Showing posts with label மசினகுடி. Show all posts
Showing posts with label மசினகுடி. Show all posts

25 May 2017

மசினகுடி - முப்பத்தியாறு வளைவுகளிலே

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு

மசினகுடியில் பிரத்யேக அனுபவமாக சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை பார்த்துவிட்டோம். அதைத் தாண்டி வேறெதுவும் இடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லை’ பலகை, சிடுசிடு அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது. மசினகுடியிலிருந்து முப்பத்தியாறு கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. ஊட்டியின் எல்லையை மட்டும் தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பது திட்டம்.

நீளும் வனச்சாலை
மைசூரு – ஊட்டி சாலையில் பன்னிரண்டு கி.மீ. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத காட்டுவழிச் சாலை. கிட்டத்தட்ட பந்திப்பூர் வனச்சாலையில் பார்த்த அதே காட்சிகள். மான்கள், மயில்கள், குரங்குகள். பந்திப்பூர் என்பது கர்நாடக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி. இது தமிழ்நாடு ! பந்திப்பூரிலிருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இங்கே இல்லை. சஃபாரி ஜீப்புகள் இல்லை, மேலைநாட்டு பயணிகள் இல்லை. கொஞ்ச தூரம் செல்ல செல்ல உதகையின் பிரம்மாண்ட மலைகள் தெரிய ஆரம்பித்தன. 

பைசன் பாயிண்டிலிருந்து
வனச்சாலையின் முடிவில் பைசன் பாயிண்ட் எனும் நோக்குமுனை வருகிறது. கொண்டையூசி வளைவுகளுக்கு முன்னதாக ஒரு சிறிய ஓய்வு எடுத்துக்கொள்வதற்கு உகந்த இடம். இங்கிருந்து பார்த்தால் மலை மீது ஊர்ந்து செல்லும் காட்டெருமைகளை பார்க்கலாம் என்கிறார்கள். 

கொண்டையூசி வளைவுகள் துவங்குகின்றன. மொத்தம் முப்பத்தியாறு. ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன். கொல்லியின் உயரம் சுமார் ஆயிரத்து இருநூறு மீ., எழுபது கொ.ஊ வளைவுகள். ஊட்டியின் உயரம் இரண்டாயிரம் மீட்டருக்கு மேல், ஆனால் முப்பத்தியாறே வளைவுகள். அப்படியென்றால் வளைவுகள் எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மலையேறத் துவங்குகிறோம். அதே சமயம், மழைச்சாரல் துவங்குகிறது. மழை துவங்கியதா அல்லது மழையின் எல்லைக்குள் நாங்கள் நுழைந்துவிட்டோமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அடிவாரம் வரை மழையில்லை. மேலே ஏற, ஏற ஒரே பனிமூட்டமாக இருக்கிறது. மேகங்களுக்கு உள்ளே புகுந்து வெளியே வருகிறோம். டைட்டானிக் முக்கிலிருந்து கடலை ரசிப்பதுபோல பரவசமடைகிறோம். உடலெல்லாம் சிலிர்க்கிறது. பரவசம் மட்டுமல்ல. ஊட்டி குளிர் அப்படி. போதாததற்கு மழை வேறு. 

மலையழகு !
ஒவ்வொரு வளைவிலும் ஒரு பெரிய கண்ணாடி வைத்திருக்கிறார்கள், சாலையின் மறுபுறம் வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக. ஆங்காங்கே சில டீக்கடைகள். ஒரு குறுக்குவழி முகப்பில் ஏதோ ஒரு அருவிக்கு செல்லும் வழி. ஊட்டியில் எந்த இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டாம் என்று முன்பே முடிவு செய்திருந்ததால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்வது போல கடந்தோம். முப்பத்தியாறையும் கடந்தோம்.

ஊட்டியின் எல்லை
ஊட்டியின் மைய இணைப்புச் சாலைக்கு வந்திருந்தோம். பற்ற வைத்தோம். குளிர் தாங்க முடியாமல் அதுவே தான் எங்களை பற்ற வைத்தது. பனி படர்ந்த அந்த மலையை அண்ணாந்து பார்த்தோம். இன்னும் இருக்கிறது உயரம். கொஞ்ச நேரம் பயணித்தால் உச்சகட்டத்தை எட்டிவிடலாம். இப்போது அவசரம். பொழுது சாய்வதற்குள் மசினகுடிக்கு திரும்பியாக வேண்டும். அது மட்டுமல்ல, ஊட்டி என்பது பெரிய சம்பவம். சமயம் பார்த்து செய்யவேண்டும்.

இறங்கத் துவங்கினோம். மலைகளைப் பொறுத்தவரையில் ஏறும்போது இருக்கும் அதே பரவசம் இறங்கும்போதும் இருக்கிறது. ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒரு தேநீர்க்கடை, அதையொட்டி சோளக்கடை. வாகனங்களை நிறுத்திவிட்டு இளைப்பாறினோம். தூரத்தில் எங்கேயோ ஒரு படுகர் இல்லத் திருமண இசை கேட்டது. 

மீண்டும் மசினகுடி ! தொடரில் மசினகுடி ஊர்பகுதியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதில் விடுபட்ட ஒரு பகுதி ட்ரீம் லேண்ட் உணவகம். பேக்கரி, சூப்பர் மார்க்கெட், உணவகம் மூன்றையும் உள்ளடக்கியிருக்கிறது. விசாலமான டைனிங் ஹால். நாங்கள் போன வேளையில் அதிக கூட்டமில்லை. சூழலும் விருந்தோம்பலும் தரமாக இருந்தது. ஊட்டியிலிருந்து திரும்பியதும் இங்கேதான் மதிய உணவை சாபிட்டோம். மதிய உணவை சாப்பிடும் சமயம் மாலை ஆகியிருந்தது. 

ஊர் திரும்பும் பாதை
மறுநாள் காலையும் அதே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திரும்புதலுக்கு தயாரானோம். மீண்டும் பந்திப்பூர் வனச்சாலை. திரும்பிவரும் போது முதுகுப்புறத்தை காட்டியபடி ஒரு யானை காட்டுக்குள் சென்றுக்கொண்டிருந்தது. மக்கள் குழுவாக அதனை பார்த்துக்கொண்டிருந்தனர். வனச்சாலையை கடந்தபிறகு நினைவுப்பொருட்கள் வாங்கிக்கொள்ள சில கடைகள் இருக்கின்றன. போகும்போது கடந்த அதே கர்நாடக நெடுஞ்சாலைகள் திரும்பும்போது ரணமாக இருந்தன. வெயில் வேறு. அந்தி சாயும் சமயத்தில் ஆம்பூர் ஸ்டாரில் பிரியாணியை த்வம்சம் செய்தபிறகு தான் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தி சாய்ந்தது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 April 2017

மசினகுடி – மோயாறு பள்ளத்தாக்கு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: சென்றடைதல்

மசினகுடியில் சுற்றிப் பார்ப்பதற்கென்று நிறைய இடங்கள் கிடையாது. நானாகவே கூகுள் மேப்பை அங்குலம் அங்குலமாக துழாவி சில இடங்களுக்கு நட்சத்திர குறியிட்டு வைத்திருந்தேன். இந்த நட்சத்திர குறியிட்டுக்கொள்ளும் வசதி கூகுள் மேப்பின் ஒரு உபயோகமான பயன்பாடு. 

முதலில் மரவக்கண்டி நீர்தேக்கத்திற்கு சென்றோம். வெளியே ‘அனுமதி இல்லை’ அறிவிப்புப்பலகை. சில கட்டிடப்பணியாளர்கள் வேலை செய்துக்கொண்டிருந்தனர். அவர்கள், யாராவது அதிகாரிகள் கேட்டால் மட்டும் சுற்றிப்பார்க்க வந்தோம் என்று சொல்லச் சொன்னார்கள். முகப்பில் விநாயகர் ஆலயம். கடந்து உள்ளே சென்றால் மரண அமைதியுடன் ஒரு சிறிய நீர்த்தேக்கம். 

மரவக்கண்டி நீர்த்தேக்கம்
சில நிமிடங்கள் மட்டும் அங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதற்கு மேல் அங்கே விசேஷம் எதுவுமில்லை.

அடுத்ததாக சிக்கம்மன் கோவில் நோக்குமனை. அப்படித்தான் மேப் சொல்கிறது. ஆனால் அங்கே நோக்குமுனையெல்லாம் இல்லை. சிறிய அம்மன் (சிக்கம்மன் என்றால் சின்ன அம்மன் என்று பொருள்) கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

சிக்கம்மன் கோவில் கோபுரம்
கோவில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் மோயாறு பள்ளத்தாக்கின் ஒரு பகுதி தெரிகிறது. இந்தமுறை பிரகாஷும், அப்புவும் அவரவர் பைக்குகளோடு காதல் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

அடுத்து சென்ற இடம் மோயாறு நீர் மின்னாற்றல் மையம். 

மோயாறு பின்னணியில் மோஜோ (மற்றும் R15)
குடும்பத்துடன் புளிச்சோறு கட்டிக்கொண்டு சென்று பார்ப்பதற்கு தோதான இடம். மற்றபடி பிரமாதமாக ஒன்றுமில்லை. மேலும் நீர்தேக்கத்தின் ஆரம்பப்பகுதி வரை மட்டும்தான் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதைத்தாண்டி சென்றால் சிடுசிடுவென ஒரு அதிகாரி அமர்ந்திருக்கிறார். போட்டோ எடுக்காதே, அதன் மேலே ஏறாதே, கோட்டைத் தாண்டி வராதே என்று அதட்டுகிறார்.

அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் இருந்தது சிகூர் அருவி மற்றும் மோயாறு பள்ளத்தாக்கு. மோயாறு நீர் மின்னாற்றல் மையத்தைக் கடந்து கொஞ்சதூரம் போனால் மேப்பில் ஒரு நூலளவு சாலை தெரிகிறது. அதன் முடிவில் அருவியும் பள்ளத்தாக்கும் இருப்பதாக காட்டுகிறது. இது முழுக்க முழுக்க மேப்ஞானம் தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கே சாலையே இல்லை. ஆஃப் ரோடு என்றதும் மோஜோ முரட்டுக்காளை துள்ளிக்குதித்து பாய, R15 அதனைத் தொடர, குத்துமதிப்பாக மேப் காட்டிய வழியில் போக, அது ஒரு ஆளில்லா செக் போஸ்டுக்கு வந்து நின்றது. மறுபடியும் அனுமதி இல்லை என்கிற அறிவிப்புப்பலகை. அனுமதி கேட்க ஆட்களுமில்லை. சுற்றி அரை கி.மீ.க்கு அங்கு ஆட்களே இல்லையென உறுதியாக சொல்லிவிடலாம். இவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்பிப்போனால் சரியாக இருக்காதென தடையை கடந்தோம். 

உள்ளே கற்களாலான பாதை நீள்கிறது. சுற்றிலும் காடு. வீடு, மனிதர்கள் நடமாட்டம் எல்லாம் சுத்தமாக இல்லை. திடீரென அங்கே கரடியோ, புலியோ, யானைகளோ வந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று தெரியவில்லை. இதில் மிகைப்படுத்துதல் எதுவுமில்லை. நிஜமாகவே அங்கே வனவிலங்குகள் ஏதேனும் வந்திருந்தால் நாங்கள் வீடு திரும்பியிருக்க மாட்டோம். எங்களுடையது கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம். அழிந்துவரும் அரியவகை உயிரினமான சிகப்பு-தலை கழுகுகள் வசிக்கும் வனப்பகுதி இது. கிட்டத்தட்ட சந்திரமுகி அரண்மனைக்குள் நுழையும் முருகேசனைப் போல பயந்தபடி நடந்தோம். அள்ளு விட்ருச்சு. இதோ அதோ என்று பாதை நீண்டுக்கொண்டே இருக்கிறது. இறுதியில் மலையின் முகட்டுக்கே வந்துவிட்டோம். 

மோயாறு பள்ளத்தாக்கு !
அங்கேதான் பியூட்டி ! அம்மலையின் முகட்டில் இருந்து எட்டிப்பார்த்தால் சொர்க்கம் தெரிகிறது. ஆமாம், ஆளரவமற்ற மலை முகடு, ரம்மியமான இயற்கைக்காற்று, செங்குத்தான சரிவு, அதிலே மெலிதாக பாயும் அருவி எல்லாவற்றையும் விட பிரமிப்பைத் தரக்கூடிய அபாரமான பள்ளத்தாக்கு. இந்த இடத்தை தமிழகத்தின் கிராண்ட் கேன்யன் என்று சொல்லலாம். 

சிகூர் அருவி
செக் போஸ்ட் தாண்டியதற்கும், வனவிலங்குகளுக்கு அஞ்சியபடியே காட்டைக்கடந்ததற்கும் வொர்த்தான இடம். மழைக்காலத்தில் வந்திருந்தால் இன்னும்கூட அட்டகாசமாக இருந்திருக்கும். சிகூர் அருவியில் தண்ணீர் பாய்வதை பார்த்திருக்கலாம். வனவிலங்குகள் நீர் அருந்துவதற்கு இங்கேதான் வருவதாக கூறுகின்றனர். சிலிர்ப்பான சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் செக் போஸ்டுக்கு திரும்பினோம். அப்போது செக் போஸ்டில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்துவிட்டது. எனினும் சகஜமாக பேசிக்கொண்டே காலேஜ் சீனியர்களைக் பார்த்த ஃப்ரெஷ்ஷர்ஸ் போல கடக்க முயன்றோம். அந்த யுக்தி உபயோகமாக இல்லை. இருவரும் எங்களை மடக்கி யாரைக் கேட்டு செக் போஸ்டை கடந்து சென்றீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டார்கள் என்பது சில நிமிடங்கள் மிரட்டினார்கள் என்று மாறியது. ஃபாரஸ்ட் ரேஞ்சருக்கு தகவல் சொல்லியாச்சு இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடுவார் என்பது வரை போய்விட்டார்கள். இடையிடையே அவர்களுடைய பேச்சு பணம் பறிக்கும் நோக்கில் இருந்ததையும் யூகிக்க முடிந்தது. ஐநூறு, ஆயிரம் வரை பரவாயில்லை. ஃபாரஸ்ட் ரேஞ்சர் வரையெல்லாம் விஷயம் போய்விட்டால் தலைக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று அவர்கள் மிரட்டியபோது அடிவயிறு கலங்கியது. சுமார் பத்து நிமிடங்கள் இருக்கும். பிரகாஷும், அப்புவும் பேசிப் பேசியே அந்த இளைஞர்களை கரைத்தார்கள். கடைசியாக எங்களை சேதாரமில்லாமல் அனுப்பி வைக்க முடிவெடுத்தனர். இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கு சொன்ன காரணம் விசேஷமானது. சென்னையிலிருந்து வர்றீங்கன்னுறதால விடுறோம். அங்க என்ன நடக்குதுன்னு டிவியில் பார்க்கிறோம் என்றார். (அநேகமாக ஜல்லிக்கட்டு போராட்டம். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. போராட்டக்குழுவுக்கு ஸ்தோத்திரம் !) விட்டால் போதும் என்று விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பி மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கு வந்தபிறகு தான் பேசிக்கொண்டோம். 

இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தேறியபிறகு மணி மதியம் இரண்டு. அடுத்ததாக பார்ப்பதென்றால் பைக்காரா நீர் மின்னாற்றல் மையம் (அருவி அல்ல). பிரத்யேக அனுபவமாக சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை பார்த்துவிட்டோம். ஆனால் அதைத் தாண்டி வேறெதுவும் இடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லை’ பலகை, சிடுசிடு அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

இரவுக்கு முழுமையாக நான்கு மணிநேரங்கள் இருக்கின்றன. சிறிய யோசனைக்குப்பின் நிபந்தனையுடன் கூடிய முடிவொன்றை எடுத்தோம். மசினகுடியிலிருந்து முப்பத்தியாறு கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. அவற்றில் வளைந்து ஊட்டியின் எல்லையை மட்டும் தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பதுதான் அந்த திட்டம். ஆனால் ஊட்டி தனி ப்ராஜெக்ட் என்பதால் அங்குள்ள சுற்றுலா இடங்களை தொடக்கூடாது என்பதுதான் நிபந்தனை. வாகனங்கள் ஊட்டியை நோக்கி உறுமத்துவங்கின...

(தொடரும்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2017

மசினகுடி – சென்றடைதல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: பந்திப்பூர் வனச்சாலை

மசினகுடி எல்லையைத் தொட்டதும் ஒரு இளைஞர் வேகமாக வந்து எங்கள் வாகனங்களை வழிமறித்தார். அந்த சமயத்தில் அவருடைய உடல்மொழி ஒரு போக்குவரத்து காவலருடையதைப் போல இருந்தது. ஏதோ தகாத செயல் புரிந்துவிட்டோம் போலிருக்கிறது என்று பயந்துக்கொண்டே வாகனத்தை நிறுத்தினால் அண்ணன் காட்டுலாவிற்கு (ஜங்கிள் சஃபாரி) ஆள் சேர்க்கிறார். அப்போதைக்கு அது குறித்து முடிவு எதுவும் எடுக்காததால் அந்த நபரின் அலைபேசி எண்ணை மட்டும் பெற்றுக்கொண்டு ஊருக்குள் நுழைந்தோம். அதற்குள் மழை கொஞ்சமாக பெய்வது போல துவங்கி, முக்கால்வாசி நனைந்திருந்தோம்.

மசினகுடியை சுற்றி ஏராளமான ரெஸார்டுகள் உள்ளன. Jungle, Wild, Forest போன்ற குறிச்சொற்களை தங்களுடைய பெயர்களில் தாங்கி சுமார் ஐம்பது ரெஸார்டுகளாவது இருக்கக்கூடும். அவற்றில் ஒற்றை இரவு வாடகை மூன்றாயிரத்தில் துவங்கி, பத்தாயிரம் வரை இருக்கின்றன. வாங்குகிற பணத்திற்கேற்ப அவற்றில் நீச்சல் குளம், கேம்ப் ஃபயர் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. இவை தவிர்த்து நேரடியாக காட்டில் கூடாரமடித்து தங்குவதற்கான ஏற்பாடுகளும் கிடைக்கின்றன. இதற்கென காட்டுப்பகுதிக்கு நன்கு அறிமுகமான, சமையல் தெரிந்த உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர். இந்த சேவைக்கு ஒரு நபருக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் என்று கேள்விபட்டேன். எங்களுடையது பட்ஜெட் ட்ரிப் என்பதால் மசினகுடி ஊர்பகுதியிலேயே அறை எடுப்பதென முடிவெடுத்திருந்தோம். அதற்கென சில தங்குமிடங்களைக் கூட ஏற்கனவே பட்டியலில் குறித்து வைத்திருந்தோம்.

மசினகுடி ஊர் என்று நான் குறிப்பிடுவது இரண்டு சிறிய தெருக்களையும், ஒரு பிரதான சாலையையும் உள்ளடக்கியது. தெருக்கள் மற்றும் சாலையின் நீளம் சுமார் இருநூறு மீட்டர் இருக்கலாம். சுற்றுலாத்தளத்திற்கான அடையாளங்கள் அதிகம் இல்லை. பிரதான சாலையில் டெய்லர் கடை, ஃபோட்டோ ஸ்டூடியோ, மளிகைக் கடை, மருந்துக் கடை, பிராய்லர் கோழிக்கறி கடை என்று சகலமும் இருக்கின்றன. டாஸ்மாக் இருக்கிறது. சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. அங்கே பழங்கள் இருக்கின்றன. பழங்கள் என்றால் உள்ளூர் பழங்கள் அல்ல. நவீன கலப்பின திராட்சைகள், ஆரஞ்சுகள், ஆப்பிள்கள் என நகரத்தில் கிடைக்காத பழங்கள் கூட இங்கே கிடைக்கின்றன. எஞ்சியிருக்கும் சிறிய உணவகங்களும், விடுதிகளும் தான் சுற்றுலா தளத்திற்கான அடையாளங்கள். முதலில் சேவியர் லாட்ஜை பார்த்தோம். அறுநூறு ரூபாய் வாடகை. ஒப்பீட்டளவில் விசாலமான அறை. இரண்டு கட்டில்கள். இருப்பினும் மேஜை, அலமாரி, தொலைகாட்சி ஆகியவை இல்லாதது குறையாக தெரிந்தது. அடுத்தது ஆலப்பத் லாட்ஜ் சென்றோம். அங்கே இருந்த சிப்பந்தி அறை என்றதும் ஒரு முரட்டுத்தனமான கேள்வியைக் கேட்டு எங்களை திகைக்க வைத்தார். ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்களா ? என்பதுதான் அந்த கேள்வி. எங்களுக்கும் அந்த சிப்பந்திக்கும் தனிப்பட்ட உறவுமுறை / நட்பு இல்லையென்றால் கூட முதல் கேள்வியே இத்தனை அதிரடியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஆசுவாசமடைவதற்குள் குடிச்சிட்டு பிரச்சனை பண்ணுவீங்களா ?, போலீஸ் வந்தா நீங்கதான் பாத்துக்கணும் என்று அடுத்தடுத்த அணுகுண்டுகளை போட்டார். குறிப்பாக இறுதியில் அவர் கொடுத்த போலீஸ் எச்சரிக்கை எங்களுக்கு கோபமூட்டியது. இங்கே என்ன பிராத்தலா செய்கிறோம் ? எல்.சி.டி டிவி இருந்தும் கூட அந்த விடுதியை புறக்கணித்தோம். 

கொங்கு லாட்ஜ்
அடுத்தது வகையாக வந்து சிக்கியது கொங்கு லாட்ஜ். கீழ் மற்றும் முதல் தளங்களில் அறைகள். அடித்தளத்தில் மதுக்கூடம். விடுதி உரிமையாளரை / சிப்பந்தியை சந்திப்பதற்கு முன்பாகவே மதுக்கூட பிரஜை ஒருவர் ஆஜராகிவிட்டார். கேம்ப் ஃபயர், ட்ரெக்கிங், சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தருவதாக அரைபோதையில் சொன்னார். எந்த சுற்றுலா தளத்திற்கு சென்றாலும் இதுபோன்ற முகவர்கள் உங்களை அணுகுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமக்கு உதவ முன்வருகிறார்களே என்று இவர்களிடம் சிக்கினால் நம்மை நொங்கெடுத்து விடுவார்கள். இவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு நாம் தரவேண்டிய விலை ஒரு கட்டிங். அப்படி ஐம்பது ரூபாயை அந்த நபரிடம் கொடுத்தபிறகு நாங்கள் மசினகுடியில் இருந்து கிளம்பும் வரை அவரை பார்க்கவே முடியவில்லை. 

அறையிலிருந்து இயற்கைக்காட்சி
இதற்குள் விடுதி உரிமையாளர் வந்துவிட்டார். அறை வாடகை நாளொன்றிற்கு எண்ணூறு ரூபாய். சிறிய அறைதான். தொலைக்காட்சி, அலமாரி, மேஜை ஆகியவை இருந்தன. கூடுதல் மெத்தையும், போர்வையும் தருவதாகக் கூறினார். அறையிலிருந்து இயற்கைக்காட்சி சிறப்பாக இருந்தது. உடனடியாக அங்கே குடிபுகுந்துக் கொண்டோம். மதிய உணவை (மோசமான பிரியாணி) முடித்துக்கொண்டு, பயணக்களைப்பில் முரட்டுத் தூக்கம் தூங்கி, மறுநாள் காலையில் தான் எழுந்தோம்.

எழுந்தபோது மிதமான தலைவலி. தூக்கத்திற்கிடையே கடைத்தெருவுக்கு போய் பழங்களும், சிற்றிடை உணவுகளும் வாங்கி வந்து, சீஸனில்லாத மாம்பழ ஜூஸை பருகி, கதைகள் பேசித்தீர்த்ததாக மங்கலாக ஏதேதோ குழப்பமான நினைவுகள் எஞ்சியிருந்தன. ஒரு பழகிய ஊரைப் போல பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தேநீர் அருந்தியபடி பேச்சு கொடுத்தபோது முந்தைய இரவு அந்த சாலையின் முனை வரை யானை வந்து சென்றதாக சொன்னார்கள்.

அடுத்த பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 March 2017

மசினகுடி – பந்திப்பூர் வனச்சாலை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: தொடக்கம்

மசினகுடியை நோக்கிய எங்கள் பயணத்தில் மாலை மூன்று மணியளவில் பந்திப்பூர் செக் போஸ்ட் சென்றடைந்தோம். அங்கே காட்டிலாகா அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் எதற்காகவோ காத்திருந்தனர். முதலில் இது என்னடா சோதனை என்றுதான் நினைத்தேன். ஏற்கனவே பெங்களூரு நண்பர் ஒருவர் செக் போஸ்ட் பற்றி எச்சரித்ததால் மாம்பழ ஜூஸை நெகிழிக்குப்பிக்கு மாற்றி வைத்திருந்தோம். விசாரித்ததில் வரிசை காட்டுலா (ஜங்கிள் சஃபாரி) செல்வதற்கான டிக்கட் வாங்குவதற்கு என்றும், மற்றவர்கள் நிற்கத் தேவையில்லை என்று தெரிந்துக்கொண்டோம். 

படம்: இணையம்
பந்திப்பூர் வனச்சாலையில் எங்கள் பயணம் துவங்கியது. சாலையின் இருபுறங்களிலும் பத்து அடிக்கு ஒரு மான் கும்பலை பார்க்க முடிகிறது. அதுபோக மயில்களும், குரங்குகளும். வாகனத்தை மெதுவாக செலுத்தியபடி எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே வந்தோம். வானம் மசமசவென்று இருந்தது. ஏற்கனவே மழை பெய்த ஈரத்தடங்கள் தெரிந்தன. பந்திப்பூர் சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் செல்வதற்காக ஆங்காங்கே சிறிய மண்சாலைகள் கிளை பிரிகின்றன. ஆனால் அவை பொதுவழி கிடையாது. காட்டுலா செல்லும் வேன்கள் மட்டும் அந்த சாலை வழியாக பயணிக்கின்றன. வாகனங்களை நிறுத்தக்கூடாது, புகைப்படங்கள் எடுக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் கூட மற்றவர்களுக்குத் தான். காட்டிலாகாவிடம் டிக்கெட் பெற்று வேனில் உலா செல்பவர்கள் மிருகங்களைக் கண்டால் உடனே வாகனத்தை நிறுத்தச்சொல்லி DSLRஐ தூக்கிவிடுகின்றனர். 

திடீரென ஒரு இடத்தில் காட்டிலாகாவின் வேனும், சில கார்களும் நின்றுக்கொண்டிருந்தன. அவர்கள் எதையோ பார்த்துக்கொண்டும், படம் பிடித்துக்கொண்டும் இருந்தனர். காட்டின் முக்கிய பிரமுகர் யாரோ வந்திருக்கிறார். ஒருவேளை புலியாக இருக்குமோ அல்லது யானை. யோசித்துக்கொண்டே எட்டிப்பார்த்தால் கரடி ! கரிய, பெரிய உருவத்துடன் செடிகளுக்கிடையே எதையோ தேடிக்கொண்டிருந்தது. சுற்றி ஒரு ஐம்பது பேர் அதனை குறுகுறுவென வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாமல் சாதாரணமாக உலவிக்கொண்டிருந்தது. நாங்களும் அந்த வாகனங்களுக்கு அருகே சென்று கரடியைக் கண்டோம். கரடிக்கும் எங்களுக்கும் அதிக பட்சம் ஒரு பதினைந்து அடி இடைவெளி இருந்திருக்கும். கரடி சாவகாசமாக சாலையைக் கடந்தது. மறுபடியும் மேயத் துவங்கிவிட்டது. 

சில நிமிடங்கள் இப்படி கரடியை பார்த்துக் கொண்டிருந்தோம். DSLR வைத்திருந்தவர்கள் சலிக்காமல் கரடியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் அங்கிருந்து கிளம்புவதாக தெரியவில்லை. எங்களுக்கு அதற்கு மேல் அங்கே சுவாரஸ்யமாக எதுவும் இல்லாததால் கிளம்பத் தயாரானோம். எங்களுக்கு முன்னே ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது. அதனை வலது பக்கமாக கடந்து நாங்கள் முன்னேற வேண்டும். கரடியும் சாலையின் வலது பக்கம்தான் இருக்கிறது. அது பிரச்சனையில்லை. வலது பக்கம் காருக்கும் கரடிக்கும் இடையே தாராளமாக இடைவெளி இருக்கிறது என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் காருக்கு மிக அருகிலேயே சில குரங்குகள் நின்றுக்கொண்டிருந்தன.

ஆமாம், குரங்குகள் தான் ! இந்த இடத்தில் பிரகாஷின் வரலாறை நாம் கொஞ்சம் புரட்ட வேண்டியிருக்கிறது. சின்ன வயதில் பிரகாஷை அவருடைய பெற்றோர் மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே குரங்குகளுக்கு வாழைப்பழமோ, காராச்சேவோ எதையோ பையனிடம் கொடுத்து குரங்குக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பையனும் தைரியமாக கொடுத்திருக்கிறான். குரங்கு கவ்விவிட்டது. பிரகாஷின் கையை ! நீங்கள் நாய்க்கடி வாங்கியவரை பார்த்திருப்பீர்கள், சுஜாதாவின் ஒரு கதையில் குதிரையிடம் கடி வாங்கிய நபரைப் பற்றி படித்திருக்கிறேன், குரங்கின் கடி வாங்கிய ஒரே நபர் பிரகாஷாகத்தான் இருக்கும். பிரகாஷின் கையில் அந்த தழும்பு இப்போதும் கூட இருக்கிறது. எனக்கு அந்த தழும்பை பார்க்கும் போதெல்லாம் ஏனோ காராச்சேவு நினைவுக்கு வரும். அந்த சம்பவம் நடந்ததிலிருந்து விலங்குகளைக் கண்டாலே பிரகாஷுக்கு ஒவ்வாமை. குறிப்பாக குரங்குகளைக் கண்டாலே இது அதுல்ல என்றபடி பின்வாங்குவார்.

பந்திப்பூர் சாலைக்கு திரும்புவோம்... இப்பொழுது முன்னே இருக்கும் காரை கடக்க வேண்டும். வலது புறம் குரங்குகள். எனவே வேறு வழியில்லாமல் இடது புறமுள்ள சகதியில் வண்டியை விடுகிறார் பிரகாஷ். ஊஷ்ஷ்... வண்டி சமநிலை குலைந்து சாய்ந்துவிட்டது. தந்திரமாக இருவரும் அடிபடாமல் எழுத்துக்கொண்டோம். பதற்றம்தான். ஆனாலும் நூற்றிமுப்பது கிலோ R15யை இருவருமாக தூக்கி, மறுபடியும் கிளம்பத் தயாரானோம். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை ! இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தும் பலனில்லை. பதற்றம் அதிகரிக்கிறது. வலதுபுறம் கரடி. கரடி கூட அது பாட்டுக்கு அது வேலையை பார்க்கிறது. இடையே கடந்து செல்பவர்கள், கார்களில் பத்திரமாக அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் எங்களை பரிதாபமாக பார்க்கத் துவங்குகிறார்கள். அதுதான் வயிற்றில் பந்து உருட்டுகிறது. கீழே சகதியில் விழுந்ததில் வண்டிக்கு ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ ? ஒருவேளை அப்படியிருந்தால் வண்டியை உருட்டிக்கொண்டு போவதற்குள் கரடி தஹ தஹன்னு குதிச்சு ஓடி வந்து விடும். இதற்குள் பின்னாலிருந்து ஜெய்ரமேஷும் வந்து R15யை ஏதோ செய்ய, வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. 

விறுவிறுவென அவ்விடத்தைக் கடந்து ஆசுவாசமடைந்தோம். ஒருபுறம் ஆபத்தில்லாமல் தப்பித்தோம் என்ற நிம்மதியும், அதே சமயம் இப்படி ஒரு சம்பவமே நடைபெறாமல் போயிருந்தால் இந்த காட்டுவழி பயணத்தில் என்ன சுவாரஸ்யம் இருந்திருக்கும் என்றும் நினைத்துக்கொண்டு பந்திப்பூர் வனச்சாலையை கடந்து, மசினகுடி எல்லையை அடைந்தோம்...

அடுத்த பகுதி: சென்றடைதல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 March 2017

மசினகுடி – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மசினகுடி – கொஞ்சமாக சூறையாடப்பட்ட வனப்பகுதி ! ஊட்டியை மலைகளின் அரசி என்பார்கள். மசினகுடி அரசியின் தங்கை. தமிழக – கர்நாடக – கேரள எல்லைப்பகுதியில் தமிழகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது மசினகுடி. இயற்கை, காடு, விலங்குகள் (குறிப்பாக யானை) – இவையெல்லாம் மசினகுடியின் சிறப்பம்சங்கள். சென்னையிலிருந்து தோராயமாக 600 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மசினகுடி.

கட்டுரையின் உள்ளே செல்வதற்கு முன் என்னுடன் பயணித்த, பயணிக்கப் போகிற, என் தளபதிகள் இருவரை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

ஜெய்ரமேஷ். மஹேந்திரா மோஜோவின் உரிமையாளர். பைக் ஓட்டுவதில் பேரார்வம் கொண்டவர். இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘அயர்ன் பட்’ எனப்படும் 24 மணிநேரத்தில் ஆயிரம் மைல்கள் பைக்கோட்டும் சாகஸத்தை நிகழ்த்திவிடும் முனைப்பில் இருக்கிறார்.

பிரகாஷ். யமஹா R15யின் உரிமையாளர். ஒப்பீட்டளவில் பைக் ஆர்வம் இல்லையென்றால் கூட சளைக்காமால் முன்னூறு சிசி மோஜோவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டக்கூடியவர். மாரத்தான், சைக்லிங், என பிற சாகசங்களில் அதிக ஈடுபாடுடையவர்.

குடியரசு தினத்திற்கு மறுநாள். முந்தைய பயணங்களை விட தொலைவு அதிகம் என்பதால் விடியும் வரை காத்திராமல் நள்ளிரவே கிளம்பிவிடலாம் என்று திட்டம். தயாராகி வெளியே வந்தபோது இரண்டு சாகசக்காரர்களும் R15யின் பெட்ரோல் டேங்கின் உள்ளே தலையை விட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். பெட்ரோல் டேங்க் சாவித்துவாரத்தில் ஏதோ கோளாறு, திறக்க முடியவில்லை. மாற்றுச்சாவியையும் முயன்று பார்த்தாயிற்று. பெட்ரோல் இல்லாமல் ட்ரிப் எப்படி ? ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் போராடியும் பலனில்லை. இருக்கிற பெட்ரோலில் இருநூறு கி.மீ. வரை ஓடும் என்றார் பிரகாஷ். சரி, அப்படியே உருட்டிக்கொண்டு போவோம். போகிற வழியில் ஏதாவது நெடுஞ்சாலை ஒர்க்ஷாப் கிடைக்கும். அங்கே சரி செய்துக்கொள்ளலாம் என்று ஏதோவொரு குருட்டு நம்பிக்கையில் கிளம்பினோம். பயணத்தின் துவக்கத்தில் இருக்கும் எந்த உற்சாகமும் இல்லை. வழியில் உள்ள கடைகளை எல்லாம் கழுகாக நோட்டமிட்டு, பஞ்சர் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஹிந்திவாலாவை எழுப்பி கலவரப்படுத்தி, பெட்ரோல் பங்க் அண்ணாக்களிடமெல்லாம் ஆலோசனை கேட்டு எதுவும் பலனளிக்கவில்லை. 

அதிகாலை மூன்றரை மணி. மெதுவாக ஸ்ரீபெரும்புதூர் தாண்டியிருந்தோம். திட்டமிட்டபடி பயணம் தொடங்கியிருந்தால் எங்கள் மனநிலையே வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும். சாவித்துவார சிக்கலின் காரணமாக தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. அதிகபட்சம் ஆம்பூர் வரை செல்ல முடியும். பேசாமல் எங்கேயாவது ரூம் போட்டு தூங்கிவிட்டு, காலையில் நிதானமாக எழுந்து பயணத்தை தொடங்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். எதுவுமே வேலைக்காகவில்லை என்றால் ப்ளானை ஏற்காடுக்கு சுருக்கிக்கொள்ளலாம் என்று மனதிற்குள் ஒரு ரகசியத்திட்டம் போட்டு அதனை ஆறுதல் படுத்தி வைத்திருந்தேன். ஸ்ரீபெரும்புதூர் தாண்டி ஒரு பெரிய பெட்ரோல் பங்க். அங்கே பணிபுரிபவர்களிடம் கேட்டுப் பார்த்தோம். வழக்கம் போல பலனில்லை. வெறுப்புடன் பெட்ரோல் பங்க் வாயிலில் நின்று அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்தோம். கடுப்பில் இருந்த பிரகாஷ் சாவியை துவாரத்தில் விட்டு கோபமாக முறுக்கியிருக்கிறார். வெளியே எடுக்கும்போது சாவி மிகவும் பலவீனமாக இருந்தது. கை பட்டதும் பாதி சாவி உடைந்து கீழே விழுந்துவிட்டது. தூக்கிப் போடப்போன மீதிச்சாவியை சும்மா போட்டுப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, க்ளிக் !

ஸ்ரீபெரும்புதூர் பெட்ரோல் பங்க் வாசலில்...
பயணம் தொடங்கியது. ஆற்காடு, ஆம்பூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரை அணைத்தபடி கடந்து, மண்டியா, மைசூரு தாண்டி, மாலை மூன்று மணிக்கு குண்டுலுபேட்டை செக் போஸ்ட் வந்து சேர்ந்தோம். கடைசி ஸ்ட்ரெச் ! முப்பது கிலோ மீட்டரில் மசினகுடி. இடையில் பந்திப்பூர் வனப்பகுதி. 

கடைசி நேர பயணத்திட்ட மாற்றம், சாவித்துவார சர்ச்சை எல்லாம் தந்த மன உளைச்சலில் மசினகுடி பயணத்தைப் பற்றி மட்டும் எழுதவே கூடாது என்று நினைத்திருந்தேன். பந்திப்பூர் வனத்தில் கரடி ஒன்றைக் காணும் வரை, சிகூர் அருவி மற்றும் மோயர் பள்ளத்தாக்கின் பிரம்மாண்டத்தை காணும் வரை...

அடுத்த பகுதி: பந்திப்பூர் வனச்சாலை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment