Showing posts with label tribal. Show all posts
Showing posts with label tribal. Show all posts

2 April 2013

அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானில் பிற தீவுகள் தவிர்த்து போர்ட் ப்ளேரிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் முன்னுரிமை கொடுக்கவேண்டியவை. காரணம் இந்த இடங்களை சுற்றிப்பார்க்கும்போது உங்களுக்கு அந்தமானை பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும். எஞ்சியிருக்கிற பயணத்தை எப்படி திட்டமிடலாம் என்கிற எண்ணம் கிடைக்கும். நினைவிருக்கட்டும் என்னுடைய கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ள இடங்கள் தவிர்த்து அந்தமானில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. மொத்தத்தையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகலாம். எனவே சரியான தேர்வு, திட்டமிடல் அவசியமாகிறது. அதனால் அந்தமான் சுற்றுலாவின் முதல்நாளாக போர்ட் ப்ளேர் நகருலாவை வைத்துக்கொள்வது உகந்தது.

டூர் ஏஜெண்டுகளை அணுக வேண்டிய அவசியமில்லை. பத்தடிக்கு ஒன்றாக இருக்கும் ஏதாவதொரு டிராவல்ஸில் இருந்து நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு காரை புக் செய்துக்கொள்ளவும் அல்லது ஆட்டோ ஒன்றை டிரைவரோடு சேர்த்து வாடகைக்கு பிடித்துக்கொள்ளவும். மாற்றுத்துணி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் முழுக்க முழுக்க தகவல் சார்ந்தது என்பதால் விருப்பமிருந்தால் குறிப்பெடுக்க நோட்டு - பேனா எடுத்துச்செல்லலாம். காலை எட்டு மணிக்கு டிபனை முடித்துவிட்டு கிளம்புவது உத்தமம்.

சாத்தம் மர-அறுவை தொழிற்சாலை
சாத்தம் என்கிற தனித்தீவில் அமைந்துள்ள வரலாற்று பெருமைகள் நிறைந்த தொழிற்சாலை. அந்தமான் தீவுகளிலேயே பாலத்தால் இணைக்கப்பட்ட ஒரே தீவு. ஆசியாவின் பழமையான தொழிற்சாலைகளுள் ஒன்று. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் குண்டுமழை பொழிந்த இடம். தொழிற்சாலையில் இன்னமும் போர்த்தளும்புகள் இருக்கின்றன. நிறைய தமிழ் தொழிலாளிகள் தென்படுகின்றனர். அவர்களிடம் அன்பு என்ற சமாச்சாரத்தை கொஞ்சம் காட்டினால் போதும், அவர்களாகவே முன்வந்து உங்களுக்கு தொழிற்சாலையை சுற்றிக்காட்டி அங்கு நடைபெறும் பணிகளை விளக்குவார்கள். தொழிற்சாலை வாயிலில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. தொழிற்சாலையை பற்றியும் ஜப்பானிய படையெடுப்பை பற்றிய தகவல்கள் ஆங்கே தொகுக்கப்பட்டுள்ளது. மரத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சாமுத்ரிகா அருங்காட்சியகம்
இந்திய கடற்படையின் பராமரிப்பின் கீழ் உள்ள அருங்காட்சியகம். வாயிலிலேயே பிரம்மாண்ட திமிங்கலத்தின் எலும்புக்கூடு வரவேற்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் அந்தமானின் வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். மேலும் அந்தமானின் கடல்வளங்கள், மீன்கள், பவளப்பாறைகள் பற்றிய தகவல்களும் அடக்கம். சாமுத்ரிகாவின் எதிரிலேயே உயிரியல் அருங்காட்சியம் ஒன்றும் அமைந்துள்ளது. சரியான திட்டமிடல் காரணமாக அங்கே செல்ல முடியவில்லை. பெயரின்படி அந்தமானின் உயிரியல் வளங்கள், அரிய வகை முதலைகள், ஆமைகள் பற்றிய தகவல்கள் அங்கே இருக்கலாம்.

