அன்புள்ள வலைப்பூவிற்கு,
சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகளுக்கு விமர்சனம் எழுதிய நேரம்,
ஆளாளுக்கு என் பொஸ்தவத்தையும் அடிச்சு தொவச்சு கும்மு கும்மு’ன்னு கும்முங்க
ஏட்டய்யான்னு ஏகப்பட்ட ஈமெயில்கள். அதிலும் வலைப்பதிவர் ஜீவானந்தம் அவருடைய
புத்தகத்தை கூரியரில் அனுப்பவே செய்துவிட்டார். அவருடைய வலைப்பூவின் பெயரே
புத்தகத்தின் பெயரும் கூட – கோவை நேரம். கோவில்கள், சுற்றுலா தளங்கள் பற்றிய
கட்டுரைகளின் தொகுப்பு.
பதிவுலகில் ஜீவா என்னுடைய நெருங்கிய நண்பர் என்று நிறைய பேருக்கு
தெரிந்திருக்காது. அதிகம் பழகவில்லை. மானசீக நண்பர் என்று வைத்துக்கொள்ளலாம். விவரமான
மனிதர். கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் வெட்டி வியாக்கியானம் பேசிக் கொண்டிராமல்
பிழைப்புவாதத்திற்கு எது தேவையோ அதை நோக்கி காய் நகர்த்தக் கூடியவர். ஏன்
கோவில்கள் என்ற வறட்சியான வகையறாவை தேர்ந்தெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டேன்.
எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அப்படி கேட்கவில்லை. பதிப்பகத்தார்களுக்கு
தெரிந்திருக்கும். அல்லது கிழக்கு பதிப்பக அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு
சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் அப்படியொன்றும்
சொல்லிக்கொள்ளும்படி விற்பனையாவதில்லை. அதனால் தான் அப்படி கேட்டேன். அதற்கு அவர்
கூறிய பதில் மிகவும் வெளிப்படையானது. கோவில்களை பற்றி எழுதியிருப்பதால் நல்ல பெயர்
கிடைத்திருக்கிறது. இளவயதில் கோவில்களை பற்றி எழுதியிருக்கிறார் என்று நிறைய பேர்
பாராட்டுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கூட கெளரவித்தார்கள். அதுதான்
அவர் கூறிய பதில். போதும். அவரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டு புத்தகத்தை
விமர்சிக்கலாம்.
சங்கவியைப் போலவோ மற்ற பதிவர்களைப் போலவோ ஜீவாவின் புத்தகம் துக்கடா
தாளில் அச்சிடப்படவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். ஆனால் வேறு சில விஷயத்தில்
கவனத்தை தவறவிட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்ப்பதற்கு முன்பு புத்தகத்தில் உள்ள
கொஞ்சூண்டு நல்ல விஷயங்கள் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.
புத்தகத்தின் முதல் பாதி கோவில்களைப் பற்றியது. தமிழகத்தில் உள்ள
அதிகம் பிரசித்தி பெறாத பன்னிரண்டு சிறிய கோவில்களை பற்றி சுருக்கமாய்
எழுதியிருக்கிறார். பிற்பகுதி சுற்றுலா தளங்கள் பற்றியது. போலவே தமிழகத்திலுள்ள
அதிகம் பிரசித்தி பெறாத சிறிய சுற்றுலா தளங்கள் பற்றியது. முதல் பாதியில் ஸ்தல
வரலாறு, ஊர்களின் பெயர்க்காரணம் என சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.
மற்றும் கோவிலை அருகிலிருக்கும் டவுனிலிருந்து எப்படி சென்றடையலாம் என்று எளிதாக
சொல்லியிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மலை வையாவூர் பற்றி புத்தகத்திலிருந்து
:- ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்தபோது ஒரு
இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறு
கைக்கு மலையை மாற்றிக்கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்னும் பொருளில்
மலை வையாவூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கெடாவெட்டு பகுதிக்கு போகலாம். ஒரு புத்தகம் எழுதுபவர் எழுத்தாளராக இருக்க வேண்டும். ஆனால் ஜீவா
புத்தகத்திலும் வலைப்பதிவராகவே இருக்கிறார். அதுதான் பிரச்சனை. வலைப்பதிவில்
எழுதியவற்றை புத்தகமாக வெளியிடும்போது அவற்றை பட்டி பார்த்து டிங்கரிங் செய்ய
வேண்டுமென பதிவுலக ஆசான்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஜீவா அப்படி
எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
வலைப்பதிவுகளில் டிஸ்கி, முஸ்கி போன்ற கந்தாயங்கள் பார்த்திருப்போம்.
