31 January 2018

கோவா – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கோவா இந்திய இளைஞர்களின் கட்டாய கனவுப் பிரதேசம். ஒருமுறையாவது கோவா போய்விட வேண்டும் என்பது இந்திய இளைஞர்கள் பலருடைய வாழ்நாள் கனவு, ஏக்கம். அநேக நண்பர் குழுக்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட அதே சமயம் அதிகம் கைவிடப்பட்ட பயணத்திட்டம் என்றால் அது கோவாவாகத்தான் இருக்கும். கோவா செல்வதற்கு திட்டமிடுபவர்களில் வெறும் எட்டு சதவிகித மக்கள் மட்டுமே நிஜமாகவே கோவா செல்வதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. 

சமீபத்தில் அறிமுகமான நண்பர் ஒருவர், கோவா போகணும் தல, குறைஞ்சது முப்பது நண்பர்களையாவது சேர்த்துக்கொண்டு கோவா போகணும் என்றார். எனக்கு ரெண்டு நிமிஷம் தலையே சுத்திடுச்சு. முப்பது அல்ல, மூன்று நண்பர்களுடன் கோவா சென்றாலே அது சாதனைதான். நண்பர்கள் மத்தியில் முதலில் கோவா போகலாமா என்கிற டாபிக்கை தொடங்கினாலே பலருக்கும் குளுகுளுவென்று இருக்கும். செலவு நபர் ஒன்றுக்கு இருபத்தி ஐயாயிரம் ஆகும் என்றதும் குழுவில் பாதி பின்வாங்கும். லாங் வீக்கெண்டுடன் சேர்த்து ஒன்றிரண்டு நாட்கள் லீவு போட வேண்டியது வரும் என்றதும் இன்னும் கொஞ்சம் பின்வாங்கும். அப்புறம் தோப்பனார் அனுப்பமாட்டார் வகையறாக்கள், அன்னைக்குத்தான் முக்கியமான ஃபேமிலி ஃபங்க்ஷன் இருக்கிறது வகையறாக்கள் என்று கடைசியில் திட்டம் டிராப் ஆகும். இன்னும் சிலர் கடைசி வரை கோவா போக வேண்டும் என்பதை பேசிப் பேசியே ஆர்கஸமடைவார்கள். இப்படி எந்தவித சிக்கல்களும், உணர்ச்சிவயப்படல்களும் இல்லாமல் இயல்பான ஒரு மாலைப்பொழுதில் எங்கள் கோவா பயணம் முடிவானது. அம்முடிவை நாங்கள் கடைசிவரை கைவிடவே இல்லை என்பதுதான் அதில் சிறப்பு. அதிகமில்லை, மூன்றே பேர் ! ஒருவகையில் இவ்வளவு சிறிய குழு, அதுவும் நெருக்கமான குழு என்பதாலேயே இப்பயணம் சாத்தியமானது.

எப்போதும் போல பயணத்திற்கு திட்டமிடும் பணியை நான் விரும்பித் தேர்வு செய்துக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் பயணம் என்பதில் பயணத்திற்கு திட்டமிடலும் சேர்த்தி. சொல்லப்போனால் பயணத்தை விட பயணத்தை திட்டமிடுவதில் தான் சுவாரஸ்யம் அதிகம், புணர்ச்சிக்கு ஃபோர்ப்ளே போல ! 

எனது திட்டமிடல் துவங்கியது. எந்த பயணத்தை எடுத்துக்கொண்டாலும் இலக்கை சென்றடையும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் திரும்பி வருகையில் நேரம் குறைவான வழிமுறையைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி சென்னை – கோவா ரயில் பயணம் என்றும், கோவா – சென்னை விமானப் பயணம் என்றும் முடிவு செய்தோம். முதல் வேலையாக விமான பயணச்சீட்டு முன்பதிவு முடிந்தது. ரயில் டிக்கெட்டுகள் ஒரே கோச்சில் அப்பர், மிடில், லோயர் வருமாறு கவனமாக தேர்வு செய்து எடுத்துக்கொண்டோம். 

கோவா மேப் (நட்சத்திர குறியிடப்பட்டவை பார்க்க வேண்டிய இடங்கள் / கடற்கரைகள்)
அதன்பிறகு எனது டேபிள்வொர்க் துவங்கியது. கோவாவை வரைபடத்திலேயே அப்போதுதான் நான் முதல்முறையாக பார்க்கிறேன். பார்க்க வேண்டிய இடங்களை ஒவ்வொன்றாக குறித்துக்கொண்டு வருகிறேன். அகோண்டா பீச், பலோலம் பீச், கேவ்லாஸிம் பீச்... இப்படியே பீச், பீச், பீச் என்று பட்டியல் நீள்கிறது. கிட்டத்தட்ட ஐம்பது பீச்சுகள் இருக்கும். நிச்சயமாக எல்லா கடற்கரைக்கும் செல்ல முடியாது என்பதை உணர்ந்து ஒவ்வொரு கடற்கரையின் சிறப்பம்சங்களையும் குறித்து தேட ஆரம்பித்தேன். சில கடற்கரைகள் அமைதியானவை, சில கொண்டாட்டமானவை, ஒன்றில் சூர்ய அஸ்தமனம் அழகாக இருக்கும், ஒன்றில் டால்ஃபின்கள் பார்க்கலாம், ஒன்றில் பாராசெய்லிங் செய்யலாம், ஒன்றில் ரஷ்ய தேவதைகளின் மேனியழகை ரசிக்கலாம் என்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்புகள். திட்டமிடலைத் துவங்கிய சில மணிநேரங்களிலேயே ஒரு சவாலான வேலையை கையில் எடுத்திருக்கிறோம் என்பது புரிந்துவிட்டது. சுருக்கமாக சொல்கிறேன். பொதுவாக ஒரு மலைவாசஸ்தலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே மலையுச்சியில் துவங்கி இறங்கிக்கொண்டே வந்தால் பார்க்க வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக வரும். சில தலங்களில் இரண்டு அல்லது மூன்று வழித்தடங்கள் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் தலத்தின் ஒட்டுமொத்த பரப்பளவை முப்பது கிலோமீட்டருக்குள் அடக்கிவிடலாம். கோவாவில் அப்படி கிடையாது. கோவாவின் வடக்கோடி கடற்கரையான க்வெரிம் பீச்சிலிருந்து தென்கோடி கடற்கரையான கல்கிபாகா பீச்சிற்கு இடையே உள்ள தூரம் ஏறத்தாழ நூற்றி ஐம்பது கிலோமீட்டர்கள். இவற்றிற்கு இடையே மத்தியில் அமைந்திருக்கிறது கோவா விமான / ரயில் நிலையங்கள். எப்படிப் பார்த்தாலும் குறுக்குவெட்டாக கோவாவில் நீண்ட சாலைப்பயணம் தேவைப்படும். 

கோவாவைக் குறித்து தொடர்ந்து ஆராய்ந்தபோது எளிமையான ஆனால் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது. உங்களுக்கு ஏற்கனவே கூட தெரிந்திருக்கலாம். கோவாவில் வடக்கு கொண்டாட்ட மயமானது. தெற்கு அமைதியானது. எங்களுடைய நோக்கம் கொண்டாட்டம்தான். ஆனாலும் முதல்முறை என்பதால் வடக்கு மட்டும் போதும் என்கிற உறுதியான முடிவை எங்களால் எடுக்க முடியவில்லை. எங்கள் நான்கு நாட்கள் பயணத்தை வடக்கிற்கு இரண்டு, தெற்கிற்கு இரண்டு என்று வகுத்துக்கொண்டோம். வேலை சுலபமானது. கடற்கரைகளை மூன்றாக தரம் பிரித்தேன் – பார்த்தே தீர வேண்டியவை, பார்க்க வேண்டியவை, தவிர்க்கக்கூடியவை. கடற்கரைகள் தவிர்த்து வேறு என்னென்ன இடங்கள் பார்க்கலாம் – கோட்டைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், மார்கெட்டுகள், கஸினோ என்று தனியாக அது ஒரு பட்டியல்.

இவற்றிற்கு இடையே எங்கே தங்குவது என்பதை தேர்வு செய்ய சில உள்பெட்டி விவாதங்கள். ஒருவருக்கு நீச்சல் குளம் வேண்டும், ஒருவருக்கு தொலைக்காட்சி வேண்டும், ஒருவருக்கு கடற்கரை மிக அருகிலிருக்க வேண்டும் இப்படி வெறும் மூன்று பேருக்கிடையிலேயே நிறைய கருத்து வேறுபாடுகள். பட்டியல், வடிகட்டப்பட்ட பட்டியல், இறுதிப்பட்டியல் என பலப் பட்டியல்களை தயாரித்து இறுதியில் வடக்கில் ஒரு ரெசார்ட்டும் தெற்கில் ஒரு ரெசார்ட்டும் புக் செய்தோம் (2 + 2 நாட்கள்). 

இப்போது சில மையப்புள்ளிகள் கிடைத்துவிட்டன. வாஸ்கோ ரயில் நிலையத்தில் இறங்குகிறோம், வடக்கு கோவாவில் இருநாட்கள் தங்குகிறோம், பின் தெற்கு கோவாவில் இருநாட்கள், பின் விமான நிலையம் என்கிற மேலோட்ட வரைபடம். இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தோம். கிடைத்த மையப்புள்ளிகளை வைத்து ஸ்கெட்ச் போட்டோம். ஸ்கெட்ச் போடுவது என்றால் வேறொன்றுமில்லை. நீங்கள் சிறுவர் மலர் / தங்க மலரில் புள்ளிகளை இணைக்கும் ஓவியத்தை பார்த்திருப்பீர்கள். ஒன்றிலிருந்து துவங்கி ஒவ்வொரு எண்ணாக கோடுகள் இழுக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் ஸ்கெட்ச் போடுவது. முதல்நாள் வாஸ்கோ ரயில் நிலையம் துவங்கி இறுதிநாள் விமான நிலையம் வரை ஸ்கெட்ச் போடுவது.

தோராயமான இந்த பயணத்திட்டத்தை போடும்போதே எனக்கு சில விஷயங்கள் தெளிவாகத் தெரிந்துவிட்டன. ஒன்று, இத்திட்டத்தை நடைமுறையில் கச்சிதமாக செயல்படுத்துவது சாத்தியமே கிடையாது. இரண்டாவது, கோவா என்பது ஒருமுறை மட்டும் பயணம் செல்ல வேண்டிய இடமே கிடையாது. கஜினி முகமது போல குறைந்தது பதினெட்டு முறையாவது படை எடுத்தால்தான் கோவாவை முழுமையாக அனுபவிக்க முடியும். ஏற்கனவே ஐம்பது கடற்கரைகளில் முப்பதை கழித்தாயிற்று மீதியிருப்பவற்றிலும் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து அதற்கும் சேர்த்தே தான் திட்டமிட்டேன். 

இவற்றிற்கு இடையே என்னென்ன சர்பத் வகைகள் கிடைக்கும், என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும், என்னென்ன உணவுகள், எந்தெந்த உணவகங்கள், பப், பார், கஸினோ, வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி டேபிள்வொர்க் செய்து, அவற்றை அவ்வப்போது சக பயணாளிகளுக்கு வாட்ஸப் மூலம் தெரிவித்து அவர்களுக்கு உற்சாகமூட்டியபடி இருந்தேன்.

கடைசியாக அந்தநாள் வந்தது ! எங்கள் நாள் ! ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை மதியத்தில் சென்னை செண்டிரலில் இருந்து கோவா செல்லும் ரயிலை பிடித்தோம் !

அடுத்த பகுதி: கோவா – ரயில் பயணம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

குரங்குபெடல் said...

"தோராயமான இந்த பயணத்திட்டத்தை போடும்போதே எனக்கு சில விஷயங்கள் தெளிவாகத் தெரிந்துவிட்டன. ஒன்று, இத்திட்டத்தை நடைமுறையில் கச்சிதமாக செயல்படுத்துவது சாத்தியமே கிடையாது "

அட்டகாசமான கட்டுரை
பகிர்தலுக்கு நன்றி