9 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 09102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஷகிலாவின் சுயசரிதையை படித்ததன் நீட்சியாக ஒரு படம் பார்த்தேன். பெயர் – கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா. ஆனால் இப்படத்திற்கும் ஷகிலாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. விக்கிபீடியாவில் தவறுதலாக இப்படம் ஷகிலா ஃபில்மோகிராஃபியில் இடம் பெற்றிருக்கிறது.

1937ல் ஷீனா (Queen of the Jungle) என்கிற புதிய காமிக்ஸ் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. காட்டில் வளரும் ஆதரவற்ற பெண் ஷீனா. ஏறத்தாழ டார்ஜானின் பெண் வெர்ஷன். விலங்குகளுடன் பழகுவதிலும், கத்தி, அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் சாகசக்காரி. சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் காமிக்ஸிற்கு ஷீனா மீள்வருகை புரிந்திருக்கிறார். ஆகஸ்டில் வெளியாகத் துவங்கிய ஷீனா தோன்றும் புதிய காமிக்ஸ் இதுவரை நான்கு அத்தியாயங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஷீனா
1984ல் ஷீனா கொலம்பியா பிக்சர்ஸால் வண்ண சினிமாவாக எடுக்கப்பட்டது. பெரும்பான்மை பகுதி கென்யாவில் படமாக்கப்பட்டது. கடைசியில் படம் படுதோல்வி.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஷீனாவின் அடியொற்றி கன்னடத்தில் ஆப்ரிக்காடல்லி ஷீலா என்கிற படம் எடுக்கப்பட்டது. இது பின்னர் ஹிந்தியிலும், தமிழிலும் மறுவுருவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் பதிப்பின் பெயர் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா !

இது ஷகிலா ஃபில்மோகிராஃபியில் இடம்பெற்ற காரணம் இதில் கதாநாயகியாக நடித்தவருடைய பெயரும் ஷகிலா (சரியான உச்சரிப்பு: சஹிலா). முழுப்பெயர் சஹிலா சத்தா. மேலும் சஹிலாவும் தோற்றமும் ஏறத்தாழ இளவயது ஷகிலாவைப் போலவே இருக்கிறது. படம் பார்க்கத் துவங்கிய கொஞ்ச நேரம் வரை இது கன்னட டப்பிங் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிழல்கள் ரவி, சாருஹாசன், சுரேஷ், செந்தில், கோவை சரளா என்று முழுக்க நம்மவர்களாக இருக்கவே மீண்டும் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டேன்.

கதையைப் பொறுத்தவரையில் ஷீனாவிலிருந்து நிறைய மாற்றியிருக்கிறார்கள். ஆனால் முப்பதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் என்கிற வகையில் நல்ல கதை. மருத்துவப்பணியை சேவை மனப்பான்மையோடு செய்து வரும் ஒரு மருத்துவரும், அவரது மனைவியும் ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அங்கே பயணிக்கிறார்கள். போன இடத்தில் மனிதர்களற்ற காட்டுப்பகுதியில் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. கொஞ்ச காலத்தில் கணவன், மனைவி இருவரும் இறந்துவிடுகிறார்கள். (எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள். கதைப்படி அவர்கள் அதற்கு மேல் தேவையில்லை). அதன்பிறகு அக்குழந்தையை மனிதக்குரங்கு ஒன்று கண்டெடுத்து வளர்க்கிறது. வருடங்கள் கடந்தபிறகு இவர்களைத் தேடி ஒரு கும்பல் செல்கிறது. கும்பலில் நற்குணம் கொண்ட கதாநாயகன் சுரேஷ், மிருகங்களை வேட்டையாடும் வில்லன் மற்றும் சகாக்கள், கவர்ச்சிக்கு டிஸ்கோ சாந்தி, காமெடிக்கு செந்தில். 

படம் முழுக்க நிறைய அவல நகைச்சுவைகள், அபத்தங்கள் ! ஆனால் ஒன்று, தற்போது யாரேனும் ஷீலாவை மறுவுருவாக்கம் செய்ய முன்வந்தால் அதன் கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து செமத்தியாக எடுக்கலாம் (கதாநாயகி: அனுஷ்கா அல்லது நயன்தாரா).

ஜான் ஹோல்ட் எழுதிய How Children Learn என்கிற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் ? புத்தகத்தை கொஞ்ச பக்கங்கள் படித்தேன். முன்னுரையை படித்ததும் இரண்டு விஷயங்கள் தரை தட்டின. ஒன்று, இது ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம். இரண்டாவது, இதனை எழுதிய ஜான் ஹோல்ட் என்பவர் ஹோம்ஸ்கூலிங்கை ஆதரிக்கும் ஒரு கல்வியாளர். 

இவற்றைக் கடந்து படிக்கத்துவங்கினால் வறட்டு மொக்கையாக போகிறது உரைநடை. உலகில் குழந்தைகளின் கற்கும் திறனை என்ன மாதிரியான ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள், அவற்றில் உள்ள குறைகள் என்னென்ன, ஜான் ஹோல்ட் செய்த மாற்று ஆராய்ச்சி என்ன என்று நீள்கிறது. அவ்வப்போது நான் எனது மகளுக்கு எழுதிவரும் டைரியை நினைவூட்டியது மட்டும்தான் ஒரேயொரு ஆறுதல். நடைமுறைக்கு உகந்த வகையில் இப்புத்தகத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்புத்தகத்தால் எனக்குத் தெரிந்து ஒரு அனுகூலம் இருக்கிறது. மதிய உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, இப்புத்தகத்தை கையில் எடுத்து சரியாக ஐந்து நிமிடங்கள் ஆழ்ந்து படித்தால் போதும், நிச்சய தூக்கம் கிடைக்கும். ஆங்கிலத்தில் என்னென்னவோ புத்தகங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இதைப்போய் ஏன்தான் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார்களோ ?

ஒரு ரஜினி பாடலில், ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா’ என்று வரிகள் வரும். ஒரு பவுன் இல்லை, ரஜினியும் தமிழும் சேர்ந்து எனக்கு ஒருமுறை ஒரு கிராம் தங்கநாணயம் கிடைக்கச் செய்தார்கள். அது கபாலி டிரைலர் வெளிவந்திருந்த சமயம். வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் ஸ்லோகன் கான்டெஸ்ட் வைத்திருந்தார்கள். அக்கடையைப் பற்றி நல்லவகையில் ஸ்லோகன் எழுதிப் போடவேண்டும். சிறந்த ஸ்லோகனுக்கு ஒரு கிராம் தங்கக்காசு பரிசு. என் மனைவி ஸ்லோகன் எழுதிப்போடும் சீட்டை என்னிடம் கொடுத்தது கூட பரவாயில்லை. நீங்கதான் நல்லா எழுதுவீங்களே என்று சொன்னதுதான் துயரம். என்னைப்போன்ற அமெச்சூர் இணைய எழுத்தாளர்கள் இதுபோன்ற சூழலை சந்தித்திருக்கக்கூடும். கொஞ்சநேரம் யோசித்தேன். கபாலி நினைவுக்கு வந்தார். கபாலியின் அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியா வசனத்தை கொஞ்சம் ட்வீக் செய்து, கபாலிக்கு பதிலாக கடையின் பெயரை எழுதி போட்டுவிட்டு வந்தேன். பரிசு கிடைத்துவிட்டது.

இம்முறை மீண்டும் ஸ்லோகன் கான்டெஸ்ட். பரிசு இருபத்தைந்து கிராம் வெள்ளி. இம்முறை அதிகம் யோசிக்கவில்லை. சட்டென, விவேகத்தின் இந்த உலகமே உன் முன்னாடி வந்து கதறுனாலும் வசனத்தை கடையின் பெயர் வரும் வகையில் கொஞ்சம் மாற்றியமைத்து எழுதிப் போட்டேன். பரிசு கிடைத்துவிட்டது. கடைசியில் விவேகம் பார்த்ததில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
தங்க நாணயம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

அரிய தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்