9 August 2011

டீ வான் டட்லி (எ) கிருஷ்ணமூர்த்தி முதலியார்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அப்போது நான், நாங்கள் ஏழாவது அல்லது எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். அப்பொழுதெல்லாம் WWF என்றழைக்கப்படும் மல்யுத்தம் பிரசித்தம். இதற்காக விடியற்காலைகளிலும் பின்னிரவுகளிலும் கூட தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருப்போம். அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர், ஹல்க் ஹோகனுக்கு பாப்பா ஷாங்கோ மந்திரம் போட்டு வயிற்று வலியை வரவைத்தான் என்று ஏதேதோ கிறுக்குத்தனமாக பேசிக்கொள்வோம்.

வந்தாப்புல இருந்து நாங்க, நாங்க என்று கூறுவது எனது பங்காளிகள், சொக்காரங்களைப் பற்றித்தான். பசங்க படத்தில் வரும் பொடிசுகளைப்போல நாமதான் பெரிய அப்பாட்டாக்கர்கள் என்ற மமதையோடு ஊர் சுற்றுவோம். இப்படியாக அக்கம் பக்கத்து கடைகளில் நட்பு வளர்ந்ததற்கு முதல் பத்தியில் குறிப்பிட்ட மல்யுத்த மோகமும் ஒரு காரணம். பக்கத்தில் உள்ள துணிக்கடைக்காரருடன் மணிக்கணக்கில் ரெஸ்லிங் கார்ட் விளையாடுவோம். எதிரில் உள்ள பெட்டிக்கடையில் காரத்தை கொஞ்சம் கடிப்போம். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார்.

அந்த பெட்டிக்கடையின் உரிமையாளர்கள் சுந்தரமூர்த்தி முதலியார், கிருஷ்ணமூர்த்தி முதலியார் என்ற சகோதரர்கள். இவர்களில் மூத்தவர் அதாவது சுந்தரமூர்த்தி முதலியார் கொஞ்சம் சிடுசிடு பேர்வழி. கடைப்பொருட்களில் காசு கொடுக்காமல் கைவைக்க விடமாட்டார். இதனால் அவர் கடையில் இருக்கும் காலை வேளைகளில் கொஞ்சம் தள்ளியே இருப்போம். அண்ணன் எப்போ கிளம்புவான், திண்ணை எப்போ காலியாகும்ன்னு காத்திருந்து கடைக்குள் நுழைவோம். அப்படியே, ஏதாவது பண்டங்களை எடுத்து தின்ன நம்ம ஹீரோ கோவப்படுறா மாதிரி நடிப்பார். ஆனா, உண்மையிலே அவருக்கு கோபப்பட தெரியாது.

ஆங், இவருக்கு பட்டைப்பெயர் வைத்த கதையை சொல்ல மறந்துட்டேனே... மல்யுத்தத்தில் டீ வான் டட்லி என்ற பெயரில் ஒருத்தர் இருந்தார். (மேலே படம் பார்க்க). அவருடைய உருவச்சாயலில் இருந்ததால் அதையே இவருடைய பெயர் ஆக்கிவிட்டோம். டீ வான், டீ வான் என்று வாய் நிறைய கூப்பிடுவோம். அவரும் ஏன் அப்படி கூப்பிடுகிறீர்கள் என்று ஒருநாளும் கேட்டதில்லை. இந்தமாதிரி டீ-ஷர்ட், கண்ணாடியெல்லாம் போட்டுட்டு இருப்பார்ன்னு நினைச்சுடாதீங்க. ரொம்பவும் சிம்பிளான சட்டை, கசங்கிப்போன அழுக்கு வேட்டி, கழுத்தில் ருத்திராட்சம் – இதுதான் டீ வான் டட்லி.

