27 February 2013

ஹரிதாஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்றவாரம் வரை ஹரிதாஸ் என்று ஒரு படம் வெளிவர இருப்பது குறித்து எந்த தகவலும் என்னுள் பதியப்படவில்லை. பேப்பர் விளம்பரங்கள் பார்த்தபோது வழக்கமான லோ-பட்ஜெட் குப்பை என்றுதான் நினைத்திருந்தேன். படத்தில் சினேகா இருக்கிறார் என்பது கூட பார்ப்பதற்கு முந்தயநாளில் தான் தெரிந்துக்கொண்டேன். தொடர்ச்சியாக பலதரப்புகளில் இருந்து வெளிவந்த பாஸிடிவ் கூவல்கள் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. அப்படியென்ன இருக்கிறது ஹரிதாஸில் ?


பிறக்கும்போதே தாயை இழந்து, தந்தையின் கவனிப்பின்றி வளர்ந்து, ஆட்டிஸம் எனும் குறைப்பாடினால் பாதிக்கப்பட்ட சிறுவன். ஒருகட்டத்தில் தந்தை தன்னுடைய மகனின் நிலையை உணருகிறார். பின்னர் அவருக்கும் மகனுக்கும் ஆட்டிஸத்திற்கும் இடையே நிகழும் போராட்டம் தான் ஹரிதாஸ்...!

ஆட்டிஸம் பற்றிய விவரங்களை சில வாரங்களுக்கு முன்புதான் மூத்த பதிவர் பாலபாரதியின் பதிவுகளில் படித்து தெரிந்துக்கொண்டேன். அதற்குள் அதனை படமாகவே பார்க்க கிடைத்த வாய்ப்பு ஒத்திசைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

கிஷோருக்கு நிகழ் வருடம் அற்புதமாக அமைந்திருக்கிறது. வனயுத்தம், ஹரிதாஸ், அடுத்த மாதம் வெளிவரவுள்ள கூட்டம் என்று அனைத்திலும் பிரதான வேடங்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல், துருத்தாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் பிருத்வி தாஸ் மின்னுகிறது. அமுதவல்லி டீச்சர் வேடத்திற்கு சினேகா பொருத்தமான தேர்வு. சினேகாவின் வயதும் அழகும் ஒருசேர பயணிக்கிறது. சினேகாவின் தங்கையும், சக ஆசிரியை சுப்புலட்சுமியும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். பரோட்டா சூரியின் நகைச்சுவை கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறது. தலைமை ஆசிரியை, சினேகாவின் அம்மா, கிஷோரின் நண்பர்கள் போன்ற சிறு நடிக / நடிகைகள் பலம் சேர்த்திருக்கிறார்கள். இரண்டே காட்சிகளில் தோன்றினாலும் யூகி சேது ரசிக்க வைக்கிறார்.

பாடல்கள் மனதில் பதியவில்லை. எனினும், பிண்ணனி இசை இதமாக வருடிக்கொடுத்து பின் எழுச்சியூட்டுகிறது. போலீஸ் கானாவை தவிர்த்து, இசை விஜய் ஆண்டனி என்றால் நம்ப முடியாது. 


ஹரிதாஸ் - என்கிற சரித்திரப்புகழ் வாய்ந்த பெயரை பயன்படுத்தியிருப்பது வருத்தத்திற்குரிய செயல். இந்த படத்திற்கு ஹரிதாஸ் என்ற பெயரை சூட்டவேண்டிய கட்டாயமும் இல்லை. தயாரிப்பாளருடைய பெயரையே கூட சூட்டியிருக்கலாம்.

படம் இரண்டு விஷயங்களை முன்னிறுத்துகிறது. ஒன்று என்கவுன்ட்டர், மற்றொன்று ஆட்டிஸம். என்கவுன்ட்டரை ஒதுக்கிவிடலாம். சொல்லப்போனால் என்கவுன்ட்டர் பற்றிய காட்சிகளுக்கு படத்திலேயே விடை இருக்கிறது. “ஆமாம்... நான் ஒரு LICENSED KILLER...!” என்று நாயகனே மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார். ஆட்டிஸம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதற்காக இயக்குனர் GNR குமாரவேலனுக்கு எழுந்து நின்று கைதட்டலாம்...!



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 February 2013

அந்தமான் - ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானில் மிக மிக எளிமையாக, குறைந்தபட்ச வழிகாட்டுதலோடு சுற்றி பார்க்கக்கூடிய தீவுகள். ராஜீவ் காந்தி வாட்டர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் எனும் சிறிய பூங்காவிலிருந்து படகுகள் காலையில் கிளம்பும். நகரின் மையப்பகுதியில் இருந்து பூங்காவிற்கு ஆட்டோவில் செல்ல இருபது அல்லது முப்பது ரூபாய் ஆகலாம். மதிய உணவு உட்பட மூன்று தீவுகளையும் சுற்றிப்பார்க்க 500 ரூபாய் கட்டணம். டிக்கெட் கவுண்ட்டர், கூட்டம் பற்றிய கவலை வேண்டாம். பூங்காவின் முகப்பிலேயே நான்கைந்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் ஸ்டால் அமைத்து டிக்கெட் தருகிறார்கள். தனித்தனியாக மூன்று தீவுகளையும் கூட சுற்றிப்பார்க்கலாம். ஆனால் அது அவசியமில்லாதது. ஏன் என்று பதிவின் இறுதியில் உங்களுக்கே புரியும். நார்த் பே, ஜலகிரீடைகளின் தலைநகரம் என்பதால் டவல், மாற்றுத்துணி அவசியம் எடுத்துச்செல்லுங்கள். மதுப்பிரியர்கள் தங்கள் தகுதிக்கேற்ப குவாட்டரோ, ஹாஃபோ எடுத்துச்செல்வது சாலச்சிறந்தது. அப்புறம் தேவைப்பட்டால் கேமரா.

நாம் இப்போது பார்க்கப்போகும் மூன்று தீவுகளுமே நிரந்தர வசிப்பிடம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். இவை சுற்றுலா பயணிகள் காலையிலிருந்து மாலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும் சிறிய அளவிலான தீவுகள்.

ராஸ் தீவு
போர்ட் ப்ளேரில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம், இருபது நிமிட படகு பயணத்தில் ராஸ் தீவு. அங்கே கிட்டத்தட்ட அனைவருமே ரோஸ் ஐலேன்ட் என்றுதான் உச்சரிக்கிறார்கள். சுற்றிப்பார்த்துவிட்டு மறுபடி படகிற்கு வர இரண்டு மணிநேர அவகாசம் கொடுப்பார்கள். அதுவே போதுமானது. தீவை அடைந்ததும் அழகிய மான்குட்டிகள் நம்மை வரவேற்கின்றன. போட்டோ எடுக்க முனைந்தால் மட்டும் மிரண்டு ஓடுகின்றன.

ராஸ் தீவு சுதந்திரத்திற்கு முன்பு அந்தமானின் நிர்வாக தலைமையிடமாக விளங்கிய பகுதி. 1941ல் ஏற்பட்ட நிலநடுக்கம், பின்னர் ஜப்பானிய படையெடுப்பு என்று உருக்குலைந்து விட்டது. அந்த பழைய இடிபாடுகளுடன் கூடிய கட்டடங்கள் தான் தற்போதைய ராஸ் தீவை சுற்றுலா தளமாக வைத்திருக்கிறது. 



