1 November 2013

ஆரம்பம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆரம்பம் ட்ரைலர் பார்க்கும்போதே படம் மொக்கையா இருக்கும் போல பொறி தட்டியது. ஒண்ணுமில்லை, அஜித்தின் முந்தய சில படங்களைப் போலவே தத்துவ குத்து வசனங்கள், டுப்பு டுப்பு’ன்னு சுடுறாங்க, ஸ்லோ மோஷனில் நடக்குறாங்க, மங்காத்தா ட்ரைலரில் அஜித் கெட்டவார்த்தையில கத்துவாரே, அதே தொனியில் Make it simple என்று கத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு எச்சரிக்கை மணி பலமாகவே ஒலித்தது. இருந்தாலும் அஜித் ரசிகனா நமக்கு கடமை’ன்னு ஒன்னு இருக்கு இல்லியா ? அதுவுமில்லாமல் மனதின் ஏதோவொரு ஒரு ஓரத்தில் படம் நல்லா இருந்து தொலைத்துவிடாதா என்ற ஆசையும் இருந்தது. இனி ஆரம்பம் !

இந்திய காவல்துறையில் ATS என்றழைக்கப்படும் Anti-Terrorist Squad பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். உயிரை பணயம் வைத்து பணிபுரியக்கூடியவர்கள். அந்த குழுவில் அஜித்தும் ராணாவும் பணிபுரிகிறார்கள். ஒருமுறை தீவிரவாதிகளிடமிருந்து பணயக்கைதிகளை மீட்கும் பணியின்போது ராணா உயிரிழந்துவிடுகிறார். காரணம், அவர் அணிந்திருந்த தரக்குறைவான புல்லட் ப்ரூப் ஜாக்கெட். அஜித் அதன் பின்புலத்தை ஆராய்ந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதை கண்டறிகிறார். அப்புறம் ஊழலுக்கு காரணமானவர்களை பழி வாங்கி, ஊழல் பணத்தை ஸ்விஸ் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு மாற்றி, தர்மத்தை நிலைநாட்டுவதோடு படம் நிறைவடைகிறது.

To make it simple, காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்துவரும் பழி வாங்கும் கம் அநீதிக்கு எதிராக அவதாரம் எடுக்கும் கதை தான். ஆனால் திரைக்கதையை அட்டகாசமாக செதுக்கி அமைத்திருக்கிறார்கள் என்று சிம்பிளாக எழுதிவிட எனக்கும் ஆசை தான்...! ஆனால்...

சரி, தமிழ் சினிமாவில் அடிக்கடி காணக்கிடைக்கும் சில காட்சிகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம் :-
1. ஒரு நேர்மையான, புத்திசாலித்தனமான போலீஸ் அதிகாரி இருப்பார். அவர் அக்யூஸ்ட் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்துக் கொண்டுபோய் அவருடைய உயரதிகாரியிடம் தெரிவிப்பார். அந்த உயரதிகாரி கேரக்டர் கண்டிப்பாக பாலிவுட்டில் இருந்து துரத்திவிடப்பட்ட ஏதாவது ஒரு வில்லன் நடிகராக இருப்பார். அவர் முகத்தைப் பார்த்ததும் அவருதான் அந்த கருப்பு ஆடு’ன்னு நமக்கே தெள்ளத்தெளிவா தெரியும்.

2. விறுவிறுப்பான கதையோட்டத்தில் ஹீரோவுக்கு மிகமிக அருகாமையில் வெற்றி நெருங்க இருக்கிற தருணத்தில் ஒரு டுவிஸ்ட் வரும். வில்லன் குரூப் ஹீரோவுக்கு நெருக்கமான யாரையாவது கடத்தி வச்சிட்டு ஹீரோவை வரச்சொல்லி மிரட்டுவாங்க. அப்போ புத்திசாலி ஹீரோ அதே பாணியில் வில்லன் தரப்பு ஆட்களை கடத்தி வில்லனுக்கு செக் வைப்பார்.

