2 June 2017

ஒரு கோடி தூலிப் மலர்கள் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சஞ்சனா அவளது அறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு கோடி தூலிப் மலர்கள் ஒருசேர பூத்துக் குலுங்கியதைப் போலிருந்தது !

சஞ்சனா ஊரிலிருந்து சென்னையிலிருக்கும் அக்கா வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஊர் என்றால் அரசம்பட்டியோ, ஆண்டிப்பட்டியோ அல்ல. அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைந்தகரையிலிருந்து (சென்னை பாஷையில் அமிஞ்சிக்கரை) மேற்படிப்புக்காக போனவள்தான். ஆனால் அங்கேயே பிறந்து வளர்ந்தவள் போல ஆளே மாறிவிட்டாள். 

© Nithin Barath Photography
சஞ்சனா வந்ததிலிருந்தே ஷ்யாமுக்கு அவள் மீது ஒரு கண். ஒருவேளை நம் தேசியப் பறவைக்கு இருக்கும் கண்கள் ஷ்யாமுக்கு இருந்திருந்தால் சஞ்சனாவை கர்ப்பவதி ஆக்கியிருப்பான். இந்த ஷ்யாம் என்பவன் யாரோ அனாமதேயன் என்று நினைத்துவிடாதீர்கள். சஞ்சனாவின் அக்கா சந்தியாவின் கணவன். சந்தியாவுக்கும் ஷ்யாமுக்கும் மாங்கல்யம் தந்துனா பாடி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆணொன்று பெண்ணொன்று என இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறார்கள். ஷ்யாம் சந்தியாவை பெண் பார்க்கச் சென்றிருந்தபோது சஞ்சனா புதிதாக பூத்த மலரைப் போலிருந்தாள். திரைச்சீலைக்கு பின்னாலிருந்து சிரிக்கலாமா கூடாதா என்று தயங்கியபடி ஷ்யாமையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதே ஷ்யாமுக்கு மனதிற்குள் கவுளி கத்தியது. ஒருவேளை இன்னும் கொஞ்சம் வளர்ந்தவளாக இருந்திருந்தால் ரோஜா படத்தில் வரும் அரவிந்தசாமியைப் போல எனக்கு அந்தப் பொண்ணதான் பிடிச்சிருக்கு என்று கூச்சப்படாமல் கை நீட்டியிருப்பான். திருமணமான புதிதில் ஷ்யாமத்தான் ஷ்யாமத்தான் என்று சுற்றிச் சுற்றி வருவாள். இவனோ கட்டின மனைவியைக் கூட முழுப் பெயரிட்டு அழைப்பான். இவளிடம் மட்டும் சஞ்சு, சஞ்சு என்று குழைவான். மாட்னி ஷோவுக்கு கூட்டிட்டு போறீங்களா அத்தான் என்று விகல்பமில்லாமல் கேட்பாள். கணக்கு பாட சந்தேகங்களை தீர்த்துக்கொள்வாள். எட்டு ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டாள்.

சஞ்சனா இப்பொழுதெல்லாம் ஷ்யாமைக் கண்டுகொள்வதே இல்லை. ஊரிலிருந்து வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டன. ஃபேஸ்டைம் போக அவளுடைய நேரமெல்லாம் குழந்தைகளுக்கு தான். குழந்தைகள் இரண்டிற்கும் கோடை விடுமுறை என்பதால் சித்தி, சித்தி என்று சஞ்சனாவையே சுற்றிக் கொண்டிருக்கின்றன. சந்தியா ஒரு மருத்துவர் என்பதால் அவளுக்கு பொழுது போக்குவதற்கான அவசியமில்லை. தினசரி பன்னிரண்டு மணிநேரம் டாக்டர், மீதி பன்னிரண்டு மணிநேரம் இல்லத்தரசி என்று சுழன்றுக்கொண்டிருக்கிறாள். ஷ்யாம்தான் ஒருவாரமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறான். தினசரி காலையில் குளித்து முடித்துவிட்டு சுபிட்சமாக வந்து நடுஹாலில் லேப்டாப்புடன் உட்கார்ந்து கொள்வான். ஒட்டுமொத்த ராஜீவ்காந்தி சாலையும் அவன் ஒருவனை நம்பி மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் பாவனையில் அலைபேசியில் யார் யாருக்கோ உத்தரவுகள் போடுவான். ஐரோப்பிய கிளையன்ட்டிடம் ஆங்கிலத்தை சுழற்றிச் சுழற்றிப் பேசிக் காட்டுவான். சஞ்சனா அதற்கெல்லாம் அசருவதாக தெரியவில்லை. அமெரிக்காவில் படிப்பவளாயிற்றே. அப்படியும் விடமாட்டான். அமெரிக்கர்கள் பேசுவதெல்லாம் ஆங்கிலமே இல்லை என்றும், என்னதான் சூடு போட்டுக்கொண்டாலும் ஐரோப்பியர்கள் போல வராது என்பான். அப்படிச் சொல்லும்போது ஷ்யாம் தான் சென்னையின் புறநகர் ஒன்றில் பிறந்தோம் என்பதையே முற்றிலும் மறந்துவிட்டு, ஐரோப்பிய நாகரிகத்திலேயே ஊறித்திளைத்தவன் போல பேசுவான். இந்த நாட்களில் அவளும் சளைக்காமல் பதில் படம் காட்டுகிறாள். ஸியாடிலிலிருந்து நூறு மைல் தூரம் கடந்து சென்று தூலிப் மலர்களை பார்த்ததாக சிலாகித்தாள். ‘ஏன் வீட்டில் கண்ணாடி இல்லையா சஞ்சு ?’ என்றதும் எட்டு வருடங்களுக்குப் பிறகு கொஞ்சம் வெட்கப்பட்டாள்.

அன்றைய தினம் சந்தியா மருத்தவமனையிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டாள். ஒரு வாரமாக அக்காவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தவள் கேட்டுவிட்டாள். நீங்கள் நினைப்பது போல விபரீதமாக எதுவும் கேட்கவில்லை. தங்கையை எப்போது ஊர் சுற்றிக் காட்டுவாய் என்றுதான் கேட்டாள். அத்தானிடம் கேட்கமாட்டாயா சஞ்சு என்று மனதிற்குள் கறுவிக்கொண்டே, கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாதவனாய், அதுக்கென்ன இன்னைக்கே போலாமே என்று மங்களம் பாடிவிட்டான். சஞ்சுவோடு சேர்த்து மூன்று குழந்தைகள் குஷியானார்கள். 

ஷ்யாம் காரை எடுக்கப் போனபோது ஆட்டோவில் போகணும் போல ஆசையா இருக்கு அத்தான் என்று தடுத்துவிட்டாள். அவள் ஆசையா இருக்கு என்று சொன்னதை கேட்டிருந்தால் உங்களுக்கும் ஆசையாக இருந்திருக்கும். மங்களகரமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தொடங்கினார்கள். செளகார்பேட்டையில் ஷாப்பிங் போனார்கள். சஞ்சுவுக்கு ரஜினி என்றால் பிடிக்கும். துரதிர்ஷ்டவசமாக தலைவர் படம் எதுவும் நகரத்தில் அப்போது வெளியாகாததால், வேறு வழியில்லாமல் மா.கா.பா.ஆனந்த் நடித்த சினிமாவிற்கு போகும்படி ஆகிவிட்டது. மெரினாவுக்கு சென்று ஒரு தியானத்தையும் போட்டாயிற்று. எல்லாம் நல்லபடியாக நடந்தால் கூட வெய்யிலின் சீற்றம்தான் தாள முடியவில்லை. இன்னொருபுறம் எங்கு பார்த்தாலும் தூசு, மாசு. சென்னையிலேயே கிடந்து உருளும் தடியர்களுக்கே முடியவில்லை என்றால் சஞ்சுவின் நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருபுறம் தனது நாளை அத்தானின் அருகாமையில் மகிழ்வாக செலவிட்டாலும், அவளுடைய முகமெல்லாம் வாடிய மலரைப் போல ஆகியிருந்தது. வீட்டுக்கு திரும்பும்போது காய்ந்து கருவாடாக மாறியிருந்தாள். ஷ்யாமுக்கு சென்னையின் மீதே கோபமாக இருந்தது. வெளியூர்க்காரர்கள் எப்போதும் இம்மாநகரத்தை கரித்துக் கொட்டுவதில் நியாயம் இருப்பதாக நினைத்துக்கொண்டான்.

சஞ்சனா மட்டும் ஷ்யாமையும், சந்தியாவையும், குழந்தைகளையும் நினைத்து ஆச்சரியப்பட்டாள். எப்படி இவ்வளவு தூசுக்கும், மாசுக்கும் நடுவில் ஆரோக்யமாக வாழ்கிறார்கள். அக்காவிடம் நேரடியாக கேட்டேவிட்டாள். சந்தியா பதிலேதும் சொல்லாமல் ஒரு வழலையைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள். மருத்துவரின் பரிந்துரை. வழலை என்றால் என்ன என்பதை மதன் கார்க்கியிடம் கேளுங்கள். வழலை நுரை அணியும் மழலை ! வளையல் அணியும் ஒரு வானவில் ! என்ற வரிகளுக்குள் சஞ்சுவை பொருத்திப் பார்த்து கற்பனை செய்துகொண்டான் ஷ்யாம்.

சஞ்சனா அவளது அறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு கோடி தூலிப் மலர்கள் ஒருசேர பூத்துக் குலுங்கியதைப் போலிருந்தது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

விமல் ராஜ் said...

ஒரு கோடி லைக்ஸ் போடலாம் இதுக்கு.. அட்டகாசமான விரிவாக்கம்..

ராஜி said...

வழலைன்னா என்னன்னு ஐ நோ

Ponmahes said...

கதை அருமை...வாழ்த்துகள்...

ஓ வழலை ன்னா சோப்பா...என்ன லைப் பாயா?????

Ponmahes said...

ஓ சாரி சிந்தால்....

DREAMER said...

கதை ரகளை... அடுத்த கமர்ஷியல் ப்ரேக்குக்காக வெயிட்டிங்