23 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 23102017

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

கண்ணடிக்கல... கை பிடிக்கல...
உள்ளவந்து ஓட்டிக்கிட்ட காதல்...
தாலாட்ட... மெல்ல வாலாட்ட... 

என்று பின்னணிப் பாடகி கிசுகிசுப்பான குரலில் கவிதை வாசிக்க, விஷ்ணு விஷாலும், ஸ்ரீதிவ்யாவும் ஒரு மரத்தின் இருவேறு புறங்களில் நின்றுக்கொண்டு காதல் பார்வை பார்த்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி திரையின் மேற்பகுதியில் ‘மாவீரன் கிட்டு’ என்று படத்தின் பெயர் ஒளிர்கிறது. எப்படிப்பட்ட போராளியின் பெயரை வைத்துக்கொண்டு டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அப்பா வருத்தப்பட்டார். 

யார் இந்த மாவீரன் கிட்டு ? 

1979. தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அடித்தளமிட்ட காலகட்டம். அச்சமயத்தில் கிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளுள் ஒருவர். அப்போது அவருக்கு பத்தொன்பது வயது. இயற்பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். இயக்கப்பெயர் வெங்கிட்டு. பின்னாளில் கேணல் கிட்டு என்று ஈழ மக்களால் செல்லமாக அழைப்பட்டவர். கிட்டு வேகமும் விவேகமும் கொண்ட துடிப்பான இளைஞர். தேசியத்தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக போர்ப்பயிற்சி பெற்றவர்.  

1983ம் ஆண்டு புலிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகிறார். ராணுவப் பயிற்சிக்காக இந்தியாவிற்கு வந்து சென்றவர்களில் ஒருவர். அதன்பிறகு அப்போதைய யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் வீரமரணம் அடைகிறார். அப்பொறுப்பு கிட்டுவிடம் வந்து சேர்கிறது. தொடர்ச்சியாக பல தாக்குதல்களில் பங்கெடுத்துக்கொண்ட கிட்டு 1987ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற்ற கைக்குண்டு தாக்குதலில் தனது இடதுகாலை இழந்தார். மன உறுதியை இழக்காத கிட்டு மருத்துவத்திற்காக இந்தியா வந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தப் போதாமைகளை இந்தியாவிலிருந்தபடியே எழுதி வெளியிட்டார். அதனால் இந்திய அரசு அவரை முதலில் வீட்டுக்காவலிலும், பின்னர் சிறையிலும் அடைத்தது. சிறையிலிருந்து போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதினார். தம்மை விடுவிக்குமாறு சிறைக்குள் பல அறப்போராட்டங்களை நிகழ்த்தினார். இறுதியில் இந்திய அரசு அவரை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்தது.  

தாயகம் திரும்பிய கிட்டு இலங்கை உடனான பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றார். பின்னர் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளாராக அறிவிக்கப்பட்டு லண்டனுக்கு பயணமானார். புலம்பெயர் தமிழர்களுக்கு போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு உள்ளே மாணவர் அமைப்பு, கலைப் பண்பாட்டு கழகம் போன்றவற்றை அமைத்துச் செயல்பட்டார்.  

1993 ஜனவரி 7. கிட்டு மற்றும் சில விடுதலைப்புலிகள் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு கப்பலில் பயணிக்கின்றனர். ஜனவரி பதிமூன்றாம் தேதி, இந்தியக் கடல் எல்லையை அவர்களது கப்பல் நெருங்குகிறது. இதனை முன்கூட்டியே அறிந்த இந்திய கடற்படை பதினாறாம் தேதி காலை ஆறு மணிக்குள் சரணடையுமாறு அவர்களுக்கு கெடு விதிக்கிறது. கிட்டுவும் மற்றவர்களும் சரணடையவில்லை. பதினாறாம் தேதி சரியாக காலை ஆறு மணிக்கு இரண்டு ஹெலிகாப்டர்களும், மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலை சுற்றி வளைக்கின்றன. கிட்டு சரணடையாததால் இந்திய கடற்படை கப்பலை தாக்குகிறது. கிட்டு உட்பட பத்து விடுதலைப்புலிகள் வீரமரணம் அடைகின்றனர். கிட்டுவிற்கு அப்போது வயது 33. 

இப்போது நாம் சுசீந்திரனின் மாவீரன் கிட்டுவிற்கு வருவோம். 

சாதிய ஒடுக்குமுறைகள் கொண்ட ஒரு கிராமம்தான் கதைக்களம். அக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால் அவர்களின் பிணங்களைக் கூட உயர்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்ல முடியாது. கிராமத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய காளிமுத்து என்கிற எழுத்தாளர் மரணமடைகிறார். காளிமுத்து ஐயாவுக்கு தோள் கொடுத்து போராடிய சின்ராசு காளிமுத்துவின் உடலை பொதுவழியில் எடுத்துச் செல்ல வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெறுகிறார். இருப்பினும் உயர்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காவல்துறையும் இணக்கமாக இல்லை. இறுதியில் உடலைக் கொண்டு செல்ல மட்டும்தான் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதனை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்துச் செல்ல வேண்டுமென குறிப்பிடப்படவில்லை என்று காவல்துறையே காளிமுத்துவின் உடலை கொண்டு சென்று தகனம் செய்கின்றனர். பொதுவழியில் உயிருள்ள தாழ்த்தப்பட்டவர்களும் நடமாட வேண்டும் என்பது சின்ராசுவின் லட்சியங்களில் ஒன்று. 

அச்சமயத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த கிட்டு (எ) கிருஷ்ணகுமார் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். கிட்டு கலெக்டராக வேண்டுமென சின்ராசு விருப்பப்படுகிறார். கிட்டுவும் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். இப்படியாக படம் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களின் முயற்சிகள் அதற்கு உயர்த்தப்பட்ட மக்கள் ஏற்படுத்தும் இடர்பாடுகள் என்று போகிறது. குறிப்பாக கிட்டுவின் கலெக்டராக முயற்சிக்கு தொடர்ந்து இடர்களை ஏற்படுத்துகிறார் உயர்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஹரிஷ் உத்தமன். இறுதியில் தான் கலெக்டராகி செய்ய வேண்டியதை எல்லாம் உயிர்த்தியாகத்தால் நடக்க வைக்கிறார் கிட்டு. 

கிட்டுவாக விஷ்ணு விஷால், சின்ராசுவாக பார்த்திபன். மாவீரன் கிட்டுவின் உண்மையான ஹீரோ பார்த்திபன் தான். பார்த்திபன் படம் முழுக்க கருப்புச்சட்டை அணிந்து வருகிறார். அச்சகம் வைத்திருக்கிறார். தன் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையம் வரை சென்று தோள் கொடுக்கிறார். க்ளோஸ் எனஃப் ! ஒருவேளை அப்பா மாவீரன் கிட்டு பார்த்திருந்தால் அவருக்கு நிச்சயமாக பிடித்திருக்கும்.  

மாவீரன் கிட்டுவின் இரண்டாம் பாதி மெதுவாக அமைந்ததாலும், ஏதோ பெருசாக செய்யப்போகிறார்கள் என்று நினைக்கையில் சப்பையாக முடித்ததாலும் வசூலில் வெற்றி பெறவில்லை. இல்லையென்றாலும் வெற்றி பெற்றிருக்காது என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரையில் மாவீரன் கிட்டு போன்ற படங்கள் ஒரேயொரு சாதிப் பற்றாளரை மனம் மாற்றினால் கூட அது வெற்றிதான் ! அந்த வகையில் அது ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என நம்புகிறேன். மற்றபடி உயிர்த்தியாகம் என்பது ஒரு நீண்ட விவாதத்திற்குரிய டாபிக். பொதுவாக தற்கொலை தப்பு என்று இதனை அணுக முடியாது. அதனை யார் செய்துகொள்கிறார், எதற்காக செய்துகொள்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதைப் பொறுத்தே அது சரியா தவறா என்று சொல்லமுடியும். 

என்னுடைய கவலையெல்லாம் படத்தின் தலைப்பைப் பற்றித்தான். வேறு தலைப்பா அய்யா இல்லை. ஒருவேளை இயக்குநர் சுசீந்தரன் கிட்டுவிற்கு ட்ரிப்யூட் கொடுப்பதற்காகக் கூட இப்படி பெயர் வைத்திருக்கலாம். (இவரது இன்னொரு படத்தின் பெயர் ஜீவா !). ஆனால் கேணல் கிட்டுவுக்கும் இப்படத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. பழனி பக்கமுள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவம் என்கிறார் இயக்குநர். இப்போது என்ன பிரச்சனை என்றால் நாளை கேணல் கிட்டுவைப் பற்றி யாராவது தெரிந்துக்கொள்ள வேண்டி கூகுள் செய்தால் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா முகங்கள் தான் வந்து நிற்கும். ஒருவகையில் இது கேணல் கிட்டுவின் வரலாற்றை சிதைக்கிறது. 

போலவே தற்போது பழைய படங்களின் பெயர்களை எல்லாம் புதிய குப்பைகளுக்கு வைக்கும் பழக்கம் பரவலாகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா என்றொரு போஸ்டர் பார்த்தேன். கண்றாவி ! எது எதையோ தடை செய்பவர்கள் முதலில் இதைத் தடை செய்ய வேண்டும். 

பதினெட்டு பேர் கொண்ட ஒரு பெரிய குழுவுடன் தேவி பாரடைஸில் மெர்சல் பார்த்தேன். கடந்த மூன்று நாட்களாக தினசரியை புரட்டினால் குறைந்தது ஏழெட்டு செய்திகளாவது மெர்சலைப் பற்றி வருகிறது. மெர்சல் படமும், அதையொட்டிய சர்ச்சைகளும் பெரிய டாபிக் ! எழுதத் துவங்கினால் நீண்டுவிடும் என்பதால் கொஞ்சம் சூடு தணிந்ததும் அதைப்பற்றி பேசிக் கொள்ளலாம். 

இப்போதைக்கு மெர்சலைப் பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் ரொம்ப சுமாரான பொழுதுபோக்கு படம். ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Ponmahes said...

பதிவுகள் அருமை.. வாழ்த்துகள்....