16 January 2014

வீரமான ஜில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிகழ் வருடத்தின் தைப்பொங்கல் தமிழ் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவின் இருபெரும் துருவ நட்சத்திரங்களான அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. ரசிகர்கள் தீபாவளியும் பொங்கலும் ஒரே நாளில் அமைந்தது போல கொண்டாட்ட மனநிலையுடன் இருக்க, திரையரங்க உரிமையாளர்களை பொறுத்தமட்டில் ஒரு சிறிய பின்னடைவு. இருவேறு தினங்களில் தனித்தனியாக வெளியாகி இரட்டை வசூல் பொன் முட்டைகளை தர வேண்டிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ஒரேயொரு பொன் முட்டை மட்டுமே சாத்தியம். பன்திரை வளாகங்களுக்கு பிரச்சனையில்லை. பல ஒற்றைத்திரை அரங்குகள் வேறு வழியின்றி ‘தலைக்கு’ இரண்டு காட்சிகள் காட்டின. ஒரு புறம் தலயா ? தளபதியா ? என்ற போட்டி இருந்தாலும், இருவருக்கும் பொதுவான மசாலாப்பட பிரியர்கள் அடுத்தடுத்து இரண்டு படங்களையும் பார்த்து ஆனந்தக்கூத்தாடினர். எல்லாம் சரிதான். ஆனால் இந்த படங்கள் இரண்டும் உண்மையாகவே நன்றாக இருந்ததா என்று சற்று உணர்ச்சிவசப்படாமல் பார்க்கலாம்.

வீரம், ஜில்லா படங்கள் வெளியாகி முழுமையாக ஏழு நாட்கள் ஆகிவிட்டதால் கதை எல்லாம் சொல்லத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.

ஜில்லா – பார்த்து பார்த்து சலித்த கதை இல்லை என்றாலும் ஏற்கனவே வேறு பரிமானங்களில் பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட ‘தீனா’ பாணி கதை. விஜய்யும் மோகன் லாலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க அவர்கள் இருவருடைய பிரஸ்தாங்களே நிரம்பியிருக்கின்றன. அதாவது, தேவர் மகன் படத்தில் கமல் எப்படி நடிகர் திலகத்தை பயன்படுத்திக் கொண்டாரோ அதே போல மோகன் லாலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். ஜில்லாவின் காரணமாக மலையாள தேசத்தில் விஜய்யின் புகழ் ஓங்கியிருக்கக்கூடும். லாலேட்டன் நடித்திருப்பதாலோ என்னவோ பின்னணி இசையில் பெரும்பாலும் 'செண்டை மேளம்' பயன்படுத்தியிருக்கிறார்கள். மோகன் லால் விஜய்யை விட பெரிய காமெடி பீஸாக இருப்பார் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் நான் சிவன்டா என்று கத்திக்கொண்டே இருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் கமிஷனர் போல ஏதோவொரு பதட்டத்துடனேயே வசனம் பேசுகிறார். ரவி மரியா கதாபாத்திரத்தை அடிக்கடி குறுகுறுவென காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கு சந்தேக மசுறை ஏற்படுத்துறாங்களாமாம். இறுதியில் வில்லன் யார் என்பதில் டுவிஸ்ட் வைத்து, சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

ஜில்லாவின் நாயகி காஜல். இறுக்கமான காவலர் உடுப்பில் தோன்றி கிறக்கமூட்டுகிறார். ஜில்லாவில் காஜலின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று பாடல்களில் தோன்றி களிப்பூட்டுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இலவச இணைப்பாக நிவேதா தாமஸை தேர்ந்தெடுத்தமைக்கு விஜய் மச்சானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரம் – அண்ணன் தம்பிகள் கதை. கேட்டதும் சலிப்பாக இருக்கிறது அல்லவா...? படமும் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறது. அஜித்தின் தம்பிகளாக விதார்த் உட்பட நான்கு சுமார் மூஞ்சிகள் நடித்திருக்கிறார்கள். ஆளுக்கொரு ஆளு. நீயும் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி தானா என்று கேட்ட பாவத்திற்காக கல்லூரி படிப்பு முடிக்காமலே கூட ஐந்தாவது தம்பிக்கொரு ஜோடி சேர்த்திருக்கிறார்கள். நல்லவேளையாக அஜித் அட்டகாசத்தில் முயற்சித்தது போல வட்டார வழக்கு எதையும் முயற்சிக்கவில்லை. வசனங்களை அழுத்தம் திருத்தமாக பேசாமல் கொஞ்சம் லூஸ் விட்டு பேசுகிறார். வழக்கமான மசாலா படங்களில்லாத புதுமை ஒன்று வீரத்திலிருக்கிறது. துவக்கத்திலிருந்தே அஜித் பக்கம் ஒரு உயிர்பலி கூட ஏற்படுவதில்லை. ஒரு சறுக்கல் கூட இல்லை. எல்லோரையும் போட்டு துவம்சம் செய்கிறார். அந்த ஊரில் இனி அடிக்க ஆட்கள் இல்லையென்றதும் தமன்னாவின் ஊருக்கு போய் அங்கே ஒரு கும்பலை புரட்டி எடுக்கிறார். கடைசியில் மீண்டும் அதுல் குல்கர்னி என பழைய வட இந்திய வில்லனை அழைத்துவந்து சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

காஜலோடு ஒப்பிடும்போது வீர நாயகி ஒரு படி மேல். சிற்பங்களை பராமரிப்பவள் என்ற புதுமையான பாத்திர படைப்பு. ஒரு காட்சியில் தீபங்களுக்கு இடையே தேவதை போல காட்சியளிக்கிறார். ஏதோவொரு பனி பிரதேசத்தில், நோகாமல் கோர்ட்டு சூட்டு போட்டு ஆடும் அஜித்துடன் குறைந்தபட்ச ஆடைகளுடன் ஆடி சூடேற்றுகிறார். தமன்னாவின் தொப்புளை பார்க்கும்போது அவருடைய மார்க்கெட் சுணக்கமாக இருக்கிறதென்று நம்ப முடியவில்லை.

இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் சராசரி அக்ஷன் மசாலா படங்கள். இரண்டும் மொக்கை. பிரதீப் ராவத், தம்பி ராமையா, வித்யுலேகா ராமன், ஸ்டண்ட் சில்வா என இரண்டிலும் சிலர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பிரதீப் ராவத் என்ற வட இந்திய நடிகர். பார்ப்பதற்கு வலைப்பதிவர் பபாஷாவிற்கு வயதானது போல இருப்பார். முன்பொரு காலத்தில் கஜினி, தொட்டி ஜெயா என ஒரு சுற்று வந்தவர். அவரை வலியச் சென்று அழைத்துவந்து சிரிப்பு வில்லன், குணச்சித்திர வேடங்களை கொடுத்திருக்கிறார்கள். ஜில்லாவில் பிரதீப் ராவத் தோன்றும் போதெல்லாம் பிண்ணனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்கின்றன. ஒரு காட்சியில் கூட, வடமொழியில் பேசுகிறார். ஒருவேளை பிரதீப் ராவத்தை, திராவிட நாயகர்களான மோகன் லாலையும் விஜய்யையும் எதிர்க்க வந்த ஆரிய சக்தியாக சித்தரித்திருக்கிறார்களோ என்னவோ...? ஸ்டண்ட் சில்வா பாவம். இரண்டு நாயகர்களிடம் மரண அடி வாங்கியிருக்கிறார். இரண்டு படங்களுக்கும் எப்படி ‘யூ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதை எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. ஜிங்குனமணி பாடலில் ஆட்டக்காரிகளின் மாராப்பை மறைத்தால் மட்டும் போதுமா...? வன்முறை காட்சிகள்...? காட்சி நேர்த்தியாக வரவேண்டி ரத்தத்தை பார்வையாளர்களின் முதுகு வரைக்கும் தெறித்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், பாடல் காட்சிகள் என சரிவிகித வார்ப்புருவில் பொருத்தப்பட்டுள்ளன. ஜில்லாவில் சூரி வந்து புட்டத்தில் குத்து வாங்கி சிரிக்க வைக்க முயற்சித்து படுத்தி எடுக்கிறார். வீரத்தில் கொஞ்சம் ஆறுதல். சந்தானத்தின் வசன வெடிகள் உண்மையாகவே ரசித்து சிரிக்க வைக்கின்றன.

வாய்வழி பிரச்சாரம் என்று ஒன்று இருக்கிறது (எதுவும் கெட்டவார்த்தை இல்லை) ஆங்கிலத்தில் word of mouth marketing என்பார்கள். அதன்படி இரண்டு படங்களும் வெளியான தினத்திலிருந்தே ஜில்லா படத்தை மொக்கையென்றும், வீரத்தை ஹிட்டென்றும் யாரோ ஒரு மகானுபாவர் கிளப்பிவிட அதையே மற்றவர்களும் பின்பற்றி கிட்டத்தட்ட அதுதான் உண்மை என்பது போலாக்கிவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் வீரம், ஜில்லா இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டில் எது பரவாயில்லை என்று கேட்டால் வீரத்தை சொல்லலாம், சந்தானத்திற்காக.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

Manimaran said...

இதுதான் நேர்மையான நடுநிலையான பார்வை..

Anonymous said...

/பிரஸ்தாங்களே/

நன்னா சொன்னேள் போங்கோ.

சீனு said...

கூடவே கொஞ்சம் அஜீதிற்காக :-)

”தளிர் சுரேஷ்” said...

நேர்மை! நேர்மை! நேர்மை!

Anonymous said...

Sollitaaru dubuggu.......

வவ்வால் said...

பிரபா,

அசித்,விசய் எல்லா ஒலகப்படமா தந்துக்கிட்டு இருந்தாப்போலவும்,இப்போ திடீர்னு மொக்கைப்படத்துல நடிச்சிட்டாப்போலவும் எதுக்கு ஃபீலிங்க்ஸ்,இம்புட்டுத்தான் அவங்க சரக்கு, அதைப்பார்த்து தொலையனும் என்பது நம்ம தலை எழுத்து,விடுமுறை தினக்கொண்டாட்டக்காலத்தில் எவ்ளோ மட்டமான படம் வந்தாலும் 4-5 நாளுக்கு கூட்டம் அம்மும்,கலெக்‌ஷன் அள்ளும்,ஆல் ஹீரோஸ் ஹேப்பி!

ரெண்டு நாளா டாஸ்மாக் மூடிக்கிடக்கு,என் கவலை எனக்கு அவ்வ்!

"ராஜா" said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

வித்தியாசமான பார்வை...!

அனுஷ்யா said...

மசுரு.. என்ற சொல்லாடலில் பிரபா ஸ்பெல்லிங் செய்யலாமா?

அனுஷ்யா said...

*ஸ்பெல்லிங் மிஸ்டேக்

'பரிவை' சே.குமார் said...

தங்கள் பார்வையில் விமர்சனம் நன்று.