3. கிட்டத்தட்ட பாதி படம் முடிந்திருக்கும் நிலையில் ஹீரோ வில்லன் குரூப்பிடம் வசமாக சிக்கிக்கொள்வார். வில்லன் குரூப்பிடம் துப்பாக்கி இருந்தாலும் சுட மாட்டாங்க, சுட்டாலும் உயிர் போயிடுச்சா’ன்னு கன்ஃபார்ம் பண்ண மாட்டாங்க. குத்துயிரும் கொலையுயிருமா விட்டிருவாங்க. அதுக்கப்புறம் ஹீரோ உயிர்த்தெழுந்து வந்து ஹீரோ வில்லன் குரூப்பை பழி வாங்குவார்.

4. ஒரு சேஸிங் சீன் வரும். வில்லன் குரூப் ஆளுங்க ஏகே 47 மாதிரியான துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுப்பு டுப்பு’ன்னு சுட்டுக்கிட்டே வருவாங்க. ஆனா ஹீரோவுக்கு எதுவும் ஆகாது. என்னடான்னு பார்த்தா, ஹீரோவுக்கு பக்கத்துலயும் பெஞ்சுலயும் தான் குண்டு படுமே தவிர மேல ஒரு குண்டு பாயாது. அப்படியே தப்பித்தவறி பாஞ்சா கூட தோள்பட்டை, முட்டிக்காலுக்கு கீழே போன்ற ஹீரோ அளவில் ஆபத்தில்லாத பகுதியில் மட்டுமே படும்.

4a. அதே சேஸிங் சீன். ஹீரோ ஒரு சின்ன கை துப்பாக்கி வச்சிட்டு வண்டி ஒட்டிக்கிட்டே திரும்பி பார்த்து சுடுவாரு. அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று குண்டுகள். வில்லனின் அடியாட்கள் ஒவ்வொருவராக குண்டடி பட்டு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்வார்கள். சமயங்களில் ஹீரோ மிகச்சரியாக வில்லன் குரூப் காரின் பெட்ரோல் டேங்கில் சுட்டு கார் பனைமர உயரத்திற்கு பறந்து சிதறும்.

5. வில்லனுக்கு நெருக்கமா ஒரு ரிவால்வர் ரீட்டா இருப்பாங்க. வில்லனுக்கு அடிக்கடி தொட்டுக்கிட ஊறுகாய் மாதிரி. ஆனா பாருங்க, படத்தின் இரண்டாம் பாதியில் ஹீரோ கையாலோ அல்லது வில்லன் கையாலேயோ அற்பாயுசில் இறந்துவிடுவார்கள்.

6. ஹீரோ படத்துவக்கத்திலிருந்து மர்மமான முறையில் நிறைய சமூக விரோத செயல்களைச் செய்வார். அவர் கெட்டவர் என்கிற தொனியில் ஏதாவதொரு துணை கதாபாத்திரம் கேள்வியெழுப்ப, அதற்கு இன்னொரு துணை கதாபாத்திரம் அவரு யாருன்னு தெரியுமாடா என்றபடி தொடங்க காட்சிகளில் ஃப்ளாஷ்பேக் விரியும்.

6a. ஃப்ளாஷ்பேக்கில் ஹீரோ அவருடைய குடும்பம், நண்பர்கள் சகிதம் சந்தோஷமா வாழ்ந்துக்கொண்டு இருப்பார். அவர்களின் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு உணர்த்தும்பொருட்டு ஒரு கொண்டாட்டமான பாடல் வரும். கண்டிப்பாக அந்த பாடல் முடிந்தபிறகு ஒரு ட்விஸ்ட் வரும். குடும்பத்தின் மகிழ்ச்சி சிதைய துவங்கும்.