பாவம் போக்கிய தேவாலயம்
மருத்துவமனை, தேவாலயம், கல்லறை தோட்டம், அச்சகம், டென்னிஸ் கோர்ட் போன்றவை இருந்திருக்கின்றன என்பதை அங்கிருக்கும் பலகைகளும், எஞ்சியிருக்கும் கட்டிடங்களும் சொல்கின்றன. கெளதம் கார்த்திக் உள்ளங்கையிலிருந்து துளசி பாவத்தை துடைத்துவிடுவாரே அந்த தேவாலயம் இங்குதான் உள்ளது.

இந்த வரலாறெல்லாம் எங்களுக்கு வேண்டாம் பாஸு என்று சொல்லும் கொண்டாட்ட விரும்பிகள் சற்றே மக்கள் மந்தை செல்லும் பாதையிலிருந்து விலகினால் மனித நடமாட்டமில்லாத கடலை அடையலாம். நிர்வாணக்குளியல் போடலாம். காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும்வரை என்று பாடிக்கொண்டே ஆடலாம். ஆனால் இரண்டு மணிநேரங்களுக்குள் மறுபடியும் படகிற்கு வந்துவிடவும்.



ஆளில்லாத கடற்கரையில்...!
வைபர் தீவு
மற்றொரு குட்டி தீவு. இங்கே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. படகு பணியாளே நம்முடன் வந்து வைபர் தீவை பற்றி சிறிய உரை ஒன்றை ஆற்றுவார். அந்த உரையை கேட்ட பலரும் ஒருமுறையாவது “உச்சு” கொட்டுவார்கள். சிலர் கண்ணீரே விடுவார்களாம்.

முதன்முதலாக ஆங்கிலேயர்கள் வைபர் எனும் கப்பலில் இங்கு வந்தடைந்ததாலும், இங்கே வைபர் எனும் விஷப்பாம்புகள் உள்ளதாலும் இப்பெயர் பெற்றுள்ளது. அந்தமான் என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஜெயில். அந்த ஜெயில் கட்டுவதற்கு முன்பு வரை வைபர் தீவு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக இருந்துள்ளது. இந்திய விடுதலை போராளிகளை கை, கால்களை பிணைத்து இங்கு விட்டுவிடுவார்களாம். தொடர்ச்சியாக உணவு, குடிநீர் கிடைக்காமல் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் வாடி, பாம்புகளிடம் கடிப்பட்டு மிகுந்த துயரத்தோடு மடிந்தார்களாம் இந்திய போராளிகள். இதனை சொல்லி முடிக்கும்போது அந்த கைடே சற்று உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீர் வழிய வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என்று கோஷம் எழுப்பினார்.

மறுபடி படகிற்கு வந்ததும் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும். விஜிடபிள் பிரியாணி. அதனை அப்புறம் சாப்பிடலாம் என்று பைக்குள் திணிக்காமல் படகிலேயே வைத்து சாப்பிட்டுவிடுவது உசிதம். ஏனெனில், நார்த் பே நிறைய நீர் விளையாட்டுகள் அடங்கிய கொண்டாட்டத்தீவு.



இன்றைய பிணத்தின் மீது நாளைய பிணமொன்று...!
நார்த் பே
அந்தமானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் நீர் விளையாட்டுகள் மொத்தமாக கிடைக்கப்பெறும் ஒன் ஸ்டாப் ஷாப். இந்த தீவை உங்களுக்கு நன்றாக தெரியும். பழைய இருபது ரூபாய் நோட்டுகளில் தென்னை மரங்களால் சூழப்பட்ட, கலங்கரை விளக்கமாக பொறிக்கப்பட்டிருக்கும். இங்குள்ள தீரச்செயல் வாய்ப்புகளை ஒருநடை பார்த்துவிடுவோம். எளிதான புரிதலுக்காக படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்கூபா டைவிங்
டிஸ்கவரி வகையறா சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடையை அணிந்துக்கொண்டு மீன்களோடு நீந்திவிட்டு வரலாம். சிறிதளவு நீச்சல் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கட்டணம் ரூ.4000/-

ஸீ வாக்
நீச்சல் தெரியாதவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். ஹெல்மெட் மற்றும் பிரத்யேக ஆடையுடன் கடலின் உள்ளே மணல் படுகையில் நடந்து செல்லலாம். கட்டணம் ரூ.2700/-

ஸ்னார்கலிங்
கடலுக்குள் நீந்த வேண்டிய அவசியமில்லை. தலையை மட்டும் நீருக்குள் செலுத்தியபடி மிதக்க வேண்டும். சுவாசத்திற்காக நீர்பரப்பிற்கு மேலிருந்து பிளாஸ்டிக் குழாய் இணைக்கப்பட்டிருக்கும். கடலுக்கு அடியில் உள்ள மீன்களை, பவளப்பாறைகளை ரசிக்கலாம். கட்டணம் ரூ.500/-

பனானா ரைடு
தொலைகாட்சியில் டகேஷி கேஸில் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்பீட் போட்டின் பிற்பகுதியில் வாழைப்பழ வடிவ பலூன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மீது நால்வரோ, ஐவரோ அமர படகு வேகமெடுக்கும். குறிப்பிட்ட தொலைவு வரை சென்றதும் படகை வேண்டுமென்றே திசைதிருப்பி நம்மை கடலுக்குள் தள்ளிவிடுவார்கள். கட்டணம் ரூ.250/-

ஸ்பீட் போட் & வாட்டர் ஸ்கூட்டர்
ரொம்ப ஸ்பெஷல் இல்லை. குடும்பத்தோடு செல்பவர்கள் ஸ்பீட் போட்டில் பயணிக்கலாம். சாகச விரும்பிகளை போட்டின் கூம்பு வடிவ முற்பகுதியில் அமர்த்தி வேகமெடுக்கிறார்கள். வாட்டர் ஸ்கூட்டரை நிறைய சினிமா பாடல் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

குறிப்பிடப்பட்டுள்ள எதற்கும் பயப்பட தேவையில்லை. லைப் ஜாக்கெட் கொடுப்பார்கள். அருகிலேயே நீச்சல் தெரிந்த உதவியாளர்கள் இருப்பார்கள். தேவைப்பட்டால் உடன் வருவார்கள். மேலும் இவையனைத்தும் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை அனுபவமாக இருக்கக்கூடும். அதனால் தவறவிட்டு பின்னர் வருந்தாமல், குதூகலமாக கும்மியடித்துவிட்டு வாருங்கள்.

உடை மாற்றிக்கொள்ளவும், குளிக்கவும், கழிக்கவும் - தென்னை ஓலையால் மூடப்பட்ட தற்காலிக அறைகள் உள்ளன. தண்ணீரில் ஆட்டம் போட்டதும் பசியெடுக்கும், அதற்கு தகுந்தாற்போல கடல் உணவுகள் கிடைக்கின்றன.

மாலை நாலரை மணிவாக்கில் மறுபடியும் போர்ட் ப்ளேருக்கு வந்துவிடலாம். படகில் எங்களோடு ஒரு தமிழ்க்குடும்பம் பயணித்தது. வழக்கமாக குழந்தைகளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. எனக்கும் குழந்தைகளோடு இணக்கமாக பழகத் தெரியாது. அவர்கள் வீட்டுக்குழந்தை அநியாயத்திற்கு என்னுடன் ஒட்டிக்கொண்டது. என்னுடைய நீளமான கைவிரல் நகத்தை தொட்டுபார்த்துக்கொண்டே இருந்தது. போர்ட் ப்ளேர் திரும்பியதும் அவர்களிடமிருந்து விடைபெற, குழந்தை என் கரங்களை பற்றிக்கொண்டு ஒரே அடம். கொஞ்சம் சிரமப்பட்டு தான் வசிப்பிடம் திரும்பினேன்.

அடுத்ததாக நாம் காணவிருப்பது பழங்குடியினர் வசிக்கும் பகுதியை கடந்து செல்ல வேண்டிய பாராடங்...!

தொடரும்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 February 2013

அந்தமான் - வாழ்க்கைமுறை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் அந்தமான் மண்ணில் கால்பதித்த சில நிமிடங்களிலேயே என் தந்தையின் நண்பருடைய செல்வாக்கை புரிந்துக்கொண்டேன். ஒருமாதிரி திருட்டுமுழியுடன் நுழைந்த என்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழிமறித்து கேள்விக்கணைகளை தொடுத்தார்கள். இன்னாருடைய விருந்தினர் என்று சொன்னதும் மரியாதையாக அனுப்பிவைத்தார்கள். நான் தங்கியிருந்த தெலானிப்பூர் பகுதியில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே அவரை தெரிந்திருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கிறது. தங்குமிடத்திற்காக அலைய அவசியமில்லாமல் போனது. விருந்தினருக்காக கட்டிவைக்கப்பட்ட சில அறைகளுள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டேன். ஏசி இல்லை. மற்றபடி விசாலமான கட்டில், தொலைக்காட்சி, சுத்தமான குளியல் மற்றும் கழிவறைகள், பாத்ரூமில் ஹீட்டர் என்று செளகரியமாக இருந்தது. அடுத்தநாள் என்னுடைய சைட் ஸீயிங் இனிதே துவங்கியது. இப்போது சுற்றுப்பயணத்தில் தொபுக்கடீர் என்று குதிப்பதற்கு முன்பு அந்தமான் மக்களின் வாழ்க்கைமுறையை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நம் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட இரண்டு - சினிமா & அரசியல். இரண்டினுடைய ஆதிக்கமும் அந்தமான் மக்களிடம் அதிகமில்லை.

சினிமா
கப்பலில் பயணிக்கும்போது தான் உள்ளூர்வாசிகள் அந்த அதிர்ச்சியைக் கொடுத்தார்கள் - அந்தமானில் திரையரங்குகள் இல்லை. லைட் அவுஸ், ஆனந்த் பேரடைஸ், சப்னா தியேட்டர் போன்ற அரங்குகள் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்திருக்கின்றன. ஆட்கள் வரத்து குறைந்து நாளடைவில் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. இளைஞர்களை பொறுத்தமட்டில், சினிமா பார்ப்பதென்றால் டிவிடியில் தான் பார்ப்போம் என்கிறார்கள். அப்போதும் கூட புதுப்படம், உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வமெல்லாம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. ரஜினி - கமல், அஜித் - விஜய் போன்ற பிம்பிள்ளிக்கி பிளாக்கி மோதல்கள் எல்லாம் அங்கே நடைபெறுவதில்லை.

அரசியல்
அந்தமான் & நிகோபர், பாண்டிச்சேரியை போலவே ஒன்றியப் பகுதியாகும். எனினும், அதன் அரசியல் மற்ற ஒன்றியப்பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. அந்தமானுக்கென்று முதலமைச்சர் கிடையாது. ஆட்சியதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது. ஒரேயொரு லோக் சபா எம்.பி அந்தமானில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். நீண்ட வருடங்களாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் அங்கு எம்பியிருக்கிறார். ஆனால் தற்போது பி.ஜே.பி எம்பி அமர்ந்திருக்கிறார். “யோவ்... பி.ஜே.பிக்கு ஓட்டு போடுற அளவுக்கு மோசமான ஆளுகளாய்யா நீங்க...” என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. இங்கே கட்சி, சாதி, மதமெல்லாம் பார்த்து வாக்களிக்க மாட்டோம். வேட்பாளரை பார்த்துதான் வாக்களிப்போம் என்கிறார்கள்.



உணவு
சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடல்சூழ் பகுதியென்பதால் கடல் உணவுகள் பிரசித்தி. என்ன ஒன்று, தமிழகத்தில் வஞ்சிரை, சங்கரா, வாளை, சுறா, இறால் என்று சொல்லப்படுபவை அங்கே இந்தி, வங்காள மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஜிங்கான் மச்சி என்றால் இறாலை கொண்டுவந்து வைக்கிறார்கள். மற்றபடி, சுற்றுலா பயணிகளிடம் மான்கறி கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி ஆசை காட்டுகிறார்கள். அதேசமயம், மான்கறி சாப்பிட்டு மாட்டினால் கடுமையான தண்டனைகள் உண்டு என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.



மது
ANIIDCO எனும் நிறுவனம் தான் அந்தமான் முழுவதும் சரக்கு சப்ளை செய்கிறது. தமிழகத்தில் TASMAC மாதிரி என்று சொல்ல முடியாது. ANIIDCO நேரடியாக சில கடைகளை அந்தமானில் நிறுவியுள்ளது. இதனை அங்குள்ளவர்கள் ‘சொசைட்டி’ என்று சொல்கிறார்கள். அத்தகைய கடைகளில் நீங்கள் சரக்கு வாங்க மட்டுமே முடியும். உட்கார்ந்து பருக இடமில்லை. மற்றபடி போர்ட் ப்ளேரில் இருபதடிக்கு ஒரு மதுக்கூடம் (பார்) அமைந்திருக்கிறது. மதுக்கூடங்களில் நம்மூர் தனியார் பார் முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஸ்மால், லார்ஜ், கட்டிங் அளவுகளில் மது, கண்ணாடி குடுவைகளில் பரிமாறப்படுகிறது. நான்கைந்து கிண்ணங்களில் சைட் டிஷ். விலையும் ஒப்பீட்டளவில் குறைவு. அதிலும் அருகிலிருந்த Holiday Inn மதுக்கூடத்தில் வேண்டப்பட்டவர் என்று அறிமுகப்படுத்தி விட்டதில் நல்ல மரியாதை கிடைத்தது.



பட உதவி: கூகிள்
பயணம்
அரசு பேருந்துகளை தேட வேண்டியிருக்கிறது. மினி பஸ் போன்ற அளவில் தனியார் பேருந்துகள் நிறைய தென்படுகின்றன. எந்தவொரு தீவுக்கும் மேம்பால போக்குவரத்து கிடையாது. திக்லிப்பூர், ரங்கத், மாயபந்தர் போன்ற தீவுகளுக்கு செல்வதென்றால் பேருந்தே கப்பலில் ஏறி பயணிக்கிறது. ஆட்டோக்காரர்கள் அதிகம் ஏமாற்றுவதில்லை. ஆனால், அந்த வேலையை டூரிஸ்டு ஏஜெண்டுகள் செவ்வனே செய்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவு.

மொழி & மதம்
தமிழும் வங்காளமும் ஆதிக்க மொழிகள். ஹிந்தி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தெலுங்கு, மலையாளம் பேசும் மக்களும் இருக்கிறார்கள். முதலாளிகள், தொழிலதிபர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருக்கிறார்கள். சமீபகாலமாக பெங்காலிகளின் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மை. காளியும் விநாயகரும் இஷ்ட தெய்வங்கள். முருகனை வணங்குபவர்கள் நிச்சயம் தமிழர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம். அடுத்தபடியாக முறையே கிறிஸ்தவமும் இஸ்லாமியமும்.

மற்றவை
பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. அவை தவிர்த்து மேற்படிப்பு படிக்க விரும்பினால் தாயகத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தான் செல்ல வேண்டும். இந்திய நகரங்களின் தீராத தலைவலியாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் அந்தமானில் மிக மிக குறைவு. சிக்னல் விளக்குகள் கிடையாது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் மட்டும் நிற்கிறார்கள். யாரையும் மடக்கி லஞ்சம் வாங்குவதில்லை. காய்கறி, பழங்கள் தாயகத்திலிருந்து அனுப்பப்படுவதால் கொள்ளை விலையில் விற்கப்படுகின்றன. யாரும் செய்தித்தாள்கள் படிப்பதில்லை. படிக்க வேண்டுமென்று நினைத்தாலும் மதியத்துக்கு மேல்தான் கிடைக்கும். சொல்லப்போனால் யாரும் செய்திகளை தெரிந்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.

தொடரும்

முந்தய பகுதிகள்:
பயணத்தொடர் ஆரம்பம்
கப்பல் பயணம்

மேலும் சில கேள்விகளும் பதில்களும்


1. சீசன் ?
டிசம்பர் - மே. மற்ற மாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சில தீவுகளில் சீசன் இல்லாத சமயம் பராமரிப்பிற்காக சுற்றுப்பயணிகளை அனுமதிக்க மாட்டார்கள். மழைக்காலத்தில் உள்ளூர்கப்பல்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் அபாயங்கள் உள்ளன.

2. எத்தனை நாட்கள் தேவை ?
போக வர விமானப்பயணம் சேர்த்து எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். ஓரிரு நாட்கள் குறைவாக இருப்பின் சில இடங்களை தவிர்த்துவிட்டு சுற்றிப்பார்க்கலாம்.

3. சொகுசுக்கப்பல்கள் உண்டா ?
முந்தய பதிவில் குறிப்பிட்ட Azamara Journey எப்போதாவது ஒருமுறை பயணிக்கும். டிக்கெட் கட்டணம் 3500 அமெரிக்க டாலர்களில் துவங்கும். தவிர, AMET நிறுவனம் இயக்கும் கப்பல்களில் டிக்கெட் விலை பதினெட்டாயிரத்தில் ஆரம்பிக்கிறது.

4. கப்பல், விமானம் இரண்டில் எது சிறந்தது ?
கப்பலில் போக வேண்டுமென்று பேராவல் கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் விமானத்தையே தேர்ந்தெடுக்கவும். கப்பலில் பயணம் செய்தால் மூன்று நாட்கள் ஸ்வாஹா, விமானத்தில் மூன்றே மணிநேரங்கள். தவிர, தீவுகளுக்கிடையே சிறிய கப்பல்களில் பயணிக்கலாம்.

5. விமானக் கட்டணம்
நான்கைந்து மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால் ஒருவழிப்பயணத்திற்கு 5000ரூ வரை செலவாகும். தேதி நெருங்க நெருங்க பதினெட்டாயிரம் வரை அதிகரிக்கும். வார இறுதி நாட்களை விட, வாரநாட்களில் குறைவாக இருக்கும்.

மேலும் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2013

பிரபா ஒயின்ஷாப் - 18022013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

உறவினர் ஒருவரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா ! குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும். சுற்றமும் நட்பும் சூழ, கேக் தயாராகி, குழந்தை கேக்குக்கு முன்னால் நின்று வெட்டுவதற்காக காத்திருக்கிறது. குழந்தையின் தாயார் குழந்தையிடம், “செல்லக்குட்டி... கேண்டில்ஸை ஊதுறதுக்கு முன்னாடி கண்ணை மூடி என்ன வேணும்ன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கனும்... அப்புறம் தான் ஊதணும்... கடவுள் என்ன கேட்டாலும் கொடுப்பார்... அம்மா ஒன் டூ த்ரீ சொல்லுவேன்... ப்ரே பண்ணிட்டுதான் ஊதணும்...” என்று மறுபடி மறுபடி அழுத்தமாக சொல்லி கொடுத்துக்கொண்டிருந்தார். கேக் வெட்டும் நேரம் வந்தது. ஒன்... டூ... த்ரீ... குழந்தை, “கடவுளே... எனக்கு அந்த ப்ளு கலர் கேண்டில் வேணும்...” என்று வேகவேகமாக சொல்லிக்கொண்டே ஊதி முடித்தது.

*****

சில்லுன்னு ஒரு சந்திப்பு, வணயுத்தம், ABCD, நேசம் நெசப்படுதே, மெளன விழிகள், யாரது ? - என்று கடந்த வாரஇறுதி மொக்கைப்பட விரும்பிகளுக்கு விருந்து. முதல் மூன்றும் தப்பித்தவறி நன்றாக இருந்து தொலைத்துவிடும் அபாயம் இருப்பதால், அக்மார்க் மொக்கைப்படங்களான பிந்தைய மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய விரும்பினேன். தமிழில் ஒரு ஹாரர் மூவி என்ற ப்ளஸ் இருப்பதால் யாரது ? படத்திற்கு சென்றேன். லோ-பட்ஜெட் படங்களில் தொழில்நுட்பம், காட்சியமைப்புகள் படுகேவலமாக இருக்குமென்பது உ.கை.நெ.க. ஆனால் கதை ? ஒரு பெண்ணோட வாழ்க்கையில நாலு பேரு விளையாடிட்டாங்க. அந்த பொண்ணு ஆவியா வந்து பழி வாங்குறது போன்ற மொக்கையான கதையை எத்தனை முறைதான் சொல்வார்கள். ஊர்பக்கம் வாய்மொழியாக சொல்லப்படும் பேயக்கதைகளை வைத்தே இதைவிட சிறப்பாக படம் பண்ணலாம். கிராபிக்ஸில் டார்ச் லைட்டு அடிப்பது போல ஆவியை காட்டுவதெல்லாம்... போங்க பாஸ் கிச்சுகிச்சு மூட்டாதீங்க. பேயை காட்டாமலே அப்படி ஒன்று இருப்பதாக உணர்வு ஏற்படுத்துவது தான் உண்மையான ஹாரர் படத்தின் வெற்றி...!

*****

மேற்கண்ட நகைச்சுவை படத்தை மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாசாவில் கண்டேன். நீண்ட நாட்களாக அங்கே செல்ல வேண்டுமென்று ஆவல். ஏரியா விட்டு ஏரியா போய் சினிமா பார்ப்பதில் ஒரு அலாதிப்பிரியம். மாம்பலம் ரயில்நிலையத்தில் இருந்து பொடிநடையாக நடந்து சென்றேன். கோதண்டராமன் கோவிலுக்கு அருகிலுள்ள வீடுகள் இன்னமும் நவீனமயமாக்கலின் மிச்சமாக இருந்துக்கொண்டிருக்கிறது. ஓட்டுக்கூரை, திண்ணை என்று அந்த வீடுகளை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. ஸ்ரீநிவாசா - அமர்க்களம் ஷூட்டிங் நடந்த திரையரங்கம் என்று நினைக்கிறேன். புதிப்பிக்கப்பட்ட பிறகும் கூட 25ரூ, 30ரூக்கு டிக்கெட் கொடுத்து நியாயமாக செயல்படுகிறார்கள். முன்சீட்டின் மீது கால் வைத்தால் கூட காவலாளி டார்ச் லைட்டோடு வந்து விடுகிறார். இன்னும் சில வருடங்களுக்கு திருமண மண்டபமாகவோ, குடியிருப்பு பகுதியாகவோ மாறாமல் இருக்குமென்று நம்புகிறேன்.

