21 August 2017

பிரபா ஒயின்ஷாப் – 21082017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கனவு ராட்டினம் நாவலை படித்துவிட்டு அதன் நீட்சியாக நீண்டகாலமாக பார்க்க நினைத்திருந்த படமொன்றை பார்த்தேன். படத்தின் பெயரை ட்ரீம் மாஸ்டர். ட்ரீம் மாஸ்டரை என்னுடைய வாட்ச் லிஸ்டில் குறித்து வைத்து ஆறு மாதங்களுக்கு மேலாகி இப்போதுதான் பார்க்க முடிந்தது. காரணம் ட்ரீம் மாஸ்டர் ஒரு சாஃப்ட் போர்னோ. அதனை பேருந்திலோ, ரயிலிலோ வைத்து பார்க்க முடியாது. சக பயணிகள் என்பவர்கள் நீங்கள் படிக்கும் புத்தகத்தையும், பார்க்கும் வீடியோக்களையும் கூச்சமில்லாமல் எட்டிப்பார்ப்பவர்கள். நீங்கள் வெண்முரசு படித்தாலொழிய சக பயணிகளின் தொந்தரவிலிருந்து தப்பிக்க முடியாது.

ட்ரீம் மாஸ்டரின் கதாநாயகன் ஒரு பேராசிரியர். அவர் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் செய்கிறார். அவரது கனவில் ஒரு செக்ஸ் பிசாசு அவரைத் தொடர்ந்து துன்புறுத்துகிறது. அதிலிருந்து மீள்வதற்காக பேராசிரியர் மூன்று பேரின் உதவியைக் கோருகிறார். இரண்டு மாணவிகளும், ஒரு மாணவனும் வருகிறார்கள். அதில் ஒரு மாணவி ஒரு குடும்பத்தில் தத்து பிள்ளையாக வளர்ந்தவர். அவருக்கு அக்குடும்பத்தில் பிறந்த மகனுடன் செக்ஸ் கனவுகள் வருகிறது. மாணவனின் நிலை மோசம். அவரது கனவில் முதல் காதலி வந்து செட்யூஸ் செய்கிறார். கட்டிலில் போய் படுத்துக்கொண்டு இவரை உடலுறவிற்கு அழைக்கிறார். ஆர்வமாய் நுழையப்போனால் கட்டிலைச் சுற்றி கண்ணாடித் தடுப்பு போடப்பட்டுள்ளது. அவரால் பார்க்க மட்டும்தான் முடிகிறது. இவர்களுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்யும் வேளையில் பேராசிரியர் கனவுப் பிசாசிடம் சிக்கி நினைவை இழக்கிறார். இப்போது அவருடைய ஆராய்ச்சி மாணவ / மாணவிகள் அவரை மீட்பதற்காக அவருடைய கனவிற்குள் நுழைகிறார்கள். பேராசிரியரை மீட்கிறார்கள். அனால் துரதிர்ஷடவசமாக ஒரு மாணவி கனவுப் பிசாசிடம் சிக்கிக் கொள்கிறார். இம்முறை பேராசிரியர் எஞ்சியிருக்கும் மாணவன் மற்றும் மாணவி துணையுடன் மாணவியை மீட்கிறார். முதல் பத்தியில் சாஃப்ட் போர்னோ என்று குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். பெர்முடேஷன் காம்பினேஷன் விதிகளின் படி இக்கதையில் எத்தனை விதமான பிட்டுக்களை சேர்க்க முடியும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். கதையம்சத்துடன் கூடிய போர்னோவிற்கு நல்ல உதாரணம் ட்ரீம் மாஸ்டர். IMDBயில் ட்ரீம் மாஸ்டரின் வாலைப் பிடித்துக்கொண்டு போனால் அந்தக் காலத்தில் வெங்கடேஸ்வராவில் திரையிட்ட படங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்கு முன் ராகவேந்திராவில் கனவில் கில்மா என்று ஒரு படம் வந்தது. அது ஒருவேளை ட்ரீம் மாஸ்டரின் தழுவலாகக் கூட இருக்கலாம்.

