27 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 27012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் முதன்முதலாக சயமீஸ் இரட்டையர்களை காட்டியது (நடிப்பில் தான்...!) மாற்றான் என்று சொல்லப்பட்டாலும், மாற்றான் படம் அறிவிக்கப்பட்டபிறகு படப்பிடிப்பை தொடங்கிய இருவன் என்ற லோ பட்ஜெட் படம் ரிலீஸில் முந்திக்கொண்டது. நிறைய பேருக்கு அப்படி ஓரு படம் வந்ததே தெரியாது என்பதால் மாற்றானின் புகழுக்கு பங்கமில்லை என்று நம்பலாம். உலக அளவில் முதன்முதலில் சயமீஸ் இரட்டையர்களை காட்டிய படம் எதுவென்று தெரியுமா...? விடை இறுதியில்...

*************************************************

ஃபர்ஸ்ட் லுக்கில் 'நவீன' இல்லை !
நவீன சரஸ்வதி சபதம் படம் பார்த்தேன். சிவாஜி காலத்திற்கு பிறகு அமைதியாக இருந்துவிட்ட சிவபெருமான் மீண்டுமொரு திருவிளையாடல் செய்கிறார். குடிபழக்க அடிமைகளான நால்வரை ஒரு தீவில் சிக்க வைக்கிறார். அவர்கள் தப்பிக்க சில வாய்ப்புகளையும் கொடுக்கிறார். தப்பித்தார்களா...? என்பது உச்சகாட்சி. நல்ல மனஉரு. அந்த சுவாரஸ்யத்தை திரையிலும் ஓரளவுக்கு காட்டியிருக்கிறார்கள். ஐ-பாடில் பாட்டு கேட்கும் சிவன், டெம்பிள் ரன் விளையாடும் முருகன், த்ரெட் மில்லில் ஓடும் விநாயகன் என்றெல்லாம் பக்தியை நவீன மயமாக்கி காமெடி செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சுப்ரஜா ஸ்ரீதரன் ஒருவர் மட்டும்தான் ஹிந்து கடவுள்களை கிண்டலடித்ததற்காக ந.ச.ச படத்திற்கு  கண்டனம் தெரிவித்தார். சரி தொலையட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. நிவேதா தாமஸ் அம்மையாரை நாயகி என்று சொல்லிவிட்டு நான்கு ஆண்களையும் தீவையும் மட்டுமே முக்கால்வாசி படத்திற்கு காட்டியிருக்கிறார்கள். அதற்கு வேண்டுமானால் என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************

நேற்று மாலை அந்தமான் ராஸ் – நார்த் பே தீவுகளுக்கு இடையே ஒரு படகு விபத்து. அதில் பயணம் செய்த சுமார் 45 பேரில் 21 பேர் மரணம். மரணம் அடைந்த பெரும்பாலானவர்கள் காஞ்சிபுரத்து ஆட்கள். செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் பக்கென்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் சேதுராமன் அதே படகில் பயணம் செய்திருக்கக்கூடும். சென்ற வாரம் என்னுடைய பெற்றோர், தங்கை உட்பட உறவினர்கள் அதே பாதையில் பயணித்திருக்கிறார்கள். போர்ட் ப்ளேரிலிருந்து மூன்று தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் பேக்கேஜ் அது. சென்ற வாரமே, இரண்டு தீவுகளை பார்த்துவிட்டு மூன்றாவது தீவிற்கு செல்லும் வழியில் காற்று பலமாக வீசியதால் பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். நேற்றைக்கும் கூட அதே போல நிகழ்ந்திருக்கலாம். அந்த படகில் லைப் ஜாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை நானே பார்த்திருக்கிறேன், ஆனால் வெறும் சம்பிரதாயத்திற்காக. அதை எப்படி துரிதமாக எடுக்க வேண்டும் என்றோ, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றோ அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. வேறெப்போதும் போல அல்லாமல் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

