5 July 2018

கோவா – டிட்டோஸ் லேன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – அட்வெஞ்சர்

கோவா என்றாலே நம் நினைவுக்கு வரும் தொடர்புடைய சொல் பார்ட்டி! குறிப்பாக, என் சக பிரயாணிகள் இருவரும் பப், டிஸ்கோ போன்ற லெளகீக விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். கோவாவில் தங்க திட்டமிட்டிருந்த நான்கு இரவுகளுக்கு இரவுக்கொன்றாக நான்கு பப்புகளுக்கு போகலாம் என்றால் கூட தயாராக இருந்தார்கள். எனக்கும் ஆசைதான் என்றாலும் ஏதோ நெருடலாக இருந்தது. இதுபோன்ற பப், கிளப், டிஸ்கோவில் பிரதானமான விஷயங்கள் மூன்று – மது, நடனம், பெண்கள் ! இதனைக் சகாக்களிடம் சொல்லி NSA, ஒன் நைட் ஸ்டாண்ட் போன்ற திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று விசாரித்தேன். அவர்கள் தீர்மானமாக மூன்றாவது விஷயத்தில் ஆர்வம் இல்லை என்றும், மது மற்றும் நடனம்தான் அவர்களது குறிக்கோள் என்றும் ஒப்புக்கொண்டார்கள் அல்லது சாமர்த்தியமாக அவர்களிடமிருந்து அப்படியொரு வாக்குமூலத்தை முன்னெச்சரிக்கையாக பெற்றுக்கொண்டேன்.

அதன்பிறகு ட்ரிப் அட்வைஸர் துவங்கி ஸோமேட்டோ வரை கோவாவின் சிறந்த இரவு கேளிக்கை விடுதிகளை தேடத் துவங்கினோம். பெரும்பாலான தேடல்கள் டிடோஸ் பப், கபே மாம்போஸ், பாலிவுட் க்ளப், க்ளப் நோ எஸ்கேப் போன்ற பெயர்களில் வந்து முடிவதை கவனித்தோம். கிடைத்த சித்திரங்களை எல்லாம் ஒன்றிணைத்து பார்த்தபோது கோவாவின் முக்கியமான கேளிக்கை விடுதிகள் எல்லாம் ஒரே தெருவில் இருந்தன – அதுதான் டிடோஸ் லேன் ! அதுவும் கோவாவின் மிகப் பிரபலமான கடற்கரையான பாகா கடற்கரைக்கு அருகே அமைந்திருந்தது டிடோஸ் லேன். எந்த பப் ? எந்த க்ளப் ? என்று எதுவும் தீர்மானித்துக் கொள்ளவில்லை. எங்கள் வடக்கு கோவா பயணத்தில் ஒரு இரவை டிடோஸ் லேனுக்காக ஒதுக்கிக்கொண்டோம். அங்கே போய் இணக்கமான பப்பில் ஐக்கியமாகிவிடலாம் என்பது திட்டம்.

