15 January 2018

பிரபா ஒயின்ஷாப் – 15012018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டு வாழ்த்துகள் :)

பிசகில்லாத ஒரு ஃபேமிலி ட்ரிப்புடன் புத்தாண்டு அபாரமாக துவங்கியிருக்கிறது. கூடுதல் செழிப்பாக நண்பர்களிடமிருந்து பரிசாக சில புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக நண்பர் பாக்யராஜ், கிம் ஸ்டான்லி ராபின்சனின் மார்ஸ் முத்தொகுதியை அனுப்பியிருக்கிறார். ஒருவேளை நானே பணம் செலுத்தி மார்ஸ் முத்தொகுதியை வாங்கியிருந்தால் கூட அதனை படித்திருப்பேனா என்பது சந்தேகம். இன்னொருவர் கொடுத்த பரிசு என்பதால் கண்டிப்பாக படிக்க வேண்டும். 

கடந்த புத்தாண்டை 'இருவர்' பார்த்து துவக்கினேன். இம்முறை 'சிறைச்சாலை' பார்க்க வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். மோகன்லால், தபு அல்லது செம்பூவே பூவே பாடல் கூட காரணமாக இருக்கலாம். மற்றபடி இரு படங்களுக்கும் தொடர்பில்லை. 

சிறைச்சாலை மொழிபெயர்ப்பு திரைப்படம் என்கிற விஷயமே இத்தனை நாள் தெரியாமல் இருந்திருக்கிறேன். காலா பானி என்கிற மலையாள சினிமாவின் மொழிபெயர்ப்பு. மலையாளத்தில் கிளாஸிக் சினிமா வரிசையில் காலா பானியும் ஒன்று. இப்படத்திலிருந்து நூல் பிடித்துக் கொண்டுபோனால் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள உதவும். 

வைப்பர் தீவு சிறைச்சாலை © Rik Dhar
காலா பானி என்பது அந்தமான் சிறைச்சாலையை குறிக்கிறது. வடமொழியில் கருப்பு நீர் என்று பொருள். பிரிட்டிஷ் இந்தியாவின் கொடிய சிறைச்சாலை. அந்தமான் சிறை 1906ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. எனினும் அதற்கு முன்பே அரசியல் கைதிகளை அந்தமானுக்கு நாடு கடத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்தமானில் உள்ள வைப்பர் தீவைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட அரை சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மிகச்சிறிய தீவு. விஷப்பாம்புகள் நிறைந்த தீவு என்று சொல்லப்படுகிறது. கைதிகளை கை, கால்களை பிணைத்து இங்கு விட்டுவிடுவார்களாம். தொடர்ச்சியாக உணவு, குடிநீர் கிடைக்காமல் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் வாடி, பாம்புகளிடம் கடிப்பட்டு மிகுந்த துயரத்தோடு உயிர் நீத்திருக்கிரார்கள் கைதிகள். அதன் பிறகு (1867) இங்கே சிறிய சிறை ஒன்று நிறுவப்பட்டது. சிப்பாய் கலக போராளிகள் நிறைய பேர் வைப்பர் தீவு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் அங்கேயே தூக்கிலிடப்பட்டனர். போர்ட் ப்ளேரில் செல்லுலர் ஜெயில் கட்டி முடித்தபிறகு வைப்பர் சிறையில் பெண் கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டனர்.

