அன்புள்ள வலைப்பூவிற்கு,
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். என்னுடைய ஆலோசனை - தயவு செய்து ‘விடியும்
முன்’ பார்ப்பதென்றால் எந்த விமர்சனங்களையும் படிக்காமல் பாருங்கள். அந்த ஆலோசனையை
புறந்தள்ளுபவர்கள் மட்டும் மேலே படிக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு லோ பட்ஜெட் படங்களின் ஆபத்பாந்தவன் உண்மைத்தமிழன்
அண்ணாச்சி தொலைபேசினார். விடியும் முன் படம் பார்க்கச்சொல்லி கேட்டுக்கொண்டார்.
அண்ணனின் வழக்கமான ‘ப்ரோ’ (PRO) வேலைதான் என்றாலும், போன் செய்து பார்க்கச் சொல்வதெல்லாம்
டூ மச். அதற்காகவே பார்க்க முடிவு செய்தோம். அண்ணன் சொல்வது போல படம் நன்றாக
இருக்கலாம். அல்லது நல்லாயில்லை என்றாலும் மொக்கைக்கு ஆச்சு என்று ரசித்துவிட்டு
வரலாம் என்ற தைரியத்துடன் அரங்கம் சென்றோம்.
மார்க்கெட் இழந்த விலைமாது ஒருத்தி ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு
ஓடுகிறாள். அவர்களை வெவ்வேறு காரணங்களுக்காக சிலர் துரத்துகின்றனர். அவர்கள் ஏன்
துரத்துகிறார்கள்...? துரத்திப் பிடித்தார்களா...? என்பதை அட்டகாசமான க்ரைம்
த்ரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
பொதுவாக மனித மனதிற்கு வக்கிரமான செய்திகளை தெரிந்துக்கொள்ளும் ஒரு
ரகசிய ஆசை உண்டு. விதிவிலக்குகள் இருக்கலாம். செய்தித்தாள்களில் காணப்படும் கள்ள
உறவுக்கதைகள், கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம் போன்றவை முக்கால் பக்கத்திற்கு
வெளியாவதற்கு மேற்கண்ட உளவியல் ஒரு முக்கியமான காரணம். அப்பாவே மகளை... போன்ற
செய்திகளைக் கூட சட்டென எதிர்கொள்ளும்போது ச்சே எவ்வளவு கேவலம்...? என்று
நினைத்துக்கொண்டால் கூட அதனை விரிவாக தெரிந்துக்கொள்ளும் ஒரு ஆர்வக்குறுகுறுப்பு
இருக்கும். அந்த ஆர்வக்குறுகுறுப்பு தான் விடியும் முன் படத்தின் மிகப்பெரிய பலம்
என்று கருதுகிறேன். படம் தொடங்கி சில நிமிடங்களிலிருந்தே அந்த சிறுமியை கிழவன்
அல்லது கிழவனை சிறுமி என்ன செய்திருப்பார் என்ற படபடப்பு தொற்றிக்கொள்கிறது. அதனை
கிட்டத்தட்ட இறுதிவரை காப்பாற்றியிருப்பது படத்தினை பிடிக்க வைத்துவிடுகிறது.
படத்தில் ஹீரோ என்று யாருமில்லை. பிரதான வேடம் என்றும் தனியாக
யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. பூஜா தமிழ் சினிமாவில் ஒரு பத்து
குப்பையிலாவது நடித்திருப்பார். எல்லாவற்றிற்கும் சேர்த்து ‘கடைசியாக’ ஒரு நல்ல
படத்தில் நடித்துவிட்டார். கொஞ்சும் தமிழ் பூஜாவின் ஸ்பெஷல். அது அவருடைய
வேடத்திற்கும் பொருந்தியிருக்கிறது. சிறுமி மாளவிகா, தங்கமீனை நினைவூட்டும்
தோற்றம். வயதை மீறிய நடிப்பு. சின்னய்யா வேடத்தில் ‘நான் மகான் அல்ல’ வினோத்.
அதிர்ஷ்டம் வாய்த்தவர். அதிகம் நடிக்கத் தேவையில்லை. வசனங்களும் குறைவு. கேமராவைக்
கூட பார்க்க வேண்டியதில்லை. விறைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாலே
போதும், ஆனால் பேசப்படக்கூடிய வேடம். ஜான் விஜய் அவருடைய வழக்கமான ஸ்டைலில்
அசத்தியிருக்கிறார். ஸ்ரீரங்கத்து தேவதை. ஏற்கனவே சில படங்களில் நகைச்சுவை
வேடமேற்று நடித்த துணை நடிகர்கள் சீரியஸான வேடங்களில். ஆனாலும் உறுத்தவில்லை.
படம் நெடுக நிறைய ஈர்ப்புகள். அட்டகாசமான வசனங்கள், அருமையான
காட்சியமைப்புகள் என தொடங்கி, நிறைய விஷயங்கள். விஷப்பாம்புடன் விளையாடும் துரைசிங்கத்தின்
ஆட்கள், டபுள் கேம் விளையாடும் லங்கன், கொட்ட-கொடூரமாக கொலைகள் செய்யும் சின்னய்யா
என பண்புரு வருணனைகள் அபாரம். நிறைய விஷயங்களை பார்வையாளரின் யூகத்திற்கு
விட்டிருப்பது கூட படத்தின் பலம்தான். உதாரணமாக, பூஜாவுக்கும் துரைசிங்கத்திற்கும்
என்ன உறவு...? துரைசிங்கத்திற்கு உடலளவில் என்ன பிரச்சனை...? தெய்வநாயகி ஏன்
பாலியல் தொழிலை விட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினாள்...? போன்றவற்றை
குறிப்பிடலாம். சில ‘ஏன்’களை சொல்லி சோகஜூஸ் பிழியவில்லை. விலைமாதுக்களுக்கு நியாயம்
கற்பிக்கவில்லை. இரண்டாம் பாதியின் பின்னணி இசையும் ஸ்லோ மோஷன் காட்சிகளும் கொஞ்சம்
கொஞ்சமாக மதுவருந்தும் போதையை தருகிறது.
![]() |
இயக்குநர் பாலாஜி குமார் |
விடியும் முன் நிறைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை
நினைவூட்டுகிறது. ஒரு சிறுமியைக் காப்பாற்ற வேண்டிய மையக்கரு. தன்னுடைய இயல்பான
கெட்ட குணத்திலிருந்து மாறுபட்டு சிறுமியை காப்பாற்ற முனையும் ஓநாய் கதாபாத்திரம்.
ஓரிரவு துரத்தல் என நிறைய ஒற்றுமைகள். முன்னதைப் போலவே இதற்கும் நிறைய
தர்க்கரீதியிலான கேள்விகள் கேட்கத் தோன்றுகின்றன. கொடூர கொலைகள் செய்யும்
சின்னய்யா ஏன் அவருடைய தந்தையை கொன்றுவிடவில்லை...? சிறுமியை ஏன் அவ்வளவு தீவிரமாக
துரத்த வேண்டும்...? காப்பாற்றுவதற்கு என்றால் துரைசிங்கத்தின் கொலை மட்டும்
போதுமே...! இவை ஒருபுறமிருந்தாலும், ஓ.ஆவையும், வி.முவையும் ஒரே தராசில் வைத்து
ஒப்பிட முடியவில்லை. சினிமாத்தனமான க்ளைமாக்ஸை மட்டும் ஒதுக்கிவிட்டு, ஒரு புதிய
இயக்குநரின் அதிக அலட்டலில்லாத படைப்பு என்ற வகையில் விடியும் முன் படத்தை மனதார
வரவேற்று பாராட்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|