17 March 2017

மசினகுடி – பந்திப்பூர் வனச்சாலை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: தொடக்கம்

மசினகுடியை நோக்கிய எங்கள் பயணத்தில் மாலை மூன்று மணியளவில் பந்திப்பூர் செக் போஸ்ட் சென்றடைந்தோம். அங்கே காட்டிலாகா அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் எதற்காகவோ காத்திருந்தனர். முதலில் இது என்னடா சோதனை என்றுதான் நினைத்தேன். ஏற்கனவே பெங்களூரு நண்பர் ஒருவர் செக் போஸ்ட் பற்றி எச்சரித்ததால் மாம்பழ ஜூஸை நெகிழிக்குப்பிக்கு மாற்றி வைத்திருந்தோம். விசாரித்ததில் வரிசை காட்டுலா (ஜங்கிள் சஃபாரி) செல்வதற்கான டிக்கட் வாங்குவதற்கு என்றும், மற்றவர்கள் நிற்கத் தேவையில்லை என்று தெரிந்துக்கொண்டோம். 

படம்: இணையம்
பந்திப்பூர் வனச்சாலையில் எங்கள் பயணம் துவங்கியது. சாலையின் இருபுறங்களிலும் பத்து அடிக்கு ஒரு மான் கும்பலை பார்க்க முடிகிறது. அதுபோக மயில்களும், குரங்குகளும். வாகனத்தை மெதுவாக செலுத்தியபடி எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே வந்தோம். வானம் மசமசவென்று இருந்தது. ஏற்கனவே மழை பெய்த ஈரத்தடங்கள் தெரிந்தன. பந்திப்பூர் சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் செல்வதற்காக ஆங்காங்கே சிறிய மண்சாலைகள் கிளை பிரிகின்றன. ஆனால் அவை பொதுவழி கிடையாது. காட்டுலா செல்லும் வேன்கள் மட்டும் அந்த சாலை வழியாக பயணிக்கின்றன. வாகனங்களை நிறுத்தக்கூடாது, புகைப்படங்கள் எடுக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் கூட மற்றவர்களுக்குத் தான். காட்டிலாகாவிடம் டிக்கெட் பெற்று வேனில் உலா செல்பவர்கள் மிருகங்களைக் கண்டால் உடனே வாகனத்தை நிறுத்தச்சொல்லி DSLRஐ தூக்கிவிடுகின்றனர். 

திடீரென ஒரு இடத்தில் காட்டிலாகாவின் வேனும், சில கார்களும் நின்றுக்கொண்டிருந்தன. அவர்கள் எதையோ பார்த்துக்கொண்டும், படம் பிடித்துக்கொண்டும் இருந்தனர். காட்டின் முக்கிய பிரமுகர் யாரோ வந்திருக்கிறார். ஒருவேளை புலியாக இருக்குமோ அல்லது யானை. யோசித்துக்கொண்டே எட்டிப்பார்த்தால் கரடி ! கரிய, பெரிய உருவத்துடன் செடிகளுக்கிடையே எதையோ தேடிக்கொண்டிருந்தது. சுற்றி ஒரு ஐம்பது பேர் அதனை குறுகுறுவென வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாமல் சாதாரணமாக உலவிக்கொண்டிருந்தது. நாங்களும் அந்த வாகனங்களுக்கு அருகே சென்று கரடியைக் கண்டோம். கரடிக்கும் எங்களுக்கும் அதிக பட்சம் ஒரு பதினைந்து அடி இடைவெளி இருந்திருக்கும். கரடி சாவகாசமாக சாலையைக் கடந்தது. மறுபடியும் மேயத் துவங்கிவிட்டது. 

சில நிமிடங்கள் இப்படி கரடியை பார்த்துக் கொண்டிருந்தோம். DSLR வைத்திருந்தவர்கள் சலிக்காமல் கரடியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் அங்கிருந்து கிளம்புவதாக தெரியவில்லை. எங்களுக்கு அதற்கு மேல் அங்கே சுவாரஸ்யமாக எதுவும் இல்லாததால் கிளம்பத் தயாரானோம். எங்களுக்கு முன்னே ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது. அதனை வலது பக்கமாக கடந்து நாங்கள் முன்னேற வேண்டும். கரடியும் சாலையின் வலது பக்கம்தான் இருக்கிறது. அது பிரச்சனையில்லை. வலது பக்கம் காருக்கும் கரடிக்கும் இடையே தாராளமாக இடைவெளி இருக்கிறது என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் காருக்கு மிக அருகிலேயே சில குரங்குகள் நின்றுக்கொண்டிருந்தன.

ஆமாம், குரங்குகள் தான் ! இந்த இடத்தில் பிரகாஷின் வரலாறை நாம் கொஞ்சம் புரட்ட வேண்டியிருக்கிறது. சின்ன வயதில் பிரகாஷை அவருடைய பெற்றோர் மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே குரங்குகளுக்கு வாழைப்பழமோ, காராச்சேவோ எதையோ பையனிடம் கொடுத்து குரங்குக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பையனும் தைரியமாக கொடுத்திருக்கிறான். குரங்கு கவ்விவிட்டது. பிரகாஷின் கையை ! நீங்கள் நாய்க்கடி வாங்கியவரை பார்த்திருப்பீர்கள், சுஜாதாவின் ஒரு கதையில் குதிரையிடம் கடி வாங்கிய நபரைப் பற்றி படித்திருக்கிறேன், குரங்கின் கடி வாங்கிய ஒரே நபர் பிரகாஷாகத்தான் இருக்கும். பிரகாஷின் கையில் அந்த தழும்பு இப்போதும் கூட இருக்கிறது. எனக்கு அந்த தழும்பை பார்க்கும் போதெல்லாம் ஏனோ காராச்சேவு நினைவுக்கு வரும். அந்த சம்பவம் நடந்ததிலிருந்து விலங்குகளைக் கண்டாலே பிரகாஷுக்கு ஒவ்வாமை. குறிப்பாக குரங்குகளைக் கண்டாலே இது அதுல்ல என்றபடி பின்வாங்குவார்.

பந்திப்பூர் சாலைக்கு திரும்புவோம்... இப்பொழுது முன்னே இருக்கும் காரை கடக்க வேண்டும். வலது புறம் குரங்குகள். எனவே வேறு வழியில்லாமல் இடது புறமுள்ள சகதியில் வண்டியை விடுகிறார் பிரகாஷ். ஊஷ்ஷ்... வண்டி சமநிலை குலைந்து சாய்ந்துவிட்டது. தந்திரமாக இருவரும் அடிபடாமல் எழுத்துக்கொண்டோம். பதற்றம்தான். ஆனாலும் நூற்றிமுப்பது கிலோ R15யை இருவருமாக தூக்கி, மறுபடியும் கிளம்பத் தயாரானோம். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை ! இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தும் பலனில்லை. பதற்றம் அதிகரிக்கிறது. வலதுபுறம் கரடி. கரடி கூட அது பாட்டுக்கு அது வேலையை பார்க்கிறது. இடையே கடந்து செல்பவர்கள், கார்களில் பத்திரமாக அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் எங்களை பரிதாபமாக பார்க்கத் துவங்குகிறார்கள். அதுதான் வயிற்றில் பந்து உருட்டுகிறது. கீழே சகதியில் விழுந்ததில் வண்டிக்கு ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ ? ஒருவேளை அப்படியிருந்தால் வண்டியை உருட்டிக்கொண்டு போவதற்குள் கரடி தஹ தஹன்னு குதிச்சு ஓடி வந்து விடும். இதற்குள் பின்னாலிருந்து ஜெய்ரமேஷும் வந்து R15யை ஏதோ செய்ய, வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. 

விறுவிறுவென அவ்விடத்தைக் கடந்து ஆசுவாசமடைந்தோம். ஒருபுறம் ஆபத்தில்லாமல் தப்பித்தோம் என்ற நிம்மதியும், அதே சமயம் இப்படி ஒரு சம்பவமே நடைபெறாமல் போயிருந்தால் இந்த காட்டுவழி பயணத்தில் என்ன சுவாரஸ்யம் இருந்திருக்கும் என்றும் நினைத்துக்கொண்டு பந்திப்பூர் வனச்சாலையை கடந்து, மசினகுடி எல்லையை அடைந்தோம்...

அடுத்த பகுதி: சென்றடைதல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

பாஸ்கி said...

ஜஸ்ட் ஒரு நூல்ல மிஸ் ஆயிட்டிங்க இல்லன்னா கரடி டிபன்-அ முடிச்சிருக்கும் :)