23 January 2017

பிரபா ஒயின்ஷாப் – 23012017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நாற்பதாவது சென்னை புத்தகக் காட்சி நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. மூன்று நாட்கள் பு.கா சென்று வந்தேன்.
முன்பெல்லாம் பு.கா.வில் ஒரு சுற்று சுற்றி வந்தால் ஐம்பது இணைய பிரபலங்களையாவது தரிசித்துவிட முடியும். இந்தமுறை ஏனோ நிறைய பேரைக் காணவில்லை.

பயங்கர மர்மநாவல்
பு.கா. நடைபெற்ற பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ள பழைய புத்தகக்கடைகளில் எண்பது சத புத்தகங்கள் குப்பை. நன்றாக கையை விட்டுத் துழாவினால் உள்ளேயிருந்து சில பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. முதல்நாள் ‘பயங்கர மர்மநாவல்’ என்கிற அடிக்குறிப்புடன் ‘இன்று சவராத்திரி’ என்ற துப்பறியும் நாவல் கிடைத்தது. 54 பக்கங்கள். ஒரே கழிவறை அமர்வில் முடித்தாயிற்று. அத்தனை சுவாரஸ்யமில்லை. இரண்டாம்நாள் ‘திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக்கட்டுரை வகையறா புத்தகம் கிடைத்தது. இன்னும் படிக்கவில்லை. உயிர்மை அரங்கில் நின்றபடியே இளம் எழுத்தாளரின் இரண்டு புதிய வெளியீடுகளை படித்து முடித்துவிட்டேன். மூன்றாவது வெளியீடு இதோ வருகிறது, அதோ வருகிறது என்றார்கள். பு.கா. முடியும் வரை அச்சுப்பிரதியை கண்ணில் பார்க்க முடியவில்லை. 700 அரங்குகளை அலசி, பல கட்ட ஸ்க்ரீனிங் தாண்டி, நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் –

 • நைலான் கயிறு (சுஜாதாவின் முதல் நாவல்) – சுஜாதா – கிழக்கு
 • அனிதா இளம் மனைவி (சுஜாதாவின் இரண்டாவது நாவல்) – சுஜாதா – கிழக்கு
 • மிஸ்.தமிழ்த்தாயே நமஸ்காரம் (கட்டுரைகள்) – சுஜாதா – கிழக்கு
 • கானகன் (யுவபுரஸ்கார் பெற்ற நாவல்) – லக்ஷ்மி சரவணகுமார் – மலைச்சொல்
 • திரு.மஹ்ராஜின் மைதானம் (சிறுகதைத் தொகுப்பு) – லக்ஷ்மி சரவணகுமார் – மோக்லி
 • அஜ்வா (நாவல்) – சரவணன் சந்திரன் – உயிர்மை
 • காதல் வழியும் கோப்பை (சிறுகதைத் தொகுப்பு) – யுவகிருஷ்ணா – உயிர்மை
 • நீர் (நாவல்) – விநாயகமுருகன் – உயிர்மை
 • நீருக்கடியில் சில குரல்கள் (நாவல்) – பிரபு காளிதாஸ் – உயிர்மை
 • டர்மரின் 384 (நாவல்) – சுதாகர் கஸ்தூரி – கிழக்கு
 • உயிர்மெய் (நாவல்) – அராத்து – மின்னம்பலம்
 • ஃபேண்டஸி கதைகள் – செல்வகுமார் – சூரியன்
 • மோகினி – வ.கீரா – யாவரும்
 • டிரங்குப்பெட்டி கதைகள் – ஜீவ கரிகாலன் – யாவரும்
 • ஊருக்கு செல்லும் வழி – கார்த்திக் புகழேந்தி – ஜீவா

இவற்றில் கடைசி நான்கு தவிர மற்றவை அபார நம்பிக்கையின் அடிப்படையில் வாங்கியவை. கடைசி நான்கு சோதனையின் அடிப்படையில் வாங்கியவை. 

இவை தவிர்த்து கிழக்கில் திராவிட இயக்க அரசியல் இரண்டு பாகங்கள் வாங்கினேன். விடியலில் பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் நிச்சயமாக ஒரு பம்பர் பரிசு ! கழிவு போக நானூறு ரூபாய். முதல் ஆயிரம் பிரதிகள் முன்னூறு ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார்கள். பூம்புகார் பதிப்பகத்தில் பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை பார்த்தேன். உடனே பள்ளிக்கால நினைவுகள் வர, வாங்கிக்கொண்டேன்.

அஸால்ட் எழுத்தாளருடன் (PC: பிரபு காளிதாஸ்)
அஜ்வா வாங்கியபோது எனது நற்பேறாக அதன் எழுத்தாளர் சரவணன் சந்திரன் அரங்கில் இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். ஆளவந்தான் படத்தில் நந்து, ‘நான் சொன்னாலே கவிதை வரும்’ என்பார் அதுபோல உங்களுக்கு அஸால்ட்டாக எழுத்து வருகிறது என்றேன். அஸால்ட்டாக சிரித்துக்கொண்டார். மேற்கூறிய தருணத்தை த(ந்தி)ரமாக படம் பிடித்து வைத்திருக்கிறார் அஸால்ட் புகைப்படக்காரர் !

ஒருபுறம் புத்தகக்காட்சி, பொங்கல் வெளியீடாக பைரவா, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட், டிரம்ப் பதவியேற்பு என்று இணையத்தில் வைரலாகக்கூடிய பல விஷயங்கள் நடந்துக்கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது ஜல்லிக்கட்டு போராட்டங்கள். முதலில் இதனை ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதே அபத்தம். குழந்தைகள் அழும்போது சில சமயங்களில் நம்மால் எதற்காக அழுகிறது என்றே கண்டுபிடிக்க முடியாது. அதுபோல கடந்த ஐந்தரை ஆண்டுகால ஆட்சியில் அடக்கி வைத்திருந்த மொத்த கோபத்தையும் தமிழக இளைஞர்கள் காட்டத் துவங்கிவிட்டனர். ஒரு வகையில் இந்தப் போராட்டம் சந்தோஷம் தருகிறது. ஆனால் ஏராளமான கேள்விகளும், விமர்சனங்களும் உள்ளன. தமிழக இளைஞர்கள் இப்பொழுது ஒருமாதிரியான கொதிப்பான மனநிலையில் இருக்கிறார்கள். நடைமுறை சாத்தியங்களை விவாதிக்கவோ, விமர்சனங்களை தாங்கிக் கொள்ளவோ அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சநாள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு புரட்சி தொடர்பான மீம் பரிமாற்றங்களின் போதுதான் மாற்றான் திரைப்படத்திலிருந்து இந்த திரைச்சொட்டு காணக்கிடைத்தது. கதைப்படி ஒரு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி. முதல்வர் என்று ஏதோவொரு பெயரை போட்டுக்கொள்ளலாம் இல்லையா ? ‘சுரேந்திர லோடி’ குஜராத் முதலமைச்சர் என்று இன்-டைரெக்டாக (!!!) போட்டிருக்கிறார் கே.வி.ஆனந்த். கே.வி.ஆ. படங்களில் இதுபோன்ற அக்குரும்புகளை அடிக்கடி பார்க்கலாம். இவருடைய அயன் படத்தில் பர்மா பஜாரில் கடை வைத்திருப்பார் ஹீரோ. அங்கே அடிக்கடி உலக சினிமா டிவிடி வாங்க வரும் ஒரு இயக்குநர் ‘வங்கிக்கொள்ளை’ சம்பந்தமான பட டிவிடிகளை வாங்கிச் செல்வதாக காட்டியிருப்பார். கே.வி.ஆ.வின் அடுத்த படமான ‘கோ’வில் முதல் காட்சியே வங்கிக்கொள்ளை தான். போலவே கோ படத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் பியா ஒருவருடன் கோபமாக போனில் பேசிவிட்டு அவன் படத்துல ஹீரோ கடத்தல் பண்ணுவானாம், ஆனா கடைசியில கஸ்டம்ஸ் ஆபிசர் ஆயிடுவானாம், அதுக்கு நாலு ஸ்டார் போடணுமாம் என்று திட்டுவார். அவர் குறிப்பிடுவது அயன் படத்தின் கதையை. மாற்றான் படத்தில் இருவேறு குணம் கொண்ட சயாமீஸ் இரட்டையர்களான ஹீரோக்கள் தியேட்டரில் கோ படம் பார்க்கிறார்கள். ஒருவன் படத்தை மொக்கை என்று பழிக்கிறான், இன்னொருவன் யூத் பாலிடிக்ஸ் பற்றி பேசியிருப்பதாக பாராட்டுகிறான். அநேகன் படத்தின் பர்மா பாகம் கே.வி.ஆ.வின் நகாசு வேலைகளின் உச்சபட்சம். ஒரு காட்சியில் கதாநாயகியின் வகுப்பறை வருகைப் பதிவேடை காட்டுகிறார்கள். அதில் பர்மிய அரசியல் தலைவரான ஆங் சான் சூகி பெயர் வருகிறது. பர்மாவின் ராணுவ ஆட்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏறத்தாழ ஒரு ஆவணப்படம் போலவே காட்டியிருப்பார். அதில் வரும் காட்சிகள் மட்டும்தான் புனைவு. செய்திகள் அத்தனையும் வரலாற்றில் அப்படியே உள்ளது. அப்புறம் ரஜூலா கப்பல். இதைத்தான் திரைத்துறையில் மெனக்கெடல் என்கிறார்கள். லவ் யூ கே.வி.ஆனந்த் 💓

குறிப்பிட்ட இந்த மாற்றான் படக்காட்சியில் மோடி அதாவது சுரேந்திர லோடி கார்ப்பரேட் முதலாளியான வில்லனின் எனர்ஜியான் நிறுவனத்தின் பூமி பூஜையில் கலந்துகொள்கிறார். அப்போது வில்லனை கைது செய்ய தமிழக போலீஸ் வருகிறது. மேடையில் உள்ள மோடிக்கு இந்த தகவல் சொல்லப்படுகிறது. உடனே அவர் விழா மேடையிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்டபடி வில்லனை உடனடியாக கைது செய்யச் சொல்கிறார். லாஜிக் இடிக்கிறதல்லவா ? தமிழ் சினிமாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் வில்லனாக சித்தரிக்கலாம். ஆனால் முதல்வர், பிரதமர் மட்டும் நல்லவராக இருப்பார்கள். அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் செய்யும் தவறுகள் தெரியாதவராக இருப்பார்கள். அல்லது பூசி மொழுகியிருப்பார்கள். இது ஏனென்றால் படம் நல்லபடியாக வெளியாக வேண்டுமில்லையா ?

நம் நாட்டு மாடு இனங்களை அழித்து, ஜெர்ஸி பசுக்களை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து நாமெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் மலையாள திரையுலகம் அமைதியாக ஒரு காரியத்தை செய்துக்கொண்டிருக்கிறது. நாம் கேரள நடிகைகளை கொணர்ந்திங்கு சேர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் நடிப்பாற்றல் கொண்ட தமிழக நடிகைகளை நைச்சியம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் குழும தொலைக்காட்சி நமக்களித்த கொடையான ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் துல்கருடன் ஒரு படத்தில் நடித்துவிட்டார். அடித்து நிவின் பாலியுடன் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். போலவே நம் சினிமா அதிகம் கண்டுகொள்ளாத ஆளுமை லக்ஷ்மிப்ரியா சந்தரமெளலியையும் ஏற்கனவே அபகரித்துவிட்டார்கள். நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 comments:

Nagendra Bharathi said...

அருமை

Anonymous said...

நண்பரே... நன்று. ஒரு ஐயம். யாஹு மெசஞ்சரில் பல வருடங்களுக்கு முன்னர் உரையாடியதுண்டா...?

Ponmahes said...

அருமை... வாழ்த்துகள்...முக்கியமா கே.வி ஆனந்த் பார்ட்...

Avargal Unmaigal said...

ஆரம்பத்தில் புத்தக கண்காட்சி பற்றி பல செய்திகள் வந்தன ஆனால் ஜல்லிகட்டு சத்ததில் அது அமுங்கி போய்விட்டது

Philosophy Prabhakaran said...

@அனானி

// நண்பரே... நன்று. ஒரு ஐயம். யாஹு மெசஞ்சரில் பல வருடங்களுக்கு முன்னர் உரையாடியதுண்டா...? //

ஏன் இப்படி ஒரு திடீர் ஐயப்பாடு. யாஹூ சாட் ரூம் சேவையை நான் பல வருடங்களுக்கு முன் ஒருமுறை பயன்படுத்தியிருக்கிறேன்... ஆனால் அதிக பரிட்சயமில்லை...

ஜீவன் சுப்பு said...

சவராத்திரி - Its time to change my spec. 😊

அக்குரும்பு நல்ல அவதானிப்பு.

அக்குரும்பு ன்னா அடாவடித்தனம் தானே..?

அது யாரு லக்ஷ்மி சந்திரமவுலி..?

Philosophy Prabhakaran said...

@ ஜீவன் சுப்பு

// அக்குரும்பு ன்னா அடாவடித்தனம் தானே..? //

இது நமக்கு பிடித்த அடாவடித்தனங்கள்...

லக்ஷ்மி சந்திரமவுலி சங்கர் சிமென்ட் விளம்பரத்தில் வருவார்... தமிழில் சுட்ட கதை, கள்ளப்படம், மாயா, களம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்...