மனிதவியல் அருங்காட்சியகம்
அந்தமானில் அவசியம் பார்க்கவேண்டிய அருங்காட்சியகம். அந்தமான் மக்களின் மத, மொழி, கலாசார பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்கள் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர அந்தமானின் வெவ்வேறு வகையான பழங்குடியினரை பற்றிய அரிய புகைப்படங்கள், நிறைய தகவல்கள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் கீழே சில கடைகள் அமைந்துள்ளன. ஜரவா பொம்மைகள், டீ-ஷர்ட்டுகள், கைவினைப்பொருட்கள் முதிலியன கிடைக்கின்றன. முக்கியமாக அந்தமான் டூரிஸ்ட் கைடு கிடைக்கிறது. விலை 100ரூ. 

செல்லுலர் ஜெயில்
அந்தமானில் பார்த்தே தீரவேண்டிய வரலாற்று சிறப்பிடம். முதலில் சில அறைகளில் சிறை குறித்த வரலாற்று தகவல்களும் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அங்கே கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய வடிவமைப்புகள் கதிகலங்க வைக்கின்றன. முந்தய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல அந்தமானை பொறுத்தவரையில் காந்திக்கு இணையாக வீர சவார்க்கர் போற்றப்படுகிறார். சவார்க்கர் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அங்கே சிறைப்படுத்த பட்டுள்ளார். சாவர்க்கரின் நண்பர்கள் பலர் சிறைக்குள்ளிருந்தபடி பல போராட்டங்கள் நிகழ்த்தி ஆங்கிலேயர்களால் தண்டனைகளுக்கு உட்பட்டு உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அந்தமான், அந்தமான் சிறை சுதந்திரத்திற்கு முன்பு காலா பாணி (கருப்பு நீர்) என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அந்தமான் சிறைக்கு ஒருவர் கப்பலேற்றப்பட்டுவிட்டால் அவர் உயிரோடு திரும்புவதற்கு சாத்தியமில்லை என்னுமளவிற்கு கொடுமையான இடம். அவ்வாறு உயிரிழப்பவர்களை கல்லைக் கட்டி கடலில் வீசும் முறை கையாளப்பட்டிருக்கிறது.

மீன் காட்சியகம் & அறிவியலகம்
மீன் காட்சியகம் சிறையிலிருந்து நடை தொலைவிலேயே அமைந்துள்ளது. இரண்டு சிறிய அரங்கங்களில் மீன்கள், பவளப்பாறைகள், அவற்றை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியியலகத்திற்கு சரியான திட்டமிடல் காரணமாக செல்ல முடியவில்லை. ஆனால் அது அவசியம் பார்த்திருக்க வேண்டிய இடம் என்று அறிகிறேன்.

இதுவரையிலும் குறிப்பிட்ட இடங்களை நீங்கள் காலை எட்டரை மணிக்கு துவங்கி மாலை மூன்று மணிக்குள் பார்த்திருக்க வேண்டும்.

காந்தி பார்க்
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய பூங்கா. மாலை மூன்று மணிக்கு முன்பு பெரிதாக ஆரவாரங்கள் இருக்காது. காதலர்கள் அமர்ந்து அளவளாவ உகந்த இடம். மாலையில் படகு சவாரி நடைபெறுகிறது. சிறிய அளவிலான ஜப்பானிய வழிபாட்டு தளத்தை காணலாம்.

ரைட்டு. நான்கு அல்லது நான்கரை மணிக்கு காந்தி பூங்காவிலிருந்து கிளம்பி கார்பின்ஸ் கோவ் கடற்கரையை அடைவது உத்தமம்.

கார்பின்ஸ் கோவ்
மெரீனாவோடு ஒப்பிடும்போது கார்பின்ஸ் கோவ் மிக மிகச் சிறியது. எனினும் அநியாயத்துக்கு பராமரிக்கிறார்கள். நாயத்துக்கு நாமெல்லாம் (சென்னை வாசிகள்) மெரீனாவின் புகைப்படத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். வாட்டர் ஸ்கூட்டர் சவாரி கிடைக்கிறது. ஒரு ட்ரிப்புக்கு 350ரூ. கார்பின்ஸ் கோவுடைய சிறப்பு அங்குள்ள சாய்வுப்பலகைகள் தான். பேசாமல் மல்லாக்க படுத்து கொஞ்ச நேரம் அமைதிக்கடலில் மூழ்கலாம். உணர்ச்சிவசப்பட தேவையில்லை. அந்தமானில் கும்மாளம் போடுவதற்கு வேறுசில கடற்கரைகள் உண்டு. கார்பின்ஸ் கோவ் சாத்விக கடற்கரை. அமைதியாக அமர்ந்து ரசித்துவிட்டு திரும்புவதே சிறந்தது.

அங்கிருந்து கிளம்பும்போது மணி ஆறு அல்லது ஆறரை ஆகியிருக்கலாம். நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் மறுபடியும் செல்லுலர் ஜெயிலுக்கு சென்றால் அங்கே ஒளியும் ஒலியும் காட்டுவார்கள். (Sound & Light show). அதை பார்த்துவிட்டு இரவு பாருக்கு திரும்பலாம்.

அடுத்து வருவது: அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 March 2013

அந்தமான் - பாராடங் சுண்ணக்குகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமான் சுற்றுலா தளங்களில் சற்றே விந்தையானது பாராடங் சுண்ணாம்பு குகைகள். இருபது நிமிடங்கள் மட்டுமே சுற்றிப்பார்க்க வேண்டிய இடத்திற்கு காலையிலிருந்து மாலை வரை பயணத்தில் நேரம் செலவிட வேண்டும், அதுவும் வெவ்வேறு பயணமுறைகளில். அதிக கைகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படும் சுற்றுலா தளமும் கூட.

நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம், காலை உணவு மற்றும் மதிய உணவு உட்பட. பாராடங் செல்ல சில சிறப்பு அனுமதி தேவைப்படும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவது உத்தமம். அதிகாலை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் போர்ட் ப்ளேரின் வட கோடியிலிருந்து ஸ்வராஜ் மஸ்டா புறப்பட்டு, அவரவர் வசிப்பிடத்திற்கு சென்று தன்னை நிரப்பிக்கொள்ளும். காலை எட்டு, எட்டரை மணிக்கு ஒரு செக் போஸ்டை சென்றடையும், காலை உணவுகள் வழங்கப்படும். கனமான இட்லிகள், தொட்டுக்க சட்னி, சாம்பார். பிடிக்கவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். அருகில் சில ஆடுகள் பாவமாக உங்கள் முகத்தை பார்த்தபடி நிற்கும். அவைகளுக்கு போட்டுவிடலாம். சரியாக காலை ஒன்பது மணிக்கு வாகனங்கள் கிளம்பத் தயாராகும்.



© உஷா ஸ்ரீகுமார்
செக் போஸ்டை தாண்டி நாம் பயணிக்கவிருப்பது ஜரவாக்கள் வாழும் பகுதி. அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன :-
    1. முன்னே ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம், பின்னர் சுற்றுலா வாகனங்கள், இறுதியில் ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம்.
    2. மணிக்கு நாற்பது கி.மீ மேல் வேகமெடுக்கக் கூடாது. இடையில் வாகனத்தை எங்கேயும் நிறுத்தக் கூடாது.
    3. ஜரவாக்களை காணும் பட்சத்தில் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது. அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.
    4. ஜன்னல் வழியாக உணவுப்பொருட்களையோ வேறு எந்த ஒரு பொருளையோ வீசக்கூடாது.

மேற்படி விதிமுறைகள் எதையாவது மீறினால் உங்களுக்கும், உங்களை அழைத்துவந்த சுற்றுலா நிறுவனத்திற்கும் கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். உணவுப்பொருட்களை ஜரவாக்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் அதனை உடனடியாக உட்கொள்வதில்லை. பல நாட்கள் வைத்திருந்து கெட்டுப்போயிற்று என்று கூட அறியாமல் உட்கொள்வதால் அது அவர்களுக்கு விஷமாகி விட வாய்ப்புண்டு. அதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். அப்புறம் முந்தய பதிவில் சொன்ன நிர்வாண வீடியோ சர்ச்சையும் ஒரு காரணம்.



Ferry எனப்படும் சிறிய கப்பல்
ஜரவா பகுதிக்குள் நுழைந்ததும், நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருபுறமும் மாறி மாறி அலசிக்கொண்டிருந்தோம். கடைசி வரைக்கும் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாலைப்பகுதியை கடந்தபின்பு அங்கிருந்து சுமார் இருபது நிமிடங்கள் சிறிய கப்பலில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு சிறிய படகில் படகொன்றிற்கு எட்டு பேராக அழைத்துச்செல்வார்கள். தலை சுற்றுகிறதா ? பொறுமை. எட்டு பேர் கொண்ட குழுவில் என்னுடன் ஒரு வட இந்திய குடும்பம் பயணித்தது. இரண்டு ரசகுல்லாக்கள். இளையவள் பார்ப்பதற்கு ஒரு குட்டி காஜல் அகர்வால் போலவே இருந்தாள். அவளே மாட்டிவிட மாட்டாளா என்று லைப் ஜாக்கெட்டை தலைகீழாக பொறுத்தினேன். உல்டாக்கி புல்டா என்று இந்தியில் ஏதோ சொல்லிக்கொண்டே சைகை காட்டினாள். சீறிப்பாய்ந்தது... படகு !


இருபுறமும் அடர்த்தியான மேங்க்ரோவ் காடுகள், அனகோண்டா படங்களில் காட்டுவது போல. பின்னர் வளைந்து நெளிந்த குறுகிய பாதைக்குள் பயணித்து, நிறுத்தத்தை அடைந்தது. இன்னும் முடியவில்லை. அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கி.மீ நடந்துசெல்ல வேண்டும். சரியாக சுண்ணக்குகை வாயிலில் எலுமிச்சை ஜூஸ் கடைகள் நான்கைந்து உள்ளன. இளைப்பாறிக்கொள்ளலாம்.


அங்கிருந்து ஒரு வழிகாட்டி டார்ச் லைட்டுடன் உடன் வருவார். சுண்ணக்குகைகளின் வரலாற்றில் வட இந்திய மொழியில் விளக்குவார். அந்தரத்தில் தெரியும் சில சுண்ண உருவங்களை காட்டி, அதோ பாருங்க விநாயகர் மாதிரி உருவாயிருக்கு, இதோ நாகலிங்கம், அங்கே பவளப்பாறை என்று இயற்கையாகவே உருவான சிலவற்றை காட்டுவார். முடிந்தது. இவ்வளவு தான் பாராடங் சுண்ணக்குகைகள்.


Mud Volcano
அங்கிருந்து சற்று தொலைவில் சகதி எரிமலை (mud volcano) ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் அங்கே செல்ல முடியவில்லை. உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் முன்னரே மட் வால்கேனோ பற்றி கேட்டுக்கொள்வது நல்லது.

மதிய சாப்பாடு அங்குள்ள வீட்டுச்சமையல் விற்பன்னர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் விருந்தினர் வீடுகளில் கிடைக்கும் உபசரிப்பு. ஆனால் சைவம் மட்டும்தான்.

மாலை மூன்று மணியளவில் மீண்டும் வாகன அணிவகுப்பு தொடங்கும். அனைவருமே களைப்பாக உறங்கிக்கொண்டிருந்தோம். என்னருகில் அமர்ந்திருந்த இந்திக்காரர் “கானா... கானா...” என்று ட்ரைவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார். பாட்டு போடணுமாம். திடீரென ட்ரைவர், “ஜரவா... ஜரவா...” என்று அலற, அனைவரும் கண்விழித்து பார்த்தோம். ஆனா பெண்ணா என்று தெரியவில்லை. இடுப்புக்கு மேல் ஆடையணியாத இரண்டு மனிதர்கள். அடர் கறுப்பு நிறம். எங்களை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே கடந்தனர்.