டிட்டோஸ் லேன் (காலியான சமயத்தில்)
திட்டமிட்ட தினத்தில் இரவு சுமார் எட்டரை மணியளவில் டிடோஸ் லேனை அடைந்தோம். ஸ்கூட்டரை தெருவுக்கு வெளியிலேயே பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்துவிட்டு நடக்கத் துவங்கினோம். குறிப்பிட்ட அத்தெருவை நெருங்கும் முன்பே பப்புகளுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர்கள் எங்களை அணுகி அழைக்கத் துவங்கிவிட்டார்கள். சென்னை பர்மா பஜாரையொட்டி நீங்கள் ரேண்டமாக நடந்துபோனால் அங்குள்ள ஆசாமிகள் இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளின் பட்டியலையோ அல்லது பிரபல நடிகைகளின் பட்டியலையோ உங்களிடம் ஒப்பித்துக் காட்டுவார்கள். அதுபோல டிட்டோஸ் லேன் புரோக்கர்கள் உடைந்த ஆங்கிலத்தில் அளவில்லா சாப்பாடு, அளவில்லா மது, நடனம், பெண்கள் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகக் காட்சியில் விலைப்பட்டியல் வாங்குவது போலவோ, ரிச்சி ஸ்ட்ரீட்டில் எஸ்டிமேட் வாங்குவது போலவோ எல்லா ப்ரோக்கர்களிடமிருந்தும் விவரங்களை சேகரித்துக்கொண்டே தெருவிற்குள் நுழைந்தோம். இரு மருங்கிலும் பிரகாசமான விளக்கொளி மின்னிக்கொண்டிருந்தன. நிறைய க்ளப்புகளிலிருந்து இசை தெரு வரைக்கும் இரைந்துக் கொண்டிருந்தது. மசாஜ் பார்லர்கள் வேறு ஒரு பக்கம். ரொம்ப விசாலமாக நடந்து செல்ல இடமில்லாமல் கூட்டமாக இருந்தது. அக்கூட்டத்தில் மித வேகத்தில் ஸ்கூட்டி ஒட்டிக்கொண்டு வந்த ஒரு அங்கிள் எங்களிடம் வந்து, மவுண்ட் ரோடுக்கு இப்படி போனால் போகலாமா என்று கேட்பது போல 'ஃபுல் மஸாஜுக்கு' ஆசை காட்டினார். டிடோஸ் லேன் கிட்டத்தட்ட ஒரு மினி தாய்லாந்து !

பிரபலமான கபே மாம்போஸ்
ஸ்கூட்டி மாமா ஆசை காட்டியதில் எங்களுடன் வந்த நண்பர் ஒருவருக்கு மசாஜ் ஆசை வந்துவிட்டது. நாங்கள் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தோம், கேட்கவில்லை. இடையே ஒரு மசாஜ் பார்லர் வாசலில் சில வடகிழக்கு பெண்கள் அமர்ந்திருந்தனர். பார்லர் திறந்துதான் இருந்தது. நம்ம ஆள் மசாஜ் மீதுள்ள ஆர்வத்தில் எங்கள் கட்டுப்பாடை மீறி, அந்த வடகிழக்கு பெண்களையும் கடந்து மசாஜ் பார்லருக்குள் நுழைந்துவிட்டார். அவ்வளவுதான். திடீரென அங்கிருந்த வ.கி. பெண்கள் பதற்றமடைய, ஜிம் பாய்ஸ் போன்ற சிலர் அங்கே வந்துசேர ஒரே கலவரமாகிவிட்டது. ஒருவேளை உள்ளே யாருக்கோ ஃபுல் மஸாஜ் நடந்துக்கொண்டிருந்தது போல. அப்புறம் நம்ம ஆள் தகவல் தெரிந்துகொள்ள வந்தேன் என்றதும் அவர்கள் ஆசுவாசமாகி நண்பருக்கு விளக்க ஆரம்பித்தனர். டிடோஸ் லேனில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.

குறிப்பாக டிடோஸ் லேனில் உள்ள சில பப்புகளில் இந்தியர்களை மரியாதைக்குறைவாக நடத்துவதாகவும், சமயத்தில் வன்முறையை பிரயோகிப்பதாகவும் படித்து அறிந்தேன். டிடோஸ் லேனின் மத்தியில் ‘காமாக்கி’ என்றொரு பப் உள்ளது. முதலில் பெயரை காமாக்ஷி என்று படித்துவிட்டு கடாட்சம் பொருந்திய பெயராக இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அது ரஷ்ய அல்லது கிரேக்க மொழி வார்த்தை என்று தெரிந்துகொண்டேன். இந்த காமாக்கியைப் பற்றி இணையத்தில் விமர்சனங்கள் படித்தால் அதன் உரிமையாளர் அங்கே வெளிநாட்டினர் வருவதை மட்டுமே விரும்புவதாகவும், இந்தியர்கள் வந்தால் மரியாதைக்குறைவாக நடத்துவதாகவும் தெரிந்துக்கொள்ளலாம். பிரபலமான பப்களான டிட்டோஸ் பப், கபே மாம்போஸ் எல்லாம் கூட்டமாகவும், கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவும், போதாதற்கு விலை அதிகமாகவும் இருந்தன. நீண்ட நேரம் குறுக்கும் நெடுக்குமாக டிட்டோஸ் லேனில் நடந்து, பின் ஒரு பப்பை தேர்வு செய்தோம். அவசரமாக அதன் உள்ளே பிரேவசிக்க முயன்றால் அதன் வாயிலில் இரண்டு அரக்கர்கள் எங்களை தடுத்து நிறுத்தி கப்பிள்ஸ் ஒன்லி என்றார்கள். நாங்கள் சோகமாக திரும்பி நடக்க எங்களை பின்தொடர்ந்து வந்த ஒரு நபர் பெண்களை தயார் செய்கிறேன் என்று எங்கள் காதில் கிசுகிசுத்தார். மறுத்துவிட்டு நகர்ந்தோம்.

ஒரு பக்கம், ஹை ப்ரொஃபைல் விடுதிகள், மறுபக்கம் புரோக்கர்கள். இவர்களுக்கு மத்தியில் மிகவும் குழம்பித்தான் போயிருந்தோம். ஆனால் எங்கேயாவது ஒரு இடத்தில் செட்டிலாகிவிட வேண்டும் என்பதில் மட்டும் தீர்மானமாக இருந்தோம். அப்படியே காலாற கடற்கரை பக்கம் ஒதுங்கினால் அங்கே ஏராளமான குடில் உணவகங்களுக்கு மத்தியில் ஒரேயொரு குடில் உணவகம் மட்டும் இசை மற்றும் நடனத்துடன் ஆரவாரமாக இருந்தது. அந்த உணவகத்தின் பெயர் சாம்’ஸ் பீச் ஷாக் !

சாம்'ஸ் பீச் ஷாக்
ஒப்பன் டான்ஸ் ஃப்ளோர். யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து ஆடலாம். வாங்கும் திரவ, திடப்பொருட்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். கொஞ்ச நேரம் அதனருகே நின்று வேடிக்கை பார்த்தோம். நமது தேவை என்ன ? நம் சகப் பிரயாணிகளின் தேவை என்ன ? – மது, நடனம். அவ்வளவுதானே. தீர்மானித்தோம். ஸ்கூட்டர்களை டிட்டோஸ் லேன் முடிவிலிருந்த நீளமான, நெரிசலான பார்க்கிங்கில் கொண்டு வந்து விட்டோம். அப்போதே மணி பத்தை தாண்டியிருந்தது. சாம்ஸில் விசாரித்தபோது பதினோரு மணிக்கு டான்ஸ் ஃப்ளோரை க்ளோஸ் செய்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். யோசிக்க நேரமில்லை. நேரடியாக பார்டென்டரிடம் சென்று ஆளுக்கு ஒரு டின் பியரை வாங்கி, சாத்திவிட்டு நடன ஜோதியில் ஐக்கியமானோம். 

பக்கவாட்டுத் தோற்றம்
இங்கே ஒரு விஷயம். டிவியில் நிறைய டான்ஸ் ஷோ பார்க்கிறோம். சினிமா பார்த்துவிட்டு அஜித்துக்கு ஆடவே தெரியவில்லை. ரஜினிக்கு வாய் மட்டும்தான் ஆடுகிறது என்றெல்லாம் நக்கலடிக்கிறோம். ஆனால் திடீரென டான்ஸ் ஃப்ளோரில் போய் நின்றதும் என்ன ஆடுவது, எப்படி ஆடுவது என்று தெரியவில்லை. முதல் பத்து நொடிகளுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். அப்புறம் மெதுவாக கை, காலை அசைத்து, குதித்து, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சாமியாடத் துவங்கிவிட்டோம். ஆனால், அந்த டான்ஸ் ஃப்ளோரில் ஆடிய நிறையப் பேர் அசல் ஆட்டக்காரர்கள். குறிப்பாக இந்த பெண்களின் இடைப்பகுதி என்னென்ன சாகசங்கள் எல்லாம் செய்யும் என்று அந்த இரவு எனக்கு கற்றுத் தந்தது. ஆண்களோ நீ யாரோ, நான் யாரோ என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் இஷ்டத்துக்கு எல்லோருடனும் சேர்ந்து, இன்முகத்துடன் ஆடிக்கொண்டிருந்தார்கள். அன்றைய இரவில் அந்த டான்ஸ் ஃப்ளோர் சாதி, மத, இன, மாநில, நிற வேறுபாடுகளை மறந்திருந்தது. நிர்வாகம் சொன்ன நேரத்தை விட அரை மணிநேரம் கூடுதலாகவே டான்ஸ் ஃப்ளோரை இயக்கியது. சுமார் ஒன்றரை மணிநேரம் ஆடியிருப்போம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பரவச நிலை !

டான்ஸ் ஃப்ளோர் நேரம் முடிந்ததே தவிர உணவகத்துக்கு அல்ல. அதன்பிறகு காக்டெயில் அருந்தியபடி, ஸீஃபுட் ப்ளாட்டர் சாப்பிட்டு இரவு சுமார் ஒன்றரை மணி வரை அங்கே களித்துவிட்டு திரும்பினோம்.

அடிக் களைத்தபின்
என் கோவா பயணத்தில் என்னால் மறக்கவே முடியாத சில பரவச அனுபவங்களில் ஒன்று சாம்ஸ் பீச் ஷாக்கில் குத்தாட்டம் போட்டது.

டிடோஸ் லேன் செல்பவர்களுக்கு சில அறிவுரைகள் –

- புரோக்கர்களிடம் கவனமாக இருங்கள். உங்களைத் தேடி வரும் ஆஃபர்கள் கண்டிப்பாக மொக்கையாகத்தான் இருக்கும். எனவே தவிர்த்தல் நலம்.
- முன்பே சொன்னது போல காமாக்கி போன்ற பப்களை தவிர்க்கவும்.
- இது நம்ம ஊரு கிடையாது என்ற நினைப்பை எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். அளவான குடி, நிம்மதியான பயணம். எங்கேயாவது போய் கலாட்டா செய்து மாட்டிக்கொண்டால் உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களுடன் வந்தவர்களுக்கும் தொந்தரவு.
- வாகனங்களை பார்க் செய்வது கடினமான ப்ராஸஸ். மாலை ஏழு மணிக்கு முன்பாக சென்றுவிட்டால் ஓரளவுக்கு செளகர்யமாக பார்க் செய்துகொள்ளலாம்.
- நள்ளிரவு தாண்டியபிறகும் கூட டிடோஸ் லேனிலிருந்து வெளியேறும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். எனவே கடைசி டிரிங்குக்கும் கிளம்புவதற்கும் இடையே போதுமான இடைவெளி விடுவது நல்லது.
- எதற்கு ஸ்கூட்டர் தொல்லை ? டாக்ஸி பிடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தீர்களானால் நள்ளிரவில் அறை திரும்ப டாக்ஸி கிடைக்காமல் அவதியுருவீர்கள்.

கோவா பயண சீரிஸில் அடுத்து எழுத வேண்டிய முக்கியமான விஷயம் கஸினோ. ஆனால், அதற்கு முன்பாக கோவாவில் கடற்கரைகள் தவிர்த்து பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன உள்ளன என்ற ஒரு தொகுப்பை பார்த்துவிடலாம்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Arun said...

கோவா பயணக்கட்டுரைகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.