*************************************************

மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு துயர செய்தியை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்தால் என்ன செய்வீர்கள்...? ஒரு சோக ஸ்மைலி. நாமும் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடையாளமாக அதனை கருதலாம். ஆனால் துயர செய்திகளை லைக் செய்வது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு தரப்பு இது அபத்தம் என்றும் மற்றொரு தரப்பு இதுவும் சோக ஸ்மைலி போல ஒரு பங்கெடுப்பு என்றும் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியாக தமிழை வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது அபத்தமாகத்தான் தெரியும். காரணம் – இன்னார் குறிப்பிட்ட துயர செய்தியை விரும்புகிறார் என்று ஃபேஸ்புக்கே தெரிவிக்கும். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் ஒரு யோசனை வைத்திருக்கிறது. ஏற்கனவே உள்ள ‘ஃபீலிங்’ ஆப்ஷன் மூலம் சோகமாக இருக்கிறேன் என்று தெரிவு செய்தால் போதும் லைக் பட்டன் தற்காலிகமாக சிம்பதைஸ் பட்டனாக மாறிக்கொள்ளும். கூடிய விரைவில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரலாம்.

*************************************************

சென்ற வாரம் என்னுடைய ஒரு இடுகையில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் மாதிரி என்று எழுதியிருந்தேன். அந்த சொற்றொடர் கண்டிப்பாக நிறைய பேருக்கு புரிந்திருக்கும். யாரேனும் அதனை குறிப்பிட்டு பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ப்ச். நானே தொடர்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் ஒலிப்பேழையில் பாடல்கள் கேட்கும் பழக்கம் உடையவர்களுக்கு நிச்சயம் சிரிப்போ சிரிப்பு என்ற ஒலிப்பேழையை பற்றி தெரிந்திருக்கும். என்னுடைய சிறிய வயதில் அந்த ஒலிப்பேழையை எத்தனையோ முறை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். அச்சமயத்தில் அதில் வரும் பெரும்பாலான நகைச்சுவைகள் எனக்கு மனப்பாடம். இப்போதும் நினைவிலிருப்பது (ஜனகராஜ் ஸ்வீட் ஸ்டால் நகைச்சுவை தவிர்த்து) என்று பார்த்தால் :-

- கிருபானந்த வாரியாரின் கிரிக்கெட் வர்ணனை
- 36 மொட்டைகளின் அட்டகாசங்கள் – பட ட்ரெயிலர்
- ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கேட்கும் கலைஞர்
- மெஹபூபா பாடும் பாக்யராஜ், டி.ஆர், எம்.ஆர்.ராதா
- எலி பிடிப்பது எப்படி என்று சொல்லித்தரும் ஜனகராஜ்

படம்: அரவிந்த் ரஹ்மேனியாக்
சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையை பற்றி கூகுள் செய்துக்கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம். அரவிந்த் ரஹ்மேனியாக் (ரஹ்மான் தீவிர விசிறியாம்) என்ற புண்ணியவான் சிரிப்போ சிரிப்பு ஆடியோ முழுவதையும் எம்.பி.3 கோப்பு வடிவில் தரவேற்றி வைத்திருக்கிறார். வேண்டுபவர்கள் கீழ்காணும் இணைப்பிற்கு சென்று அரவிந்திற்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு பதிவிறக்கிக் கொள்ளவும்.


*************************************************

வருடாவருடம் புத்தகக்காட்சி முடிந்ததும் புத்தகங்கள் படிப்பது தொடர்பாக ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாக சூட்டோடு முடிந்தவரை வாங்கிய புத்தகங்களை படித்துவிடுவது புத்திசாலித்தனம். அப்படி சென்ற வாரத்தில் படித்த புத்தகங்கள் :-

புக் மார்க்ஸ் என்.சொக்கன்
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன்
கி.பி.2087இல்... முனைவர் மலையமான்
திசை கண்டேன் வான் கண்டேன் சுஜாதா
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

வாசிப்பானுபவம் பற்றி தனித்தனியாக இல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு இடுகையாக வெளியிடுகிறேன்.

*************************************************

முதல் பத்தி கேள்விக்கு பதில் Freaks (1932). ஒரு சர்க்கஸ், கூத்து, வித்தை வகையறா குழு. அதன் அங்கத்தினர் பெரும்பாலும் உடல் குறைபாடு கொண்டவர்கள். அவர்கள் தவிர்த்து கிளியோபாட்ரா என்று ஒருத்தி. கிளியோபாட்ரா என்று சொல்லிவிட்டதால் அவளுடைய அழகு எப்படி என்று சொல்லத்தேவையில்லை. அவளை ஒரு குள்ள மனிதன் விரும்புகிறான். அவனுக்கு நிறைய சொத்து இருப்பதால் கிளியோபாட்ராவும் அவனை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவர்களுடைய திருமண வரவேற்பில் எல்லா ‘ஃப்ரீக்ஸும்’ ஆடிப்பாட கிளியோபாட்ரா கோபப்பட்டு அவர்களை அவமதிக்கிறாள். அதன்பிறகு ஃப்ரீக்ஸ் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு கிளியோபாட்ராவின் உடல் பாகங்களை சிதைத்து அவளை மனிதத்தலை கொண்ட வாத்தாக மாற்றிவிடுகிறார்கள். பொழுதுபோக்குக்காக மக்கள் அவளை வேடிக்கை பார்ப்பதாக படம் நிறைவடைகிறது.

படம்: Gabby Voltron
இத்திரைப்படத்தில் நிஜத்திலேயே சயமீஸ் இரட்டையர்களான டெய்சி & வைல்ட் ஹில்டன் நடித்திருக்கிறார்கள். கதைப்படி வைலட்டுக்கு மட்டும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வைலட்டுடைய வருங்கால கணவன் அவளுக்கு முத்தமிடுகிறாள், அதனை டெய்சி உணருவதாக நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு காட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

கும்மாச்சி said...

அந்தமான் விபத்து நமது சமுதாயத்தின் பாதுகாப்பு அறியாமைக்கு சான்று. விபத்துக்களிலிருந்து நாம் ஒன்றும் கற்றுக்கொள்வதில்லை. அரசாங்கமும் நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு மறந்துவிடுகிறார்கள்.

sethu said...

பிரபா அந்தமான் விபத்து உண்மையிலே எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தப்படும் சம்பவம்...

ஃபீலிங் வந்தால் சில பிரச்சனைகள் தீரலாம்...!

சிரிப்பு தளத்திற்கு நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...

அந்தமான்...மனசுக்கு கவலையும் வேதனையும் தருகிறது மக்கா.

அனுஷ்யா said...

சரியாக நினைவிருக்கும் பட்சத்தில், வைரமுத்து, மனிதனை மரம் என குறிப்பிடும் ஒரு குறளுக்காக வள்ளுவரை சாடும் ஒரு பகுதியும் அந்த கேசட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன்..

ராஜன் குறை அவர்களுக்கு எதிராக எழுத முயன்ற ஓநாய் விமர்சனத்திற்கான எதிர்வினை பதிவில் இதனை குறிப்பிட்டிருந்தேன். சரியான நேரத்தில் செய்யாததால் தவறாகும் ஒன்றாக கிடப்பில் கிடக்கிறது அந்த பதிவு...

குட்டிபிசாசு said...

Freaks நல்ல படம். நான் கடவுள் படத்திற்கு முன்னோடி என என் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

80களில் வந்த சிரிப்போ சிரிப்பு. மறுபடியும் கேட்க வைத்ததற்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அந்தமான் சம்பவம் வருத்தப்பட வேண் டிய ஒன்று. சுவையான பகிர்வுக்கு நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ரஹ்மேனியாக் போலவே ரஹ்மானிசமும உண்டு

RajalakshmiParamasivam said...

என் பதிவு " அது ஒரு கனாக் காலம்"
உங்கள் " படித்ததில் பிடித்தது " கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி சார்.

Ponmahes said...

பதிவு அருமை.....வாழ்த்துக்கள்.....

தனிமரம் said...

சிரிப்புப்பேழை நம்நாட்டிலும் சக்கை போடு போட்டது வானொலியில்!