*****

தொண்ணூறுகளின் மத்தியில் வடகொரியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மடிந்தார்கள். அந்த சமயத்தில் யாரும் தங்களுடைய குழந்தைகளை வெளியே அனுப்ப மாட்டார்களாம், பசி தாளாமல் யாரேனும் கொன்று தின்றுவிட வாய்ப்பு இருந்ததால். மீண்டும் அப்படியொரு கொடுமையான சூழலை நோக்கி வடகொரியா பயணித்துக்கொண்டிருக்கிறது. ஒருவர் பசிக்கொடுமை தாளாமல் தான் பெற்ற மகளையும் கொன்றிருக்கிறார், சாப்பிடுவதற்காக. அதை தடுக்க வந்த மகனையும். வெளியில் சென்று வீடு திரும்பிய மனைவியிடம் உணவு கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சியுடன் சொன்னாராம். அந்த தாய் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். இன்னொரு பெரியவர் பஞ்சத்தின் காரணமாக இறந்துபோன தன்னுடைய பேரனின் பிணத்தை தோண்டி எடுத்து சாப்பிட்டிருக்கிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாத அரசாங்கம் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது.


*****

நம்ம சென்னை பிப்ரவரி இதழில் ஞாநி:
சிறந்த டூவீலர் ரைடர்களுக்கென்று தனி விருது ஏதாவது ஏற்படுத்தினால் அதற்கு பரிசீலிக்கப்படும் தகுதி நிச்சயமாக எனக்கு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னைப் பில்லியனில் கூட்டிக்கொண்டு சுற்ற நண்பர்கள் அமைந்துவிடுகிறார்கள். இதழியல் படிக்கும் மாணவர்கள் பயிற்சிக்காக ஓரிரு மாதங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு நிருபருடன் கோர்த்துவிட்டு நேரடி அனுபவம் பெற அனுப்புவது வழக்கம். என்னுடன் வந்த பெண் ஸ்கூட்டர் வைத்திருந்தாள். எழுபதுகளின் இறுதியில் அது மிக அபூர்வமான விஷயம். அதைவிட அன்று அபூர்வமானது ஒரு பெண் வண்டி ஓட்ட, பில்லியனில் ஆண் உட்கார்ந்து செல்வது. பொதுவாக பெண்களின் பேக் சீட் டிரைவராக நிஜ வாழ்க்கையில் இருக்கும் ஆண்கள், பைக்கில் பில்லியன் ரைடராக இருக்க விரும்புவதில்லை. என் சக ஆண்கள் சிலர் அவளுடன் செல்ல நேர்ந்தால், நாங்கள் ஓட்டுகிறோம் என்று அவளை பில்லியனில் உட்காரவைத்துவிடுவார்கள். அவளுக்கு அது பிடிக்காது. எனவே என்னோடு நிறைய அசைன்மெண்டுகளுக்கு வருவாள். அப்போது மட்டுமல்ல, இப்போதும் கூட ஒரு பெண் ஓட்டும் டூவீலரில் ஒரு ஆண் பில்லியன் ரைடராக இருந்தால், தெருப்பார்வைகள் வேறு மாதிரித்தான் இருக்கின்றன.


*****

சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரை அணுகினேன். எனக்கு முன்பு ஒரு முதியவருக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார், ஊசியும் போட்டார். என்னுடைய முறை வந்து உள்ளே நுழைந்தேன். பெரியவர், “எப்பயும் ரெண்டு ஊசி போடுவீங்க... இன்னைக்கு ஒன்னுதான் போட்டிருக்கீங்க...” என்று அசடு வழிந்தபடி நின்றுக்கொண்டிருந்தார். “இல்லை தேவைப்படாது... அந்த இன்ஜெக்ஷன்லயே சரியாயிடும்...” என்றார் மரு. பெரியவர் அதில்லைங்க என்று ஆரம்பித்து மறுபடியும் பழைய வசனத்தையே ஒப்பித்தார். மருத்துவர் சிரித்துக்கொண்டே இன்னொரு ஊசியை போடும்படி உதவியாளரை பணித்தார். அந்த பெரியவருக்கு தேவை மருந்து, மாத்திரை அல்ல. தாம் மருத்துவம் பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு மட்டுமே. மனநல மருத்துவர்களை அணுகுபவர்களுக்கு உடலில் விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத, அதே சமயம் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மாத்திரைகளை கொடுப்பார்களாம். தாம் மாத்திரை உட்கொள்கிறோம் என்ற நினைப்பிலேயே நோயாளி தேற ஆரம்பித்துவிடுவாராம்.

அதனால், இந்த அவரை விதை இருக்கிறதே... அதை அகத்திக்கீரையுடன் வதக்கிச் சாப்பிட்டால், வாதம் தீருமா என்றால் தீரும். சிலபேர் தீராதுன்னு சொல்றான்... தீராதுன்னுறவனுக்கு தீராது. இவ்வாறாக சாப்பிட்டு வந்தால் இந்தநாள் மட்டுமல்ல, எல்லா நாளுமே இனிய நாளாக மலரும்...!


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 February 2013

அந்தமான் - கப்பல் பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். பட்டாளத்திலிருந்து முறைமாமன் வரும்போதே ராணுவ சீருடை அணிந்துக்கொண்டு தான் வருவார். சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி வரைக்கும் அப்படித்தான். நீங்க வேணும்ன்னா கிண்டலடித்து பொழுதை போக்கிக்கலாம். ஆனால் ராணுவ வீரர்கள் உண்மையிலேயே கப்பலில் ஏறும்போதும், கப்பலில் இருந்து இறங்கும்போதும் சீருடை அணிந்திருந்தார்கள். அதுதான் அவர்களுடைய விதிமுறை போல. சுமார் நூறு வீரர்கள், அந்தமானில் ட்யூட்டி போட்டுவிட்டதால் எங்களுடன் நன்கவுரியில் பயணிக்க வந்திருந்தார்கள்.



சம்பிரதாயங்களை கடந்துவந்து நன்கவுரியை கண்டபோது உண்மையில் நான் பிரமித்திருக்க வேண்டும். மாறாக, அதிர்ச்சியும் ஏமாற்றமும் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. காரணம், அதன் அருகிலேயே நின்றிருந்த Azamara Journey என்ற சொகுசுக்கப்பல். நன்கவுரியை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருந்திருக்கலாம்.

