21 May 2010

அன்புள்ள அம்மாவுக்கு,

(இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே எழுதப்பட்டது.)

அன்புள்ள அம்மாவுக்கு,

சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் சொல்லாமலிருக்க முடியவில்லை என் சோகத்தை.

சுமார் நான்காண்டு காலத்திற்கு முன்னால் கல்லூரி விரிவுரையாளராக என் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தீர்கள். அக்கரையில் நின்றிருந்த என்மீது அக்கறை காட்டினீர்கள். அவ்வப்போது அருள்வாக்கு சொல்லும் பங்காரு அடிகளார் போல ஏதேதோ புத்திமதி சொன்னீர்கள். மதி சொன்ன புத்திமதிகளை எல்லாம் நானும் கேட்க ஆரம்பித்தேன். புகைப்பதை பகைக்கச் சொன்னீர்கள். நானும் சிகரெட் துண்டுகளை சிதறடித்தேன். மதுவின் பிடியில் இருப்பவர்களை மதுவிற்குப் பிடிக்காதென்று கூறியதால் எனக்கு ஆறுதலாக இருந்து வந்த நெப்போலியன் மாமா அவர்களின் உறவையும் முற்றிலுமாக துறந்துவிட்டேன். என் பிறந்தநாளன்று வாழ்த்துச்செய்தி அனுப்பிவிட்டு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாய் இருப்பேனென்று வாக்கு கொடுத்தீர்கள்.

பிறிதொரு மாலைப் பொழுதில் அலைபேசியில் அழைத்து, "என்னை அம்மா என்று கூப்பிடுவாயா..." என்று ஏக்கத்துடன் கேட்டீர்கள். உங்கள் வார்த்தையில் இருந்த வலியை உணர்ந்த நான் மறுகணமே உங்கள் மகனானேன். தேர்வு நடந்துக்கொண்டிருந்தது. எல்லோரும் பாடத்தை படித்துக்கொண்டிருந்தார்கள். நான் உங்களிடம் பாசத்தை படித்துக்கொண்டிருந்தேன். உங்கள் பர்சனல் பக்கங்களை எல்லாம் என்னிடம் பகிர்ந்துக்கொண்டீர்கள். சில நேரங்களில் நான் சேயாகவும் நீங்கள் தாயாகவும் இருந்துவந்தோம். பல நேரங்களில் நான் தாயாகவும் நீங்கள் சேயாகவும் இருக்க வேண்டியிருந்தது. என்னிடம் பேசும்போது உங்கள் கவலைகளை எல்லாம் மறப்பதாக கூறினீர்கள்.

என்னை ஏதோ இரண்டரை வயது குழந்தையைப்போல பாவித்து என்னிடம் பாசத்தை கொட்டினீர்கள். நானும் ஒரு எல்.கே.ஜி சிறுவனைப்போல மம்மி மம்மி என்று உருகினேன். என் தந்தையாரும் தந்தை பெரியாரும் கற்றுத்தந்த பகுத்தறிவை எல்லாம் படுக்க வைத்துவிட்டு கோவில் கொடிமரம் முன்பு விழுந்து வணங்கினேன். தன்மானத்தை எல்லாம் இழந்து தட்சிணாமூர்த்தி கோவிலில் வாராவாரம் விளக்கேற்றி வைத்திருக்கிறேன். பின்னர் ஒருநாள் கெளலீஸ்வரர் சன்னதியில் கெளரவம் பறிபோனது. இவ்வாறாக நான் மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்தபோது கூட உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டியிருக்கிறேனே தவிர எனக்காக ஒருபோதும் வேண்டியதில்லை.

தங்களைப் பற்றி தவறாக பேசிய சில நண்பர்களைத் தவிர்த்தேன். உற்றார் உறவினர்களையெல்லாம் கூட உதறித்தள்ளினேன். பிறிதொரு நாளில் என்னைப் பெற்ற தாயை எதிர்க்கும் நிலை வந்தது. தாயையும் எதிர்த்தேன், தந்தையையும் எதிர்த்தேன். கடைசி வரை உங்களை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. என்னை பெற்றெடுத்தவள் பெயரோ வளர்மதி. உங்கள் பெயரும் அவரது பெயரைப் போலவே மதியென்று முடிவதாகச் சொல்லி சிலாகித்தேன். தாய்க்கு மட்டுமே தரவேண்டிய தரத்தை உங்களுக்கும் சேர்ந்து பகிர்ந்தளித்தேன். உங்களது கவலைகளை எல்லாம் என்னுடையதாக நினைத்ததால் "மரணவேதனை" என்ற வார்த்தையை அவ்வப்போது என் டைரிக்குறிப்புகளில் எழுத நேர்ந்தது.

