Showing posts with label grotesque. Show all posts
Showing posts with label grotesque. Show all posts

23 June 2013

தீக்குளிக்கும் பச்சை மரம் – தமிழ் சினிமாவில் NECROPHILIA !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தீக்குளிக்கும் பச்சை மரம், சற்றே இலக்கிய நயம் மிகுந்த தலைப்பே என்னை திரையரங்கிற்கு இட்டுச்சென்றது. மற்றபடி படத்தைப் பற்றி யாதொரு தகவலும் யான் அறியேன், கதாநாயகி சராயு என்கிற வல்லிய கேரளத்து பெண்குட்டி என்பதைத் தவிர. ஆனால் கவர்ச்சி காட்சிகள் இல்லை என்பது போஸ்டரிலேயே தெரிந்தது. திரையிடும் நேரத்தை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு அகஸ்தியா திரையரங்கிற்கு போன் செய்தேன். அழைப்பை ஏற்றவர் படத்தின் தலைப்பை தீக்குளிக்கும் மச்சக்காரன் என்று ஏதோ பிட்டுப்பட தலைப்பை போல பிழையோடு சொன்னார். காலைக்காட்சிக்கு அகஸ்தியா சென்றபோது திரையரங்கில் வழக்கத்தை விடவே அதிகமான ஜனத்திரள் தென்பட்டது. அத்தனையும் வடசென்னைக்கே உரித்தான பாமர, உழைக்கும் வர்க்க, அடித்தட்டு மக்கள். அப்போது அங்கே வந்த திரையரங்க பணியாள் தன்னுடைய நண்பரான ஒரு உழைக்கும் வர்க்கத்திடம் “படம் பார்த்தா நீ கண்டிப்பா அழுதுடுவ... எப்பேர்ப்பட்ட கல்லு மனசா இருந்தாலும் கடைசி சீனுல அழுதுடுவ...” என்று சொல்லிவிட்டுப் போனார். அதுதான் படத்தின் மீது என் முன்பு வைக்கப்பட்ட முதல் விமர்சனம்.

ஒரு விவசாயியுடைய தற்கொலை, பள்ளிச்சிறார்கள் இணைந்து ஆசிரியரை அடித்துக்கொல்வது என்று சற்று ரணகளமாகத்தான் படம் துவங்கியது. ஆனால், அது உண்மையான ‘ரணகளம்’ அல்ல என்பதை இரண்டாம் பாதியில் தெரிந்துக்கொண்டேன்.

விவசாயி நிழல்கள் ரவி, அவருடைய வெத்துவேட்டு தம்பி, அராத்து தம்பி மனைவி என்று வளவளவென்று கதை சொல்ல அலுப்பாக இருக்கிறது. அதனால் கதையின் முன்பகுதியை ஸ்கிப் செய்துவிடுகிறேன். Good, Bad and Evil – மாதிரி மூன்று பள்ளிக்கூட சிறுவர்கள் நட்பாக திரிகிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மூவரும் சேர்ந்து அவர்களுடைய ஆசிரியரை கொன்றுவிட, சீர்திருத்தப் பள்ளியில் தள்ளப்படுகிறார்கள். ஆறு வருடங்களுக்கு பின்பு வெளியே வருபவர்களில் இருவர் தவறான பாதைக்கு செல்ல, நாயகன் மட்டும் நல்லிதயத்தோடு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கே நாயகியுடன் காதல் கொண்டு திருமணம் செய்துகொள்கிறார் என்பது மெயின்ஸ்ட்ரீம் கதை அல்ல. அதன் பின்பு நாயகன் பிழைப்புக்காக பிணவறையில் பணிக்கு சேர்ந்து அங்கே நடைபெறும் குரூரமான சம்பவங்களும் அது நாயகனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே பிரதான கதை.