ராணுவ வீரர்கள், ஒருசில backpackக்குகள் தவிர்த்து என் சகபயணிகள் அனைவரும் சாமானியர்களாகவே இருந்தனர். அவர்களில் இருவர், ஸ்வராஜ்தீப், நன்கவுரி, அக்பர் என்று கப்பல்களைப் பற்றி டவுன் பஸ் போல பேசிக்கொண்டிருந்தனர். என்னுடைய எண்ணங்கள் தன் ஆதர்ச நடிகரின் படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் எடுத்துவிட்டு திரையரங்க வாயிலில் காத்திருக்கும் ரசிகனைப் போலவே இருந்தன. பெருமைக்காக சொல்லவில்லை, கப்பலில் பயணிகளை ஏற்றத் தொடங்கியதும் முதலில் நுழைந்தது அடியேன் தான். எனக்கான அறையில் மூன்று, இரண்டடுக்கு கட்டில்கள். சிறுபிள்ளை போல, மேலிருக்கும் கட்டிலை விருப்பமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். மூட்டை முடிச்சுகளை இறக்கிவைத்துவிட்டு நேரே, தலைமுடியை சிலுப்பிக்கொண்டு கப்பல் முக்குக்கு சென்று நின்று பார்த்தேன். அதற்குள் எங்கிருந்தோ ஒரு அதிகாரி வந்து விரட்டினார். கப்பலுக்குள் இருந்து கடலுக்குள் காறி உமிழ்ந்தேன். திருமண மண்டபங்களில் இங்குமங்கும் ஓடியாடும் குழந்தையின் பாங்கு எனக்குள் குடிபுகுந்திருந்தது.



இரண்டாம் வகுப்பு அறை
நான்கு மணிக்கு கிளம்ப வேண்டிய கப்பல், துறைமுக சம்பிரதாயங்கள் முடிந்து ஏழு மணிக்குதான் கிளம்பும் என்று முன்பே தெரிந்திருந்ததால் பதற்றமடையவில்லை. மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்ததும், வேறு விதமான கலவரம் எனக்குள் பரவ ஆரம்பித்தது. தமிழ் முகங்களை தேட வேண்டியதாகிவிட்டது. ஒரே குச் குச் ஹோத்தா ஹை. காலக்கொடுமை. கப்பல் சென்னையில் நின்றுக்கொண்டிருக்கிறது. தமிழில் பேசுபவர்கள் யாரேனும் தென்பட்டால், “ஓ... நீங்க தமிழா ?” என்று விளிக்க வேண்டியிருக்கிறது.

கேண்டீனில் எழுநூற்றி ஐம்பது ரூபாய் கட்டிவிட்டால் மூன்று நாள் சாப்பாட்டுக்கு அட்டை கொடுத்துவிடுவார்கள். வேளாவேளைக்கு பணம் கட்டியும் சாப்பிடலாம். எப்படி செய்தாலும் அவர்கள் குறிப்பிட்டுள்ள நேரங்களில் சென்றால் மட்டுமே சாப்பாடு கிடைக்கும். இரவு ஏழு மணிக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கப்பலில் அசைவு தென்பட்டது. துரிதமாக அறைக்கு சென்று ஒரு Avomine-ஐ விழுங்கினேன். கடல் நோய்மை பற்றி இணையத்தில் படித்து, Avomine மாத்திரைகள், எழுமிச்சைப்பழம், ஊறுகாய் என்று சகல முன்னேற்பாடுகளுடன் சென்றிருந்தேன். கப்பலின் மேல் தளத்திற்கு வந்து பார்த்தேன். JESUS CALLS அலுவலகம் என் கண்களில் இருந்து மறைந்துக்கொண்டிருந்தது.

அடுத்த இரண்டரை நாட்களுக்கு திரும்பிய திசைகளிலெல்லாம் கடல், கடல், கடல், கடல் மட்டும்தான். செல்போன் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டதும் தனிமையை உணர ஆரம்பித்துவிட்டேன். அறையில் நான்கு வட இந்தியர்கள் இந்தியில் கதைத்துக்கொண்டிருந்தார்கள். இன்னொருவர் லேப்டாப்பில் விண்ணைத் தாண்டி வருவாயா ஓடவிட்டு, கையில் குமுதம் வைத்து படித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இந்தியில் தான் பேசினார். ஜெயமோகனின் யானை டாக்டரை புரட்டியபடி உறங்கிவிட்டேன். எதிர்பார்த்தது போல கடல் நோய்மை என்னை பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அப்படியொன்று இருப்பதாகவே தெரியவில்லை. பங்க்கில் சில பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக அறிந்தேன்.



சூர்யோதயம்
கப்பலில் பயணிக்கும்போது சூர்யோதயம் ஒரு திவ்ய தரிசனம். முதல்நாள் அயர்ச்சியில் எட்டு மணிவரைக்கும் தூங்கிவிட்டேன். மறுநாள் காலை ஐந்தே முக்காலுக்கெல்லாம் விழித்துவிட்டேன். சூரியன் மேகக்கூட்டங்களுக்கு இடையே மறைந்திருந்தது. நிறைய பேர் SLR கேமராவை தயாராக வைத்துக்கொண்டு சூரியனின் வருகைக்காக காத்திருந்தனர். கேண்டீனில், ரொட்டி, அவித்த முட்டை, பால், திராட்சை பழரசம் என்று ஆரோக்கியமான காலை உணவுகள் வழங்கப்படுகின்றன. மதிய, இரவு வேளைகளில் மீன்குழம்பு, கோழிக்கறி, ஆட்டுக்கறி என்று ஏதாவது ஒரு அசைவ உணவை படைத்துவிடுகிறார்கள்.


குட்டி சாக்கு
அடுத்தநாள் அந்தமான்வாசிகள் உட்பட சில தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களிடம் அந்தமான் குறித்த சந்தேகங்களை கேட்டு கேட்டு தெளிந்துக்கொண்டோம். தென் தமிழகத்தில் இருந்து தேவர் பூஜை அசைன்மெண்டை முடித்து நேரே கப்பல் ஏறியிருந்தான் குட்டி சாக்கு. கூட்டத்துல நம்ம ஆளுகளும் இருப்பாங்க பார்த்து வெட்டுய்யா’ன்னு அரிவாளை கொடுத்து அனுப்பிய தன் தாயாரைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு பிடித்த நடிகர் கார்த்திக் என்று ஆரம்பத்தில் சொன்னபோதே நான் சுதாரித்திருக்க வேண்டும். இன்டர்நெட்டில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து, நிச்சயம் வரை சென்று ஏமாந்திருந்த கண்ணன். சின்ன வயதிலிருந்தே மாவா போட்டு வாய் ஒடுங்கிப்போய் விட்டது. தன்னால் வாயை குறிப்பிட்ட அளவிற்கு மேல் திறக்க முடியாது என்ற ராஜூ. ம்ம்ம் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.


கப்பல் தோழர்களுடன்
நன்கவுரியின் மேல் தளத்தில் ஒருகாலத்தில் மதுக்கூடமும், நீச்சல் குளமும் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. யாரேனும் போதை அதிகமாகி கடலில் குதித்திருக்க வேண்டும். இப்பொழுது மதுகூடத்தில் டீ, காபி மட்டும் விற்கப்படுகிறது. நீச்சல் குளம் இருந்த இடம், இஸ்லாமியர்கள் தொழுகைக்காக பயன்படுகிறது. ஆயினும், கப்பலில் உ.பா கிடைக்கவே செய்கிறது. மூன்றாம் தர சரக்கு, இரட்டை விலையில். சிகரெட்டும் இரட்டை விலை தான். என் சகாக்கள் ஓயாமல் ஊதிக்கொண்டிருக்க, சபை நாகரிகம் கருதி நானும் புகைக்க தொடங்கிவிட்டேன்.