7. க்ளைமேக்ஸ் நெருங்கி வரும் வேளையில் ஒரு கிளப் சாங் வரும். ஏதாவது ஒரு ஐட்டம் சாங் நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். அங்கே ஹீரோவும் குறுக்க மறுக்க நடந்துக்கொண்டிருப்பார். பாடலுக்கு இடையிடையே மர்மமாக சில வேலைகளை செய்வார். பாடல் முடிந்ததும் க்ளைமேக்ஸ் தொடங்கும்.

8. பாம் வெடிக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளன என்று செவன் செக்மென்ட் டிஸ்ப்ளேயில் காட்டும். சிகப்பு, கருப்பு என இரண்டு வயர்கள். ஒன்றை கத்தரித்தால் சேஃப், மற்றொன்றை கத்தரித்தால் க்ளோஸ். ஒருசில நொடிகள் தடுமாறிவிட்டு ஹீரோ மிகச்சரியாக சேஃபான வயரை கத்தரிப்பார்.

மேலே சொன்ன காட்சிகளை நீங்கள் ரசித்துப் பார்ப்பவரா ? ஆம் எனில் கையைக் கொடுங்கள் ! சந்தேகமே இல்லாமல் ஆரம்பம் உங்களுக்கான சினிமா தான்...!

அஜித் இல்லையேல் ஆரம்பத்திற்கு ஆரம்பம் கூட கிடைத்திருக்காது. அஜித்தை திரையில் காட்டினாலே திரையங்கம் ஆனந்த அலறல் போடுகிறது. வாய் திறந்து ஏதாவது பேசிவிட்டால் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சர்வநிச்சயமாக ரஜினிக்கு அடுத்து அஜித்துக்கு தான் அதிக மாஸ் ! ஹாலியுட்டு படங்களில் மேட் டீமன் போல ஆர்யாவிற்கு இரண்டாம் நிலை கதாபாத்திரம். அவருடைய கல்லூரிக்கால கெட்டப் புதுமையாக இருந்தாலும் அப்படியொன்றும் சிரிப்பு மூட்டவில்லை. 

நயன்தாராவிற்கு ஒரேயொரு காட்சி தவிர்த்து கிளாமர் இல்லை. ஆனால் அந்த ஒரேயொரு காட்சி போதும். நயன்தாரா இன்னமும் டொக்கு ஆகவில்லை. அநேகமாக, டாப்ஸியின் நடிப்பில் நான் காணும் முதல் திரைப்படம் இதுதான் நினைக்கிறேன். பேபி ச்சோ ச்வீட் என்று கன்னத்தில் கிள்ளி முத்தா கொடுக்கணும் என்பது போல அப்படி இருக்கிறார்.

துணை நாயகிகள் விஷயத்தில் விஷ்ணுவை பாராட்ட வேண்டும். அதிகம் அறியப்படாத, எனினும் நல்ல பதார்த்தங்களான சுமா ரங்கனாதனையும் அக்ஷரா கவுடாவையும் கொணர்ந்திங்கு சேர்த்திருக்கிறார். டைட்டிலில் அறிமுகம் அக்ஷரா கவுடா என்று பார்த்ததும் பதறிவிட்டேன். அக்ஷரா ஏற்கனவே துப்பாக்கி படத்தில் ஐட்டம் என்னும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பே உயர்திரு 420 என்னும் படத்தில் அறிமுகமாகி விட்டதாக விக்கி சொல்கிறது. 

அஜித்தின் நண்பராக ராணா, நல்ல போலீஸ் கிஷோர், கெட்ட போலீஸ் அதுல் குல்கர்னி, மந்திரி மகேஷ் மஞ்சரேக்கர் என இன்னும் சிலரும் நடித்திருக்கிறார்கள்.