கலைப்பட பாணியில் மிதவேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை. பெரிய சுவாரஸ்யங்கள் இல்லையென்றாலும் இந்தக்காட்சிக்கு ஏதாவது குறியீடு இருக்கக்கூடும், அந்தக்காட்சி படத்தின் பிற்பகுதியில் வரவிருக்கும் ஏதேனும் சம்பவத்திற்கான தொடுப்பாக இருக்கலாம் என்று நாமாகவே எதையாவது யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாயகன் நேர்மையாக வாழுகிறார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் சோற்றுக்கு என்ன செய்கிறார் என்று சொல்லப்படவில்லை. அவரு ரொம்ப நல்லவருன்னு அப்பா சொன்னாரு என்ற மொன்னையான காரணத்தை வைத்துக்கொண்டு நாயகனை வளைய வரும் வழக்கமான நாயகி. இடையிடையே தான் காதலிக்கு ஏற்ற இணையில்லை என்பதை உணர்ந்து விலகும் காதலன், தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருதி காதலை நாகரிகமாக மறுக்கும் பெண் என்று ஆங்காங்கே சில நெகிழ்வான காட்சிகள். நாயகன் – நாயகி திருமணத்திற்கு பிறகு, குடும்ப சூழ்நிலை கருதி, அதிக பணம் கிடைக்கும் பிணவறை பணியாளாக வேலைக்கு சேர்கிறார். பணியில் சேர்ந்து முதல் பிணத்தை அறையில் இறக்கி வைத்ததும் அப்படியே ஃப்ரீஸ் செய்து இடைவேளை போடுகிறார்கள். முதல் பாதியை பொறுத்தவரையில் பருத்தி வீரன் காலம்தொட்டே பார்த்து சலித்த கதைதான் என்றாலும் கூட படத்திற்கு செய்த விளம்பரங்களோடு ஒப்பிடும்போது நல்ல படமாகவே தோன்றியது.

நாயகனாக சன் மியூசிக் பிரஜின். சத்தியமாக அடையாளம் தெரியவில்லை. ஆரண்ய காண்டம் சோமசுந்தரத்தை நினைவூட்டும் தோற்றம். சராயுவின் ஸ்பெஷாலிட்டி அவருடைய இரண்டு பெரிய கண்கள். ஆனால் சந்திரிகா வேடத்திற்கு அவர் பொருத்தமில்லை. குறைந்தபட்சம் கார்வண்ண ஒப்பனையாவது செய்திருக்கலாம். பிரஜின் சித்தியாக வரும் நடிகை ஒரு good find ! மற்ற கதாபாத்திரங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. படத்தில் டாப்பு டக்கரு டாப்பு டக்கரு என்றொரு பாடல் வருகிறது. அதன் துள்ளிசையும் நடன அசைவுகளும் நம்முடைய சதையையும் லேசாக அசைத்துப் பார்க்கின்றன.

இடைவேளையில் வாங்கிய கோக்கை குடித்து முடிப்பதற்குள் கதை பிணவறைக்குள் நுழைந்து குரூரமான காட்சிகள் திரையில் விரிகின்றன. குமட்டிக்கொண்டு வருகிறது. சில தொழிலை சாராயம் உள்ளே சென்றால்தான் செய்ய முடியும் என்கிற பிணவறை பணியாளரின் வசனம் எத்தனை உண்மை. போலவே, தீ.ப.ம.வை பார்க்கும் ரசிகர்களும் போதையேற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். முதலில் பிரேத பரிசோதனை. அப்புறம் இறந்தவர்களின் உறுப்புகளை திருடுவது, கொலைகளை மறைத்து பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதுவது, உச்சக்கட்டமாக இறந்த உடலுடன் உறவு கொள்வது என்று தொடர் அதிர்ச்சி கொடுத்து மிரள வைக்கிறார்கள். அதீத வன்முறை காட்சிகளுடன் திரைப்படம் நிறைவுபெறுகிறது.

பிணத்துடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் NECROPHILIA என்னும் மனநோயை பற்றி தமிழ் சினிமாவில் காட்சி வைத்திருப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த பொல்லாங்கு திரைப்படத்தில் கிட்டத்தட்ட அப்படியொரு காட்சி இருந்தது. மேலை நாடுகளை பொறுத்தவரையில் எண்பதுகளிலேயே நெக்ரோபிலியாவை மையமாக கொண்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரையில் முதன்முறையாக அப்படியொரு காட்சியை பார்க்கும்போது பகீரென்று இருக்கிறது. பிணவறை பணியாளர் ஒரு முப்பதை கடந்த பெண் உடலுக்கு நகச்சாயம், உதட்டுச்சாயம் பூசி மல்லிகைப்பூ வைத்து விடும்போதே அடுத்ததாக வரப்போகிற காட்சி புரிந்து அதிர்ச்சியூட்டுகிறது. நெக்ரோபிலியா மட்டும்தான் என்றில்லை. படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே பிணத்தை அறுப்பது, மனைவியின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்யும்படி கணவனை கட்டாயப்படுத்துவது, கட்டிங் மிஷின் வைத்து ஆணின் அந்த இடத்தை அறுப்பது, இறுதியில் அதே மிஷினை பயன்படுத்தி தலைகொய்து தற்கொலை செய்துக்கொள்வது என்று திரையெங்கும் தக்காளி ஜூஸு. எப்படி இப்படியொரு படம் சென்சாரை தாண்டி வந்திருக்கிறது என்று புரியவில்லை.

