7 August 2017

பிரபா ஒயின்ஷாப் – 07082017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மாதவன் ஸ்ரீரங்கத்தின் கனவுராட்டினம் நாவலை வாங்கியபோது முன்னுரை, பின்னட்டை வாசகம் எதுவும் படிக்காமல் தான் வாங்கினேன். மனிதர் ஏமாற்றியிருக்க மாட்டார் என்பது சிமோனிலா கொடுத்த நம்பிக்கை. அது வீண்போகவில்லை. அதையும் தாண்டி நாவலின் முதல் சில அத்தியாயங்களை கடந்தபோதே அது ஒரு அற்புத அனுபவத்தை கொடுக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. நாவலின் தலைப்பு தான் கதை. கனவுகள் ஏன் குழப்பமாக இருக்கின்றன, ஏன் மறந்துவிடுகின்றன, ஏன் காட்சிகள் கோர்வையில்லாமல் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புதிய சிந்தனையை முன்வைக்கிறார் மாதவன். சில வார இதழ்களில் முதல் சில பக்கங்களில் புதிர் பிரசுரித்துவிட்டு அறுபதாம் பக்கத்தில் விடை என்பார்கள். நமக்கு அறுபதாம் பக்கம் போகும்வரை கவனம் அதிலேயே இருக்கும், புதிர் அத்தனை சிறப்பாக இருந்தால். அதுபோல கனவுராட்டினத்தின் ஐந்தாறு அத்தியாயங்கள் தாண்டியபிறகு எனது சிந்தனையெல்லாம் நிறைவுப்பகுதியையும் அதிலே வரப்போகும் ட்விஸ்டைப் பற்றியுமே இருந்தது. பதினாறாவது (மொத்தம் பத்தொன்பது) அத்தியாயத்தில் முடிச்சுகள் அவிழத் துவங்குகின்றன. அதன்பிறகு பரபரத்து, மூன்றாம் உலகப்போர் வரையெல்லாம் சென்றுவிட்டு மெய்யுலகிற்கு வருகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு நாவலின் முடிவில் அவ்வளவு திருப்தியில்லை. வருத்தம் என்பதைவிட ஆதங்கம் என்றால் பொருத்தமாக இருக்கலாம். சில படங்களைப் பார்த்தால், பாவி மனுஷன் இதைக் கொஞ்சம் வேறு மாதிரி மாற்றி எடுத்திருந்தால் செமத்தியாக இருந்திருக்குமே என்று தோன்றும். உதாரணம், ஆயிரத்தில் ஒருவன். மாதவனின் நாவலைப் படிக்கும்போது அதே போல தோன்றுகிறது. மற்றபடி ஒட்டுமொத்தமாக நாவல் ஓர் பரவச உணர்வைக் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. 

மாதவனுடைய முன்னுரையில் இந்நாவலை இரண்டே முழு நாட்களில் எழுதி முடித்ததாக சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு நாள் கணக்கு என்னைக் கொஞ்சம் உறுத்துகிறது. ஒரு மனிதனால் இரண்டே நாட்களில் இத்தனை அருமையான நாவலை எழுத முடியுமென்றால் ஏன் அந்த மனிதன் கூடக் கொஞ்ச நாட்கள் எடுத்து அதனை இன்னும் செப்பனிட்டு, மெருகேற்றக் கூடாது. இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தம், அவசரம் ? நான் கனவு ராட்டினம் நாவலை படித்து முடிப்பதற்கே இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேன். அஃப்கோர்ஸ், முழு தினங்கள் அல்ல. இருந்தாலும் இத்தனை குறுகிய காலத்தில் ஒருத்தர் ஒரு முழு நாவலை எழுதி முடிக்கிறார் என்பதே எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. ஒருவேளை மாதவனை சந்தித்தால் அவருடைய கையை, காலை உடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் எல்லார் எழுத வேண்டியதையும் இந்த ஒரு ஆளே எழுதிவிடுவார்.

ஒரு உண்மையைச் சொன்னால் நான் கொஞ்சம் மிகைப்படுத்துவதைப் போல தோன்றலாம். நீங்கள் நம்பாமல் கூட போகலாம். கனவுராட்டினம் படித்ததில் இருந்து நான் என்னுடைய மனம் கனவுகளை வேறொரு கோணத்தில் அணுகத் துவங்கியிருக்கிறது. மாதவன் சொல்வது போல பல பரிமாணங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ராட்டினம் என்பதை நம்பத் துவங்கிவிட்டேன். குறிப்பாக கனவுகளில் ஏதோவொரு கேள்விக்கான விடையைத் தேடுகிறேன். முன்னெப்போதும் இருப்பதைவிட கனவுகள் சற்று கூடுதலாக நினைவில் இருப்பதைப் போல உணர்கிறேன். (மீண்டும் கனவுதுரத்தி குறிப்புகள் வருகிறது உஷார் !). கனவுகள் வெவ்வேறு திசையில் பயணித்து நம்மைக் குழப்பும்போதும், கனவுகளின் அடுக்குகளில் வழுக்கும்போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதே சமயம் கனவு பாதியில் கலைந்து விடும்போது அதனால் ஏற்படும் சஸ்பென்ஸை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்ன இவன் பைத்தியம் மாதிரி ஏதோ உளறிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறதா ? பொறுங்கள். உலகின் சில முக்கியமான கண்டுபிடிப்புகள் கனவுகளின் விளைவுகள் என்பது உங்களுக்கு தெரியுமா ? உதாரணமாக, கூகுள். ஒட்டுமொத்த இன்டர்நெட்டையும் தரவிறக்கி அவரவர் கணினியில் சேமித்து வைத்துக்கொள்வது போன்ற கனவு அவருக்கு தோன்றியிருக்கிறது. பைத்தியக்காரத்தனம் என்று நினைக்காமல் அவர் அதனை செயல்படுத்த முனைந்ததில் கூகுள் தோன்றியது. தையல் இயந்திரம் கண்டுபிடித்த எலியாஸின் (Elias Howe) கனவு சுவாரஸ்யமானது. தையல் இயந்திரம் கண்டுபிடிக்கும் செயல்முறையின் இடையே முன்னேற்றமில்லாமல் சிக்கியிருந்தார் எலியாஸ். அப்போது எலியாஸின் கனவில் அவர் ஒரு கேனிபல் கூட்டத்திடம் (நரமாமிசம் உண்பவர்கள்) சிக்கிக் கொள்கிறார். தையல் இயந்திரத்தை கண்டுபிடிக்காவிட்டால் கொன்றுவிடுவோம் என்று அவர்கள் எலியாஸை மிரட்டுகிறார்கள். அவரால் கனவில் கூட அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. கேனிபல் கூட்டம் அவரை ஈட்டியால் தாக்கிக் கொலை செய்கின்றனர். ஈட்டியின் முனையில் ஒரு துளை. அதுதான் எலியாஸ் தேடிக்கொண்டிருந்த புதிர் சித்திரத்தின் கடைசிப் பகுதி ! தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜேம்ஸ் கேமரூனின் டெர்மினேட்டர் திரைப்படக் கதை கூட அவருடைய கனவிலிருந்து உதயமான சிந்தனை தான். நோலனின் இன்செப்ஷன் கூட அவருடைய கனவுகளின் பாதிப்புதான் என்கிறார்கள்.

கனவுகளைப் பற்றி பத்து தகவல்களை பார்ப்போம் –

1. பெரும்பாலான கனவுகள் மனிதன் கண் விழித்து ஐந்தே நிமிடங்களுக்குள் மறந்துவிடுகிறது. சில சமயங்களில் பத்து.
2. கனவில் பார்க்கும் முகங்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கனவே பார்த்தவை தான். அது எப்போதோ உங்களுடன் ஒரேயொரு முறை லிஃப்டில் வந்த அந்நியராகக் கூட இருக்கலாம்.
3. சிலருக்கு தங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் சம்பவங்கள் கனவில் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அல்லது சம்பவங்கள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்தது போன்ற தேஜாவு தோன்றலாம்.
4. பயிற்சிகள் மூலம் உங்கள் கனவுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். ஏற்கனவே கண்ட கனவை விட்ட இடத்திலிருந்து தொடரலாம். இதற்கு லூஸிட் ட்ரீமிங் என்று பெயர்.
5. கனவில் உங்களால் படிக்கவோ, டைம் பார்க்கவோ முடியாது. அடுத்தமுறை கனவு வந்தால் நேரம் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
6. கனவில் நிறங்கள் வராது என்பது தவறு. வெறும் 12 சதவிகித மனிதர்கள் மட்டுமே கருப்பு – வெள்ளையில் கனவு காண்கிறார்கள்.
7. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஏறத்தாழ ஆறு மணிநேரங்கள் கனவு காண்பதில் செலவிடப்படுகிறது.
8. சில சமயம் தூங்கி எழுந்ததும் கொஞ்ச நேரத்திற்கு கை, கால்களை அசைக்க முடியாமல், பேச முடியாமல் இருக்கலாம். பயப்பட வேண்டாம். இது நார்மல் தான்.
9. பருவ வயதில் சொப்பன ஸ்கலிதம் ஏற்படுவது இயற்கைதான். அதற்காக சேலம் டாக்டரைப் பார்க்கத் தேவையில்லை.
10. Dimethyltryptamine என்னும் ஆங்கில மருந்து கிடைத்தால் உடனடியாக எனக்கு கூரியர் அனுப்புங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

அனுஷ்யா said...

https://m.facebook.com/story.php?story_fbid=1471691452874780&id=100001018175521

அனுஷ்யா said...

There are so many anecdotal informations about dreams available in the net... Most of them are them are like our 'whatsapp vasanthis'...

Rajarajan Kannan said...

I got an answer from my dream.. once upon a time.. during college days, I was working on a C Program ( converting any number to letters.. example.. 456..will be four hundred and fifty six ..) I was not able to find the logic ..how to achieve this.. trying many ways many logics ..nothing worked out.. started thinking day and night.. about the logic and solution.

And I got that logic in my dream.. Its true. It just like nested functions.. calling functions from functions.. ( I can still remember this, because I can't believe that in first attempt.. but naturally it bought me the answer. ).

Somewhere I read that madam marie curie got her solutions during her sleep..

Mind / soul / God - helps there .. :)