யுவன் இசையில் பாடல்கள் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஒன்றிரண்டு கேட்கக் கேட்க பிடிக்கலாம். பின்னணி இசை கூட வழக்கம் போல அதிரடியாக இல்லையென்றாலும் ஆங்காங்கே படத்தை தூக்கி நிறுத்துகிறது. அஜித் ஒரு காட்சியில் அதுல் குல்கர்னியிடமும், அதற்கடுத்த காட்சியில் மகேஷ் மஞ்சரேக்கரிடமும் சவால் விடுகிறார். அவ்வளவு அருமையான காட்சியொன்றும் இல்லை. ஆனால், அப்படியே அங்கிருந்து திரும்பும்போது ஜோபியில் இருந்து கூலிங் கிளாஸ் எடுத்து மாட்டிக்கொண்டே ஸ்லோ மோஷனில் நடந்துவருகிறார் அஜித். அங்கே தடதடக்கிறது ஒரு பின்னணி இசை. அரங்கம் ஆர்ப்பரிக்கிறது !

ஆக, அஜித்தின் மாஸ், யுவனின் பின்னணி இசை. விஷ்ணுவின் ஸ்டைலிஷ் மேக் இவை மூன்றும் சேர்ந்து தான் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன. அஜித் ரசிகர்களுக்கும், வணிக சினிமாக்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கும் நிச்சயமாக இது ‘தல’ தீபாவளி தான் ! மற்றபடி என்னளவில் ஆரம்பம் பல்லைக் கடித்துக்கொண்டு ஒரேயொரு முறை பார்க்கக்கூடிய சினிமாவாகத் தான் தெரிகிறது.

ஆரம்பத்தில் குறிப்பிடத்தகுந்த சில நல்ல விஷயங்கள் என்று பார்த்தால், மும்பை தாக்குதலில் பலியான ஹேமந்த் கர்கரே என்னும் தியாகியின் வாழ்க்கையை யொட்டி மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட கதைக்களம், (இதனைப் பற்றி இன்னும் விரிவாக உண்மைத்தமிழன் அவர்களின் இடுகையில் படிக்கலாம்), அஜித் – நயன்தாராவிற்கு இடையே காதல், டூயட் வைக்க வாய்ப்பிருந்தாலும் அப்படி செய்யாதது போன்றவற்றை குறிப்பிடலாம்.

ஸ்டைலிஷ் மேக்கிங் என்ற பெயரில் அஜித் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான மாஸ் காட்சியமைப்புகள் கொண்ட படங்களில் நடிப்பது இன்னும் எவ்வளவு நாளைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை. அதற்குள் அஜித் அவருடைய படங்களின் பாணியை மாற்றிக்கொள்வது நல்லது. இல்லையேல் அவருடைய படங்களுக்கு எப்பொழுதுமே ‘ஆரம்பம்’ மட்டும்தான் கிடைக்கும் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 comments:

நம்பள்கி said...

[[ஒரு காட்சியில் அதுல் குல்கர்னியிடமும், அதற்கடுத்த காட்சியில் மகேஷ் மஞ்சரேக்கரிடமும் சவால் விடுகிறார்.]]

தமிழ் படம் தானே!
குல்கர்னி?
மகேஷ் மஞ்சரேக்கரிடமும்?

அக்ஷரா கவுடாவையும்?
தேவ கவுடா பேத்தியா?
___________
அடுத்து அஜித்துக்கு தான் அதிக மாஸ் !
என்ன அர்த்தம்? காசு கொடுத்து விசல் அடிச்சான் குஞ்சுகளை கூட்டிக் கொண்டு வரமுடியாதா? கோடி கோடியா விளம்பரத்துக்கு கொடுப்பதை விட---ஒரு 100 பேருக்கு பிரியாணி; குடி; சைய்யது பீடி ஒரு கட்டு. கையில் பாட்டா ஒரு 100 ரூபாய் கொடுத்து ஒரு வாரம் செய்தால் கூட செலவாகும் பணம்--ஜூஜூ பி...தானே!

