9 July 2018

பிரபா ஒயின்ஷாப் – 09072018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சரியாக முத்த தினத்தின்போது முத்தத்தைப் பற்றி மரு.நாராயண ரெட்டியின் டூயட் கிளினிக்கில் படித்துக்கொண்டிருந்தேன்.

மரு.ரெட்டி முத்தத்தை ஒரு மீடியம் என்கிறார். முத்தத்தின் வழியே ஒருவருடைய மணம், சுவை, ஸ்பரிசம் மூன்றும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. முக்கியமாக உணர்வுகள் கடத்தப்படுகின்றன. முத்தத்தால் அன்பு, பாசம், காதல், செக்ஸ், மரியாதை போன்ற உணர்வுகளை வேறுபடுத்திக் காட்ட இயலும். யார், யாரை முத்தமிடுகிறார் என்பதைப் பொறுத்து உணர்வுகள் மாறும். உதாரணத்திற்கு, அஜித் ஈஷா பேபியை நெற்றியில் முத்தமிட்டால் அது பாசம். அதே அஜித் காஜல் அகர்வாலை நெற்றியில் முத்தமிட்டால் அது காதல்.

காமசூத்ராவில் முத்தத்தைப் பற்றி ஒரு அத்தியாயமே இருப்பதாகவும், அதில் பல வகை முத்தங்களைப் பற்றியும் எழுதியிருப்பதாக ரெட்டி சொல்கிறார். அவற்றிலிருந்து சிலவற்றைப் பார்க்கலாம்.

பெயரளவு முத்தம்: பெண் அதிகம் பங்கெடுக்காமல், அதே சமயம் துணையை தன் உதடுகளில் மென்மையான முத்தம் பதிப்பதை அனுமதித்தல்.

துடிப்பான முத்தம்: பெண் தனது இணையின் உதடுகளை அனுமதிக்கும் பொருட்டு தன் உதடுகளை மெல்லப் பிரித்து, துணை முத்தமிடும் சமயத்தில் தன் கீழுதடுகளை இயக்குவது.

சாய் முத்தம்: வியாழக்கிழமைகளில் சாய் பாபா பக்தர்கள் கொடுத்துக் கொள்ளும் முத்தம் என்று நினைத்துக்கொள்ளப் போகிறீர்கள். முத்தமிடுபவர்கள் இருவரும் தங்கள் தலைகளை எதிரெதிர் திசையில் சாய்த்து முத்தமிட்டுக்கொள்வது. பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் ஹீரோவும் ஹீரோயினும் இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்வார்கள் (கேமரா பொடனியில்).

வளை முத்தம்: துணையின் கழுத்தை அண்ணாந்து பார்க்குமாறு சாய்த்து, துணையின் கன்னத்தையோ தாடையையோ பிடித்தபடி லேசாக குனிந்து முத்தமிட்டுக்கொள்வது.

நேரடி முத்தம்: இருவரும் பேதமின்றி ஒரு பழத்தை சுவைக்கும் நோக்கத்தில் ஒருவர் உதடுகளை இன்னொருவர் சிறுகச் சிறுக கொறித்து, உறிந்து முத்தமிட்டுக் கொள்வது.

அழுத்த முத்தம்: கொஞ்சம் வன்மையான முத்தம். ஒருவர் தன் உதடுகளை மூடியிருக்க, இன்னொருவர் தன் பற்களால் மெல்ல அவருடைய உதடுகளை அதிக வலி ஏற்படுத்தாமல் கடிப்பது. அதற்காக வடிவேலு ஒரு படத்தில் தன் இணைக்கு கொடுப்பது போல ரத்தமயம் ஆக்கி வைக்கக்கூடாது.

பூட்டு முத்தம்: ஒருவர் தன்னுடைய உதடுகளால் துணையின் மேலுதட்டை கவ்வ, அதே சமயம் அத்துணை முத்தம் கொடுப்பவருடைய கீழுதட்டை கவ்வி சுவைப்பது.

சண்டை முத்தம்: இருவரும் ஒருவரை ஒருவர் பற்களை, ஈறுகளை, அன்னத்தை, நாக்கை தொட்டுக்கொண்டு மென்மையாக சண்டை போடுதல்.

இதுபோல காமசூத்ராவில் மொத்தம் இருபதுக்கும் மேலான முத்த வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்தத்தில் மொத்தமே இவ்வளவுதான் வகைகள் இருக்கின்றன என்று அர்த்தம் செய்துகொள்ள வேண்டாம். விதவிதமான, புதுப்புது வகை முத்தங்களை கண்டுபிடிப்பதில் ஒவ்வொருவரும் ஒரு வாத்ஸ்யாயனர் தான். 

தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக முத்தம் என்றாலே கமல் என்று ஒரு கண்ணோட்டத்தை நுழைத்துவிட்டார்கள். பாலிவுட்டின் எம்ரான் ஹாஸ்மி போன்றவர்களின் காதுக்கு இதுபோன்ற விஷயங்கள் எட்டிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கமல் நிறைய படங்களில் ஹீரோயினை முத்தத்துக்கு தயார் செய்து, ஹீரோயின் தன் கழுத்தை சாய்த்து, கண்களை மூடி, உணர்வுகளை பெருக்கும் தருவாயில் வேண்டுமென்றே பின்வாங்கி ஹீரோயினையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் வெறுப்பெற்றுவார். 

மங்காத்தாவில் அஜித் – திரிஷா முத்தக்காட்சி திட்டமிடப்பட்டு அஜித் திரிஷாவின் உதட்டை மெல்ல நெருங்கி... நெருங்கி... இதுவே இக்காட்சிக்கான உணர்வைக் கொடுத்துவிட்டது முத்தமெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதனால் திரிஷா ரொம்ப அப்செட் என்று ஒருவேளை இதெல்லாம் படக்குழுவினர் ப்ரோமோவுக்காக ஜாலியாக கிளப்பிவிட்ட விஷயமாகக் கூட இருக்கலாம். 

துப்பாக்கியில் இதே போல விஜய், காஜல் அகர்வாலின் உதட்டை நெருங்கி வந்து முத்தமிடும் சமயத்தில் அவருக்கு வேறொரு விஷயம் (ஒருவேளை அகர்வால் கடை ரசகுல்லா) நினைவுக்கு வந்துவிட, போட்டது போட்டபடி கிளம்பிவிடுவார். அடுத்த காட்சியில் காஜல் விஜய் முன் தோன்றி முத்தத்தின் நற்பயன்களை ஒரு வாட்ஸப் ஃபார்வர்டில் படித்ததை விவரிக்கிறார். ஒரு முத்தமானது நாற்பது கலோரிகளை எரிக்கிறதாம். அதாவது முப்பது நிமிட நடை அல்லது இருபது நிமிட நீச்சல் அல்லது பத்து நிமிட ஸ்கிப்பிங் அல்லது ஐந்து நிமிட... என்று நீட்ட, விஜய் மீண்டும் முத்தமிடத் தயாராகி இம்முறை யாரோ கதவைத் தட்டுகிறார்கள். யாரோ என்ன யாரோ. சென்சார் அதிகாரிதான். சென்சார் கெடுபிடிகள், யூ சான்றிதழ், வரி விலக்கு போன்ற இத்யாதிகளை மனதில் கொண்டு இப்பொழுதெல்லாம் யாரும் முத்தக் காட்சிகள் பக்கமே போவதில்லை. அப்படியே வைத்தாலும் அதற்கு தனி செலவுகள் வேறு. முத்தக்காட்சி என்றால் ஹீரோயினுக்கு (ஏன் ஹீரோவுக்கு கிடையாது ?) கூடுதலாக பத்து லட்சம் தர வேண்டும். இல்லையேல் ஹீரோயின் பால் பாட்டில் நிப்பிளுக்கு முத்தம் தருவார். அதைக் கொண்டு பத்து லகர செலவில் கிராபிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.

முத்தத்தின் ஆதி தோற்றம் பற்றி உறுதியாகக் கூறுவதற்கில்லை. ஏனெனில் முத்தம் வரலாற்றை விட மூத்தது. விலங்குகளிடமிருந்து முத்தமிட்டுக் கொள்ளும் பழக்கம் மனிதனுக்கு தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள வரலாற்று குறிப்புகளை வைத்து பார்க்கும்போது முத்தத்தின் பிறப்பிடம் நம் இந்தியா ! ஏறத்தாழ மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்ட கஜுராஹோ சிற்பங்களில் உதட்டு முத்தத்தை செதுக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். (இப்போதாவது முட்டாள் இல்லை என்று நம்புவீர்களா ?. எழுத்தில் முதன்முதலில் முத்தத்தை பதிவு செய்ததும் இந்தியாதான். இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் முத்தத்தை குறித்து எழுதியிருக்கிறார்கள். அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது இந்தியாவிலிருந்து முத்தம் கிரேக்கத்திற்கு பரவியது.

நிறைவாக மரு.ரெட்டி முத்தத்தைப் பற்றி சொல்வது என்னவென்றால் முத்தம் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு மருந்து, உறவைப் பலப்படுத்தும் சிமென்ட், சந்தோசம் தரும் டானிக். முத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் என்றுகூட சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாட்ஸப் ஃபார்வர்ட் என்றாலே அது வதந்திதானே ! நம் அகர்வால் சொல்லும் முத்தம் குறித்த கலோரி கணக்கும் தவறுதான். சராசரியாக ஒரு நிமிட உதட்டு முத்தம் ஒன்றிலிருந்து இரண்டு கலோரிகளை எரிக்கும். வேகமான நடையில் நிமிடத்திற்கு ஐந்திலிருந்து ஆறு. நீச்சலில் சராசரியாக பத்து. காஜல் தளபதியிடமிருந்து முத்தம் பெறுவதற்காக பொய் சொல்லியிருக்கிறார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

Ponmahes said...

இப்பிடி ஒரு முத்த வரலாறு நம்மகிட்ட இருக்குறத நெனைச்சா எவ்வளவு பெருமையா இருக்குது...
அருமையான முத்த அலசல்.
முத்தங்கள்.. ச்சை...வாழ்த்துகள்....

ஆரூர் பாஸ்கர் said...

//சாய் முத்தம்: வியாழக்கிழமைகளில் சாய் பாபா பக்தர்கள் கொடுத்துக் கொள்ளும் முத்தம் என்று நினைத்துக்கொள்ளப் போகிறீர்கள். // ஹா.. ஹா.. சுஜாதா பாணி :)