இரவு பகல் பார்க்காமல் பேப்பர் ப்ரெசன்டேஷன் தயார் செய்தது, இரண்டொரு நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு உங்களது மேற்படிப்பிற்கான ப்ராஜெக்ட் ரிபோர்டை தயார் செய்தேன். இப்படியாக தாயாரான உங்களுக்காக நான் தயார் செய்தது ஒன்றல்ல இரண்டல்ல. பின்னர் ஒருநாள் வெயிலோடு விளையாடி காலை முதல் மாலைவரை சென்னை பல்கலைகழகத்தில் தேர்வுப்பணம் கட்டியது என்று எதையெதையோ செய்திருக்கிறேன். எல்லாம் கடந்தபின்பு ஒருநாள், "என்னை அம்மா என்று கூப்பிடாதே..." என்று கூறினீர்கள். உங்களை அம்மா என்று கூப்பிட்டதற்கு பதிலாக வோடபோன் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரலையாவது அம்மா என்று கூப்பிட்டிருக்கலாம். அவளாவது நாளொரு வண்ணம் பேசமாட்டாள். இந்த கடிதத்தை படித்தபின்பு கூட ஏதோ நான் உங்களை முதுகில் குத்திவிட்டதாக நீங்கள் பிதற்றலாம். ஆனால் உங்களால் நான் தினந்தோறும் நெஞ்சில் சுமந்துவரும் வலி எனக்கு மட்டும்தான் தெரியும். எப்படியெல்லாமோ உங்களை மறக்க முயற்சி செய்தேன், ஆனால் ஒவ்வொரு முறையும் என்னை பெற்றவளை அம்மா... என்றழைக்கும்போது உங்கள் நினைவுகளும் சேர்ந்துதான் வருகிறது.

(இந்தக் கடிதத்தை எழுத முடிவெடுத்தபோது சில வரலாற்று சம்பவங்களை ஆராயும் நோக்கில் என் பழைய டைரியை புரட்ட நேர்ந்தது. ஓராயிரம் இடங்களுக்கு மேலாக அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தேன். அவற்றில் எவை என் தாயைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது, எவை உங்களை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது என்று பிரித்தறியக்கூட முடியவில்லை)
உங்கள் அன்புமகன்,
N R PRABHAKARAN

Post Comment

23 comments:

jillthanni said...

தங்களின் உண்மையான டயரி குறிப்புகள் போலிருக்கு
படிக்கும் போது ஒரு வித ஏக்கம் தெரிந்தது
மனதை பகிர்ந்தமைக்கு நன்றி

Philosophy Prabhakaran said...

@ jillthanni
உண்மைதான்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

settaikkaran said...

உயிரோட்டமான எழுத்து! நல்ல நடை! :-)

ஜெய்லானி said...

பாசம் வேஷம் அறியாது . அதை அனுபவித்தவர்க்கே புரியும்

goma said...

உள்ளத்திலிருந்து பீரிட்டு எழுந்த உணர்ச்சி எழுத்தாய் வடிந்து அனைவரையும் கலக்கி விட்டது

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன், ஜெய்லானி, goma
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... என்னுடைய சொந்தக்கதை சோகக்கதையை பொறுமையாக படித்து பின்னூட்டமிட்டதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

Unknown said...

//எவை என் தாயை குறிப்பிட்டது, எவை உங்களை குறித்து எழுதியது//

வலிக்கும் வரிகள் பிரபா.. எந்த உறவோடும், நட்போடும் எல்லைக் கோடுகளுடன் பழகினால், இதயப் போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் .

முத்துகுமரன் said...

பிரபாகரன்

எதையும் சொல்லுவதால் மட்டுமே அது அவ்வாறு இருக்கிறது என்பது இல்லை. வார்த்தையில் சொல்லுவதை வேண்டுமானால் நிறுத்தலாம் ஆனால் தாயாக உணர்வதை என்றும் யாரும் நிறுத்திவிட இயலாது. உங்களுக்கு எதுவேண்டும் அந்தத் தாய்மையா? இல்லை தாய் என்ற சொல் மட்டுமா?

அவர் எவ்வளவு வலியுடன் அதைச் சொல்லியிருப்பார் என யோசியுங்கள் அல்லது அந்த வார்த்தை ஏற்படுத்தும் வலியையாவது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தயவு செய்து மேலதிகமாய் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

உங்கள் இதயத்துக்கு நெருக்கமாக, மகனாகவே இருங்கள்.

சுதன்.அ said...

உஙகள் நடையும் எழுத்தும் வசீகரிக்கின்றன. தொடர்ந்து எழுதவும்.

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி. செந்தில்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... அவர் அத்தகைய எல்லைக்கோடுகளுடன் தான் பழகியிருக்கிறார் நான்தான் தவறிவிட்டேன் போல...

@ முத்துகுமரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... உண்மைதான் அவருக்கும் என் மீது பாசம் இல்லாமலில்லை... ஆனால் காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி அநீதி என்பார்களே அதுபோல வெளிக்காட்ட வேண்டிய நேரத்தில் வெளிக்காட்டாத பாசம் இருந்தும் பயனில்லை...

@ சுதன்.அ
வாங்க சார்... என் வலைப்பதிவிற்கு மற்றும் ஒரு வி.ஐ.பி... உங்கள் வருகைக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி போய்விட்டது... வலைப்பூவை பின்தொடர்ந்ததற்கு மற்றுமொருமுறை நன்றி... மேலிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பதிவு பற்றி கருத்து கூறாதது மட்டும் சிறிது வருத்தம் அளிக்கிறது...

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல சேதி

Unknown said...

உணர்ச்சி பொங்கும்
உண்மை வரிகள்

Priya said...

உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்து வார்த்தைகளாக்கி எழுதிய விதம் நல்லா இருக்கு.

Mj said...

" amma " ,, no one cant replace here,,
dont lend dat position to any one ,,
some of your behavior makes me angry , but calmed myself,,
" AMMA " - The power of everybody's life

--Mj

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

Philosophy Prabhakaran said...

@ 'ஒருவனின்' அடிமை, கலாநேசன், Priya, Mj
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

@ 'ஒருவனின்' அடிமை
ஏங்க... பீல் பண்ணி எழுதியிருக்கேன்... கூலா நல்ல சேதின்னு சொல்லியிருக்கீங்களே... எல்லா பதிவுக்கும் ஒரே பின்னூட்டம் போடும் கும்பலை சேர்ந்தவரா நீங்கள்...

@ Mj
/ some of your behavior makes me angry /
புரியவில்லை... இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாமே...

@ ஜெய்லானி
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருக்கு... அன்புள்ளம் கொண்டு விருது கொடுத்ததற்கு நன்றி...

Muthu said...

I can feel your pain....
Alavuku minjinal amudhamum nanju....
Alavuku meeri pasam vaithalum vali dhan kandipaka minjum nanbare...
I remembered my pain wen i read this blog...

Muthu...

ம.தி.சுதா said...

மனதை நெகிழ வைக்கும் பதிவு.. என் மதல் பதிவும் அம்மாவுக்கு தாங்க முடிந்தால் பாரங்கள்..

http://mathisutha.blogspot.com/2010/06/blog-post.html

Unknown said...

உங்கள் வலி புரிகிறது நண்பரே .........

எவனொருவன் உணர்ச்சி வசப்படும் நிலையில் தன்னை கட்டுப்பத்துகிரானோ அவனே முழு மனிதன்..........

உங்கள் டைரிக்குறிப்பு சொல்லும் ஒரு விழயம் நீங்க எளிதில் உடைந்து போகும் ஐஸ் கட்டி போன்றவர் என்று காட்டுகிறது..........
ஐஸ் கட்டியாக இருப்பது தப்பில்லை அதை ஐஸ்லாந்தில் நீங்கள் வைத்திருப்பதே உங்கள் மனதின் பலம் !?

இது என் தாழ்மையான கருத்து..........

Jackiesekar said...

நல்ல எழுத்து நடை இதை படிச்சிட்டு அவுங்க கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இருந்ததா?? அந்த அம்மா உன் சென்டிமென்ட்டை யூஸ் பண்ணி இருக்காங்க.... எனக்கு கால் பண்ணு... இன்னும் பேசனும்..

Pari T Moorthy said...

வலியை எழுத்தில் பதித்துள்ளாய் நண்பா... நீ குறித்தது நம்ம கல்லூரி விரிவுரையாளரா டா.....

Muthu Kumar said...

மிக அருமையான சொல்நயம், அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்

N.H. Narasimma Prasad said...

Very nice post.