செல்லுலர் சிறை வளாகம் © Milind Sathe
அந்தமான் சிறை வரலாற்றில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் அங்கே ஜெயிலராக பணியாற்றிய டேவிட் பெர்ரி. போர்ட் ப்ளேரின் கடவுள் என்று தன்னைத்தானே விளித்துக்கொண்ட டேவிட் கைதிகளை கொடிய வேலைகளுக்கும் தண்டனைகளுக்கும் ஆளாக்கினார். ஓய்வில்லாமல் தேங்காயிலிருந்து நார் எடுப்பது, செக்கிழுப்பது போன்ற பணிகள் கைதிகளுக்கு கொடுக்கப்பட்டன. அப்பணிகளில் அவர்களுக்கு எட்ட முடியாத இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. எட்டத் தவறியவர்களுக்கு கசையடிகள் வழங்கப்பட்டன. இயற்கை உபாதைகளுக்கு கூட அனுமதிக்கப்பட்ட நேரம் வரும் வரையில் அடக்கி வைத்திருக்க வேண்டும். உடல்ரீதியான துன்புறுத்தல்கள் ஒருபுறம் என்றால் மனரீதியான, உணர்வுரீதியான துன்புறுத்தல்கள் இன்னொரு புறம். அந்தமான் சிறையின் குறிப்பிடத்தகுந்த அம்சம் அங்கே ஒரு அறையில் ஒரு கைதியை மட்டும்தான் அடைப்பார்கள். 12 x 9 சிறிய அறை. ஜன்னல்கள் கிடையாது. சிறைக்கம்பிக்கு எதிர்ப்புறம் இன்னொரு அறை இருக்காது. இப்படி தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்கைதிகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களின் பூணூலை அகற்றுவது, ஹிந்து – முஸ்லீம் கைதிகளுக்கு இடையே கலவரத்தை தூண்டுவது போன்ற செயல்களும் சிறையில் நிகழ்ந்திருக்கிறது. அப்போதைய பார்ப்பனர்களின் நம்பிக்கையின் படி கடல் கடப்பது பாவச்செயல். அதனால் அந்தமான் சிறைக்கு அழைத்துச் செல்வதே அவர்களை மனதளவில் பலவீனமாக்கியது.

கசையடி சித்தரிப்பு © Sapna Kapoor
நிறைய பேர் தண்டனைகள் காரணமாகவும், உடல் உபாதைகள் காரணமாகவும் மடிந்தனர். அப்படி மடிந்தவர்களின் உடல்களைக் கூட கடலில் கல்லைக் கட்டி போட்டுவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

தீவு என்பதால் அங்குள்ள ஆங்கிலேயர்களுக்கே போதுமான உணவு, குடிநீர் கிடைக்கவில்லை. இங்கிருந்து கப்பல்களில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதனால் கைதிகளுக்கு குறைந்த உணவே கொடுக்கப்பட்டது. தரமும் மோசம். இதனை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக ஆறேழு நாட்கள். அதன்பிறகு போராடிய கைதிகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்டப்பட்டது. மஹாவீர் சிங் (பகத் சிங் குழுவில் ஒருவர்) என்கிற கைதிக்கு உணவு புகட்டும்போது அது நுரையீரலுக்கு சென்றதால் அவர் உயிரிழந்தார்.

சாவர்க்கர்
அந்தமான் சிறையைப் பற்றி பேசும்போது தவிர்க்க முடியாத ஒரு நபர் சாவர்க்கர். இந்தியாவில் காந்தி எப்படி போற்றப்படுகிறாரோ அதே போல அந்தமானில் சாவர்க்கர் போற்றப்படுகிறார். அந்தமான் விமான நிலையத்திற்கு அவருடைய பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. சாவர்க்கர் ‘அபினவ் பாரத்’ (இளைய இந்தியா) எனும் இயக்கத்தை நடத்தி வந்தார். பல அரசியல் செயல்பாட்டாளர்களும், புரட்சியாளர்களும் அதில் இணைந்தனர். 1909ம் ஆண்டு ஜாக்சன் என்கிற ஆங்கிலேயே அதிகாரியை அபினவ் பாரத்தின் பதினேழு வயது இளைஞர் சுட்டுக் கொல்கிறார். அதன் நீட்சியாக இளைஞர் தூக்கிலிடப்பட்டார். இளைஞர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி லண்டனில் இருந்து அபினவ் பாரத் இயக்கத்தின் மூலமாக பெறப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சாவர்க்கர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்றதால் ஐம்பது ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு அந்தமானுக்கு அனுப்பப்பட்டார். அந்தமான் சிறை அனுபவங்கள் சாவர்க்கரிடம் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சிறை சென்ற ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர். ஒன்றல்ல இரண்டல்ல. ஐந்து முறை மன்னிப்புக் கடிதம் எழுதுகிறார். பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை சில நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. மராட்டிய ரத்தினகிரி மாவட்டத்தைத் தாண்டி வெளியே போகக்கூடாது, அரசியல் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது என்பவை முக்கியமான நிபந்தனைகள். அதன்படி விடுதலையான பிறகு வேறொரு திசையை நோக்கி பயணமானார் சாவர்க்கர்.

சிறைச்சாலை படத்திலும் சாவர்க்கர் வருகிறார். கொஞ்சம் திரிபுகளோடு. சாவர்க்கர் சிறையிலிருந்த காலம் 1911 – 1921. சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நிகழ்ந்த வருடங்கள் 1933 மற்றும் 1937. படத்தில் இப்போராட்டத்தை சாவர்க்கர் தலைமையேற்று நடத்தியதாக காண்பிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் அஹிம்ஸா சிந்தனையாளராக மோகன் லாலும், கம்யூனிஸ சிந்தனையாளராக பிரபுவும் நடித்திருக்கிறார்கள். மோகன் லாலுக்கு ஒரு காதல் வருகிறது, ஒரு டூயட் வருகிறது. இப்பாடலில் ரசிக்கத்தகுந்த அம்சம் ஒன்று வருகிறது. ஒரு தாமரைப்பூ. அதிலிருந்து இரண்டு சொட்டு நீர் தபுவின் தொப்புளிலிருந்து சரியாக ஒரு அங்குலம் தொலைவில் வந்து விழுகிறது. பின்னர் தபுவின் இடையில் கட்டியிருக்கும் முத்துமணி மாலையை யாரோ விடுவிக்க அதிலிருந்த முத்துகள் சிதறி ஓடுகின்றன. முழுக்க டாக்குமெண்டரியாக எடுத்துத் தொலைக்காமல் இதுபோன்ற லெளகீக விஷயங்களை படத்தில் சேர்ப்பது நல்லவிஷயம்தான். ஆனால் சில வரலாற்று எல்லைமீறல்கள் தான் கவலைகொள்ள வைக்கின்றன. சாவர்க்கரின் சித்தரிப்பு ஒரு எல்லைமீறல். இன்னொரு எல்லைமீறல் – வங்காளத்தைச் சேர்ந்த பீனா தாஸ் என்கிற சுதந்திரப் போராளி. தன்னுடைய பட்டமளிப்பு விழாவில் அப்போதைய வங்காள கவர்னரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்று, ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று, அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைச்சாலை படத்தில் பீனா தாஸுக்கும் முகுந்த் ஐயங்காருக்கும் (பிரபு கதாபாத்திரத்தின் பெயர்) ஒரு மெல்லிய ரொமான்ஸ் வருகிறது. டூயட், தாமரைப்பூ, முத்துமணி மாலை இல்லாதது ஆறுதல்.
*****
கடந்த ஆண்டின் கடைசி இடுகையில் ஃபீட்பேக் கேட்டதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். ஃபீட்பேக் என்னவென்று மட்டும் தெரிந்துக்கொண்டு, முடிந்தால் அதனை செயல்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சில கேள்விகள் பதில் எதிர்பார்க்கும் தொனியில் வந்திருக்கின்றன. அவற்றை அடுத்ததடுத்த வாரங்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். இருந்தாலும் 'சூனா கானா பற்றி சில வார்த்தைகள்..?' போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதாக இல்லை !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

ஸ்ரீராம். said...

அந்தமான் சிறையிலிருந்து தப்பி ஓடுபவர்களாலும் உயி வாழ முடியாது என்று படித்திருக்கிறேன். சாவர்க்கர் பற்றிய விவரங்களும் படித்திருக்கிறேன்.

kumaran said...

படிச்சிட்டேன்