இவருடைய கேரக்டர் ஜீன்ஸ் பட பிளாஷ்பேக்கில் வரும் அப்பாவி நாசரைப் போன்றது. என்ன ஒன்று, அடிக்கடி தாலியறுக்க மனைவி இல்லை. ஆமாம், அவர் ஒரு பிரம்மச்சாரி. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால் தீவிர ஆஞ்சநேயர் பக்தர். இவருடன் பழகிய பிறகு உண்மையான ஆஞ்சநேய பக்தர்களைப் பார்த்தால் ஒரு மரியாதை பிறக்க ஆரம்பித்தது. (நோட் பண்ணிக்கோங்க... “உண்மையான” ஆஞ்சநேய பக்தர்கள்... ஆஞ்சநேயர் கோவிலுக்குப்போய் டாவடிக்கும் குரங்குகளை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை...).

ஒருமுறை, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காண்டம் பாக்கெட்டை எடுத்து அவரிடம் காட்டி இது என்னவென்று கேட்டேன். உடனே ச்சீ என்று கண்களை மூடிக்கொண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டார். பெண்கள் வாசனையே படாமல் வாழ்ந்தவர்.

டீ.ஆருக்கு தாடி, எம்.ஜி.ஆருக்கு தொப்பி மாதிரி டீ வானுக்கு ஏப்பம். பாவம், மனிதருக்கு உடம்பில் என்ன குறையோ..? ஏப்பம் விட ஆரம்பித்தால் மணிக்கணக்கில் விட்டுக்கொண்டே இருப்பார், அதுவும் ராகத்தோடு. அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரைப்போலவே ஏப்பசத்தம் எழுப்பி கிண்டலடிப்போம்.

நாளடைவில் எங்கள் வட்டத்தினர் வந்தோம், போனோம் என்று இருந்துவிட நான் மட்டும் டீ வானோடு ஒட்டிக்கொண்டேன். கிட்டத்தட்ட அவருடைய கடை ஊழியனாகவே செயல்பட ஆரம்பித்தேன். “உன்னைப் பெரிய படிப்பு படிக்க வைக்கனும்ன்னு நினைச்சா, நீ பெட்டிக்கடையே கதின்னு கிடக்குறியே...” இது அப்பா. “இந்த ஏரியாவுல அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஒரு பேர் இருக்கு அதை கெடுத்துடாத...” இது அம்மா. அப்பவே நான் ரொம்ப அராத்து. யார் பேச்சையும் கேட்கமாட்டேன். அப்பா, அம்மா சொன்னதையெல்லாம் கேட்காமல் தொடர்ந்து அவருடனான நட்பை வளர்த்துக்கொண்டேன். அந்த வயதை மீறிய நட்பு எனக்கு பிடித்திருந்தது. ஒரு 40+ நபர் என்னுடைய நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது.

ஒருநாள் அவருடைய ருத்திராட்ச மாலையை கையில் வைத்துக்கொண்டு “இதை நான் எடுத்துக்கட்டுமா...” என்று கேட்டபோது முதல்முறையாக அவருடைய முகத்தில் உண்மையான கோபத்தைக் கண்டேன். “அதெல்லாம் தொடுறதுக்கு ஒரு தகுதி வேணும்...” என்று முகத்தில் அடித்தாற்போல சொன்னார். எனக்கு சங்கடமாகிப் போய்விட்டது. உண்மையில் எனக்கு ருத்திராட்ச மாலையின் மீது ஈடுபாடு இல்லை. அதை அவருடைய நினைவாக வைத்துக்கொள்ளவே விரும்பினேன்.

பின்னர், எனது கோடை விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பமானது. அப்படியும் ஞாயிறு மாலைகளில் அவருடைய கடையில் ஆஜராகிவிடுவேன். திடீரென்று ஒருநாள் அண்ணனும் தம்பியுமாக கடையை காலி செய்துவிட்டனர். யாரிடம் போய் கேட்பது என்றும் தெரியவில்லை. அவர் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் போனார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

கனவில் மட்டும் அடிக்கடி வருவார். ஒருமுறை சன்னதி தெருவில் பெரிய கடை வைத்திருப்பதாகச் சொல்லி சந்தோஷப்பட்டார். மற்றொரு முறை காசி, ராமேஸ்வரம் என்று சுற்றி புண்ணியம் தேடுவதாகச் சொல்லி சலித்துக்கொண்டார்.

சென்ற மாதத்தில் ஒருநாள் “டேய், நம்ம டீ வான் சில மாதங்களுக்கு முன்பு இறந்துட்டாராம்...” என்று எனது பங்காளிகளில் ஒருவனிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. பதறியடித்து என்ன ஏதென்று விசாரிக்க, அவருக்கு மனநலம் குன்றிவிட்டதாகவும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாகவும் தெரிந்துக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் அது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் இறந்துபோன டீ-வான் திரும்பவும் வரப்போவதில்லை என்பதை நினைத்தால் வலிக்கிறது.

சிலர் போனபிறகுதான் அவர்களுடைய அருமை தெரியும் என்று சொல்வார்கள். நான் என் வாழ்க்கையில் தொலைத்த சில உன்னத மனிதர்களுள் டீ-வான் டட்லி (எ) கிருஷ்ணமூர்த்தி முதலியாரும் ஒருவர். அவர் இன்னமும் என் மனதிற்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

நேற்றைய இடுகை 1: பிரபா ஒயின்ஷாப்
கலங்கிய கண்களுடன்,
N.R.PRABHAKARANee

Post Comment

12 comments:

Chitra said...

சிலர் போனபிறகுதான் அவர்களுடைய அருமை தெரியும் என்று சொல்வார்கள்.

...so true.

Chitra said...

நான் என் வாழ்க்கையில் தொலைத்த சில உன்னத மனிதர்களுள் டீ-வான் டட்லி (எ) கிருஷ்ணமூர்த்தி முதலியாரும் ஒருவர். அவர் இன்னமும் என் மனதிற்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.


...May his soul rest in peace.

Jayadev Das said...

\\கலங்கிய கண்களுடன்\\ ப்ச்... சாரிப்பா.

நிரூபன் said...

ஒருமுறை, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காண்டம் பாக்கெட்டை எடுத்து அவரிடம் காட்டி இது என்னவென்று கேட்டேன். உடனே ச்சீ என்று கண்களை மூடிக்கொண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டார். பெண்கள் வாசனையே படாமல் வாழ்ந்தவர்.///

அவ்...இந்த மாதிரி ஒரு அப்பாவியைக் கலாய்த்தது நியாயமா?

நிரூபன் said...

வித்தியாசமான ஒரு எழுத்து நடையில் உங்கள் மனதோடு ஒன்றித்து வாழ்ந்த மனிதரின் நினைவுகளைப் பகிர்ந்து, நினைவு மீட்டியிருக்கிறீங்க.

'பரிவை' சே.குமார் said...

நினைவுகளை பகிர்ந்து மனதை கனமாக்கிவிட்டீர்கள்.

Prabu Krishna said...

ஆரம்பத்தில் ரவுசாக ஆரம்பித்து இப்படி சோகமாக முடித்து விட்டீர்களே...

//சிலர் போனபிறகுதான் அவர்களுடைய அருமை தெரியும் என்று சொல்வார்கள். நான் என் வாழ்க்கையில் தொலைத்த சில உன்னத மனிதர்களுள் டீ-வான் டட்லி (எ) கிருஷ்ணமூர்த்தி முதலியாரும் ஒருவர். அவர் இன்னமும் என் மனதிற்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.//

எல்லோருக்கும் இப்படி ஒரு மனிதர் இருப்பார்.

நிகழ்வுகள் said...

உருக்கிவிட்டீர்கள் ..((

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல அனுபவம், கடைசியில் கண்கலங்க வைத்து விட்டீர்கள்!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி....அனுபவம்!

நாய் நக்ஸ் said...

பழைய நினைவுகள் எப்போதுமே ஹிட்டுதான்

Philosophy Prabhakaran said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...