படங்கள்: © ஜெயதேவ் தாஸ்
முந்தய பகுதி: அந்தமான் பழங்குடியினர்
அடுத்து வருவது: ஜாலிபாய் தீவு
அந்தமான் கட்டுரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 March 2013

அந்தமான் - பழங்குடியினர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அடுத்து நாம் பார்க்கவிருப்பது பாராடங். போர்ட் ப்ளேரில் இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் சுண்ணாம்பு குகையை பார்ப்பதற்கு சாலை வழியாகவும், கடல்வழியாகவும் பின்னர் மேங்ரோவ் காடுவழியாகவும் பயணிக்க வேண்டியிருக்கும். பாராடங்கின் சிறப்பு அந்த சுண்ணாம்பு குகையல்ல. ஜரவா எனும் பழங்குடியினர் வசிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியை கடந்து பயணிக்க வேண்டும். உண்மையில் அவர்கள்தான் நாகரிக மக்கள் வசிப்பதற்காக பிற பகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்தமான் & நிகோபர் தீவுகள் முழுமைக்கும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தற்போது எஞ்சியிருப்பதாக கருதப்படும் சில பழங்குடியின சமூகங்களை பற்றி தொடரும் பத்திகளில் காண்போம்.

ஜரவா (Jarawa)
அந்தமானின் செல்லப்பிள்ளைகள். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தெற்கு அந்தமானில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். வெள்ளையர்களின் வருகையாலும், நகரமயமாக்கல் காரணமாகவும் வேறு வழியில்லாமல் மேற்கு பகுதியில் வசிக்க தொடங்கிவிட்டனர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஜரவாக்கள் நாகரிக மக்களோடு சிநேகம் கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். முந்தய பத்தியில் குறிப்பிட்டது போல பாராடங் செல்லும் சுற்றுலா பயணிகளை வழிமறித்து அவர்களிடம் உணவுப்பொருட்கள் பெற ஆரம்பித்தனர். அதுபோல ஒருமுறை உணவுக்காக வழிமறித்த பழங்குடியினரை நடனமாட வைத்து அதை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்கள். அதற்குப்பின் அந்தமான் நிர்வாகம் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து, ஜரவா மக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. செய்தி. எனினும் தற்போது ஜரவா மக்கள் தாங்களாகவே வெளியுலகிற்கு வரவும், ஆடைகள் உடுத்தவும், கல்வி கற்கவும் தொடங்கியிருக்கிறார்கள். கவலையளிக்கும் வகையில், ஜரவா மக்கள் தற்போது சுமார் இருநூறிலிருந்து நானூறு பேர் வரை மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.



க்ரேட் அந்தமானீஸ் (Great Andamanese)
அந்நிய படையெடுப்புக்கு முன்பு அந்தமான் முழுவதிலும் வசித்து வந்த, ஒத்த மொழிகள் பேசிய பத்துக்கும் மேற்பட்ட இனங்களை தற்போது க்ரேட் அந்தமானீஸ் என்று பகுத்து வைத்திருக்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆறாயிரத்தை கடந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள், வெள்ளையர்கள் கொண்டு வந்து பரப்பிய நோய்களை சமாளிக்க முடியாமல் கிட்டத்தட்ட அழிவை நோக்கி சென்று பின் மீண்டு வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் வெறும் பத்தொன்பது பேர் மட்டுமே எஞ்சியிருந்து, தற்போது தோராயமாக ஐம்பது பேர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். சில தலைமுறைக்கு முன்பிலிருந்தே இவர்கள் இந்தியர்களோடு இல்வாழ்க்கையில் இணைந்ததால் ஹிந்தி சரளமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆறு கி.மீ பரப்பளவு கொண்ட சிறிய தீவொன்றில் இவர்களுக்காக குடில்கள், பள்ளி, மருத்துவமனை போன்ற வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது அந்தமான் நிர்வாகம்.