தொலைக்காட்சி அறை ஒன்று உள்ளது. தினசரி ஒரு ஆங்கிலம், ஒரு ஹிந்தி மற்றும் ஒரு தமிழ்ப்படம் ஒளிபரப்பப்படும். முதல்நாள் பதினெட்டான் குடி என்ற சூரமொக்கை ஒளிபரப்பப்பட்டது. அதையும் ஒரு கும்பல் சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டிருந்தது. மறுநாள் ஜக்குபாய். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் தர்க்கத்துளைகளை கிண்டலடிப்பவர்களுக்கு, கவுண்டமணியை ஆஸ்திரேலிய அதிகாரியாக காட்டும்போது கிண்டலடிக்க தோன்றுவதில்லை.

நான் பயணித்த இரண்டாம் வகுப்பில் குளியலறைகள் சுமாராக இருந்தன. பங்க்கில் படுகேவலமாக இருந்திருக்கக்கூடும். கழிவறைக்கு சென்று குழாயை திருகினேன். தேகம் நாவலில் சாரு குறிப்பிடும் கரைசல் போலொரு திரவம் வெளிவந்தது. வெட்கக்கேடு. மூன்று நாட்கள் குளிக்கவும் இல்லை, கழிக்கவும் இல்லை. மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் டீலக்ஸ் அறையில் தங்கியிருந்த கண்ணனிடம் அனுமதிகேட்டு கழித்துவிட்டு வந்தேன்.

நண்பர்கள், புகை, அரட்டை, பலான கதைகள் - இப்படியே பொழுது போய்க்கொண்டிருந்தது. தனித்திருந்த நேரங்களில் புத்தகங்கள் உதவியது. ஜெயமோகனின் யானை டாக்டர், வாமு கோமுவின் கூப்பிடுவது எமனாக இருக்கலாம் - என்னுடைய புத்தக தேர்வுகள் மிக மோசமாக இருந்தன. எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்த காட்சிப்பிழை மட்டும் ஆறுதலூட்டியது. அதன் அட்டைப்படத்தில் புன்னகைத்த கன்றுக்குட்டியை பார்த்து வடஇந்தியர்கள் சிலாகித்துக்கொண்டிருந்தார்கள். நம்மாளு வேர்ல்டு பூரா பேமஸ்...!



கப்பலில் எங்களுடைய கடைசிநாள். சொல்லி வைத்தது போல சிகரெட் தீர்ந்திருந்தது. எங்களிடம் மட்டுமல்ல, யாரிடமும் இல்லை. கடல்லையே இல்லையாம்...! நண்பகல் தாண்டியதும் குட்டிக்குட்டியாய் ஆங்காங்கே தீவுகள் தெரியத்தொடங்கின. உள்ளூர்வாசிகள் முகத்தில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்க அவரவர் குடும்பங்களுக்கு போனில் பேசிக்கொண்டிருந்தனர். டால்பின் மீன்கள் துள்ளி குதித்து நம்மை வரவேற்கின்றன. அந்தா தெரியுது பாரு சிடியா டாப்பு, அதோ பாரு நார்த் பே என்று எதிர்ப்படும் தீவுகளை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். கப்பல் போர்ட் ப்ளேரை நெருங்கினாலும் மறுபடியும் துறைமுக சம்பிரதாயங்கள் முடிந்து, முறைப்படி கரையைத் தொட ஏழு மணியாகிவிட்டது. கதாநாயகர்களைப் போல இடமும் வலமும் ஒருமுறை பார்த்துவிட்டு அந்தமானில் கால் பதித்தேன்...!

(தொடரும்)

முந்தய  பதிவு: அந்தமான் பயணத்தொடர் ஆரம்பம்

சில கேள்விகளும் பதில்களும்:
1. கப்பலில் மது அனுமதி உண்டா ?
இல்லை. எனினும் white rum, vodka போன்றவற்றை வாட்டர் பாட்டிலில் அடைத்து எடுத்துச் செல்லலாம். கப்பலில் வெளிப்படையாக விற்க மாட்டார்கள். ஹாப், குவாட்டர் அளவுகளில் சரக்கு கிடைக்காது. கொள்ளை விலை இருக்கும். ஒரு FULL MC 750ரூ.

2. பாஸ்போர்ட் தேவையா ?
தேவையில்லை. நானும் கூட பாஸ்போர்ட் இல்லாமல் தான் சென்று வந்தேன். ஏதேனும் ஒரு புகைப்பட சான்று மட்டும் இருந்தால் போதுமானது.

3. கப்பலில் டிக்கெட் விலை ?
http://www.shipindia.com/services/passenger-services/andaman/andaman-fare-chart.aspx

4. அந்தமானை சுற்றிப்பார்க்க எவ்வளவு செலவாகும் ?
மிடில்கிளாஸ் மனப்பான்மையோடு சுற்றிப்பார்த்தால் ஒரு நபருக்கு 25,000ரூ வரை செலவில் மனநிறைவோடு சுற்றிப்பார்க்கலாம். இறுக்கிப்பிடித்தால் ஒரு நபருக்கு 15,000 ரூபாயில் கூட முடிக்கலாம்.

5. டிராவல் ஏஜெண்டுகள் தேவையா ?
முடிந்தவரை தவிர்க்கலாம். ஒருசில இடங்களுக்கு டிராவல் ஏஜெண்டுகள் மூலமாக செல்வதுதான் சிறந்தது. மற்றவைகளை நாமே நிர்வகிக்கலாம்.

6. அந்தமானில் அறை வாடகை எப்படி ?
என்னை தொடர்பு கொண்டால், நாளொன்றிற்கு 500ரூ வாடகைக்கு NON A/C அறை ஏற்பாடு செய்கிறேன். A/C அறைகள் குறைந்தபட்சம் நாளொன்றிற்கு 1000ரூபாயிலிருந்து தொடங்கும்.

மேலும் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 February 2013

அந்தமான் பயணத்தொடர் - ஆரம்பம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நண்பர்கள் குழுவாக சேர்ந்து ஊட்டி, கொடைக்கானல், கேரளா, கோவா என்று செல்லும்போதெல்லாம் எனக்குள் சுற்றுலா குறித்த வேட்கை ஒருபொழுதும் உண்டானதில்லை. பள்ளிப்பருவ எக்ஸ்கர்ஷன்களைக் கூட நான் அந்த வயதுக்கே உரிய ஆர்வத்துடன் எதிர்கொண்டதில்லை. கல்லூரி சுற்றுலாக்களிலும் கலந்துக்கொண்டதில்லை. டீம் ஸ்பிரிட் இல்லையென்று சொல்லிவிடும் அச்சுறுத்தல் இருப்பதால் அலுவலக அவுட்டிங்குகளில் மட்டும் விரும்பி கலந்துக்கொள்வதாக நடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சிறுவயதிலிருந்தே அந்தமான் செல்லவேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வளர்ந்துக்கொண்டே இருந்தது.



