். மின்னஞ்சல் வந்து சில நாட்கள் வரை எல்லோரும் உத்தரவை ஒழுங்காக கடைபிடிப்பார்கள். அப்புறம் ஒருநாள் சாதாரணமாக எவ்வித குற்றவுணர்வுமின்றி இவ்விதியை மீறி பிள்ளையார் சுழி போடுவார் ஒருவர். இப்படி பி.சு போட்டு தொடங்கி வைப்பவர் பெரும்பாலும் மேனேஜராக இருப்பார். ஏனென்றால் மேனேஜர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து நேரடியாக குதித்து வந்தவர்கள். அவர்களுக்கென்று விதிகள் எல்லாம் இல்லை.

அடுத்த சில நாட்களில் பணிமேசையில் உணவருந்துவது சகஜமாகிவிடும். ஐம்பது மீட்டர் தூரத்திலிருக்கும் கேண்டீனுக்கு போய் சாப்பிடுவதில் சோம்பேறித்தனம். கேட்டால் ‘லைட் ஃபுட்’ வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மின்னஞ்சலிலேயே போட்டிருக்கிறது என்று வியாக்கியானம் பேசுவார்கள். இந்த ‘லைட் ஃபுட்’ என்பதில் தயிர் சாதமும் சேர்த்தி.

பணிமேசையில் வைத்து தயிர் சாதம் சாப்பிடுவது ஒரு தனிக் கலை ! முதலில் அவுட்லுக்கில் ஒரு நியூ மெயில் விண்டோவை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். தயிர் சாதத்திற்கும் அவுட்லுக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். சில விஷயங்களை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும். மெயிலில் யாரையாவது யாரிடமாவது கோர்த்துவிடும் வகையில் நான்கைந்து புல்லட் பாயின்ட் கேள்விகள் கேட்க வேண்டும். ஸீஸீயில் டீம் லீடர், ப்ராஜெக்ட் மேனேஜர், மேனேஜர் தொடங்கி மேனேஜருடைய சித்தப்பா வரை வைக்க வேண்டும். நீங்கள் இந்த மெயிலை அனுப்பி கோர்த்து விடப்போகிற நபர் உங்கள் புறமுதுகிற்கு பின்னாலேயே அமர்ந்திருக்கலாம். அவரிடம் நேரிலேயே கேட்டுவிட்டால் உங்களுக்கு அடுத்த நிமிடமே வேண்டிய பதில் கிடைத்துவிடலாம். ஆனால் உங்களுக்கு உணவு செரிக்க வேண்டுமில்லையா ? அதனால் மேற்கூறியபடி மின்னஞ்சலை தயார் செய்துவிட்டு உங்கள் டப்பர்வேரை எடுக்கவும்.

ஒரு கையில் டப்பர்வேரையும் இன்னொரு கையில் ஸ்பூனையும் பிடித்துக்கொண்டு பிட்டுப்படம் பார்க்கும் பாவனையில் வெறிக்க வெறிக்க நீங்கள் தயார் செய்துவைத்த மின்னஞ்சலை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும். முக்கியமான விஷயம், நீங்கள் சாப்பிடும் போதும் வினோத சப்தங்களை எழுப்ப வேண்டும். அப்போதுதானே உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எரிச்சல் மூளும். முதலில் நீங்கள் உட்கொள்ளும் தயிர் சாதத்தை நாவிற்கும் மேலண்ணத்திற்கும் இடையே கசக்கி ‘பச்யேக்... பச்யேக்...’ என்று ஒலியெழுப்ப வேண்டும். உங்கள் வீட்டில் தயிர் சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக காராபூந்தி கொடுத்திருப்பார்கள். அதனை அள்ளி வாயில் போட்டு மெல்லும்போது ‘கருக்கு... முறுக்கு...’ என்று சத்தம் வரும். இப்படி நீங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத ஏப்பம் ஒன்று வரும். அந்த சனியனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். ‘ஏவ்வ்வ்வ்...’ !. அருகில் அமர்ந்திருப்பவர்கள் சாவட்டும். 

இப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு திடீரென பணி சம்பந்தமான சந்தேகமொன்று எழும். கவலைப்பட வேண்டாம். ஒரு கவளம் தயிர் சாதத்தை எடுத்து வாயில் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். அதனை விழுங்கிவிடாமல் கவனமாக வாயில் அதக்கியபடி பக்கத்தில் உள்ள ஆசாமியிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டுவிடுங்கள். இந்த சாகசத்தை நிகழ்த்தும்போது உங்கள் வாயிலிருந்து சில எச்சில் பருக்கைகள் அந்த நபர்மீது சிதறக்கூடும். அதற்கெல்லாம் கலங்காமல் உங்கள் சந்தேகம் முற்றிலுமாக நிவர்த்தியாகும் வரை அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். இப்போது உங்கள் டப்பர்வேரில் தயிர் சாதம் கிட்டத்தட்ட காலியாகியிருக்கும். ஆனால் டப்பாவில் கொஞ்சம் ஒட்டியிருக்கும் அல்லவா. அதனை ஸ்பூன் வைத்து, ‘வரட்டு, வரட்டு’ என்று பக்கத்து ஆளுக்கு பல் கூசும் வரையில் சுரண்டியெடுத்து ஸ்பூனை சப்ப வேண்டும். 

என்னது வாந்தி வருகிறதா ? கொஞ்சம் பொறுங்கள் பாஸ். இனிமேல் தான் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. சாப்பிட்டு முடித்தாயிற்று. வாட்டர் பாட்டிலில் உள்ள தாகஷமணியை எடுத்து ஒரு மிடறு உட்கொள்ள வேண்டும். விழுங்கி விடக்கூடாது. ‘குப்ளிக்... குப்ளிக்... குப்ளிக்...’ என்று சுமார் இரண்டு நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்கும் பாவனை காட்டி.......... குடித்துவிட 

உவ்வேக் ! உவ்வேக் !!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Anonymous said...

சூப்பர் மச்சி. சரியா சொன்ன...நாட்டுலேயும் தயிர் சாதத்தாலதான் பிரச்சனை.