அதையெல்லாம் கூட புத்தகத்தில் நீக்காமல் அப்படியே வெளியிட்டு தொலைத்திருக்கிறார். அப்புறம்
ஆங்காங்கே அடைப்புகுறிகளுக்குள் சிபி ஸ்டைல் சுய எள்ளல்கள். சுற்றுலா பகுதியில் ‘அம்மணிகள்’
என்ற வார்த்தை அடிக்கடி தென்படுகிறது. அங்கே அம்மணிகள் குளிக்கிறார்கள், இங்கே
அம்மணிகள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள், குளிர்ச்சியாக இருக்கிறது, எச்சச்ச
கச்சச்ச என ஒரே அம்மணி புராணம். நீ ரொம்ப யோக்கியமா ? என்று கேட்கப்பிடாது.
அம்மணிகளை பற்றி எழுதுவதில் பிரச்சனையில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் பற்றிய
புத்தகம் என்று சொல்லிவிட்டு அம்மணிகளை பற்றி எழுதினால் என்ன அர்த்தம். வேண்டுமென்றால்
அம்மணிகள் பற்றி ஒரு தனி புத்தகம் போட்டுக் கொல்லலாமே ? தவிர, இவையெல்லாம் ஏதோ
வலைப்பதிவில் என்றால் பல்லைக் கடித்துக்கொண்டு படித்துவிடலாம். காசு கொடுத்து
யாராவது வாங்கிப் படித்தால் அவருடைய மனநிலை எப்படியிருக்கும் என்று
யோசித்துப்பாருங்கள்.
புத்தகம் முழுக்க ஏகப்பட்ட புகைப்படங்கள். ஒரு பக்கம் என்று
எடுத்துக்கொண்டால் அதில் குட்டி குட்டியாக நான்கு அல்லது ஆறு புகைப்படங்கள் உள்ளன.
அவற்றை நீக்கிவிட்டால் அரை பக்கத்திற்கு மட்டுமே எழுத்துகள் உள்ளன. இத்தனைக்கும்
புகைப்படங்கள் பெரும்பாலும் அநாவசியமானதாகவே இருக்கின்றன. வெவ்வேறு ஆங்கிளில் ஒரே
கோவில், சுற்றுலா தளங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், டூப்ளிகேட் மினரல் வாட்டர்
பாட்டில், மீன் வறுத்தெடுக்கும் எண்ணைச்சட்டி என பல அரிய புகைப்படங்களை காண
முடிகிறது.
எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தை பற்றி ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறார். அடடா அபாரம்...! மொத்தமே இரண்டரை பக்கங்கள். அதில் இரண்டு
பக்கங்களுக்கு புகைப்படங்கள். மீதமுள்ள அரை பக்கத்தில் ஒரு பாரதியார்
பாடலிலிருந்து சில வரிகள். நல்லவேளை பாரதியார் தற்போது உயிரோடு இல்லை. பாஞ்சாலங்குறிச்சி
கட்டபொம்மன் இல்லம் குறித்த கட்டுரையும் அல்மோஸ்ட் அப்படித்தான்...!
மொத்தத்தில் ஜீவாவின் கோவை நேரம் புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள்,
அச்சு பிச்சு சமாச்சாரங்கள், ஜல்லியடித்தல்கள் போன்றவற்றை நீக்கிவிட்டால் ஒரு
பத்து பக்கங்கள் மட்டும் உருப்படியாக இருக்கலாம். அவ்வளவுதான்...! ஜீவா அடுத்தக்கட்ட
நடவடிக்கையாக இதே புத்தகத்தை கலரில் கொண்டுவர இருப்பதாக கூறினார். தயவு செய்து
அந்த முயற்சியை கைவிட்டுவிடுவது நல்லது. நமக்கு...!
கோவை நேரம்
ஜீவானந்தம்
கோவை பதிவர் பிரசுரம்
விலை ரூ.110/-
ஆன்லைனில் வாங்க
அடுத்து வருவது: இரண்டாம் உலகம்
கோவை நேரம்
ஜீவானந்தம்
கோவை பதிவர் பிரசுரம்
விலை ரூ.110/-
ஆன்லைனில் வாங்க
அடுத்து வருவது: இரண்டாம் உலகம்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|