நம்பள்கி said...

tamilmanam vote +1!

Manimaran said...

வழக்கம்போல உங்கள் பார்வையில் நடுநிலையான விமர்சனம் பிரபா... படத்தில் லாஜிக் பிழைகள் நிறையவே இருக்கிறது. ஆனால் ஏனோ படம் தட தட வென்று போவதை மறுக்க முடியாது. அந்த நயன்தாரா சீன் வலிய திணிக்கப்பட்டது என்றுதான் தோன்றுகிறது. ரூம் சாவி வேண்டுமென்றால் போட்டு தள்ளிட்டு எடுத்துக்க வேண்டியதுதானே... கடைசியில் அதைத்தானே செய்கிறார்.. ஆனாலும் அந்த ஒரு சீன் கூட படத்தில் இல்லைனா எப்படி..? :-))))

வவ்வால் said...

பிரபா,

விமர்சனத்தை படிச்சா படம் "ஆ ..."ரம்பம்"னு சொல்ல வச்சிடும் போல இருக்கே அவ்வ்!

# சுவிஸ் பேங்க செர்வரை ஹேக் செய்து உள்ள போனாலும் அதில இருந்து பணத்தினை ரிசர்வ் பேங்கிற்லாம் மாத்த முடியாது,ரிசர்வ் பேங் ஃபெட்ரல் பேங்க் என்பதால அவங்க பணம் மாற்றுவது நாம செய்ற ஆன்லைன் பேங்கிங் போல அல்ல.

இதுல இன்னொரு காமெடி என்னனா "ஆன் லைன் டிரான்ஸ்பர்" ஆனாலும் பணம் பிசிக்கலா அங்கேயே தான் இருக்கும், ஹேக் செய்து ப்ணம் அதுவும் ரிசர்வ் வங்கிக்கு போகனும் என்பதை ஷிப்மென்ட் செய்யும் போது கூடவா கன்டுப்பிடிக்க மாட்டாங்க,எனவே இப்படி எல்லாம் நாடு விட்டு நாடு பணம் மாற்ற முடியாது.

ஹாலிவுட் படங்களில் கூட இப்படித்தான் அம்போக்கா சீன் வச்சிருக்காங்க எனவே நாமலும் கண்டுக்க வேண்டாம் அவ்வ்1

திண்டுக்கல் தனபாலன் said...

/// எவ்வளவு நாளைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்...? ///

'தல' ரசிகர்கள் இருக்கும் வரை...!

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

உஷா அன்பரசு said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Harini Resh said...

Hmmm :)
இனிய ‘தல" தீபாவளி நல்வாழ்த்துக்கள் பிரபா ...

Anonymous said...

ஆல் இன் ஆல் அழகுராஜா வந்தாதான் தெரியும்...இது எவ்ளோ பரவால்லனு தோன்றினாலும் ஒன்றும் சொல்வதிற்கில்லை...ஆனால் ராஜேஷ் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது..தீபாவளி வாழ்த்துக்கள்...

aavee said...

நேர்மையான விமர்சனம்.. என் விமர்சனம் இங்கே.. http://www.kovaiaavee.com/2013/11/blog-post.html

தேன் நிலா said...

வெகு இயல்பான விமர்சனம்.... நன்றி...!

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

Very Avarage Movie. Poor Screen Play.

கும்மாச்சி said...

பிரபா நல்ல விமர்சனம்.

Unknown said...

நீங்கள் கூறுவது போல் லாஜிக் சினிமாவை கூறுங்கள் போய் பார்ப்போம்

Philosophy Prabhakaran said...

வெங்கடேசன், நான் படத்தில் உள்ள லாஜிக் தவறுகள் எதையும் சுட்டிக்காட்டவில்லை... தமிழ் சினிமாவில் பார்த்து சலித்த காட்சிகள் நிறைய உள்ளன என்பதைத்தான் பட்டியலிட்டுள்ளேன்...