அன்புள்ள வலைப்பூவிற்கு,
முந்தைய பகுதி: சென்றடைதல்
மசினகுடியில் சுற்றிப் பார்ப்பதற்கென்று நிறைய இடங்கள் கிடையாது.
நானாகவே கூகுள் மேப்பை அங்குலம் அங்குலமாக துழாவி சில இடங்களுக்கு நட்சத்திர
குறியிட்டு வைத்திருந்தேன். இந்த நட்சத்திர குறியிட்டுக்கொள்ளும் வசதி கூகுள்
மேப்பின் ஒரு உபயோகமான பயன்பாடு.
முதலில் மரவக்கண்டி நீர்தேக்கத்திற்கு சென்றோம். வெளியே
‘அனுமதி இல்லை’ அறிவிப்புப்பலகை. சில கட்டிடப்பணியாளர்கள் வேலை
செய்துக்கொண்டிருந்தனர். அவர்கள், யாராவது அதிகாரிகள் கேட்டால் மட்டும் சுற்றிப்பார்க்க
வந்தோம் என்று சொல்லச் சொன்னார்கள். முகப்பில் விநாயகர் ஆலயம். கடந்து உள்ளே
சென்றால் மரண அமைதியுடன் ஒரு சிறிய நீர்த்தேக்கம்.
சில நிமிடங்கள் மட்டும் அங்கே
நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதற்கு மேல் அங்கே விசேஷம் எதுவுமில்லை.
மரவக்கண்டி நீர்த்தேக்கம் |
அடுத்ததாக சிக்கம்மன் கோவில் நோக்குமனை. அப்படித்தான் மேப் சொல்கிறது.
ஆனால் அங்கே நோக்குமுனையெல்லாம் இல்லை. சிறிய அம்மன் (சிக்கம்மன் என்றால் சின்ன
அம்மன் என்று பொருள்) கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதில் பராமரிப்புப் பணிகள்
நடைபெற்றுக்கொண்டிருந்தது.
கோவில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால்
மோயாறு பள்ளத்தாக்கின் ஒரு பகுதி தெரிகிறது. இந்தமுறை பிரகாஷும், அப்புவும் அவரவர்
பைக்குகளோடு காதல் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.
சிக்கம்மன் கோவில் கோபுரம் |
அடுத்து சென்ற இடம் மோயாறு நீர் மின்னாற்றல் மையம்.
குடும்பத்துடன்
புளிச்சோறு கட்டிக்கொண்டு சென்று பார்ப்பதற்கு தோதான இடம். மற்றபடி பிரமாதமாக
ஒன்றுமில்லை. மேலும் நீர்தேக்கத்தின் ஆரம்பப்பகுதி வரை மட்டும்தான் பயணிகள்
அனுமதிக்கப்படுகின்றனர். அதைத்தாண்டி சென்றால் சிடுசிடுவென ஒரு அதிகாரி
அமர்ந்திருக்கிறார். போட்டோ எடுக்காதே, அதன் மேலே ஏறாதே, கோட்டைத் தாண்டி வராதே
என்று அதட்டுகிறார்.
மோயாறு பின்னணியில் மோஜோ (மற்றும் R15) |
அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் இருந்தது சிகூர் அருவி மற்றும் மோயாறு
பள்ளத்தாக்கு. மோயாறு நீர் மின்னாற்றல் மையத்தைக் கடந்து கொஞ்சதூரம் போனால்
மேப்பில் ஒரு நூலளவு சாலை தெரிகிறது. அதன் முடிவில் அருவியும் பள்ளத்தாக்கும்
இருப்பதாக காட்டுகிறது. இது முழுக்க முழுக்க மேப்ஞானம் தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு
மேல் அங்கே சாலையே இல்லை. ஆஃப் ரோடு என்றதும் மோஜோ முரட்டுக்காளை துள்ளிக்குதித்து
பாய, R15 அதனைத் தொடர, குத்துமதிப்பாக மேப் காட்டிய வழியில் போக, அது ஒரு ஆளில்லா
செக் போஸ்டுக்கு வந்து நின்றது. மறுபடியும் அனுமதி இல்லை என்கிற அறிவிப்புப்பலகை.
அனுமதி கேட்க ஆட்களுமில்லை. சுற்றி அரை கி.மீ.க்கு அங்கு ஆட்களே இல்லையென உறுதியாக
சொல்லிவிடலாம். இவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்பிப்போனால் சரியாக இருக்காதென
தடையை கடந்தோம்.
உள்ளே கற்களாலான பாதை நீள்கிறது. சுற்றிலும் காடு. வீடு, மனிதர்கள்
நடமாட்டம் எல்லாம் சுத்தமாக இல்லை. திடீரென அங்கே கரடியோ, புலியோ, யானைகளோ
வந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று தெரியவில்லை. இதில் மிகைப்படுத்துதல்
எதுவுமில்லை. நிஜமாகவே அங்கே வனவிலங்குகள் ஏதேனும் வந்திருந்தால் நாங்கள் வீடு
திரும்பியிருக்க மாட்டோம். எங்களுடையது கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம். அழிந்துவரும் அரியவகை உயிரினமான சிகப்பு-தலை கழுகுகள் வசிக்கும் வனப்பகுதி இது. கிட்டத்தட்ட சந்திரமுகி அரண்மனைக்குள் நுழையும் முருகேசனைப் போல பயந்தபடி
நடந்தோம். அள்ளு விட்ருச்சு. இதோ அதோ என்று பாதை நீண்டுக்கொண்டே இருக்கிறது. இறுதியில்
மலையின் முகட்டுக்கே வந்துவிட்டோம்.
அங்கேதான் பியூட்டி ! அம்மலையின் முகட்டில் இருந்து எட்டிப்பார்த்தால்
சொர்க்கம் தெரிகிறது. ஆமாம், ஆளரவமற்ற மலை முகடு, ரம்மியமான இயற்கைக்காற்று,
செங்குத்தான சரிவு, அதிலே மெலிதாக பாயும் அருவி எல்லாவற்றையும் விட பிரமிப்பைத்
தரக்கூடிய அபாரமான பள்ளத்தாக்கு. இந்த இடத்தை தமிழகத்தின் கிராண்ட் கேன்யன் என்று
சொல்லலாம்.
செக் போஸ்ட் தாண்டியதற்கும், வனவிலங்குகளுக்கு அஞ்சியபடியே
காட்டைக்கடந்ததற்கும் வொர்த்தான இடம். மழைக்காலத்தில் வந்திருந்தால் இன்னும்கூட அட்டகாசமாக இருந்திருக்கும். சிகூர் அருவியில் தண்ணீர் பாய்வதை பார்த்திருக்கலாம். வனவிலங்குகள் நீர் அருந்துவதற்கு இங்கேதான் வருவதாக கூறுகின்றனர். சிலிர்ப்பான சில நிமிடங்களுக்குப் பிறகு
மீண்டும் செக் போஸ்டுக்கு திரும்பினோம். அப்போது செக் போஸ்டில் இரண்டு இளைஞர்கள்
அமர்ந்திருந்தனர்.
சிகூர் அருவி |
அவர்களைப் பார்த்ததும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டோம் என்று
புரிந்துவிட்டது. எனினும் சகஜமாக பேசிக்கொண்டே காலேஜ் சீனியர்களைக் பார்த்த
ஃப்ரெஷ்ஷர்ஸ் போல கடக்க முயன்றோம். அந்த யுக்தி உபயோகமாக இல்லை. இருவரும் எங்களை
மடக்கி யாரைக் கேட்டு செக் போஸ்டை கடந்து சென்றீர்கள் என்று கேட்க
ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டார்கள் என்பது சில நிமிடங்கள் மிரட்டினார்கள் என்று
மாறியது. ஃபாரஸ்ட் ரேஞ்சருக்கு தகவல் சொல்லியாச்சு இன்னும் பத்து நிமிடங்களில்
வந்துவிடுவார் என்பது வரை போய்விட்டார்கள். இடையிடையே அவர்களுடைய பேச்சு பணம்
பறிக்கும் நோக்கில் இருந்ததையும் யூகிக்க முடிந்தது. ஐநூறு, ஆயிரம் வரை
பரவாயில்லை. ஃபாரஸ்ட் ரேஞ்சர் வரையெல்லாம் விஷயம் போய்விட்டால் தலைக்கு
ஐந்தாயிரம், பத்தாயிரம் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று அவர்கள் மிரட்டியபோது
அடிவயிறு கலங்கியது. சுமார் பத்து நிமிடங்கள் இருக்கும். பிரகாஷும், அப்புவும்
பேசிப் பேசியே அந்த இளைஞர்களை கரைத்தார்கள். கடைசியாக எங்களை சேதாரமில்லாமல்
அனுப்பி வைக்க முடிவெடுத்தனர். இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கு சொன்ன காரணம்
விசேஷமானது. சென்னையிலிருந்து வர்றீங்கன்னுறதால விடுறோம். அங்க என்ன
நடக்குதுன்னு டிவியில் பார்க்கிறோம் என்றார். (அநேகமாக ஜல்லிக்கட்டு
போராட்டம். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.
போராட்டக்குழுவுக்கு ஸ்தோத்திரம் !) விட்டால் போதும் என்று விறுவிறுவென்று
அங்கிருந்து கிளம்பி மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கு வந்தபிறகு தான்
பேசிக்கொண்டோம்.
இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தேறியபிறகு மணி மதியம் இரண்டு. அடுத்ததாக
பார்ப்பதென்றால் பைக்காரா நீர் மின்னாற்றல் மையம் (அருவி அல்ல). பிரத்யேக அனுபவமாக
சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை பார்த்துவிட்டோம். ஆனால் அதைத் தாண்டி வேறெதுவும்
இடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லை’
பலகை, சிடுசிடு அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது என்று தோன்ற
ஆரம்பித்துவிட்டது.
இரவுக்கு முழுமையாக நான்கு மணிநேரங்கள் இருக்கின்றன. சிறிய
யோசனைக்குப்பின் நிபந்தனையுடன் கூடிய முடிவொன்றை எடுத்தோம். மசினகுடியிலிருந்து
முப்பத்தியாறு கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. அவற்றில் வளைந்து
ஊட்டியின் எல்லையை மட்டும் தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பதுதான் அந்த திட்டம்.
ஆனால் ஊட்டி தனி ப்ராஜெக்ட் என்பதால் அங்குள்ள சுற்றுலா இடங்களை தொடக்கூடாது
என்பதுதான் நிபந்தனை. வாகனங்கள் ஊட்டியை நோக்கி உறுமத்துவங்கின...
(தொடரும்)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
No comments:
Post a Comment