23 November 2013

இரண்டாம் உலகம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

செல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும் காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே ஆகவேண்டிய நிலை.

படத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள் நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம் உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள் மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்...? அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்...? காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது. இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது.

உலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு ஆர்யாவும். சிலகால ஊடலுக்குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.

செல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல் சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில் பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில் ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.


மற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார். இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.

இரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும் அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து, அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர் காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள் இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.

ஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார். அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.

சில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின் நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.

மொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல் விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல் உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.

செல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால் தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 November 2013

கோவை நேரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகளுக்கு விமர்சனம் எழுதிய நேரம், ஆளாளுக்கு என் பொஸ்தவத்தையும் அடிச்சு தொவச்சு கும்மு கும்மு’ன்னு கும்முங்க ஏட்டய்யான்னு ஏகப்பட்ட ஈமெயில்கள். அதிலும் வலைப்பதிவர் ஜீவானந்தம் அவருடைய புத்தகத்தை கூரியரில் அனுப்பவே செய்துவிட்டார். அவருடைய வலைப்பூவின் பெயரே புத்தகத்தின் பெயரும் கூட – கோவை நேரம். கோவில்கள், சுற்றுலா தளங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

பதிவுலகில் ஜீவா என்னுடைய நெருங்கிய நண்பர் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. அதிகம் பழகவில்லை. மானசீக நண்பர் என்று வைத்துக்கொள்ளலாம். விவரமான மனிதர். கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் வெட்டி வியாக்கியானம் பேசிக் கொண்டிராமல் பிழைப்புவாதத்திற்கு எது தேவையோ அதை நோக்கி காய் நகர்த்தக் கூடியவர். ஏன் கோவில்கள் என்ற வறட்சியான வகையறாவை தேர்ந்தெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டேன். எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அப்படி கேட்கவில்லை. பதிப்பகத்தார்களுக்கு தெரிந்திருக்கும். அல்லது கிழக்கு பதிப்பக அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படி விற்பனையாவதில்லை. அதனால் தான் அப்படி கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் வெளிப்படையானது. கோவில்களை பற்றி எழுதியிருப்பதால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இளவயதில் கோவில்களை பற்றி எழுதியிருக்கிறார் என்று நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கூட கெளரவித்தார்கள். அதுதான் அவர் கூறிய பதில். போதும். அவரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டு புத்தகத்தை விமர்சிக்கலாம்.

சங்கவியைப் போலவோ மற்ற பதிவர்களைப் போலவோ ஜீவாவின் புத்தகம் துக்கடா தாளில் அச்சிடப்படவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். ஆனால் வேறு சில விஷயத்தில் கவனத்தை தவறவிட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்ப்பதற்கு முன்பு புத்தகத்தில் உள்ள கொஞ்சூண்டு நல்ல விஷயங்கள் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

புத்தகத்தின் முதல் பாதி கோவில்களைப் பற்றியது. தமிழகத்தில் உள்ள அதிகம் பிரசித்தி பெறாத பன்னிரண்டு சிறிய கோவில்களை பற்றி சுருக்கமாய் எழுதியிருக்கிறார். பிற்பகுதி சுற்றுலா தளங்கள் பற்றியது. போலவே தமிழகத்திலுள்ள அதிகம் பிரசித்தி பெறாத சிறிய சுற்றுலா தளங்கள் பற்றியது. முதல் பாதியில் ஸ்தல வரலாறு, ஊர்களின் பெயர்க்காரணம் என சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. மற்றும் கோவிலை அருகிலிருக்கும் டவுனிலிருந்து எப்படி சென்றடையலாம் என்று எளிதாக சொல்லியிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மலை வையாவூர் பற்றி புத்தகத்திலிருந்து :- ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்தபோது ஒரு இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறு கைக்கு மலையை மாற்றிக்கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்னும் பொருளில் மலை வையாவூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கெடாவெட்டு பகுதிக்கு போகலாம். ஒரு புத்தகம் எழுதுபவர் எழுத்தாளராக இருக்க வேண்டும். ஆனால் ஜீவா புத்தகத்திலும் வலைப்பதிவராகவே இருக்கிறார். அதுதான் பிரச்சனை. வலைப்பதிவில் எழுதியவற்றை புத்தகமாக வெளியிடும்போது அவற்றை பட்டி பார்த்து டிங்கரிங் செய்ய வேண்டுமென பதிவுலக ஆசான்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஜீவா அப்படி எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. 

வலைப்பதிவுகளில் டிஸ்கி, முஸ்கி போன்ற கந்தாயங்கள் பார்த்திருப்போம். அதையெல்லாம் கூட புத்தகத்தில் நீக்காமல் அப்படியே வெளியிட்டு தொலைத்திருக்கிறார். அப்புறம் ஆங்காங்கே அடைப்புகுறிகளுக்குள் சிபி ஸ்டைல் சுய எள்ளல்கள். சுற்றுலா பகுதியில் ‘அம்மணிகள்’ என்ற வார்த்தை அடிக்கடி தென்படுகிறது. அங்கே அம்மணிகள் குளிக்கிறார்கள், இங்கே அம்மணிகள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள், குளிர்ச்சியாக இருக்கிறது, எச்சச்ச கச்சச்ச என ஒரே அம்மணி புராணம். நீ ரொம்ப யோக்கியமா ? என்று கேட்கப்பிடாது. அம்மணிகளை பற்றி எழுதுவதில் பிரச்சனையில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் பற்றிய புத்தகம் என்று சொல்லிவிட்டு அம்மணிகளை பற்றி எழுதினால் என்ன அர்த்தம். வேண்டுமென்றால் அம்மணிகள் பற்றி ஒரு தனி புத்தகம் போட்டுக் கொல்லலாமே ? தவிர, இவையெல்லாம் ஏதோ வலைப்பதிவில் என்றால் பல்லைக் கடித்துக்கொண்டு படித்துவிடலாம். காசு கொடுத்து யாராவது வாங்கிப் படித்தால் அவருடைய மனநிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். 

புத்தகம் முழுக்க ஏகப்பட்ட புகைப்படங்கள். ஒரு பக்கம் என்று எடுத்துக்கொண்டால் அதில் குட்டி குட்டியாக நான்கு அல்லது ஆறு புகைப்படங்கள் உள்ளன. அவற்றை நீக்கிவிட்டால் அரை பக்கத்திற்கு மட்டுமே எழுத்துகள் உள்ளன. இத்தனைக்கும் புகைப்படங்கள் பெரும்பாலும் அநாவசியமானதாகவே இருக்கின்றன. வெவ்வேறு ஆங்கிளில் ஒரே கோவில், சுற்றுலா தளங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், டூப்ளிகேட் மினரல் வாட்டர் பாட்டில், மீன் வறுத்தெடுக்கும் எண்ணைச்சட்டி என பல அரிய புகைப்படங்களை காண முடிகிறது.

எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அடடா அபாரம்...! மொத்தமே இரண்டரை பக்கங்கள். அதில் இரண்டு பக்கங்களுக்கு புகைப்படங்கள். மீதமுள்ள அரை பக்கத்தில் ஒரு பாரதியார் பாடலிலிருந்து சில வரிகள். நல்லவேளை பாரதியார் தற்போது உயிரோடு இல்லை. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் இல்லம் குறித்த கட்டுரையும் அல்மோஸ்ட் அப்படித்தான்...!

மொத்தத்தில் ஜீவாவின் கோவை நேரம் புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள், அச்சு பிச்சு சமாச்சாரங்கள், ஜல்லியடித்தல்கள் போன்றவற்றை நீக்கிவிட்டால் ஒரு பத்து பக்கங்கள் மட்டும் உருப்படியாக இருக்கலாம். அவ்வளவுதான்...! ஜீவா அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இதே புத்தகத்தை கலரில் கொண்டுவர இருப்பதாக கூறினார். தயவு செய்து அந்த முயற்சியை கைவிட்டுவிடுவது நல்லது. நமக்கு...!

கோவை நேரம்
ஜீவானந்தம்
கோவை பதிவர் பிரசுரம்
விலை ரூ.110/-

ஆன்லைனில் வாங்க

அடுத்து வருவது: இரண்டாம் உலகம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment