20 March 2017

பிரபா ஒயின்ஷாப் – 20032017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படத்தை அதன் முதல் வாரயிறுதியில் பார்க்கத் தவறிவிட்டால் அதனால் நான் அடையும் அவஸ்தைகள் அதிகம். அந்த படத்தைப் பற்றி யார் எழுதியிருந்தாலும் அதனை சுந்தர்.சியை கடந்து போகும் வடிவேலுவைப் போல கவனிக்காதது போல கடந்து செல்ல வேண்டும். ஃபேஸ்புக் பரவாயில்லை. நான்கைந்து வரிகளுக்கு பீடிகை போட்டுத் துவங்குவதால் சுதாரித்து தப்பித்துவிடலாம். வாட்ஸப்பில் எல்லாம் ஒன்றிரண்டு வரியில் விஷயத்தை சொல்லி கடுப்படித்து விடுகிறார்கள்.

முதலில் மாநகரம் பட விளம்பரங்கள் எனக்கு அதன் மீது எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. அதன் ட்ரைலரைக் கூட நான் பார்க்கவில்லை. எல்லோரும் ஓஹோபித்த விதமாக பாராட்டுவதை அறிந்து பார்க்கலாம் என்று முடிவெடுப்பதற்குள் சற்று தாமதமாகிவிட்டது. அதாவது வாரநாட்கள் துவங்கிவிட்டன. தேவிகலாவில் இரவு 7 காட்சியாக மாநகரம் ஓடிக்கொண்டிருந்தது. என் அலுவலகத்திலிருந்து தேவி திரையரங்கம் சரியாக பன்னிரண்டு நிமிட தூரம். (லிஃப்டுக்காக காத்திருப்பது, பேருந்து கிடைப்பது, சாந்தி தியேட்டர் சப்வேயில் இறங்கி ஏறுவது, தேவி தியேட்டர் சுழற்பாதையில் நடப்பது உள்ளிட்டவற்றை சேர்த்து கணக்கிட்டப்பட்டது). மாலை ஆறே முக்காலுக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பினால் கூட தேசிய கீதம் பாடும் நேரத்திற்கு உள்ளே சென்றுவிடலாம். சென்ற வாரம் முழுவதும் மணி மாலை ஆறைத் தாண்டியதும் இன்று எல்லாம் சுபமாக முடிந்து படம் பார்த்துவிடலாமா என்று காத்திருந்து பார்த்தேன். ம்ஹூம். ஆனால் காத்திருப்பின் பலனாக இந்த வாரம் மாநகரம் தேவிகலாவிலிருந்து தேவிக்கு மாறியிருக்கிறது. (தேவிகலா / தேவிபாலாவில் படம் பார்ப்பதும் தேவி / தேவி பேரடைஸில் படம் பார்ப்பதும் முழுமையாக வெவ்வேறு அனுபவம் என்று அறிக). கூடவே பத்து ரூ. டிக்கட் பச்சையில் காட்டியதும் நேற்று மதியக்காட்சிக்கு படையெடுத்துவிட்டேன். அற்புதமான படம், நேர்த்தியாக பின்னலாடையைப் போன்ற திரைக்கதை என்பதைத் தாண்டி எழுத வேண்டிய சில விஷயங்கள் இருப்பதால் இரண்டொரு நாட்களில் விரிவாக எழுதுகிறேன். சோம்பலாக இருந்தால் எழுதமாட்டேன்.

மாநகரத்திற்காக வார நாட்களில் மாலையில் சீக்கிரம் அலுவலகத்தை கிளம்பும் வாய்ப்பு ஒருநாள் ஏழு மணிக்கு ஐந்து நிமிடம் முன்னதாக கிடைத்தது. அடித்து பிடித்து டிக்கட் கவுண்ட்டரை அடையும்போது ஐந்து நிமிட சினிமா ஓடியிருந்திருக்கும். அதனால் ஏழேகால் காட்சி ‘காங்: ஸ்கல் ஐலேண்டுக்கு’ நுழைந்தேன். கருந்தேள், எஸ்கா இருவரும் எழுதியிருந்ததை படித்திருந்ததால் தான் மனது இந்த மாற்று ஏற்பாடுக்கு சம்மதித்தது. 2Dயில் தான் பார்த்தேன். ஆனால் தேவியில் பார்ப்பது 3Dயை விட பிரம்மாண்ட அனுபவம். 

நான் இதுவரை எந்த கிங்காங் படமும் பார்த்ததில்லை. மேலும் கதை தனிப்பட்ட முறையில் எனது கற்பனையுலகிற்கு தீனி போடும் விதமாக அமைந்ததால் பயங்கரமாக ரசித்தேன். ஆங்கிலப்படங்களில் உள்ள ஒரு நெருடல் என்னவென்றால் ஆங்கிலத்தில் பார்த்தால் வசனங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். நகைச்சுவை வசனங்களுக்கு தியேட்டரே சிரிக்கும்போது நாம் மட்டும் அமைதியாக மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழில் பார்த்தால் டப்பிங் கொடூரமாக இருக்கும். மேலும் தமிழ் டப் செய்து வெளியிடும் திரையரங்கள் புறநகர் சுமார் திரையரங்கள். ஆனால் அடிப்படை கதை புரிகிறது, விஷுவல் அசத்துகிறது அது போதும். எண்ட் கிரெடிட்ஸில் ஏதோ விஷயமிருப்பதாய் கருந்தேள் சொன்னதால் உட்கார்ந்து சுவரில் வரும் ஓவியத்தை எல்லாம் கூர்ந்து கவனித்து, ஒன்றும் புரியாமல் ஒன்றிரண்டு நபர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கை விட்டு வெளியேறி, கூட்டிப்பெருக்கும் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். டைட்டில் முழுவதும் முடிந்து அவசர அவசரமாக வெளியேற நினைத்தபோது பணியாளர் ஒருவர் இருங்கண்ணா... இதுக்கப்புறம் ஒரு சீன் இருக்கு... என்று என்னை நிறுத்தினார். கருந்தேள், எஸ்கா இருவர் எழுதியதையும் படித்ததால் இப்பொழுது காட்ஸில்லா ரீபூட்டையும் பார்க்கத் தோன்றுகிறது.

காங் படம் பார்க்கும்போது ஒருவகையில் நாம் கூட மான்ஸ்டர் உலகில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா என்று தத்துவார்த்தமாக தோன்றுகிறது. காங் படத்தின் இறுதிக்காட்சியில் பிட் லிஸார்ட்ஸ் மனிதர்களை கொல்ல வரும்போது காங் வந்து காப்பாற்றும். ஜுராஸிக் பார்க் படத்தில் இதேபோல ஒரு காட்சி வரும். டைனோசர் ஒன்று மனிதர்களை கடித்துத்துப்புவதற்கு நெருங்கிவிடும். அவ்வளவுதான் என்று நாம் நினைக்கும் சமயத்தில் இன்னொரு பெரிய டைனோசர் வந்து பழைய டைனோசருடன் சண்டையிடும். இரண்டு டைனோசர்களுக்கும் ஏதோ பழைய பகை. மற்றபடி புதிய டைனோசருக்கு மனிதர்கள் மீது பாசமெல்லாம் கிடையாது. இந்த இடைவெளியை பயன்படுத்தி மனிதர்கள் தப்பித்துவிடுவார்கள். நம் வாழ்க்கை (ஐ.டி. கம்பெனியில் பணிபுரிவது) என்பதும் கூட கிட்டத்தட்ட ஜுராஸிக் பார்க்கில் பிழைப்பு நடத்துவதைப் போலத்தான். இங்கேயும் விதவிதமாக பல ‘பிக் ஷாட்ஸ்’ உலவிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அவர்களில் யாராவது ஒருவர் நம்மை வச்சு செய்வதற்கு வரும்போது இன்னொருவர் ஆபத்பாந்தவனாக நம்மை வந்து காப்பாற்றுவார். நம் மீது உள்ள பாசத்தில் அல்ல. மற்றவர் மீதுள்ள பகையில். அதுபோக பிரம்மாண்ட டைனோசர்கள் போல குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கால்களில் மிதிபட்டுவிடாமல் தந்திரமாக தப்பிக்க வேண்டும்.

ஜீவ கரிகாலனின் டிரங்கு பெட்டிக் கதைகள் படித்தேன். ஒருமாதிரி ஜனரஞ்சக எழுத்திற்கும் இலக்கியத்தரத்திற்கும் இடையே ஊசலாடுகிறது ஜீ.க.வின் எழுத்து. கண்ட கண்ட புஸ்தகங்களையெல்லாம் படித்து குழம்பிப் போயிருக்கிறார் என்று தெரிகிறது. 


மொத்தம் பன்னிரண்டு கதைகள். அவற்றில் இரண்டு, மூன்று கதைகளுக்கு ஒரே மாதிரியாக முடிவில் ட்விஸ்ட். முதல் கதையில், இரண்டு பக்கங்கள் வரை சினிமாவில் இதுதாங்க மதுரை. இந்த ஊர்க்காரய்ங்க பாசக்காரய்ங்க, ரோசக்காரய்ங்க என்று வாய்ஸ் ஓவர் கொடுப்பது போல நீட்டிவிட்டு பின்னர் கதைக்குள் நுழைக்கிறார். சீரியஸாக ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைக்கும்போது நமீதா நாட்டுக்கோழி கடை என்று முடிக்கிறார். இதை ஏன் இவ்வளவு வருத்தப்பட்டு சொல்கிறேன் என்றால் சிறுகதைத் தொகுப்பின் முதல் கதை என்பது நம் மனநிலையை புத்தகத்திற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். முதல் கதை இப்படியிருந்து, இரண்டாவது கதையிலேயே முழுமையாக வேறொரு தளத்திற்கு போய்விடுகிறார். மறுபடியும் இரண்டு கதைகளுக்குப் பிறகு தூத்துக்குடி கேசரி என்கிற ஜனரஞ்சக எழுத்துக்கு திரும்புகிறார். சேவ் தி பெஸ்ட் ஃபார் லாஸ்ட் எனும் கூற்றுக்கிணங்க, கடைசி கதை தரமானதாக இருந்தது. நான்கு பாகங்கள் கொண்ட அந்த கடைசி சிறுகதை நான்கு லார்ஜை கொஞ்சம் கொஞ்சமாக அருந்துவது போலே இருந்தது. ஆனால் அதிலேயும் கடைசியில் அதே பாழாய்ப்போன ட்விஸ்ட். ஜீவ கரிகாலன் ஏதோவொரு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். யாராவது அவரை மீட்டு மெய்யுலகிற்கு அழைத்து வர வேண்டும்.

ஒரு கதையின் ஒரு பகுதியை மட்டும் தனியாக படிப்பது சரியான அபிப்ராயத்தை கொடுக்காது என்றாலும் நான் படித்து உவந்த பின்தொடரும் பத்தியை நீங்களும் படித்து உவகை யடைய வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் டிரங்கு பெட்டிக் கதைகள் கோடுகளில் நெளியும் காதல் கதையிலிருந்து சில வரிகளை பகிர்கிறேன் :-

பாம்பிற்கு டால்ஃபின் தான் உணவு. ஆனால் டால்ஃபின் அதன் இரையல்ல. அந்த உணவும் அதற்கு வேட்டையால் கிடைத்தது அல்ல. இப்பொழுது பாம்பின் பசிக்கு பெயர் வேறாகின்றது. மெதுவாகப் பாம்பின் நிழல் டால்ஃபினின் நிழலைச் சுற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றது. பாம்பு தன்னைச் சுற்றிக்கொண்டிருந்தும் டால்பின் பயம் கொள்ளவில்லை. அப்பொழுது கருப்பிற்கும், நீலத்திற்கும் இடையே மறைந்திருந்து குறுநகைக் கோடுடன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான் கடவுள் என்னும் பெயர் கொண்டிருந்த சாத்தான். எனினும் அந்தச் சாத்தான் மனிதனுக்கு காதல் செய்யக் கற்றுத்தரவில்லை. மனிதனுக்கு காதலைக் கற்றுத்தரும் அந்தப் பணியை பாம்பு தான் ஏற்றிருந்தது. இவை அனைத்தும் நடப்பது ஏக காலத்தில் தான். ஆனால் அந்தக் கணம் இன்னும் முடியவில்லை. அதே வேளை, டால்பினின் நிழல் முழுக்க பாம்பு சுற்றித் தழுவியிருந்தது. நிழல் வழியே தொடங்கிய புணர்தலை நீங்கள் புரிந்துக் கொண்டீர்களென்றால், டால்பினின் முகத்திலுள்ள பாம்பின் ரேகைகளை நீங்கள் கண்டு கொள்வீர்கள். அப்பொழுது இந்த ஓவியம், அவளைப் போலவே உங்களுக்கும் பரிச்சயம் ஆகியிருக்கும். 

தலை சுற்றுகிறதா ? எனக்கும்தான் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

R K Rajkumar said...

தல எந்த ஆபீஸ்

Philosophy Prabhakaran said...

Equitas, Spencer Plaza

Anonymous said...

கபாலி சார்,

அருமை