சில சமயங்களில் புத்தகங்களை நாம் தேர்வு செய்வதில்லை. புத்தகங்கள் தான் நம்மைத் தேர்வு செய்கின்றன. அட்டைப்படமோ, பின்னட்டை வாசகமோ, முன்னுரையோ, தோராயமாகத் திறந்து வாசிக்கும் ஏதோவொரு பக்கமோ காரணமாக நாம் புத்தகத்தை வாங்கிட நேர்கிறது. அப்படி சமீபத்தில் வாங்கியது கிழக்கு பதிப்பகத்தின் டாக்ஸி டிரைவர் (சிறுகதைத் தொகுப்பு). எழுதியவர் ஆனந்த் ராகவ். அருண் வைத்தியநாதன் இயக்கிய நிபுணன் படத்தின் திரைக்கதை ஆசிரியர். இந்த ஆனந்த் ராகவ், அருண் வைத்தியநாதன், முன்னுரையில் இரா.முருகன், பத்ரி சேஷாத்ரி போன்ற பெயர்களை எல்லாம் படிக்கும்போதே கொஞ்சம் அந்நியமாகப்பட்டது. முதல் கதையே இருபத்தியாறு வார்த்தைகள் கொண்ட வாக்கியத்துடன் துவங்கி மிரள வைக்கிறது. ஆனால் பயப்படத் தேவையில்லை. கதைகள் எக்ஸ்ட்ரீம் எளிமை. இவருடைய கதைகளுக்கென ஒரு ஃபார்முலா இருக்கிறது. கதையின் ஆரம்பப்புள்ளி நம் இயல்பு வாழ்க்கையில் பார்க்கும் ஏதோவொரு சம்பவத்தில் இருந்து துவங்கும். உதாரணமாக, சிக்னலில் காத்திருக்கும் போது பார்த்த காட்சி, டாக்ஸியில் பயணித்த அனுபவம். விவரணைகளின் இடையே தேவைப்பட்டால் முன்கதை சொல்லப்படுகிறது. இறுதியில் ஒரு சின்ன ட்விஸ்ட். ஆனந்தின் பலம் அவருடைய விவரணை தான். ஒரு போக்குவரத்து சிக்னலில் அதிகபட்சம் செலவிடும் நேரம் 120 நொடிகள். அதனை ஏழு பக்கத்திற்கு சுவாரஸ்யமாக விவரிக்கிறார். இவரது கதைகளில் விஷயத்தை மட்டும் எடுத்து சுருக்கமாக எழுதினால் இரண்டு பத்திகள் கூட தேறாது. சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை என்று முன்பொரு முறை ஜெயமோகன் தளத்தில் படித்திருக்கிறேன். அதை ஆனந்த் ராகவ் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால்  வருத்தம் என்னவென்றால் அந்த சின்ன ட்விஸ்ட் ரொம்ப சப்பையாக, ப்பூ இவ்வளவுதானா என்று நினைக்க வைக்கும் அளவில் இருக்கிறது. ஒரு கதையில் முதல் நபர் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கிறார். அப்போது சாலையோரத்தில் ஒரு கணவன் மனைவியை அடிப்பதை பார்க்கிறார். இக்காட்சி ஐந்தாறு பக்கங்களுக்கு விவரிக்கப்படுகிறது. அதன்பிறகு பச்சைவிளக்கு ஒளிர்ந்து வாகனங்கள் புறப்படுகின்றன. சரி, அந்த கணவன் – மனைவி சண்டை என்ன சார் ஆச்சு என்று கேட்டால் 'போடா நாயே' என்று கதையை முடிக்கிறார். இன்னொரு கதையில் முதல் நபரின் தகப்பனாருக்கு மூளைச் சாவு ஏற்படுகிறது. நீங்கள் சொன்னால் வெண்டிலேட்டரை நிறுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லிவிடுகிறார்கள். அடுத்த பதினைந்து பக்கங்களுக்கு அப்பா வெண்டிலேட்டரிலேயே இருக்கிறார். பதினாறாவது பக்கத்தில் பொறுக்க முடியாமல் அப்பாவே இறந்துவிடுகிறார். இக்கதைகள் எல்லாம் கடந்த பதினைந்து வருடங்களில் தமிழின் முக்கியமான வார இதழ்களில் வெளியாகியிருக்கிறது என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. முன்னுரையில் இரா.முருகன் தனக்குப் பிடித்த நூறு சிறுகதைகளில் ஆனந்த் ராகவின் ஒரு கதையும் இருப்பதாக எழுதியிருந்தது நினைவுக்கு வர அவசரமாக முன்னுரைக்கு புரட்டினேன். அவர் குறிப்பிட்டிருந்த துளி விஷம் என்ற அச்சிறுகதை தொகுப்பிலேயே இல்லை. யோசித்துப் பார்த்தபின் இரா.முருகனை கொஞ்ச மாதங்களுக்கு முன் சுஜாதா விருது வழங்கும் விழாவில் இணைய விருது பெற்றவர்களை வாழ்த்தி பேச அழைத்திருந்ததையும், அவர் அங்கே வந்து ஃபோரம், யாஹூ சாட் காலத்து நாஸ்டால்ஜியா பேசியதும் நினைவுக்கு வந்தது.

வார இறுதியில் பெற்றோரின் திருமண நாளைக் கொண்டாட சோக்கி தானி சென்றோம். இவ்விடத்தைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ராஜஸ்தான் கலை, பண்பாட்டு பாணியில் அமைக்கப்பட்ட தீம் பார்க். சமீபத்தில் குங்குமம் இதழில் கூட பேராச்சி கண்ணன் சோக்கி தானி பற்றி எழுதியிருக்கிறார். சோக்கி தானி என்றால் அழகிய குக்கிராமம் என்று பொருள். உள்ளே நுழையும்போதே ராஜஸ்தானுக்கே உரிய ராயல் வரவேற்பு கிடைக்கிறது. தொடர்ந்து படகு சவாரி, கிராமத்தை பிரதிபலிக்கும் குடில்கள், மண் பானைகள் செய்பவர், ஒட்டக, குதிரை, சவாரி, மாட்டு வண்டிகள், பொய்க்கால் குதிரை டான்ஸ், மேஜிக் ஷோ என்று ரசிப்பதற்கும் பங்கேற்பதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. டிக்கட் விலை கொஞ்சம் அதிகம்தான். இரவு உணவு உட்பட. சுத்த சைவ உணவு. உணவுக்கூடம் கூட ராஜஸ்தான் பாணிதான். ஒரு நீண்ட மெத்தையில் வரிசையாக அமரச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நபருக்கு முன்பும் ஒரு சின்ன ஸ்டூல். அதிலே தட்டு வைத்து பரிமாறுகிறார்கள். உபசரிப்பில் மாமியார் வீட்டையே மிஞ்சிவிடுகிறார்கள். மாமியார் வீட்டிலாவது வேண்டாம் என்று கண்டிப்பான குரலில் சொன்னால் விட்டுவிடுவார்கள். இங்குள்ள பரிமாறும் நபர் கையைப் பிடித்து நிறுத்தியும் இரண்டு கரண்டி சோற்றை என் தட்டில் வைத்து தட்டை தீட்டாக்கினார். வைத்தது தயிர் சோறு !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

Pandiaraj Jebarathinam said...

ஆமாம் கனவுராட்டினத்தை வாசிக்க வைத்தது அதன் அட்டை ஓவியம் தான்.

ராஜி said...

ஆதிகாலத்துல பிளாக்குல இந்த சோக்கி தானி பத்தி நம்ம சிரிப்பு போலீஸ் பதிவு போட்டிருக்கார்ன்னு நினைக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

படம்... புத்தகம்... கொண்டாட்டம்...
ஓயின்ஷாப் ஆராவாரமாய்....