எதற்காக இத்தனை வன்முறை ? படத்தின் வாயிலாக இயக்குநர் என்னதான் சொல்ல வருகிறார் ? ஒரு மசுருமில்லை. சொம்மா வித்தியாசமாக, பரவலாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டது போல தோன்றுகிறது. குறிப்பாக ஒரு காட்சியில் தேர்ந்த பிணவறை பணியாள் ஒருவர் புதிய பணியாளருக்கு தொழில் கற்றுக்கொடுக்கிறார். எப்படியென்றால் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஆங் மண்டைய அப்படித்தான் பொளக்கணும், அப்படியே நெஞ்சை கிழிக்கணும், கொடலை உருவி வெளிய போட்றனும் என்றெல்லாம் வசனம் பேசியபடி. அந்தவகையில் தீக்குளிக்கும் பச்சை மரம் மேற்கத்திய கல்ட் படங்களை பார்த்து அதன் சாயலில் எடுக்க வேண்டுமென்று முனைந்து புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை !

அதேசமயம் தனிப்பட்ட முறையில் தீக்குளிக்கும் பச்சை மரம் படத்தில் சில அனுகூலங்களும் தென்படுகின்றன. சிறு வயதில் நம் மீது சேற்றை வாறி இறைத்த சக மாணவன், பிரம்படி கொடுத்த வாத்தியார் போன்றவர்களின் மீதான நம்முடைய கோபத்திற்கு தீ.ப.ம படத்தின் வன்முறை காட்சிகள் ஒரு வடிகாலாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த GROTESQUE என்கிற ஜப்பானிய திரைப்படம் இன்றளவும் கூட என்னுடைய வெளிப்படுத்த இயலாத கோபங்களுக்கு வடிகாலாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இனி தீக்குளிக்கும் பச்சை மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தீக்குளிக்கும் பச்சை மரம் – தமிழ் சினிமாவில் நெக்ரோபிலியாவை காட்சி படுத்தியமைக்காக மட்டும் பாராட்டலாம். இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம் கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 March 2013

பரதேசி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இனி இயக்குனர் பாலா படங்களை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தவர்களில் நானும் ஒருவன். விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு தான் என்னை திரையரங்கிற்கு நகர்த்திச் சென்றது. எப்போதுமே ஒரு படத்தை வெளிவந்ததும் சுடச்சுட பார்ப்பதற்கும், நான்கைந்து நாட்கள் ஆறப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சஸ்பென்ஸோடு படம் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கம், விமர்சனங்களை படித்துவிட்டு பார்க்கும்போது கிடைப்பதில்லை.

பரதேசியைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துவிட்டன. புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் Grotesque என்கிற படத்தை பார்த்தேன். திரைப்பட வரலாற்றில் அதீத வன்முறை கொண்ட பத்து திரைப்படங்களை பட்டியலிட்டால் Grotesque கண்டிப்பாக இடம்பெறும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அது பிடித்ததா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கடுமையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த படம் என்னை அடிக்கடி மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. உங்கள் முகத்தில் தொடர்ந்து கரியை பூசிக்கொண்டே இருக்கும் இருபெரும் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்தாலே உங்களுக்கு காறி உமிழ தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். எனினும் உங்களுடைய கோபம் அவரை துளியளவு கூட பாதிக்கப்போவதில்லை. போன்ற சமயங்களில் Grotesque படத்தில் துன்புறுத்தப்படும் மனிதர்களாக அந்த இருபெரும் அரசியல்வாதிகளை நினைத்துக்கொண்டால் ஒருவித மனநிம்மதி கிடைப்பதை உணருவீர்கள். வன்முறை, செக்ஸ் என்று நம்முடைய உணர்ச்சிகளுக்கு கட்டாயம் ஒரு வடிகால் தேவை. இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும். Noctural emission கேள்விப்பட்டதில்லையா ? அதுபோல பாலாவுடைய ஆழ்மன வன்முறை உணர்வுகளுக்கு அவருடைய படங்கள் வடிகாலாக இருக்கலாம்.

கார்த்திக்கு ஒரு பருத்தி வீரன் கிடைத்தது போல, அதர்வாவிற்கு பரதேசி கிடைத்திருக்கிறது. முதல் படமாக கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதர்வாவின் நடிப்பு ஒன்றும் உறுத்தலாக இல்லையென்றாலும், சாலூர் ராசா என்கிற அந்த வேடத்தில் கச்சிதமாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் அதர்வாவை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வேதிகாவும், தன்ஷிகாவும் நாயகிகள். தன்னுடைய பட நாயகிகளை அவலட்சணமாக காட்சிப்படுத்த முனையும் திருவாளர் பாலாவிற்கு இந்தமுறை தோல்வியே கிடைத்திருக்கிறது. குறிப்பாக தன்ஷிகா, ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார். 

கவிஞர் விக்கிரமாதித்யனும், அதர்வாவின் பாட்டியும் மனதைவிட்டு அகல மறுக்கின்றனர். கிராமத்தில் வசிப்பவர்கள், நிச்சயமாக விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் போன்ற ஒருவரையாவது தங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பார்கள். 

ஆமாம், பரதேசியில் பவர்ஸ்டார் நடிப்பதாக இருந்ததே. இப்படிப்பட்ட கதைக்கு எப்படி பவர் பொருந்துவார் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் வருகிற மருத்துவர் பரிசுத்தம் - அதுதான் பவருக்கு ஒதுக்கப்பட்ட வேடம். இப்போது நடன இயக்குனர் சிவசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அந்த வேடத்தில் மட்டும் பவர் ஸ்டார் நடித்திருந்தால், பரதேசி பஞ்சராகியிருக்கும்.

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன. மற்றபடி இசையைக் காட்டிலும் கேமரா அதிக கவன ஈர்ப்பு செய்கிறது. முதல்காட்சியில் சாலூர் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வதிலிருந்தே கேமராவின் ஆளுமை துவங்கிவிடுகிறது. 

வழக்கமாக பாலா படங்களில் காணப்படும் சில விஷயங்கள் பரதேசியில் இல்லாதது அதிர்ச்சியான ஆறுதல். போலீஸ், நீதிபதிகளை கிண்டலடிக்கவில்லை; திருநங்கை அல்லது போன்ற கதாபாத்திரங்கள் இல்லை; உச்சக்கட்ட காட்சியில் நாயகன் பொங்கி எழுந்து வன்முறையில் இறங்கவில்லை. இப்படி நிறைய இல்லைகள்.

பரதேசியிலிருந்து இருவேறு தரப்பினரும் புரிந்துக்கொள்ள விஷயங்கள் இருக்கிறது. நமக்கு கீழே பணிபுரிபவர்களை அன்பாக நடத்தவேண்டும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேல்மட்டத்திற்கு நேர்மையான உழைப்பை தரவேண்டும். அதையெல்லாம் விட முக்கியமாக சுதந்திரத்தின் மேன்மையை சமகால இளைஞர்களுக்கு உணர்த்தியிருக்கிறது பரதேசி.

நமக்கு ஃபீலிங் படமெல்லாம் பிடிக்காது என்பவர்களுக்காக சொல்கிறேன் - பரதேசி ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நல்ல நிறுவனத்தில் வேலை செய்து, கைநிறைய ஊதியம் வாங்கினாலும் கூட என்ன வாழ்க்கைடா இது ? என்கிற ரீதியில் புலம்புபவர்கள் பரதேசியை பாருங்கள். உங்களுடைய நிலையை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள பழகிவிடுவீர்கள்...!

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

தொடர்புடைய சுட்டி: Grotesque

அடுத்து வருவது: அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment