19 February 2018

பிரபா ஒயின்ஷாப் – 19022018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கிண்டிலில் முதல் புத்தகமாக ம்ரின்சோ நிர்மலின் ஸ்மார்ட் உலகத்து கதைகள் வாசித்தேன். நிர்மல் அதனை முதல் ஒரு வாரத்திற்கு இலவசமாக கொடுத்தபோது வாங்கியது. பன்னிரண்டு குட்டிக் குட்டி கதைகள் அல்லது ஒரே கதையின் பன்னிரண்டு சிறிய பகுதிகள். இக்கதைகளில் இரண்டு விஷயங்கள் மையமாக இருக்கின்றன. ஒன்று, எதிர்கால தொழில்நுட்பங்கள் எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்பது பற்றிய அனுமானங்கள். இரண்டாவது, ஃபேஸ்புக் பயனாளர்களைப் பற்றிய பகடிகள். இரண்டாவது விஷயத்தை மிகவும் ரசித்தேன். 

தினசரி காலையில் குட் மார்னிங் போஸ்ட் போடுவது, ஃபேக் ஐடி கலாசாரம், லைக்குக்கு லைக் மொய் வைப்பது, அன்ஃப்ரென்ட் / ப்ளாக் சில்லறைத்தனங்கள், ஹாஷ்டாக் போராட்டங்கள் என்று எல்லாவற்றையும் போகிறபோக்கில் ஜாலியாக கலாய்த்து வைத்திருக்கிறார். துவக்கத்தில் கிண்டிலில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வாசிப்புக்கு தயாராக வைக்கலாம் என்றுதான் கையில் எடுத்தேன். ஆனால் அடுத்த அரை மணிநேரத்தில் புத்தகத்தை படித்தே முடித்துவிட்டேன். அவ்வளவு சிறிய புத்தகம். கொஞ்சம் மெனக்கெடல், மெருகூட்டல் எல்லாம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய புத்தகம். அவசர அவசரமாக புத்தகமாக்க அப்படி என்ன முனைப்போ தெரியவில்லை. நான் பரவாயில்லை, இலவசமாக தரவிறக்கினேன். மூன்று பேர் இப்பதிப்பினை 63ரூ கொடுத்து வாங்கியிருப்பதாக நிர்மல் சொல்கிறார். அம்மூவரை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

கிண்டில் புத்தகங்களுக்கு எதை வைத்து விலை நிர்ணயிக்கிறார்கள் என்பதே மர்மமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, சுமார் 350 பக்கங்கள் தரமான தாளில் அச்சிடப்பட்ட ஒரு புத்தகத்தின் விலை 400 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். கிண்டிலில் இதன் விலை 300 என்கிறார்கள். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து விலை வெறும் 9ரூ தான். சில பதிப்பகங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அச்சுப்பிரதியில் இருந்து கிண்டில் பிரதியின் விலை குறைந்தது ஐம்பது சதவிகிதம் குறைவாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதனை வாங்குவதற்கு பதிலாக அச்சுப்பிரதியையே வாங்கிவிடலாம் என்பேன். 

**********

சென்றவாரம் சவரக்கத்தியைப் பற்றி எழுதியதில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டுப் போயிற்று. படம் நிறைவடைந்த பிறகு வரும் டைட்டில் கிரெடிட்ஸில் ஒவ்வொரு துணை நடிகர்களின் பெயரும் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்கிற விவரத்தோடு வருகிறது. கரும்புச்சாறு கடை வைத்திருப்பவர், வழி சொல்பவர் என்று சின்னச் சின்ன வேடங்களைக் கூட தவறவிடாமல் பதிவு செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இதை மிகப்பெரிய விஷயமாகவும், நடிகர்களுக்கு நல்ல அங்கீகாரமாகவும் கருதுகிறேன். ஸ்க்ரோலின் வேகத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். போலவே, பின்னணி பணியாற்றியவர்களைப் பற்றி குறிப்பிடும்போதும் ஓரளவிற்கு விவரம் தரலாம். பெரும்பாலான படங்களில் டப்பிங் கலைஞர்களின் பெயரையே போடுவதில்லை. அப்படியே போட்டாலும் எந்தெந்த நடிகருக்கு யார் குரல் கொடுத்தார்கள் என்று விளக்கமாக போடுவதில்லை. 

**********

ரேண்டம் ப்ளேலிஸ்ட் தயார் செய்வது பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அதனை செயல்படுத்தியதில் எனது கலெக்ஷனில் ஒளிந்திருந்த சில அரிய பாடல்கள் வெளியே வந்தன. அதுவும் முதல் பாடலே ஒரு ஹிட்டன் ஜெம். ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு... என்று மனோ, சித்தாரா குரலில் பாடல் ஒலிக்க, ஆல்பம் ஆர்ட் பார்த்தால் மைக்கேல் மதன காம ராஜன் என்றிருந்தது. என்ன அந்த படத்தை குறைந்தது ஒரு நூறு முறையாவது பார்த்திருப்பேன். அப்படி ஒரு பாடல் உறுதியாகக் கிடையாதே. ஒருவேளை ஆல்பம் ஆர்ட் போட்டோ எதுவும் கொலாப்ஸ் ஆகிவிட்டதா என்று கூகுள் செய்தால் அது படத்தில் இடம்பெறாத பாடல் போலிருக்கிறது. ஆனால் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் எப்படிப் பொருத்தினாலும் பொருந்தாத பாடல் இது. 

மேலும் கூகுள் செய்ததில் கிடைத்த தகவல் – அபூர்வ சகோதரர்களுக்குப் பிறகு கமல் – கெளதமி நடிப்பில் தென்மதுரை வைகைநதி என்கிற கிராமத்துக் கதையை பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கலானார். அப்படத்திற்காக இசையமைக்கப்பட்ட பாடல் இது. ஆனால் ஏனோ சில காரணங்களுக்காக அப்படம் டிராப் ஆகிவிட்டது. அதனால் அதற்குப் பின் எடுக்கப்பட்ட மை.ம.கா.ரா.வில் ஆடிப்பட்டம் பாடல் சேர்ந்துகொண்டது. 

அதே போல ராஜா ராணி படத்தில் இடம்பெறாத அஞ்ஞாடே பாடலை கேட்க நேர்ந்தது. சக்திஸ்ரீ டார்லிங்கின் குரல். ஏன் இத்தனை அருமையான பாடலை படத்தில் வைக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் எப்படி இப்பாடலை இத்தனை நாட்கள் தவறவிட்டேன் என்றே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

**********

இந்தாய் ஹஸா என்கிற பாடகியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? சக்கரகட்டி படத்தில் வரும் மிஸ் யூ மிஸ் யூடா பாடலில் பாடகியின் குரல் விஸ்கி மாதிரி இருந்ததால் யாரென்று தேடியதில் சின்மயி மற்றும் இந்தாய் ஹஸா என்றிருந்தது. இதுகுறித்து சின்மயி அவரது வலைதளத்தில் எழுதியிருக்கும் சிறுகுறிப்பு படிக்கக் கிட்டியது. இந்தாய் ஹஸா என்று ஒரு ஆள் இல்லவே இல்லையாம். அது சின்மயியின் ஆல்டர் ஈகோவாம். மிஸ் யூ பாடலின் இடையே வரும் ஈமினீ ஈமினீ பிட்டுக்கு ரஹ்மான் கொடுத்த புனைப்பெயர் தான் இந்தாய் ஹஸா என்கிறார் சின்மயி. ஆனால் அப்பெயருக்கு என்ன அர்த்தம் என்று சின்மயிக்கு தெரியவில்லை. சின்மயிக்கே தெரியவில்லை.

இதுபோல எனக்குத் தெரிந்து இன்னொரு பிரபல ஆல்டர் ஈகோ பாடகி இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு பெயர் கிடையாது. அப்பாடகியின் இயற்பெயர் அனுராதா ஸ்ரீராம் ! 

ஒரு உதாரணம் சொல்கிறேன் – வாலி படத்திலிருந்து வானில் காயுதே வெண்ணிலா, நிலவைக் கொண்டுவா இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து கேட்டுப் பாருங்கள். இரண்டையும் பாடியது அனுராதா ஸ்ரீராம் தான். ஆனால் இரண்டாவது பாடலில் கொஞ்சம் வெஸ்டர்ன் த்வனி மற்றும் முதலிரவு எக்ஸைட்மென்ட் கலந்த அதிரடிக்குரலில் பாடியிருப்பார். இது மட்டுமல்ல, ஒரே பாடலில் முதல் வரியை ஒரு குரலிலும் சட்டென அடுத்த வரியில் யூ-டர்ன் போட்டு, டேபிளை உடைத்து வேறொரு குரலில் பாடும் வித்தை அனுராதாவிடம் உண்டு. எஸ்.பி.பி. தன்னுடைய பாடல்களில் எல்லாம் இடையில் ஒருமுறை சிரிப்பது போல நிறைய அனுராதா பாடல்களில் இந்த டிரான்ஸ்ஃபார்மேஷனை கவனிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: