24 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 24042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜம்பு என்றொரு பழம்பெரும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்த்தேன். இந்தியன் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியானது. தமிழின் முதல் ஜங்கிள் சினிமா. ஜம்புவுக்கு அநேகமாக இன்னொரு பலான ‘முதல்’ பெருமையும் உண்டு. அதை கடைசியில் சொல்கிறேன்.

நாகரிக மனிதர்களில்லாத (ஒரே ஒருவனைத் தவிர) தீவொன்றில் ஒரு புதையல் இருக்கிறது. விமான விபத்தொன்றில் சில பயணிகள் அத்தீவில் சிக்கிக்கொள்கின்றனர். அங்கிருக்கும் 'அரை நாகரிக' ஜம்பு அவர்களை காப்பாற்றுகிறான். புதையலை அவன்தான் பாதுகாத்து வைத்திருக்கிறான். அதனை அரசிடம் முறையாக ஒப்படைப்பதே அவனுடைய லட்சியம். மீதிக்கதையை யூகிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு கதையை யோசித்து (சுட்டிருந்தால் கூட) அதனை சாத்தியபடுத்தியதே ஒரு சாதனை தான். என்ன ஒன்று, இம்மாதிரி அரதப்பழைய படங்களை பார்க்கும்போது சில விஷயங்களை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, நகைச்சுவை. குறிப்பாக தேங்காய் சீனிவாசனுடையது. அக்காலத்தில் எல்லாம் படத்தின் கதையம்சம், தரம் என்பதையெல்லாம் தாண்டி அதிலே உள்ள சிறப்பம்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் படம் பார்த்திருக்கிறார்கள் என்று புரிகிறது. உதாரணத்திற்கு நான்கு சண்டைக்காட்சிகள், ஐந்து பாடல்கள், வெளிநாட்டு லொகேஷன்கள் என திரையில் சில வித்தைகளை காண்பித்தால் பார்ப்பதற்கு கூட்டம் வந்துவிடும் போலிருக்கிறது. இப்போது ஒரு படத்தில் ஒரு யானையை காண்பித்தால் அதனை பார்வையாளர்கள் ஒரு செட் பிராப்பர்டியாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் அக்காலத்தில் யானையைப் பார்ப்பதற்காகவே ஆட்கள் வந்திருக்கக்கூடும். ஏன் சொல்கிறேன் என்றால் ஜம்புவில் இடையிடையே எங்கிருந்தோ லவட்டிய மிருகங்கள் தோன்றும் ரீல்களை சொருகியிருக்கிறார்கள். மிருகங்கள் மேட்டிங் செய்வதைக் கூட விட்டுவைக்கவில்லை. அப்புறம் திடீர் திடீரென கவர்ச்சிப்பாடல்கள் வருகின்றன. திடீர் திடீரென சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நான்கைந்து ஹீரோயின்கள். எல்லோரும் ஜெய்சங்கரை காதலிக்கிறார்கள். அதிலே பாருங்கோ, மெயின் ஹீரோயினுக்கு ஜெய்சங்கர் மீது காதல். ஜெய்சங்கருக்கும் அவர் மீது காதல். ஆனால் இடையில் ஜெய்சங்கர் சூழ்நிலை காரணமாக இன்னொரு நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்படும் மெயின் நாயகி, துணை நாயகியிடம் சென்று ஒரு பழத்தைக் கொடுக்கிறார். துணை நடிகை அதனை ஒரு கடி கடித்துவிட்டு மெயினிடம் கொடுக்கிறார். இப்பொழுது மெயின் ஒரு கடி. எவ்வளவு திவ்யமாக காட்சியமைத்திருக்கிறார்கள் பார்த்தேளா ! 

ப.பாண்டி பார்த்தேன். குடும்பத்தினரின் சாய்ஸ் என்பதால் வேண்டாவெறுப்புடன் தான் சென்றேன். ஆனால் பார்க்கப் பார்க்க படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

முதல் பாதியில் அப்பா – மகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய வருகிறது. பக்கத்திலேயே அப்பாவை வைத்துக்கொண்டு இதுபோன்ற காட்சிகளை பார்ப்பதற்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. அரவான் வெளிவந்தபோது நானும் என் அப்பாவும் திரையரங்கில் சென்று பார்த்தோம். ஒரு பாடலில் ஆதியும் தன்ஷிகாவும் செமயாக ரொமான்ஸ் செய்வார்கள். அப்போதுகூட எனக்கு இவ்வளவு நெருடலாக இருந்ததில்லை. ஆனால் ப.பாண்டி பார்க்கும்போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அதுவும் அடிக்கடி ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி என்ன மிஸ்டர் பிள்ளை, ஏன் மேன் பெத்த என்று அப்பாவை நக்கல் செய்துக்கொண்டிருக்கும் எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ப.பாண்டியை பொறுத்தவரையில் வேறு சில படங்களை நினைவூட்டினால் கூட முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டாம் பாதி ரேவதி வரும்வரை சுமார்தான். யாரோ ஒரு மீம் உற்பத்தியாளர் சத்யராஜ் – மடோனா செபஸ்டியன் தோற்ற ஒற்றுமையை வைத்து போட்ட மீம் என் மனதில் ஊன்றிவிட்டது. மடோனாவை பார்த்ததும் சத்யராஜ் நினைவுக்கு வருகிறார். பொன்னியின் செல்வன் என்றொரு தமிழ்ப்படத்தில் கண் பார்வையற்ற அப்பாவித் தாயாக நடித்திருப்பார் ரேவதி. ப.பாண்டி பார்க்கும்போதுதான் ரேவதியை அதுமாதிரி படங்களில் நடிக்க வைத்தது எவ்வளவு பெரிய பாவம் என்று உரைக்கிறது. பேசாமல் மடோனாவுடைய வேடத்தைக் கூட ரேவதியே செய்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு இளமையாய் தெரிகிறார். எல்லா இளைஞர்களுக்கும் தங்களுடைய வயதான காலத்தைப் பற்றி ஒரு கனவு இருக்கும். யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க போதிய சேமிப்பு, தனக்கென ஒரு தனி உலகம், கமிட்மெண்ட்ஸ் இல்லாத சுதந்திர வாழ்க்கை போன்ற கனவுகள். அதற்குள் ஒரு காதலும் வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் ப.பாண்டி. ஃபீல் குட் படம் என்பார்களே அது இதுதான். 3 என்கிற மஹா நெகடிவ் எண்ணம் கொண்ட படத்தை எடுத்த குடும்பப் பாவத்தை கழுவிக்கொண்டார் தனுஷ்.

படத்தின் பெயர் ஏன் ப.பாண்டி தெரியுமா ? ஏனென்றால் பவர் என்றால் ஆங்கிலம். அது இருந்தால் வரி விலக்கு கிடையாது. தன்னுடைய படத்திற்கு என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள அதன் படைப்பாளிக்கு உரிமை உண்டு. ஆனால் முதலில் ஒரு பெயர் வைத்துக்கொண்டு, நைஸாக வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பு வரி விலக்கிற்காக பெயரை மாற்றிக்கொள்வது என்பது ஓழ் பஜனை. இந்த பஜனைக்கெல்லாம் அடிக்கோலிட்டது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்கிற அரசாணை. முதலில், சினிமா படங்களுக்கு எதற்காக அய்யா வரி விலக்கு. ஏதோ காமராஜர் வரலாறு, அன்னை தெரஸா வரலாறு என்றால் ஆல்ரைட் வரி விலக்கு கொடுக்கலாம். மேலும் வரி விலக்கால் ரசிகர்களுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது. அப்புறம் என்ன ம.க்கு வரிவிலக்கு. அடுத்ததாக வந்த ஆட்சியில் அரசாணையை கொஞ்சம் திருத்தி அமைத்தார்கள். தமிழில் பெயர், யூ சான்றிதழ் உள்ளிட்ட சில விதிமுறைகள். இதிலே உள்ள சிக்கல் என்னவென்றால் இந்த அரசாணைக்கு பின்னர் தமிழில் ஸாஃப்ட் எராட்டிகா படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. வருவதே இல்லை என்று கூட சொல்லலாம். அப்படியே யாராவது படமெடுத்தால் கூட வரி விலக்கிற்கு ஆசைப்பட்டு மொத்த பிட்டுக்களையும் கத்தரித்துவிட்டு யூ சான்றிதழ் வாங்கிக்கொண்டு, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய பாடம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். தமிழில் நான் கடைசியாக பார்த்த (ஒப்பீட்டளவில்) நல்ல ஸாஃப்ட் எராட்டிகா ‘தேகம் சுடுகுது’. ஜூலை ஒன்றாம் தேதிக்குப் பிறகு இந்த வரி விலக்கு பஜனையெல்லாம் இல்லை என்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. உண்மை என்றால் ஸ்கெட்ச் என்ற தலைப்பை வரைபடம் என்று மாற்றத் தேவையில்லை. 2.0 படத்தின் சான்றிதழில் இரண்டு புள்ளி பூஜ்யம் என்று குறிப்பிடத் தேவையில்லை. முக்கியமாக மீண்டும் புல்லுக்கட்டு முத்தம்மாக்களையும். கள்ளப்பருந்துகளையும் எதிர்பார்க்கலாம்.

புத்தக தினத்தை முன்னிட்டு பெரியார் திடலில் ஐம்பது சதவிகித தள்ளுபடி புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வருடாவருடம் நடைபெறும் போலிருக்கிறது. 

சுமார் நாற்பது அரங்குகள் இருக்கும். குளிர்பதன வசதி செய்ப்பட்ட அரங்கு. உயிர்மையில் இரவல் காதலி உட்பட சில கேள்விப்பட்ட தலைப்புகள் கிடைக்கின்றன. பழைய ஆங்கில நாவல்கள் / புத்தகங்கள், குழந்தைகளுக்கு போர்ட் புக் வாங்குவதற்கு பொருத்தமான இடம். நீங்கள் மிகுந்த பொறுமைசாலி என்றால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களிலிருந்து சில பொக்கிஷங்களை கண்டெடுக்கலாம். கடந்த வருடம் உயிர்மையில் சுஜாதாவின் குட்டி சைஸ் புத்தகங்கள் கிடைத்தன. மேலும் சென்னை வெள்ளத்தில் சேதமான புத்தகங்களை தள்ளுபடியில் கொடுத்தார்கள். இம்முறை அப்படியான கொடுப்பினைகள் எதுவுமில்லை. வாசகர்கள் எல்லாக் கடைகளையும் நிச்சயமாக கவனிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அரங்கு அமைப்பை ஒரு தினுசாக வைத்திருக்கிறார்கள். அரங்கு அமைப்பை திட்டமிட்டவர் கொஞ்சம் பகுத்தறிவோடு செயல்பட்டிருக்கலாம். நானெல்லாம் புத்தகக் காட்சியில் நான்கு சுற்று வருவேன், பார்த்த கடைகளுக்கே திரும்பத் திரும்ப சென்று பார்ப்பேன். எனக்கு இந்த அமைப்பு பயங்கர எரிச்சல். முதலில் ஒரு சுற்று முடித்துவிட்டு, முக்குக்கு முக்கு நிற்கும் வாலண்டியர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு, அவர்களையும் பதிலுக்கு திட்டிவிட்டு ரிவர்ஸில் ஒரு சுற்று அடித்தேன். மறுபடியும் ஒரு நேர்ச்சுற்று. இறுதியில் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் வாங்கவில்லை. இச்சிறப்பு புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவடைகிறது. தவற விடாதீர்கள். இடம்: பெரியார் திடல், எழும்பூர், சென்னை. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

முதலில் குறிப்பிட்ட ஜம்புவின் சிறப்பம்சம் அதன் தாராள கவர்ச்சி. தற்போது ஒரு தமிழ் சினிமா எடுத்தால் கூட அதில் இவ்வளவு கவர்ச்சி காட்ட மாட்டார்கள். விளையாட்டுக்கு சொல்லவில்லை. நிஜமாகவே காட்டமாட்டார்கள். ஜம்புவில் ஜெயமாலா என்றொரு நடிகை நடித்திருக்கிறார். சபரிமலை புகழ் ஜெயமாலா அல்ல. அவர் வெள்ளை நிற வேட்டித்துணியை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு தண்ணீரில் நனைகிறார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. தமிழில் முலைக்காம்புகளை (நேரடியாக இல்லையென்றாலும்) காட்டிய முதல் சினிமா ஜம்புவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (ஸ்டில் வேண்டுபவர்கள் Jamboo Jayamala என்று கூகிளலாம்). இப்பொழுதெல்லாம் கறிக்கடையில் தொங்கும் கோழியைக் கூட ஸ்மட்ஜ் செய்கிறார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

பாஸ்கி said...

ஜக்கம்மா மற்றும் கங்கா படங்களில் பிரபா எதிா்பாா்க்கம் விஷயங்கள் அதிகம். :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரெட்டை குழல் துப்பாக்கி பாருய்யா

ராஜி said...

அப்பாவோடு சினிமாவா?! ஆச்சரியம்தான். என் அப்பாலாம் நாங்க சினிமா போனாலே திட்டுவாக. அதான் தினத்துக்கு நாப்பது படம் டிவில போடுறாண்ங்களேன்னு..

Ponmahes said...

இது என்ன வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான பதிவா????