சிறுவயதில் பலருக்கும் பலவகையான அவநம்பிக்கைகள் இருக்கும். அந்தமான் பற்றிய என்னுடைய கற்பனைகள் மிகவும் வேடிக்கையாக இருக்கும். அந்தமான் என்பது நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு மணல்திட்டு என்பது போலவும், அங்கே மிகச்சிறிய அளவிலான நிலப்பரப்பு மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். அந்தமானில் காட்டுவாசிகள் மட்டுமே வாழ்கிறார்கள். அங்கிருப்பவர்கள்  அனைவருமே சின்னவர் பட செந்தில் மாதிரி பேசிக்கொள்வார்கள் என்று நினைப்பேன். குஜராத் நிலநடுக்கம் வந்த சமயத்தில் அந்தமானில் எல்லாம் அடிக்கடி நிலநடுக்கம் வரும், அதாவது ஒரு நாளைக்கு சுமார் நான்கைந்து முறை சாவகாசமா வந்து போகும் போல என்று எண்ணிக்கொள்வேன். போலவே, சுனாமி வந்தபோது அந்தமான் மனிதர்கள் வாழமுடியாத அபாயகரமான பகுதியாக என் மனதில் தோன்றியது. அங்கிருப்பவர்கள் யாரும் தரை தளத்தில் வசிக்க மாட்டார்கள், சுனாமி ஆபத்தின் காரணமாக மேல்தளத்திலேயே தங்கிக்கொள்வார்கள் என்றொரு எண்ணம்.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் என்பது ஐநூறுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது என்பதே எனக்கு சில வருடங்களுக்கு முன்புதான் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக எனக்குள் இருந்த அந்தமானைப் பற்றிய மர்மமுடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்திருக்கின்றன. பயணத்தோடு சேர்த்து மொத்தமாக பதினைந்து நாட்கள் இயல்பு வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் ஏதுமில்லாமல் சுற்றி வந்திருக்கிறேன். அந்த நாட்களைப் பற்றிய என்னுடைய எண்ண வெளிப்பாடுகளை இனிவரும் கட்டுரைகளில் காணலாம்.

*****

அந்தமான் பயணம் என்றதுமே ஒரு வழிப்பயணம் கப்பல், ஒரு வழிப்பயணம் விமானம் என்பதை உறுதியாக முடிவு செய்துக்கொண்டேன். கப்பல் பயணம் பற்றி விவரமறிந்தவர்கள் பலரிடம் கருத்து கேட்டபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்கு அவர்கள் சொன்ன சில காரணங்கள் :-

1. பாஸு... நீங்க போறது டைட்டானிக் இல்லை. கெவர்மெண்டு கப்பல் ரொம்ப மோசமா இருக்கும். ஏறி கொஞ்ச நேரத்துலயே ஏண்டா ஏறினோமுன்னு தோண ஆரம்பிச்சிடும்.
2. கப்பல் பயணம் முழுமையாக மூன்று நாட்களாகும். முதல் ஒருநாள் வேண்டுமானால் பொழுது போகலாம். அதற்குப்பின் பயங்கர போர் அடிக்கும்.
3. கடல்வழிப்பயணம் எல்லோருடைய உடலும் ஏற்றுக்கொள்ளாது. சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். கப்பலை விட்டு இறங்கவும் முடியாத கொடுமையான சூழ்நிலை ஏற்படும்.


முதலிரண்டு எச்சரிக்கைகளை எப்போதும் போல மிகவும் சாதாரணமாக புறக்கணித்தேன். மூன்றாவது மட்டும் சற்று கிலியை ஏற்படுத்தியது. பொதுவாக நான் பொழுதுபோக்கு பூங்காக்களில் காணப்படும் ராட்டினங்களில் கூட ஏறுவது கிடையாது. அவற்றை கீழிருந்து அண்ணாந்து பார்த்தாலே கூட அயர்ச்சியாக இருக்கும். மொட்டை மாடி விளிம்புகளில் உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி நிற்பதற்கு கூட நடுங்குவேன். இவ்வளவு ஏன் ? அமிதாப் பச்சன் நடித்த படங்களை பார்த்தாலே பயப்படுவேன். இருப்பினும் வாழ்வோ, சாவோ இவன் கப்பலில் ஒருமுறை கூட பயணம் செய்ததில்லை என்ற செய்தி வரலாற்றில் நிச்சயம் பதியப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அந்தமான் பயணத்திற்காக ஐந்து கப்பல்களை இந்திய கடற்படை ஒதுக்கியுள்ளது. ஸ்வராஜ்த்வீப், நன்கவுரி, நிகோபர், ஹர்ஷவர்தனா, அக்பர். இவை போர்ட் ப்ளேருக்கும் சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டின பிரதேசங்களுக்கும் மாறி மாறி பயணம் மேற்கொண்டபடி இருக்கும். சென்னையில் இருந்து மாதமொன்றிற்கு மூன்று முறையாவது போர்ட் ப்ளேருக்கு பயணம் இருக்கும். தொழில்நுட்பங்கள் வளர்ந்தபிறகு கூட அந்தமானுக்கு கப்பல் டிக்கெட் எடுப்பது சற்றே கடினமான செய்முறை. SCI இணையதளத்தில் ஒவ்வொரு மாதத்தின் இறுதிவாரத்திலும் அடுத்த மாதத்திற்கான பயணத்திட்டம் வெளியிடப்படும். அதன்பின் பீச் ஸ்டேஷன் அருகிலுள்ள SCI அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பி, நம்முடைய புகைப்பட சான்றை காட்டி டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

முந்தய பத்தியில் குறிப்பிட்ட இந்திய கப்பல்களில் டிக்கெட் விலைக்கேற்ப வெவ்வேறு க்ளாஸ் இருக்கின்றன. விவரங்கள். பங்க் என்பது மருத்துவமனை ஜெனரல் வார்டு போல. சுமார் 900 பேர் வரை பங்க்கில் பயணிக்கலாம். இரண்டாம் வகுப்பில் அறைக்கு ஆறு பேர். முதல் வகுப்பு அறைகளில் நான்கு பேர், இணைக்கப்பட்ட கழிவறை வசதி உண்டு. டீலக்ஸ் அறைகளில் இரண்டு பேர், டேபிள், சேர், இணைக்கப்பட்ட கழிவறை, குளியலறை என்று சகலவசதிகளும் உண்டு.

நான் பயணம் செய்த கப்பலுடைய பெயர் நன்கவுரி. நன்கவுரியை உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தொடக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென்னெல்லாம் பயணம் செய்வார்களே... அதே கப்பல் தான். பங்க்கில் பயணம் செய்தால் பல மனிதர்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்று அனுபவஸ்தர்கள் சொன்னார்கள். வாழ்நாளில் ஒரேயொரு முறை பயணம் செய்யப்போகிறோம் என்பதால் இரண்டாம் வகுப்பு அறையில் டிக்கெட் எடுத்துக்கொண்டேன்.

என்னுடைய பயண நாள் வந்தது. விமானப்பயணம் போல நாமே நேரடியாக ஹார்பருக்குள் நுழைந்துவிட முடியாது. SCI அலுவலக வாசலில் காத்திருக்க வேண்டும். அங்கிருந்து இதற்கென சிறப்பு மாநகர பேருந்துகள் நம்மை துறைமுகத்திற்குள் அழைத்துச்செல்லும். சம்பிரதாயத்துக்காக மருத்துவ பரிசோதனைகள் நடக்கும். அதாவது நம்முடைய டிக்கெட்டை கொடுத்தால், அதில் Examined and Passed என்று முத்திரை குத்தி கொடுப்பார்கள். அதற்காக நம்முடைய முகத்தை கூட ஏறெடுத்து பார்க்க மாட்டார்கள். அதன்பின்பு மூட்டை முடிச்சுகளுக்கான செக்கப். இதில் நீராகாரத்தை எவ்வளவு ஸ்ட்ரிக்டாக அனுமதி மறுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வாட்டர் பாட்டிலில் ஒளியூடுருவும் பானங்களை கொண்டு செல்லும்போது கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை.

மேற்படி தடைகளை கடந்தபின்னர் நன்கவுரி என் கண்முன்னே விரிந்தது :)


தொடரும்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment