15 February 2018

கோவா – ரயில் பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

முந்தைய பகுதி: கோவா - தொடக்கம்

கோவா ரயில் பயணத்தின் பிரதான அம்சம் – துத்சாகர் அருவி !

கோவாவிற்கு சென்னையிலிருந்து ஒரேயொரு ரயில் மட்டும்தான் செல்கிறது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை (வெள்ளிக்கிழமை மட்டும்). ரயிலின் பெயர் வாஸ்கோ ட காமா எக்ஸ்பிரஸ். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு செண்டிரலில் இருந்து கிளம்பி மறுநாள் மதியம் 1 மணிக்கு கோவாவின் வாஸ்கோ நிலையத்தை அடைகிறது. ரயிலில் போக வேண்டும் என்பதற்காகவே எங்கள் திட்டத்தை வெள்ளியன்று துவங்குமாறு வகுத்துக்கொண்டோம். ரயிலில் டிக்கட் விலை ரூ.480 (ஸ்லீப்பர்). 

கோவாவிற்கு ரயில் டிக்கட் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இறங்க வேண்டிய ரயில் நிலையம். மர்கோவா, வாஸ்கோ என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மர்கோவா சென்றுவிடும். 1 மணிக்கு வாஸ்கோ. இரண்டுக்கும் இடையே சுமார் முப்பது கி.மீ. தூரம். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மர்கோவாவில் இறங்கிவிடுகிறார்கள். எனது கணிப்பின் படி இது தவறு. நீங்கள் மீண்டும் ரயிலிலேயே திரும்பப் போகிறீர்கள், தெற்கு கோவாவை மட்டும்தான் சுற்றிப் பார்க்கப் போகிறீர்கள் என்றாலொழிய மர்கோவாவில் இறங்குவது தவறான முடிவு.  

ஏன் ? கோவாவை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை டூ-வீலரில் தான் சுற்றிப்பார்ப்பார்கள். வாடகை டூ-வீலர்களை நீங்கள் எங்கிருந்து பெறுகிறீர்களோ மீண்டும் அதே இடத்தில் கடைசி நாள் விட வேண்டும். மர்கோவாவில் எடுத்தால் மர்கோவாவில். வாஸ்கோவில் எடுத்தால் வாஸ்கோவில். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மர்கோவாவில் டூ-வீலர் வாடகைக்கு எடுத்தால் அதனை திரும்பவிடும் சமயத்தில் உங்களுக்கு இரண்டு பிரச்சனைகள் தோன்றும். ஒன்று, நீங்கள் டூ-வீலரை திரும்ப விடுவதற்காக மர்கோவா வரை வந்துவிட்டு, பின்னர் வாஸ்கோ செல்ல வேண்டும். (விமான நிலையம் அமைந்திருப்பது வாஸ்கோவில் !). நேர விரயம் மற்றும் டென்ஷன். இரண்டாவது, மர்கோவாவிலிருந்து வாஸ்கோ செல்ல டாக்ஸி செலவு தோராயமாக ஆயிரம் ரூ. ஆகும் (கோவாவில் ஓலா / ஊபர் கிடையாது). எனவே ரயிலில் வாஸ்கோ வரை சென்றுவிட்டு அங்கிருந்து டூ-வீலர் வாடகைக்கு எடுப்பதே சரியான முடிவாக இருக்கும். வாஸ்கோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் சுமார் நான்கரை கி.மீ. தூரம். ஆட்டோ பிடித்தால் நூறு ரூபாய். 

படம்: ட்ரிப் அட்வைசர்
நாங்கள் கோவா சென்றபோது எங்கள் எதிர் சீட்டில் கோவாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு பெரியவர் வந்திருந்தார். அவர் ஏற்கனவே சிலமுறை கோவா சென்றிருப்பதால் அவரிடம் சில தகவல்களை கேட்டுத் தெரிந்துகொண்டோம். வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கும் கிளம்பும் ரயில் இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூரு (எஸ்வந்த்பூர்) சென்றடைகிறது. பெங்களூரில் நல்ல உணவு கிடைக்கும் என்று காத்திருந்து, காத்திருந்து கடைசியில் கறித்துண்டு ஒன்று புதைக்கப்பட்ட புளி சோறு கிடைத்தது. ஒழிக பெங்களூரு ! 

கேஸில் ராக் (படம்: மை கோலா)
பெங்களூரில் இருந்து கிளம்பும் ரயில் அடுத்த பன்னிரண்டு மணிநேரங்களுக்கு கர்நாடகாவின் பல பகுதிகளை சுற்றிவந்து சனிக்கிழமை காலை சுமார் ஒன்பதரை மணிக்கு கர்நாடகாவில் கேஸில் ராக் (Castle Rock) என்கிற நிலையத்தை சென்றடைகிறது. இங்கிருந்துதான் உங்கள் கோவா பயணம் அதிகாரப்பூர்வமாக துவங்குகிறது. கேஸில் ராக் நிலையத்தில் ரயில் சுமார் பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை நிற்கும். காரணம், மலையேற்றத்திற்கு உகந்த வகையில் ரயில் பெட்டியில் கூடுதல் என்ஜின் இணைக்கப்படும். DSLRகாரர்கள் எல்லாம் ஜெர்கின் – கேமரா சகிதம் இறங்கிவிடுகிறார்கள். 

கேஸில் ராக் - குலெம் ரயில் பாதை
இப்போது நாம் கோவாவை பெனிட்ரேட் செய்யப் போகிறோம். கேஸில் ராக்கில் இருந்து அடுத்த ரயில் நிலையம் குலெம் (கோவா). இரண்டிற்கும் இடையே சுமார் இருபத்தியாறு கி.மீ. தூரம். இந்தியாவில் உள்ள ரசனைமிகுந்த ரயில் பாதைகளில் ஒன்று இந்த இருபத்தியாறு கி.மீ. பாதை. காரணம், துத்சாகர் அருவி ! (துத்சாகர் என்றால் பாற்கடல்). ஏற்கனவே மலைப்பாதையில் ரயில் போகிறது. அதற்கிடையே அருவியின் அழகு வேறு. 

குகைப்பாதை (படம்: அட்வென்ச்சர் 365)
கேஸில் ராக் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதும் நிறைய பயணிகள் வந்து படிக்கட்டுகளை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். மெல்ல மலை மீது ஏறும் ரயில் அடுத்த நிலையத்தை அடையும்வரை பதினெட்டு குகைப்பாதைகளை கடக்கிறது. ஒவ்வொரு முறை குகைப்பாதையை கடக்கும்போதும் மொத்த ரயிலும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்கிறது. நிறைய பேர் படிக்கட்டுகளில் தொங்கியபடி வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அந்த ஒரு தருணத்தில் மதம், இனம், சாதி, மொழி எல்லாம் மறந்து எல்லோரும் கோவா போகிற கேங் என்கிற ஓரணியில் இணைகிறார்கள் ! 

துத்சாகர் அருவி ! (படம்: த்ரில்லோஃபிலியா)
துத்சாகர் அருவியை சில நொடிகள் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கேஸில் ராக் – குலெம் பாதையில் பதினோரு குகைப்பாதைகளை கடந்தபிறகு காட்சியளிக்கிறது துத்சாகர் அருவி ! மலையின் மீதிருந்து ஊர்ந்துவரும் வெண்ணிற சர்ப்பம் போல ! பின்னர் சில நிமிடங்களில் ரயில் மலைப்பாதையை சுற்றி வரும்போது வேறொரு கோணத்தில் மீண்டும் துத்சாகர் அருவி தெரிகிறது. 

சுமார் பதினொரு மணிக்கு ரயில் குலெம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மலையேற்றத்திற்காக இணைக்கப்பட்ட என்ஜின் விடுவிக்கப்படுவதால் இங்கேயும் கூடுதலாக சில நிமிடங்கள் நிற்கிறது. பின்னர் பன்னிரண்டு மணிக்கு மர்கோவா ரயில் நிலையத்தை அடையும்போது அநேகமாக மொத்த ரயிலும் காலியாகிவிடுகிறது. அடுத்த ஒரு மணிநேரத்திற்கு ரயில் பேட்டியின் மீது நீங்கள் முழு உரிமை எடுத்துக்கொள்ளலாம். 

ஹோலண்ட் கடற்கரை (படம்: கோவா வில்லா)
மர்கோவா – வாஸ்கோ ரயில் பயணம் கட்டிடக்கலை மீது ஈடுபாடு கொண்டோருக்கு ஒரு வரப்பிரசாதம். இப்பாதையில் நீங்கள் போர்த்துகேய காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களையும், வீடுகளையும் பார்க்கலாம். ஆரவாரங்களில்லாத கோவாவை பார்க்கலாம். அமைதியான கேரள கிராமங்களை நினைவூட்டும் இந்த ரயில் பாதையில் பயணிக்கும்போது இதுதான் கோவாவா என்று நீங்கள் சோர்வடைகிறபோது, பருவப்பெண் தனது புடவையை சரி செய்துகொள்ளும்போது மின்னலென தோன்றி மறையும் இடையழகைப் போல சிலீரென ஹோலண்ட் கடற்கரை தனது எழில்தோற்றத்தை காட்டிவிட்டு மறைகிறது. தொடர்ந்து கோவா விமான நிலையத்தை கடந்து செல்லும் ரயில் அடுத்த சில நிமிடங்களில் வாஸ்கோ ரயில் நிலையத்தை சென்றடைகிறது ! 

அதிகாரப்பூர்வமாக கோவா மண்ணில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் ! அடுத்த கட்டுரையில் கோவாவின் மிக முக்கியமான அங்கமாக நான் கருதும் கர்லீஸ் பற்றி பார்க்கலாம். 

அடுத்து வருவது: கோவா – கர்லீஸ் 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Billy B said...

This is aa great post