ஆங்கீஸ் (Onge)
லிட்டில் அந்தமான் தீவில் வசித்து வரும் ஆங்கீ இன மக்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே உள்ளது. தங்களது பாரம்பரிய கதைகளின் வழியாக நிலநடுக்கத்தை பற்றியும் ஆழி பேரலைகளை பற்றி புரிந்து வைத்திருக்கும் ஆங்கீஸ் 2004ல் சுனாமி வந்தபோது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் பிழைத்திருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஷச் சாராயத்தை தவறுதலாக உட்கொண்டு எட்டு பேர் இறந்திருக்கிறார்கள். பெருகி வரும் சாராய மோகம் ஆங்கீஸ் இனமக்களுக்கு ஆபத்தாக இருந்து வருகிறது. தவிர ஆங்கீஸ் இனப்பெண்கள் மிகவும் அரிதாக கருவுருவதால் ஆங்கீஸ் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிகொபரீஸ் (Nicobarese)
க்ரேட் அந்தமானீஸை போலவே நிகோபர் தீவுகளில் வாழும் பழங்குடியினரை நிகொபரீஸ் என்று அழைக்கிறார்கள். நிகோபர் தீவுகளை இன்னமும் மிகவும் பாதுகாப்பாகவும், நாகரிக மக்கள் எளிதில் நுழைய முடியாதபடியும் வைத்திருப்பதாலோ என்னவோ நிகொபரீஸ் எண்ணிக்கையில் இருபதாயிரத்திற்கு மேல் உள்ளனர். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகமடைந்தவர்கள். இலவச கல்வி திட்டத்தின் வாயிலாக இன்னும் சில ஆண்டுகளில் நிகோபர் மக்கள் அரசு பணியிடங்களை நிரப்ப காத்திருக்கிறார்கள். மேலை நாட்டு மத போதகர் ஒருவர் பைபிளை நிகொபரீஸில் மொழி பெயர்த்ததால் நிகொபரீஸ் கிட்டத்தட்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். சுனாமியில் இறந்தவர்களின் அலறல் இன்னமும் கேம்பெல் பே பகுதியில் நள்ளிரவுகளில் கேட்பதாக நிகோபர் மக்கள் நம்புகிறார்கள். 



செண்டிநெலீஸ்
முற்றிலும் நாகரிக மனித தொடர்பற்ற மக்கள். சுனாமி வந்த சமயம், ஹிந்து நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. ஒருமுறை அந்தமான் நிர்வாகம், நாகரிக மக்கள் குழுவை, இவர்களுடைய தீவிற்கு நட்புக்கரம் நீட்ட அனுப்பி வைத்தது. குறிப்பிட்ட தொலைவு வரை படகில் சென்று அங்கிருந்து தேங்காய்களை வீசியிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் தேங்காய்களை பெற்றுக்கொண்டனர் பழங்குடியினர். அடுத்தகட்டமாக கரையில் இறங்க முயற்சி செய்ததும் மூர்க்கமாக தாக்க தொடங்கியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய பகுதியில் அத்துமீறிய மீனவர்கள் இருவரை அம்பெய்தி கொன்றிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை கூட இதுவரையில் மர்மமாகவே இருந்து வருகிறது.



ஷாம்பென்
ஒப்பீட்டளவில் மிகவும் சாதுவானவர்கள். இந்தோனேசிய, பர்மிய, வியட்நாமிய மக்களின் சாயலை கொண்டவர்கள். க்ரேட் நிகோபர் தீவில் ஆங்காங்கே சிறுசிறு பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இருநூறிலிருந்து முன்னூறு வரையில் எண்ணிக்கை இருக்கலாம் என கருதப்படுகிறது. இடுப்புக்கு கீழே மட்டும் உடையணியும் வழக்கம் கொண்டவர்கள். வன விலங்குகளை வேட்டையாடியும், காய்கறி, பழங்களாலும் பசியாறுகிறார்கள். கடற்கரையோரம் குடியிருக்கும் பழக்கமில்லாததால் ஷாம்பென் மக்களை சுனாமி பெரிய அளவில் பாதிக்கவில்லை.

மேற்கண்ட தகவல்களையும் மேலதிக தகவல்களையும் போர்ட் ப்ளேரில் உள்ள மனித இயல் அருங்காட்சியகத்தில் தெரிந்துக்கொள்ளலாம். அதுபற்றிய விவரங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் விவரிக்கிறேன்.


படங்கள் உதவி: கூகுள்

சில  காணொளிகள்:
Jarawa
http://www.youtube.com/watch?v=tlRSsvB4iLE
http://www.youtube.com/watch?v=u5lwwsxVr9M
http://www.youtube.com/watch?v=q8thUedRXnk


Onge
http://www.youtube.com/watch?v=4GtZiW2GSkM

Sentinelese
http://www.youtube.com/watch?v=OaPYwlXOTzQ

Shompen
http://www.youtube.com/watch?v=fcLr22O6pl0

 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment