8 June 2017

சங்கட காண்டம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் தொண்ணூறுகளின் குழந்தை. ஜங்கிள் புக், சக்திமான், அலிஃப் லைலா, பேதாள் பச்சிஸி, ஜுனூன், விழுதுகள், சூப்பர்ஹிட் முக்காபுலா என்று நிறைய ஞாபகமிருக்கிறது. விளம்பரங்களும் அப்படித்தான். அப்போதெல்லாம் நிறைய விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்புவார்கள். அவற்றில் இரண்டு மட்டும் எனக்கு மர்மமாகவே இருந்தன. ஒன்று, நிரோத். இப்போது வரும் விளம்பரங்கள் போல அப்பட்டமாக இருக்காது. ஒரு திறந்த முதுகை இரண்டு கைகள் தழுவிக்கொண்டிருப்பதைக் காட்டிவிட்டு பின்னணியில் பாதுகாப்பான உடலுறவுக்கு நிரோத் பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அந்த வயதில் அது எனக்கு புரிந்திருக்க சாத்தியமில்லை. ஆனால் ஏதோ தப்பு சமாச்சாரம் என்பது மட்டும் புரியும். இன்னொரு விளம்பரம் அதைவிட மர்மம். மாலா-டி எனும் கருத்தடை மாத்திரைகளுக்கான விளம்பரம் அது. அப்பொழுதெல்லாம் விளம்பரத்தில் / சீரியல் டைட்டிலில் வரும் பாடல்களை ஹிந்தியில் இருந்தாலும் பாடிக்கொண்டிருப்போம். ஜங்கிள் ஜங்கிள் பாத் சலியே பத்தா சலாயே... துருரு துருரு... (இப்போது கூட தனியாக இருக்கும்போது நிஜாம் பாக்கு விளம்பரத்தை பாடி, நிஜாம் பாக்கு என்று குழந்தை குரலில் முடிக்கும்போது என் மனைவி பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு பைத்தியம் என்று போய்விடுவாள்). அந்த மாதிரி மாலா-டி விளம்பரப்பாடலை பாடினால் மட்டும் வீட்டில் சத்தம் போடுவார்கள். நிரோத்துக்கு சத்தம் போட்டால் கூட ஓகே. இது மாத்திரைதானே என்று தோன்றும். நீண்ட காலத்திற்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது. 

இதுபோன்ற விஷயங்களால் தான் இந்தியாவை பழமைவாத சமுதாயம் என்கிறார்கள். ஒரு வகையில் நான் சொன்ன உதாரணங்கள் எவ்வளவோ பரவாயில்லை, தமிழக கிராமத்து இல்லங்களில் சிறுவர்கள் காதல் என்ற வார்த்தையை உச்சரித்தாலே கெட்டவார்த்தை பேசாதே என்று வீட்டில் திட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக நம் தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை. இப்பொழுதும் இந்தியாவில் காண்டம் வாங்குவதென்றால் கொஞ்சம் சங்கடமான விஷயம்தான்.

சில பொருட்களுக்கு அப்பொருளுக்கு பிரபலமாக விளங்கிய நிறுவனங்களின் பெயரே அமைந்துவிடுவதை கவனித்திருப்பீர்கள். உதாரணத்திற்கு, நூடுல்ஸ் – மாகி, வனஸ்பதி – டால்டா. அதுபோல ஒரு காலத்தில் காண்டம் என்றாலே நிரோத்து தான். கொஞ்சம் வளர்ந்த பிறகு எனக்கு நிரோத் என்ற பெயரைக் கேட்டாலே நடிகை நிரோஷா ஞாபகத்துக்கு வருவார். நிரோத்துக்குப் பின் இந்திய சந்தைக்கு கோஹினூர் வந்தது. வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னையைச் சேர்ந்த டி.டி..கிருஷ்ணமாச்சாரி (TTK) நிறுவனம் உறைகளை தயார் செய்யத் துவங்கியது. ஒரு சமயம், திடீரென தூங்கி எழுந்ததும் ஒருநாள் எல்லா பெட்டிக்கடை கதவுகளிலும் மஸ்தி என்று குதிரை படம் வரைந்து வைத்திருந்தார்கள். இப்பொழுது ஆணுறை சந்தை நீளமாக விரிவடைந்திருக்கிறது. இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மெடிக்கல் ஷாப் சென்று ஆணுறை வாங்குவது என்பது ஒரு சாதனை தான்.

நிற்க. இந்த மாதிரி விஷயங்களில் நான் கொஞ்சம் ப்ரோ-ஆக்டிவான ஆள்தான். கரு.பழனியப்பனின் நகைச்சுவை காட்சி கூட ஒரு காரணம் என்று சொல்லலாம். (ஒரேயொரு காட்சி ! எவ்வளவு பெரிய தாக்கம்). ஆனால் நம் கடைக்காரர்களும் மக்களும் அப்படி நம்மை சுதந்திரமாக விட்டுவிட மாட்டார்கள். நம்மை குற்ற உணர்வில் தள்ளிவிடுவதில் ஒரு அற்ப சந்தோஷம். மற்ற நாட்களில் எல்லாம் கூட்டமே இல்லாத மெடிக்கல் ஷாப்புகளில், நாம் போகும் சமயத்தில் மொத்தக் கூட்டமும் நின்றுத் தொலைக்கும். காண்டம் என்றதும் பக்கத்தில் நிற்கும் அங்கிள் கண்டிப்பாக திரும்பி நம் முகத்தைப் பார்ப்பார். கடைக்காரர்களுக்கு இந்த காண்டம் என்ற வார்த்தை மட்டும் முதல்முறை காதில் விழுந்தே தொலைக்காது. 

ஒருமுறை மதிய வேளையில் கடைக்கு போனபோது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் ஒருவரும் இல்லை. ஒரு பணியாளர் அலமாரியில் மருந்துப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். நான் நேரே போய் இன்னொரு பணியாளரிடம் காண்டம் கேட்டேன். இன்னொரு பணியாளர் மருந்துப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார் இல்லையா ? அவர் அந்த வேலையை நிறுத்திவிட்டு திரும்பி என் முகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார். அந்தப் பார்வையை என்னால் மறக்கவே முடியாது. 

இன்னொரு சமயம், இன்னொரு கடையில், முழுக்கவே பெண் பணியாளர்கள். முதலில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். ஏதோ அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தது போல அப்பால் சென்று வேறு வாடிக்கையாளரை கவனிக்கத் துவங்கிவிட்டார். அடுத்த பெண் வருகிறார். சொல்கிறேன். அவரும் அதையே செய்கிறார். இப்படி நான்கைந்து பேரிடம் சொல்லிவிட்டேன். இப்போது அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொள்கிறார்கள். அப்புறம் ஒரு பிரவுன் நிற கவரில் பொருள் வந்தது. 

பொருளை கேட்டு வாங்குவதற்கே இவ்வளவு சங்கடம் என்றால் அப்புறம் எப்படி அய்யா ஃப்ளேவர் எல்லாம் பார்த்து தேர்ந்தெடுப்பது ? சென்னையில் உள்ள பெரும்பாலான மருந்துக்கடைகளில் காண்டம் என்று கேட்டாலே KS தான் கொடுக்கிறார்கள். (ஏதாவது டையப் இருக்குமோ ?) ஒருமுறை ஒலிம்பியாவில் 3ஸ் பேக் வாங்கிவிட்டு வெளியே வந்து சில்லறை குறைவாக இருப்பதை கவனித்தால் இருபது ரூபாய் பொருளுக்கு அறுபது ரூபாய் எடுத்திருக்கிறான் ராஸ்கல். போய்க் கேட்டதும் ஸாரி என்கிறான்.

இன்னொரு சமயம், லேட் நைட். மெடிக்கல் ஷாப்புகள் கூட சாத்தியாயிற்று. அவசரம் என்பதால் கதவை மூடப்போன மளிகைக்கடை, பெட்டிக்கடைகளிளெல்லாம் கேட்டுக்கொண்டே போகிறேன். எங்கும் இல்லை. ஒரு பெட்டிக்கடைக்கார தாத்தா மட்டும் அப்படின்னா என்ன என்கிற தொனியில் என்னையே பார்க்கிறார். சிவ சிவா குடும்பக் கட்டுப்பாடு என்றொரு விஷயம் இருப்பதே உங்களுக்கு தெரியாதா ? 

இப்போது நவீன சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டன. நாமாகவே ட்ராலியை தள்ளிக்கொண்டு போய் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள் கடையில் எல்லாமே நம் கண்ணுக்கு தெரியுமிடத்தில் இருக்கும். காம்ப்ளான் இருக்கும், காப்பித்தூள் இருக்கும், காராசேவு இருக்கும், கா...வுல வேற என்ன இருக்கோ எல்லாம் இருக்கும். காண்டம் மட்டும் இருக்காது. முழுக்கடையையும் அலசிவிட்டு கவுண்ட்டருக்கு வந்தால் பில் போடும் பெண்ணிற்கு பின்னால் உள்ள ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருப்பார்கள். ஹாரி பாட்டர் ஆல்ஸோ ஃபேஸிங் சேம் ப்ராப்ளம், இன் திஸ் சேப்டர்.

சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக தானியங்கி காண்டம் மெஷின்களை மேலை நாடுகளில் வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் லிஃப்டும், காண்டம் மெஷினும் மட்டும் வேலை செய்ததாக சரித்திரமே கிடையாது.

இதுபோன்ற சிக்கல்களில் இருந்து என்னைக் காப்பாற்றுவதற்காகவே முன்பு ஸ்பென்சர் பிளாஸாவில் ஒரு கடை இருந்தது. ஹெல்த் அண்ட் க்ளோ. கிட்டத்தட்ட சூப்பர் மார்க்கெட் பாணி. அங்கே நேராக காண்டம் செக்ஷனுக்கு போய் கீழே உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பிராண்டிலும் ஒன்று, ஒவ்வொரு ஃப்ளேவரிலும் ஒன்று என்று தேர்ந்தெடுத்து வாங்கி வருவேன். இப்பொழுது ஸ்பென்சரில் ஹெல்த் அண்ட் க்ளோவை மூடிவிட்டார்கள். ஈ.ஏ.விலிருக்கும் ஹெல்த் அண்ட் க்ளோ அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. 

இப்போது ஆன்லைனில் கூட காண்டம் கடைகள் வந்துவிட்டன. அவசரத் தேவை இருந்தாலொழிய ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். காண்டம் பஸார், ஷைகார்ட் என்று இரண்டு தளங்கள் உள்ளன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் பாக்கிங்கில் உள்ளே இருக்கும் பொருள் பற்றி எந்த விவரமும் இருக்காது. கம்பெனி பெயர் கூடத் தெரியாது. டெலிவரி கொடுக்கும் ஆசாமி கவனித்துவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதற்கு கூட வாய்ப்பில்லை. 

நேற்று நண்பர் ஒருவர் காண்டமில் சிக்கன் டிக்கா மசாலா ஃப்ளேவர் வரப்போவதாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். விசாரித்தபோது அது ஏதோ ஏப்ரல் ஃபூல் சமாச்சாரம் (ஃக்கை கவனிக்கவும்). ஒருவேளை இனிவரும் காலங்களில் அதுபோன்ற ஃப்ளேவர்கள் வந்தால் ஆச்சர்யமில்லை. அப்படி வந்தால் அதிலும் பீஃப் ஃப்ளேவரை அரசாங்கம் தடை செய்யும். இந்தியாவில் ஸ்பெஷலாக 'கெளமுத்ரா' ஃப்ளேவர் அறிமுகப்படுத்தப்படும். தொலைக்காட்சியில் மாமி காண்டமை முகர்ந்து பார்த்துவிட்டு ஏன்னா இது நம்மாத்து சாம்பார் மாதிரின்னா இருக்கு ! என்று வியந்தாலும் வியப்பார் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

சங்கர் சதா said...

சமிபத்தில் வாசித்த சிறந்த blog ... தொடர்ந்து எழுதுங்கள் :)

சங்கர் சதா said...

சமிபத்தில் வாசித்த சிறந்த blog ... தொடர்ந்து எழுதுங்கள் :)

Anonymous said...

அருமையான இடுகை தம்பி.
- தமிழ்மணம் காலத்து வாசகன்

Unknown said...

சுந்தர....காண்டம்!

N.H. Narasimma Prasad said...

Nice yaa...

கோவை நேரம் said...

வெரிகுட்.மலரும் நினைவுகள்.

ADMIN said...

காண்டத்துல உங்களுக்கு எத்தனை கண்டங்கள் பாருங்க ! :)

Unknown said...

Bold attempt... successfull-a condom vaanginatha sollala.... unga post-a sonnen.... :)

Anonymous said...

(ஃக்கை கவனிக்கவும்) Pinnitayaa....